POST: 2021-03-26T11:40:10+05:30

திரு பக்தவத்சலம் புகழ் வணக்கம்
முனைவர் அருள் உரை. (16.2.2021)

நித்திலக்கோவை நினைந்து போற்றுவோம் !

மாநிலக் கல்லூரியில் நான் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலும் பொழுது, 1987 ஆம் ஆண்டில் தமிழ் மன்றத்திற்குத் தமிழ்ப் பேராசிரியர் யாராவது ஒருவரை அழைத்து பேசுவதற்காக நாங்கள் முனைந்தோம்.

இரண்டு மூன்று தமிழ்ப் பேராசிரியர்கள் வாராத சூழலில் ”அணுக்கதிர் கசிவும், அணுப்பிளவும்” என்ற தலைப்பில் மருத்துவ மாமணி செ.நெ.தெய்வநாயகம் அவர்களும், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களும் அப்பொழுது எங்கள் அழைப்பை ஏற்று அணுக்கதிர் கசிவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி விரிவாக பேசினார்கள்.

வியாழக்கிழமையில் மாநிலக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியாகும் .
நான் கல்லூரி மாணவராக நிகழ்வினைத் தொகுத்துப் பேசினேன் ..

இதைக் கேள்விப்பட்டு உடனடியாக எங்கள் நெருங்கிய உறவினர், பொறிஞர் பக்தவச்சலனார் என்னை அழைத்து, வரும் செவ்வாய்க்கிழமை அதே கூட்டத்தை ஒய் எம் சி ஏ வில் ஒழுங்கு செய் என்று கூறினார்.

இப்படி எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வாரி வழங்கிய வள்ளல் அவர்!

எப்பொழுது கேட்டாலும் எந்த புதுத் தலைப்பு சொன்னாலும், அருள் ! அந்தக் கூட்டத்தை ஒய் எம் சி ஏ விலும் நடத்துக என்பார்.

எந்தையாருடைய மிக நெருங்கிய நண்பராவார். அவர்களுடைய குடும்பமே எங்களுடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் என்றால் மிகையாகாது .

அப்பா எந்தவொரு கூட்டத்திற்கும், ஊருக்கும் பக்தவத்சலம் அவர்கள் இல்லாமல் சென்றதே கிடையாது.

அவர் ஒய் எம் சி ஏ கூட்டத்தைச் சிந்தனை மன்றமாகவே நடத்தி வந்தார் .

தமிழகத்திலுள்ள ‘ – எல்லாத் தலைவர்களும், அறிஞர்களும் இங்கு வருகை புரிந்திருக்கின்றார்கள்.

பெரிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லோரும் கலந்து பேசியது ஒரு புறம் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்து வருகின்ற அறிஞர்களையும் அழைத்து உரிமையாக ஒய்.எம்.சி.ஏ-வில் வந்து பேசுங்கள் என்பார்.

மருத்துவராகிய என் தாயாரைத் தன்னுடைய மூத்த அக்காவாகவே நினைத்து பல நேரங்களில் மருத்துவக் குறிப்புகளை குறித்து வந்து பேசச் செய்தவர் அருமை அண்ணல் பக்தவத்சலம் .

எங்களுக்குத் தெரிந்த வெளிநாட்டினரும் என்னுடைய அண்ணன் கண்ணன், ஆசுதிரேலியாவில் போய் குடிபெயர்ந்தவுடன் அவர் சென்னைக்கு திரும்பியதும் ஆசுதிரேலியாத் தமிழர்களையும், தமிழ் உணர்வைப் பற்றி பேசுக என்று பேச வைத்தார்.

.அதேபோல என்னுடைய மாமா ஏகாம்பரம் அவர்களுடைய மகன்கள் – இளமதியும், வானவனும் அமெரிக்காவில் நீண்ட ஆண்டுகளாக ‘ உயர்பதவியில் திகழும் வல்லுநர்கள். அவர்கள் இங்கு வந்தால் வந்து பேசுங்கள் என்றார் .

ஒய் எம் சி ஏ வை அறியுலகமாகவே உருவாக்கிய பெருமை அவரைச் சாரும்.

எனக்குப் பெரிய வருத்தம் என்னவென்றால், சென்ற ஆண்டு பிப்ரவரித் திங்கள் 28ஆம் தேதி உரைவேந்தருடைய அறக்கட்டளைப் பொழிவிற்காக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அவர் வந்தார்.

அவர் தான் அன்றைய நிகழ்வுக்கான செய்திக் குறிப்பையே ஆக்கித்தந்தார்.

நான் மிகவும் வேண்டிக் கொண்டேன். நீங்கள் வாருங்கள் நான் இயக்குநரிடம் அறிமுகம் செய்கிறேன். என் விருப்பம் அவர் தமிழக அரசின் விருது பெறவேண்டும் என்பதாகும். தமிழ்ச்செம்மல் விருதுக்கு நாம் முனையலாம் என்று கூறினேன். உடனே அவர் நான் வந்தது தாத்தா அறக்கட்டளை உரைக் கேட்பதற்கும், உனக்கு செய்திக்குறிப்பு குறித்து உதவி செய்வதற்கும் தான் தவிர வேறு எந்த உதவியும் எனக்கு வேண்டாம் என்று மறுத்தார்.

அவர்தான் என்னை ஒய்எம்சிஏ-வில் வாழ்நாள் உறுப்பினராக இணைத்த பெருமைக்குரியவர் ஆவார்.

ஒய் எம் சி ஏ தலைவர் சொன்னது போல், பார்க்கும் பொழுதெல்லாம் சனவரித் திங்கள் வந்தால் விண்ணப்பப்படிவத்தை அவர்கள் எழுதிக் கொண்டு வந்து எல்லோரையும் அரவணைத்து மன்றத்தில் நீங்கள் உறுப்பினராக வேண்டும் என்று சொல்லி என்னையும் வாழ்நாள் உறுப்பினராகச் சேர்த்து, நான் இலண்டன் மாநகருக்குச் சென்ற பொழுது என்னை அழைத்து ஒய் எம் சி ஏ உறுப்பினர் அட்டையை மறவாமல் எடுத்துச் செல் என்று சொல்லி வழியனுப்பிய பெருந்தகையாவார் .

எந்தையார் அடிக்கடி சொல்லுவார் எனக்கு ஆயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள்; ஆனால் நான் போற்றுகின்ற நண்பர் என்றால் திரு. பக்தவத்சலம் அவர்கள் ஒருவர் தான்,ஏன், என்று காரணத்தை .என்னிடம் பலமுறை சொல்வார் நட்பு என்றால் அவரிடம் தான் நீ கற்க வேண்டும் என்பார்.

என்னைப் பற்றி ஆயிரம் பேர் பல முரணான கருத்துக்களைச் சொன்னாலும் பல நண்பர்கள் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் பக்தவத்சலம் மட்டும் என்னைப் பற்றி ஏதாவது முரணாக சொன்னால் அங்கு இருக்க மாட்டார் , அக் கருத்தை ஏற்க மாட்டார். செவிமடுக்கவே மாட்டார். கடுகளவு குறைகளைச் சொன்னால் அங்கிருந்து விலகி விடுவார் . அப்படி ஒரு நட்பு என்பது எனக்கு கிடைத்தற்குரிய பெரும் பேறு என்று அப்பா அடிக்கடி சொல்வார். எனக்கு பெரிய மகிழ்ச்சி. நண்பர்கள் என்பதற்கு இலக்கணம் உண்டா என்றால் பக்தவத்சலம் தான் என்று என் அப்பா நீர்மல்க சொல்வார்கள்.

தம்பி தாமரைக்கண்ணன் பெரும் பேராசிரியராக மிளிர்ந்த வண்ணம் இப்பொழுது ஒய் எம் சி ஏ வின் இலக்கிய மன்றத்தினுடைய அரும்பெரும் செயலாளராக தந்தையைப் போலவே அணிவகுப்பது பெருமையான பணியாகும்.

சிறந்த தமிழ் மன்றங்களுக்குத் தமிழக அரசு தமிழ்த்தாய் விருது வழங்குகிறார்கள்.

நாம் முனைந்து ஒய்எம்சிஏ தமிழ் மன்றத்திற்கு தமிழ்த்தாய் விருதினை வருங்காலங்களில் பெறுவதற்கு முயல்வோம்.

தமிழ்மன்ற அழைப்புகளிலேயே குறிப்பாக பொறிக்கப்படும் வரிகள் “உங்கள் வருகை, எங்கள் உவகை”. பேராசிரியர் தாமரையினுடைய வருகை ஒய்எம்சிஏ தமிழ் – மன்றத்திற்கு உவகை.

நீங்கள் ஆற்றுகின்ற பணிகளுக்கு உடன் இருந்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பண்பாளர் பக்தவத்சலம் அடிக்கடி சொல்வார். பல ஆண்டுகளாக நான் இங்கு வளர்ந்தவன் என்றே பெருமையில் சொல்கிறேன். வந்தால் ஒரு அரைமணிநேரம், முக்கால் மணி நேரம் முடிந்ததும் காணாமல் போகிறான் அருள். ஒருநாளும் முழுமையாக உட்கார்ந்தது கிடையாது என்று கூறுவார்கள். அக்குறையைப் போக்குவதற்காக இன்றைக்கு முழுமையாகவே இந்நிகழ்வில் அமர்ந்துள்ளேன் .

அவர் நித்திலக்கோ என்ற புனைபெயரில் எழுதுவார். பேராசிரியர் தாமரை பதாகன் என்ற புனைபெயரில் எழுதிவருகிறார்.

அப்பா அடிக்கடி சொல்லுவார் – பேசுவது எளிது அருள்; எழுதுவது மிகவும் கடினம் என்று.

எழுதுவதை நீ படிக்க வேண்டுமென்றால் பக்தவத்சலம் எழுதுவதை படிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்வார்கள்.

மாநாடு ஒன்று வேலூரில் நடந்தால் வேலூரைப் பற்றிய அரிய குறிப்புகள் முதல் பத்தியில் ஒளிபட எழுதும் ஆற்றலாளர்.

பேராசிரியர் தாமரைக்கண்ணன் தன் அப்பா பக்தவத்சலம் அவர்கள் தொட்ட பணியையும், விட்ட பணியையும் ,இட்ட பணியையும் வெற்றி மாலைகளோடு தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அவருடைய அப்பாவின் புகழை எப்போதும் நிலைநிறுத்துவார்.

நாங்கள் அவருக்கு உறுதுணையாக நிற்போம் என்று சொல்லி அமர்கிறேன் .

வணக்கம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *