POST: 2024-02-05T09:43:02+05:30

தினசெய்தி – 4 2 2024
பக்கம் எண் : 4

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 199

விளம்பர வீதி -4

விளம்பர வலிமை !

முனைவர் ஔவை அருள்

அன்றாடத் தேவைகள் ஆயிரக்கணக்கில் பெருகி வருகின்றன.

பொழுது விடிந்தது முதல் ஓய்வாக இரவு படுக்கையில் உறங்குவது வரை என்று கணக்கிட்டுப் பார்த்தால் ஆயிரக்கணக்கான பொருள்களின் தேவை அவசியமாகின்றது.

கோடிக்கணக்கான மக்கள், இந்தத் தேவையினை நிறைவு செய்வதற்கு பொருள்களின் திறன், ஆற்றல் பற்றி அறிய ஆசைப்படுகின்றனர், இந்த வகையில் உரிய பொருள்களை வாங்குவதற்கு உற்ற துணையாக இருப்பது விளம்பரங்கள் தான்.

இந்த வகையில் விளம்பரம் ஒரு மறுக்க முடியாத தேவையாக மாறிவிட்டது.

ஆகவே, விளம்பரத்தின் நுணுக்கம், பொருள்களின் தேவை, பொருள்களால் விளைகின்ற பலன்கள் முதலிய அத்தனையையும் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.

மேலும் தரத்துக்கு தரமாக, ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்களுக்குள் சவால்கள் ஏற்படுகின்றன,

சான்றாக, பற்பசை என்பது வெள்ளையாக இருக்கும் என்று நினைத்தோம்.

பொடியைவிட பசை பயன்படும் என்று தெரிந்தோம்.

அந்தப் பசையில் கூட ஊடுருவிப் பார்க்கின்ற பளிங்குப் பசையாகவும் அது பல வண்ணங்களில் மின்னுவதாகவும் மாற்றங்கள் செய்யத் தொடங்கி விட்டனர்.

அதற்கும் மேலாக வாய் மணக்கத்தக்கவையாகவும் அவை மாற்றப்படுகின்றன.

இந்த மாற்றங்களுக்கெல்லாம் உந்து ஆற்றலாக இருப்பது விளம்பரங்கள்தான், மேலும் விளம்பரங்கள், கல்வி வளர்ச்சி பெறப் பெறத்தான் மக்களைக் கவர்ந்து இழுக்கின்ற மிகச் சிறந்த சாதனமாகத் திகழும்.

பாறைகளில் செதுக்குதல், கல்வெட்டுகளாகக் காட்டுதல், தெரு வீதிகளில் முரசறைதல், தண்டோரா போடுதல் என்றெல்லாம் அறிவிக்கும் முறைகள் இருந்து வந்தன.

பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகள் பெருகி வந்தன.

பத்திரிகைகளுக்கு முன்பு சுவரொட்டி, விளம்பரத்தட்டி, விளம்பரப்பலகைகள், துண்டு வெளியீடுகள் பெருகி இருந்தன.

இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் 1878-ஆண்டு முதலாகவே விளம்பரங்கள் இடம் பெற்று வந்தன.

செய்திகள் உள் பக்கங்களிலேயே வெளியிடப்பட்டன.

அப்போது அந்நாளிதழ் அதிகபட்சம் எட்டு பக்கங்கள் வந்தது.

1893 அக்டோபர் மாதம் முதலாக எட்டு பக்க அமைப்பு மாறிப் பன்னிரெண்டு பக்க அமைப்பு வந்தது.

அதுவரையில் சிறிய அளவில் வெளிவந்த விளம்பரங்கள் மிகுதியான அளவில் வெளிவரத் தொடங்கின,

மொத்தத்தில் நான்கு பக்க அளவாவது விளம்பரங்கள் இடம் பெற்றன. .

தொடக்க காலத்தில் இந்துவில் தொடர்ந்து விளம்பரம் செய்தவர்கள் சிலர் உண்டு.

பி.ஆர்.அண்டு சன்ஸ் (நகைகள், கடிகாரங்கள்), ஸ்பென்சர் அண்டு கோ (பலவகைப் பொருள்கள்), லாரன்ஸ் அண்டு மேயோ (மூக்குக் கண்ணாடிகள்), மெட்ராஸ் இரயில்வே கம்பெனி (இரயில் போக்குவரத்து), வரதாச்சாரி அண்டு சன்ஸ் (புத்தக விற்பனை) ஆகிய நிறுவனத்தார்

அவர்களில் சிலர் இந்நிறுவனங்களில் பல வெள்ளையர்களுடையது.

“மெட்ராஸ் மெயில்” என்ற நாளிதழ், இது குறித்து இந்துவைத் தாக்கி விமரிசனம் எழுதியது.

“பண வருவாயைக் கருதி இந்து இதழ் இவ்வாறு வெள்ளையர் நிறுவனங்கள் தருகின்ற விளம்பரங்களை வெளியிடலாமா?

விடுதலைப் போராட்ட ஈடுபாடு கொண்டுள்ளதாகக் கருதப்படும் இவ்விதழின் இக்கொள்கை முரண்பாடு உடையதல்லவா?”

என்று அது வினவிற்று.

இந்து இதழ் அதற்குப் பின்வருமாறு மறுமொழி கொடுத்தது.

“வெள்ளையரது அரசின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர் நடத்தும் விடுதலைப் போராட்டம் வேறு;

வெள்ளையரது நிறுவனப் பொருள்களுக்கு பத்திரிகையில் வெளியிடும் விளம்பரம் வேறு.

அதனின் போராட்டம் நடத்துவதும் சரியானது.

விளம்பரம் வெளியிடுவதும் முரண்பட்டதன்று.

இரண்டையும் ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும்?”

1905-ல் இந்துவின் விற்பனை 1800 பிரதிகள்.

அடுத்த பத்தாண்டுகளில் அது 17,000 ஆக உயர்ந்தது.

அதற்கேற்ப விளம்பரங்களின் எண்ணிக்கையும், விளம்பர வருவாயும் மிக அதிகமாயின,

1958 ஜனவரி 14 முதல் இந்துவின் அமைப்பில் சில மாறுதல்கள் வந்தன.

அதுவரை முதல் பக்கத்தில் இடம் பெற்ற விளம்பரங்கள் இரண்டாம் பக்கத்திற்கும்,
உள் பக்கங்களில் இடம் பெற்ற செய்திகள் முதல் பக்கத்திற்கும் மாறின.

1977-ஆண்டு இறுதியில் இந்து, வாரமலர் வெளியிடத் தொடங்கியது,

அப்பகுதியில் பல்வேறு வண்ணங்களில் அழகிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.

பத்திரிகை அமைப்பு, விற்பனைப் பிரதிகளின் எண்ணிக்கை, மக்களின் சுவை ஆகியவை மாறுவதற்கேற்ப அதன் விளம்பர முறைகளும் மாறிக்கொண்டே வந்துள்ளன,

கட்சி, கருத்து மாறுபாடுகளைத் தாண்டி விளம்பரம் மக்களின் நலன் நாடும் பகுதியாக வெளிவந்தது.

தனியார் நிறுவனங்கள் தங்கள் பொருள்களை எப்படி விளம்பரப்படுத்தினார்களோ அதுபோலவே அரசாங்கமும் தன்னைச் சார்ந்த நிறுவனங்களின் சாதனைகள், கொள்கைகள், விழாக்கள் முதலிய அனைத்துச் செய்திகளையும் விளம்பரம் செய்யத் தொடங்கியது.

எவ்வளவுதான் தனியார் விளம்பரங்கள் மூலம் வருவாய் என்றாலும், அரசாங்க விளம்பரம் மூலம் நிலையான வருமானமும் கிடைத்தது.

இது தொடர்பாக திரு.அ.வினாயக மூர்த்தி அவர்கள் தமது பி.எச்.டி. ஆய்வில் ஒரு புள்ளி விவரம் கொடுத்து இருக்கிறார்.

“1975ல் விளம்பரத்திற்காக அமெரிக்கா செலவிட்ட தொகை 25 பில்லியன் டாலர்,

இந்தியாவிலோ 1976-77-ஆம் ஆண்டில் அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் ரூ.120 கோடி மட்டுமே விளம்பரத்திற்காகச் செலவிட்டுள்ளன.
(இதில் செய்தித் தாள்களில் செலவிட்ட தொகை ரூ.65 கோடி)

தனியார் மற்றும் தனியார் நிறுவனங்கள் செலவிட்டது ரூ.98 கோடி மட்டுமே.”

விளம்பரத்தினுடைய வளர்ச்சி படிப்படியான வளர்ச்சியாக இல்லாமல் மிக விரைவான வளர்ச்சியாக இருந்து விட்டது.

தொலைக்காட்சி சட்டம் நிறைவேற்றப் பட்டபோது தனியாக ஒரு அலைவரிசையை இங்கிலாந்தில் தொடங்கினார்கள்.

அமெரிக்காவைப் போலவே அதற்கு அடுத்த நிலையில் ஜப்பானியர் விளம்பரக் கலையை பெரிதாக வளர்த்துள்ளனர்.

பாதுகாப்புத் துறைக்கு நாம் செய்யும் செலவு, ஜப்பான் விளம்பரத்துறை செலவுக்கு நிகர் என்றும் குறிப்பிடலாம்,

உலகத்தின் மிகப்பெரிய விளம்பர நிறுவனங்கள் என்று வரிசைப்படுத்தினால் 50 நிறுவனங்களில் 11 நிறுவனங்கள் ஜப்பானைச் சார்ந்ததாகும்,

இப்படியெல்லாம் விளம்பரம் வளர வளரத்தான் விளம்பரத்தின் நோக்கம், அமைப்பு முறை, வாசக நெறி, மக்களின் கண்ணோட்டத்தைப் பெருக்கும் வினா நிரல் முறை முதலிய நிலைகளில் விளம்பர நிறுவனங்கள் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களைக் கொண்ட ஒரு கல்வி நிறுவனம் போல் மாறியிருக்கிறது.

எந்த ஒரு விளம்பரத்தையும் நிறுவனங்கள் வெளியிடுகின்ற நிலைமை மாறி, நிறுவனத்தை அழைத்துக்கொண்டு போய் காட்டுவது, நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களைக் கூறுவதும் வேறுவேறு பணிகளால் அதற்கு உரிய முழுப் பொறுப்பு விளம்பர நிறுவனப் பணியாகிறது.

விளம்பரம் செய்ய வேண்டும் என்று விரும்புகிற துறையினர் ஒரு புள்ளி வைத்தால் போதும். அந்தப் புள்ளிகளை, அழகிய கோலமாக்கும் பணியை விளம்பர நிறுவனம் செய்துவிடும்.

விளம்பரம் இல்லாவிட்டால் உற்பத்தியாளர் தமது பொருளை எப்படி பரவலாக நாடு முழுக்க அனுப்புவார்?

தனி மனிதர் தாம் எப்படி தமக்குத் தேவையானதொரு பொருளை அறிந்து வாங்குவார்?

வேறு வேறிடங்களில் உள்ள இவ்விருவரையும் இணைக்கும் அளவுக்கு வலிமையும் பயனும் உள்ளது விளம்பரமே.

விளம்பரத்துறை சுவையான அனுபவங்கள் பல தருவது.

– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *