POST: 2024-02-18T08:20:51+05:30

தினச்செய்தி 11. 2.2024
பக்கம் எண் : 4

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 200

விளம்பர வீதி -5

சந்தையியலின் குரல் !

முனைவர் ஔவை அருள்

அமெரிக்க அதிபராக (1933-1945) இருந்தவர் பிராங்ளின் டி, ரூஸ்வெல்ட்.

அவர் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் அரசியல் மற்றும் போர் அரங்கில் பல சாதனைகள் புரிந்தவர்.

மிகச் சுறுசுறுப்பானவர் என்று பெயர்ப் பெற்றவர்,
அவருடைய உள்ளத்தை விளம்பரத்துறை மிகவும் கவர்ந்தது.

அதன் நுட்பமும், உத்திகளும் அவற்றால் விளையும் பயன்களும் அவரை மேலும் மேலும் வியப்பில் ஆழ்த்தின,

“என் வாழ்க்கையை நான் மீண்டும் முதலிலிருந்து தொடங்க நேருமானால், மற்ற எந்தத் துறையையும் விட விளம்பரத் துறையையே தேர்ந்தெடுத்துக் கொள்வேன்” என்று ஒரு முறை அவர் சொன்னார்.

அமெரிக்காவில் ரூஸ்வெல்ட் காலத்தில் இருந்த விளம்பரங்களின் வெளியீடும், அவற்றுக்கான செலவும் அவர் உள்ளத்தில் அவ்வளவு பரபரப்பை ஊட்டின.

அடுத்து வந்த ஆண்டுகளில் அவற்றின் வேகம் குறையவில்லை. அதிகமாயிற்று.

1975-ல் விளம்பரத்திற்காக அமெரிக்கர் 25 பில்லியன் டாலர் செலவிட்டார்கள்.

இந்தத் தொகை, அடுத்த பத்தாண்டுகளில், 1985 அளவில் 30 பில்லியன் டாலர் அளவுக்கு உயரும் என்று அப்போதே கணக்கிட்டார்கள்.

ஆனால் 1982க்கு முன்பே அந்த இலக்கைக் கடந்துவிட்டார்கள்.

அமெரிக்காவின் தேசிய உற்பத்தித் தொகையில்
2 சதவீதத்தை அவர்கள் விளம்பரத்திற்காகச் செலவிடுகிறார்கள்.

தனியார் சிலரது விளம்பரச் செலவு விகிதம் இந்த 2 சதவீதத்தையும் மிஞ்சி உள்ளது. |
சிலர் ஒரே ஆண்டில் விளம்பரத்திற்காகச் செலவிட்ட தொகை, பிராக்டர் அண்டு கேம்பிள் நிறுவனம் தன் விற்பனையில் 6.3 சதவீதம்
(310 மில்லியன் டாலர்),
சியர்ஸ் ரோபக் கம்பெனி
17 சதவீதம் (215 மில்லியன் டாலர்),
ஜெனரல் ஃபுட்ஸ் 8.1 சதவீதம் (180 மில்லியன் டாலர்), ஜெனரல் மோட்டார்ஸ் 0.4 சதவீதம் (158.4 மில்லியன் டாலர்),
வார்னர் லாம்பர்ட் நிறுவனம் 14.6 சதவீதம் (141.7 மில்லியன் டாலர்).
சான்றுக்காகச் சிலவற்றை மட்டும் கொடுத்திருக்கிறேன்.

விளம்பரத்திற்கென தொகையே இவ்வளவு என்றால் விற்பனைத் தொகை எவ்வளவு இருக்கும் என்று நாமே ஊகித்துக் கொள்ளலாம்.

அவ்வளவுக்குப் பொருள்களின் உற்பத்தியும் அதிகம்.

அவற்றைப் பயன்படுத்துவோரும் அதிகம் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

போர்டு மோட்டார் கம்பெனி, அமெரிக்கன் ஹோம்புராடக்ட்ஸ், பிரிஸ்டர்-மையர்ஸ் கம்பெனி, கோல்கேட் பாமாவிவ் கம்பெனி ஆகியவை ஓர் ஆண்டில் மட்டும் விளம்பரத்திற்காக அங்கு 100 மில்லியன் டாலருக்கு மேல் தனித்தனியே செலவு செய்வதென்றால், காரணமில்லாமலா?

“சந்தையியலின் குரல் விளம்பரம்” (
Advertising is the voice of marketing) என்பது தான், ஏராளமான இத்தொகையை அவர்கள் செலவிட முக்கிய காரணம்.

அனைவருடைய கவனத்தையும் ஈர்ப்பதும், அதற்கேற்றவாறு பெரிதும் பணப்புழக்கம் உடையதுமாக இருப்பதனால்தான், விளம்பரம் பவருக்குத் தேன் போன்று சுவையும் பயனும் உடையதாக விளங்குகிறது.

சந்தையியலில் முக்கியமான இரண்டுப் பிரிவுகள் உண்டு.

பண்டத்தின் உற்பத்திக்குத் தேவையான பல்வேறு மூலப் பொருள்களைக் கண்டுபிடிப்பதும், அவற்றை ஒருங்கே கொண்டு வந்து சேர்ப்பதும், பண்டத்தை தயார் செய்வதும் முதல் பிரிவு.

உருவாக்கிய பண்டத்தை விநியோக வாசல்கள்
(Channels of Distribution) வழியாக மக்களுக்கு அனுப்புதல் இரண்டாவது பிரிவு.

இந்த இரண்டு பிரிவுகளுக்குமே விளம்பரம் தேவைப்படுகிறது.

ஆகவே தான் ‘சந்தையியலின் குரல்” என்று அது புகழப்படுகிறது.

அச்சு வடிவம், தொலைக்காட்சி, வானொலி ஆகியவை விளம்பரச் சாதனங்களில் சிறப்பிடம் பெறுபவை.

வேறு சில சாதனங்களும் உண்டு என்றாலும், இம்மூன்றும் முக்கியமானவை.

பண்டத்தைப் பற்றிச் செய்திக் கதையாகவும் மக்களுக்குச் சொல்லலாம்! வாய் மொழிப் பிரச்சாரமும் செய்யலாம் என்றாலும் மேற்சொன்ன மூன்று சாதனங்கள் மூலமாகச் செய்யும் விளம்பரமே உடனடியாகப் பயன் தருகிறது.

செய்திக் கதையால் பொதுமக்கள் தொடர்பு வலிமை பெறுவதில்லை, வாய்மொழிப்பிரச்சார முறையோ, விரிவு பெறுவதில்லை.

மேற்சொன்ன மூன்று விளம்பர முறைகளோ, படிப்பவர் பார்ப்பவர் உள்ளத்தை உடனடியாகவும் பரவலாகவும் ஈர்க்கின்றன,
பண்டத்தைப் பற்றி அறியும் ஆவலை எழுப்புகின்றன.
வாங்கும்படித் தூண்டுகின்றன. அதனால் விற்பனை நன்கு பெருகுகிறது.

விளம்பரத்தின் ‘இடத்தை’ அல்லது “காலத்தை விளம்பரதாரர் விலைக்குத் தானே வாங்குகிறார் தமது விளம்பரம் செய்தி தகுந்த முறையில், அச்சிடப்படும். ஒலிபரப்பப்படும் என்றோ, ஒளிபரப்பப்படும் என்றோ அவர் எதிர்பார்க்கிறார்.

செலவு செய்யும் தொகைக்கு நட்டமில்லாமல் தமது செய்தி மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்று எண்ணுவார்.

எனவே, விளம்பரச் சாதனம் மற்றும் செலவுகள் பற்றி விளம்பரதாரர் ஆழ்ந்த கவனம் செலுத்துவார்.

இதுபற்றி ஒரு ஜோக் உண்டு.
வணிகத்துறையில் ஈடுபட்டு விளம்பரத்திற்காகப் பெரும் பொருளைச் செலவிட்ட விவர்ஹாம் பிரபு ஒரு முறை பின்வருமாறு சொன்னாராம்,

“விளம்பரத்திற்காக நான் செலவு செய்த தொகையில் பாதிப்பணம் வீணாகி விட்டது. சங்கடம் என்னவென்றால் எந்தப் பாதிப்பணம் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை “.

ஆகவே, பவ வகையிலும் ஆராய்ந்து பார்த்து விளம்பரத்திற்கு திட்டமிட வேண்டியுள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி பெருக வேண்டும், உற்பத்தியான பொருள் விற்றால்தாளே அடுத்தடுத்துப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியும்?

அவ்விற்பனைக்கு வழி செய்கிறது விளம்பரம், ஆகவே, பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தி விற்பனை, விளம்பரம் என்பவை சிறந்த இடம் பெறுகின்றன!
ஒன்றையொன்று சார்ந்துள்ளன.

தொலைவாக எங்கோ உள்ள நுகர்வோரையும் விளம்பரத்தின் மூவமாக ஈர்த்தால்தான் பொருளுக்குப் புதிய புதிய அங்காடிகள் கிடைக்கும், விற்பனை பெருகும்; அதனால் உற்பத்தி தடைபடாமல் வளரும்.

ஆகவே, பொருளைப் பற்றிய விவரம், சிறப்பியல்பு, பயன் கிடைக்கும் இடம் முதலானவற்றைத் தக்கவாறு விளம்பரம் செய்ய வேண்டியுள்ளது.

“அவர்களுக்குச் சொல்லாவிடில் அவற்றை நீ விற்க முடியாது”
(You can’t sell them if you don’t tell them)
என்பது விளம்பரம் குறிக்கோன் வாசகம், உலகமெங்கிலும் விளம்பரத்தின் வளர்ச்சிக்கு இதுதான் காரணம்.

ஆகையினால் எந்த ஒரு பொருளைப் பற்றியும், நுணுக்கமாக அறிந்துகொண்டு அதை விளக்கமாக விளம்பர வடிவூட்டும் திறமை, இப்போது மிகப் பெரிதாக வளர்ந்திருக்கிறது.

ஆகவே, விளம்பரம் அறையில் நடப்பதை அம்பவத்தில் காட்டும் அற்புதமான சாதனம்!

வீடோரத்தில் படம் பிடிக்கும் ஒரு சிறு காட்சி, பின்னால் கண்களை கவரும் மாபெரும் காட்சியாக திரைப்படத்தில் வருவது போல் விளம்பரம் என்பது அணுவளவு விதையை பரந்த ஆலமரமாக காட்டும் அற்புதக் கலை.

இதனால்தான் விளம்பரம் செலவல்ல, வளரும் வாணிகத்திற்கு ஊன்றுகோல், இன்னும் சொன்னால் தூண்டுகோல்!

– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *