POST: 2024-02-25T05:26:38+05:30

தினச்செய்தி – 18 2 2024
பக்கம் எண் : 4

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 201

விளம்பர வீதி -6

தாய்மொழி விளம்பரங்கள் !

முனைவர் ஔவை அருள்

எந்த ஒரு நாட்டிலும் அரசுகள் அமைவதையும், அரசுகள், மக்களுக்கு நன்மைகளையே எப்போதும் விளைவிக்க வேண்டிய கட்டுப்பாட்டில் செயற்பட வேண்டியதையும் மக்களாட்சித் தத்துவம் தான் வலியுறுத்தியது.

பொதுவாக, மக்களின் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள் எப்படியுள்ளன என்பதை மன்னர்கள் அந்தக் காலங்களில் மாறுவேடமிட்டுப் பார்த்து வந்தது போலவே இந்நாளில் மக்களின் மனோபாவங்கள், போக்குகள், எண்ணங்கள் எப்படியெல்லாம் இருக்கின்றன என்பதைக் காட்டுவதோடு மெல்ல மெல்ல நெறிப்படுத்தும் வேலைகளையும் நாளிதழ்கள், காலமுறை இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி முதலியன செய்தாக வேண்டும்.

நினைப்புகளையும், மனத்தில் பதுங்கியிருக்கும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கு அமைந்த வாயிலாக மொழி அமைகிறது.

மொழி ஒரு மனிதனை அடையாளங் காட்டுவதோடு அவனுடைய வாழ்வும் வளம் முதலியவற்றிலிருந்து பிரிக்க முடியாதது!

அவனைப் பிறர் மதிப்பிடவும், முழுமையாகத் தெரிந்து கொள்ளவும் மொழி “அவனாகவே” அமைந்து விடுகிறது.

‘மொழி’ என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் உருவான நாள் முதல் படிந்த பண்பாட்டுச் சுவடுகளை தாங்கியுள்ளது.

இதன் மேம்பாட்டிற்காக கோடிக்கணக்காகச் செலவிடத் தயங்கக் கூடாது.

இந்த நிலையில் வல்லமை உடையவர்கள், வணிக பலம் கொண்டவர்கள், ஏமாற்றத் தெரிந்தவர்கள், பேரறிவுடையவர்கள் என்ற வகையில் மக்கள் இனம் வளர்ந்ததோடு அவரவர்கள் தனித்தனியாக தங்கள் நாடுகளை அமைத்துக் கொண்டார்கள்.

இடத்தாலும் பரப்பாலும் சிறிய நாட்டைச் சார்ந்தவர்கள் என்றாலும் வல்லமையால் தங்கனை வளப்படுத்திக்கொள்ளும் “வாயிலால்” மிகப்பெரிய நாடுகளைக் கூடத் தங்களுக்குக் கீழ் வசப்படுத்திக் கொள்ளவும், தங்கள் ஆதிக்கத்தை செலுத்திக் கொள்ளவும் முடிந்தது.

ஆங்கில ஏகாதிபத்தியம் வரவாறு இப்படித்தான் ஏற்பட்டது.

இந்திய நாட்டை அடிமைப்படுத்திய “ஆங்கிலத்தின் மூலம் எவரையும் அடிமைப்படுத்த முடியாது” என்றே கூட ஒரு பழமொழி உண்டு.

ஆங்கிலம் அடிப்படையிலேயே அதிகார ரத்தம் ஓடும் மொழியாக இருக்கிறது என்பார்கள்.

இதனால் பல நாடுகள் ஒற்றுமையின்மையாலும் காலத்திற்கேற்ற வளர்ச்சியை இழந்ததாலும் எளிதாக அடிமைப்பட நேர்ந்தது.

அடிமைப்பட்டாலும் அறிவு, உழைப்பு, முயற்சி இவைகளை எல்லாம் தங்களை அடிமைப்படுத்திய அரசுகளின் மொழி வாயிலாகவே மீண்டும் பெற்றுக் கொள்ளவும் முடிந்தது.

அதனால்தான் ஆங்கில அரசுதான் நம்மை அடிமைப்படுத்தியது.

ஆங்கிலக் கல்வியினால் ஏற்பட்ட தெளிவு, அடிமையை நீக்கிக் கொள்ளவும் உதவியது.

கல்வி, தொழில், நீதிமன்றம், அரசு நடவடிக்கைகள், தகவல் சாதனங்கள் ஆகிய எல்லாமே மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கில ஆட்சியில் ஆங்கில மொழி எங்கும் பரவியது.

அதுவே ஒரு சிக்கலாய் அமைந்தது.

ஆட்சியாளர்கள், மக்களுக்குக் கல்வி தருவது கடமை என்றாலும் கூட அவன் அயலவனாக இருந்ததால் பொதுக்கல்வி தந்தபோது அடித்தளத்து மக்கள் அந்த ஆங்கில மொழிக் கல்வியைப் பெற முடியாமல் பின்தங்கினர்.

நாள்தோறும் மாட்டுத் தோலை அறுத்தவனும், தைத்தவனும் தான் மருத்துவக் கல்வியை எளிதாகப் புரிந்து கொண்டு வந்திருக்க வேண்டும்.

குனிந்து. நிமிர்ந்து கற்களை உடைத்தும், சாலைகளைச் செப்பனிட்டும், பயிரிட்டும் பாடுபட்டவன் தான் காவல்துறைக்கு வந்திருக்க வேண்டும்,

மரங்களை வெட்டிக் கருவிகளை செய்தவனும், இரும்பை உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சியவனும் பொறியாளராக வந்திருக்க வேண்டும்.
ஏன் வரவில்லை ?

இந்த ‘மொழி மாயை” தான் ஒரு காரணமாயிற்று என்று அறிஞர்கள் பலமுறை கூறி வந்தனர்.

சிலர் மட்டுமே உயர்ந்த நிலையான அறிவைப் பெறுவது போதாது.

சமுதாயம் முழுவதுமே அறிவியல், தொழில் நுணுக்கம் முதலிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக, பெறுபவர்களாக மாறும்போதுதான் பிற நாடுகளோடு நாமும் சமமாகவாவது வளர முடியும்.

நாம் இப்போது எவ்வளவுதான் பழகியதாக இருந்தாலும், “அந்நிய” மொழியிலேயே அறிவியல் தொழில் நுணுக்கங்களை கற்கின்ற பழக்கம் தொடர்ந்து நீடித்து வருமானால் நமது சமுதாயம் வளர முடியாததாகவே தோன்றுகிறது என்று மொழியாராய்ச்சியாளர்கள் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

அப்படி ஆங்கிலத்திலேயே இருந்து வந்தால் இவருடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும், தேர்ச்சிக்கும் வேண்டுமானால் அது உதவலாம்.

ஆனால், சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு உதவாது.

பள்ளத்தில் விழுந்திருக்கும் எல்லோரும் எழுந்து நிற்கும் ஒட்டுமொத்தமான சமூக முன்னேற்றம் வந்தால் தமக்கு ஏதேனும் சங்கடம் வருமோ என்று சந்தேகிக்கும் “சிலரின்” போக்குகளால் தாய்மொழிகள் தலையெடுக்க முடியாமல் தடுமாறுகின்றன.

இந்த நிலையில் நாட்டுக்கு விடுதலை வந்ததும், மாநிலங்கள் மொழி வழியாக அமைந்ததும் கல்வி, ஆட்சி, சட்டம், நீதி, தொழில் வளம், அறிவியல், தகவல் சாதனங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்து மொழிகளில் மெல்ல வரத்தொடங்கின.

மாநில மொழிகளில் வரத் தொடங்கின என்றால், மக்கள் விழிப்புற்று அந்தத் துறைகளில் பங்கேற்கத் தொடங்கினார்கள் என்று பொருள்.

ரேடியோ, நியூஸ் பேப்பர், ரயில்வே, அன்றாடக் கருவிகள், எல்லாவற்றையும் அவர்கள் அறிந்து கொள்ளத் தொடங்கியதும் பழக்கத்தில் இருந்த ‘ஆங்கில’ மொழி மெல்ல மெல்ல நீங்கிச் சில நிலைகளில் தாய்மொழி வேகமாக இப்போது வந்துவிட்டது.

காபீனட் என்பது அமைச்சரவை என்றும் உலகச் செய்திகள் பலவற்றை சிற்றூர்களில் அறிந்து கொள்ளவும் பேப்பர் தான் என்றும், இங்க் மை என்றும் வந்ததால் ஒரு பெரிய அதிசயம் நடக்க ஆரம்பித்தது

சான்றாகத் தமிழ் மொழியில் மூன்று வட்சம் சொற்கள் என்றால் ஆதிக்கம் கொண்டிருந்த ஆங்கிலம் ஒன்பது லட்சம் சொற்களைக் கொண்டது.

மேலும் ஆங்கிலம் “சர்வாதிகாரம்” பூண்டிருந்த காலத்தில் தமிழ் ஊமையாக ஒதுங்கியிருந்தது.

ஆகவே, ஆங்கிலத்தில் 10 சொற்களுக்குத் தமிழில் ஒரு சொல்லை வைத்துக் கொண்டு ஈடுகட்ட முடியுமா என்றும் ஐயமேற் படலாம்.

Plan, Scheme, Project Model என்ற எல்லாவற்றையும் திட்டம் என்று சொல்லி வருகிறோம். அதனால் பெரிய குறையில்லை.

அட்வர்டைஸ்மென்டு என்று 1965 வரையில் கூட எழுதி வந்தோம்.

பிறகுbதான் விளம்பரம் என்று சொல்லிப் பார்த்தோம்.

விளம்புதல் என்றால் விளக்கமாகக் கூறுதல் என்று பொருள்.

ஒரு முறை டூரிசம் என்பதற்குச் சுற்றுலா என்று தமிழில் அமைந்தது போல வேறெந்த மொழியிலும் கூற முடியவில்லை என்றனர்.

“யாத்ரா” என்றுதான் அனைவரும் முதலில் கூறினர்.

திரைப்பட விளம்பரங்கள் மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு முன்னோடி என்றே கருதலாம்.

சினிமா என்றும் மூவிஸ் என்றும் இருந்ததோடு, ஆக்டர், டைரக்டர், மேக்கப் என்றெல்லாம் பிறகு மாறி திரைப்பட விளம்பரங்களில் மாநில மொழிகள் பெரிய வெற்றி பெற்று உள்ளன.
தமிழில் முதன்முதலாக வெளிவந்த தொழில் வணிக இதழான வளர்தொழிலைத் தொடர்ந்து மேலும் பல இதழ்கள் வந்துள்ளன.

இந்திய அளவில் மாநில மொழியில் வெளி வரும் முதல் கம்ப்யூட்டர் இதழாக தமிழ் கம்ப்யூட்டர் வெளி வருகிறது.

மெல்ல நடப்பதும், வேகமாக நடப்பதும் அவரவர் போக்கு. இதில் சிலர் உடனே தமிழ் என்றால் எவருக்கு விளங்கும்.

எல்லாவற்றுக்கும் தமிழ் எப்படிச் சொல்வது? கண்டுபிடிக்கும் வரை காத்திருப்பதா என்றெல்லாம் பேசுவார்கள்,

இவர்கள் ‘எதிர்க்கிறார்கள்’ என்பதல்ல மருள்கிறார்கள்; ஆனால் இதே நேரத்தில் விரைவான வளர்ச்சியும் ஏற்பட்டு வருகிறது.

சான்றாக சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இந்த ஆர்வம் விரைவாகி உள்ளது.

அங்கு, தமிழ் ஆட்சி மொழியாகவும் இருக்கிறது.

தமிழ்மொழிக்கென்று கணிப்பொறி விசைப் பலகையை சிங்கப்பூர் பேராசிரியர் திரு.நா.கோவிந்தசாமி உருவாக்கித் தர நிர்ணயமும் செய்திருக்கிறார்.

நம்மிடத்திலோ ஆறு வகை விசைப் பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டும், தர நிர்ணயம் இல்லாமல் அவரவர் தேவைகளுக்கேற்ப பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நமக்கு சிங்கப்பூர் ஒரு வழி காட்டியாகும்.

அதிநவீன கணிப்பொறித் தொழில்நுட்பமான “இன்டர்நெட்” தொடர்பில் தமிழுக்கும் இடம் கிடைக்கச் செய்திருக்கிறார்கள்.

ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளுடன் தமிழும் ஆட்சி மொழியாக அங்கே இருப்பதால் அந்த மேலை மொழிகளைப் போல் நம் மொழியையும் முன்னேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தால் அவர்கள் இத்தகைய வளர்ச்சியை உருவாக்கி வருகிறார்கள் என்ற செய்தி நமக்குத் தூண்டுதலாக அமைய வேண்டும்.

சிவ காலம் ஆங்கிலமும் இருக்கட்டும் அதே நேரத்தில் தாய் மொழியில் “விளங்குகிறதா” என்று கேட்டுத் தெளிவாக எழுதுகிற வரைவாளர்கள் விளம்பர உலகத்தில் வளர்ந்தாக வேண்டும்.

ஒரு முறை ஒரு விளம்பரத்தை நான் தமிழில் இந்த மாதிரி எழுதியிருந்தேன்.

அதாவது முதன்முதலில் தொலைக்காட்சிக்கு வேண்டிய டிஷ் ஆன்டெனா சென்னைக்கு வந்த பொழுது அதை விளம்பரமாக வரைவதற்காக பெங்களூரைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் சென்னைக்கு வந்திருந்தார்கள்.

யாரோ சொன்னார்கள் என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் விளம்பரம் வரைவதற்காகத் தீர்மானித்தார்கள்.

டிஷ் ஆன்டெனா மூலமாக தூர்தர்சன் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சன் டி.வி., ஜெயின் டி.வி., ஜீ டி.வி., சி.என்.என் டி.வி, பிபிசி டிவி. இவைகளையும் பார்ப்பதற்கு இந்த ஆன்டெனா உதவுகிறது என்று சொல்வதற்கு , ‘The World is at your Finger Tips’ என்று எழுதியிருந்தார்கள்.

அதற்கு நான் தமிழில் சொன்னேன்
“அமர்ந்தபடியே அகிலத்தைக் காணுங்கள்” என்று.

தமிழ் விளம்பரத்தைப் பார்த்த பிறகு தான் பல கேபிள் டி.வி. முதலாளிகள் இவர்களை நாடி வந்தார்களாம்.

ஆக அன்று முதல் இந்த இளைஞர்களும் ஆங்கில விளம்பரத்தை வெளியிடாமல் இதே தமிழ் விளம்பரத்தை ஐந்து முறைகள் வெளியிட்டுத் தங்கள் வணிக வளத்தைப் பத்து மடங்கு உயர்த்தினார்கள்.

அதேபோல் மும்பையில் ஓர் ஆய்வு நடந்தது.

ஆங்கில விளம்பரத்தைப் படிப்பதை விட அந்தந்த மொழி மக்கள் தங்கள் தாய்மொழியில் வெளியாகும் விளம்பரத்தையே உன்னிப்பாகப் படித்து கவனிக்கிறார்கள் என்பது புலனாகிறது.

இன்னும் பல நிறுவனங்கள் வேலை வாய்ப்பு விளம்பரங்களை வெளியிடும்போது அவரவர் தாய்மொழியில் விளம்பரம் என்றுதான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘குமுதம்’ பத்திரிகை உலகளவில் எல்லோருக்கும் தெரிந்த இதழாக இருப்பது போலவே “மலையாள மனோரமா”வும் உலகளவில் பரவியிருப்பதும் சிறந்த சான்றுகளாகும்.

மாநில மொழிகளின் சிறப்பை எந்த அளவுக்கும் இனிக் குறைத்து மதிப்பிட முடியாது என்பது வெள்ளிடை மலையாகும்.

முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *