POST: 2023-10-30T11:57:29+05:30

முரசொலி – 29 10 2023 ஞாயிற்றுக்கிழமை
பக்கம் எண் : 16

கலைஞரும் நானும்

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி

உவமைக்கவிஞர் சுரதா அவர்களால் ‘ பாதி அண்ணா ’ எனப் பாராட்டப்பட்டவர் என் தந்தையார் ஒளவை நடராசன்.

அவர்மீது அளப்பரிய அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அதுபோல், என் பாட்டனார் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களுடனும் நல்ல தொடர்பில் இருந்தவர் முத்தமிழறிஞர் அவர்கள்.

இப்படி எனது பாட்டனார், தந்தையார் என தொடர்ந்து வந்த பிணைப்பு, என்னையும் குளிர்விக்கும் வகையில் அமைந்தது என்பது எனது பேறு என்பேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை எனது நினைவுகளில் 1973 ஆம் ஆண்டுலிருந்து தேக்கி வைத்திருக்கிறேன்.

அப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும்.

சென்னை அண்ணா மேம்பாலம் திறப்பு விழாவில் எனது தந்தையாருடன் கலந்து கொண்டேன்.

அப்போது வானூர்தியில் இருந்து பூமழை தூவப்பட்ட காட்சியும்,
நடு வகிடு எடுத்த முத்தமிழரிஞரின் உருவமும் அழியாத கல்வெட்டாக நெஞ்சில் பதிந்துள்ளன.

எனது இள வயது காலத்தில் இருந்தே, எந்தையாருடன் ஒவ்வோர் ஆண்டும்
ஜனவரி முதல் நாள்,
தைப் புத்தாண்டு,
முத்தமிழறிஞர் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாள் ஆகிய மூன்று நாள்களில் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டு மகிழ்ச்சியுறுவோம்.

அவரைச் சந்தித்த வேளைகள் அனைத்திலும்
‘ வேறு தளை விரவாத வெண்பாவைப் போலத் ’ தமிழ் – தமிழர் – தமிழுணர்வு தவிர வேறொன்றும் விவாதித்ததில்லை அந்த வித்தகர் !

குடும்பத்துக்கே பெருமை அளித்தவர்

எங்கள் குடும்பத்துக்கு பெருமை செய்த பெருந்தகையாளர் கலைஞர்.

1974 ஆம் ஆண்டில், சென்னையில் என் தந்தையார் ஒளவை நடராசன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கலைஞர், எந்தையாரின் உரை கேட்டு அவரை அடுத்த நாள் தலைமைச் செயலகம் வரவழைத்து தலைமைச் செயலகத்தின் செய்தித் துறையில் துணை இயக்குநர் பதவி வழங்கி சிறப்பு செய்தார்.

அதன்பின்னர் ஆறு திங்கள் கழித்து மொழிபெயர்ப்புப் பிரிவில் இயக்குநர் பணி வழங்கி இதயம் குளிர்வித்த இனியவர் கலைஞர்.

எந்தையார் ஆற்றிய பணியினை அதே தலைமைச் செயலகத்தில் உள்ள மொழிபெயர்ப்புத் துறையில் இயக்குநர் பதவியினை 35 ஆண்டுகளுக்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 27 ஆம் நாளன்று இந்த ‘ அருளுக்கு ’ வழங்கி அருளிச் செய்தவரும் முத்தமிழறிஞர் கலைஞர் தான்.

அதை நினைவு கூரும்போது, நெல்லிக்காய் சுவைத்து நீர்குடித்த மாதிரி எப்பொழுதும் இதயம் இனிக்கிறது.

இதுகாறும் யாரும் பெறாத அரிய பரிசில் என்று என் தாயார் மருத்துவர் தாரா நடராசன் சொல்லிச்சொல்லி மகிழ்வார்.

என் தந்தையாருக்கும், எனக்கும் மகிழ்ச்சியையும் அன்பையும் கொட்டிக் கொடுத்தவர் கலைஞர்.

தமிழுக்கு உழைப்பவர்களை அவர் கைவிட்டாரில்லை, உய்வித்தார் என்பதை உணர்வாளர்கள் அறிவர்.

என் தந்தையாருக்கு தமிழ்நாடு அரசின்
பேரறிஞர் அண்ணா விருதினையும் ,
கலைமாமணி விருதுகளோடு வாய்ப்புக் கனியும் போதெல்லாம் வானுயரப் போற்றி வனப்புச் செய்தவர் வண்டமிழ்க் கலைஞர்.

தந்தைக்குக் கிடைத்த தனிப்பெருஞ் சிறப்பு அவர்தம் சிந்தையைத் தாங்கிய சிறியேற்கும் கிட்டியது,
காலம் தந்த பரிசன்று – கலைஞர் தந்த பரிசு.

சரியான நேரத்தில் சரியாக செய்கை

சரியான செயல்களைச் செய்பவர் தலைவர்.

செயல்களைச் சரியாகச் செய்பவர் மேலாளர் ’

என்ற பீற்றர் டிரக்கர் ( Peter Druker ) என்ற மேனாட்டு அறிஞர் கூற்று.

அதற்கு ஒப்ப தலைவர்கள் ஏத்தும் தலைவரான கலைஞர் சரியான செயல்களைச் சரியான தருணத்தில் சரியாகச் செய்து சரியாத புகழ் பெற்றவர்.

2006 ஆம் ஆண்டு என் பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கம் செய்தபொழுது எந்தையாருடன் பெருங்குடும்பமாக நாங்கள் அனைவரும் சென்று நன்றி பாராட்டியதைக் கண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பெருமகிழ்வுற்றார்.

அப்போது உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க எந்தையாரிடம் அவர் உரையாடிய ஒவ்வொரு சொல்லையும் வைரப்பேழையில் வைத்தது மாதிரி எண்ணப்பேழையில் எழுதி வைத்திருக்கிறேன்.

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி ’ என்ற சொல்லாடல் கலைஞருக்கே பொருத்தம் என்று பல நேரங்களில் முடிவு செய்து முகம் மலர்ந்திருக்கிறேன்.

மேடைகளில் கண் பார்வை

தமிழ்நாடு ஆசிரியர் கல்லூரிகளின் சார்பாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற வாழ்த்தரங்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞரை வரவேற்று, தொகுப்புரை வழங்கும் வாய்ப்புக் கிட்டியது.

தண்ணமுத மதியாக,
தமிழ் தந்த நிதியாக,
தமிழரின் கதியாக அவரை உருவகித்து கவிதை பாடினேன்.

மேடையை விட்டுப் புறப்படும் பொழுது என்னைத் தனியாக அழைத்த அந்தத் தமிழ்வேந்தர், பழம்பிழிந்து வைத்தாற்போல் பாசத்தைப் பிழிந்து பாராட்டிச் சென்றார்.

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமான தமிழ் இணைய மாநாட்டினை 2010 ஆம் ஆண்டில் தொகுப்புரைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அப்போதும் என்னைப் பார்த்து அகமகிழ்ந்து வாழ்த்திச் சென்றார்.

செம்மொழி மாநாட்டு மலரில் என் தந்தையாருடன், நானும் கட்டுரை எழுதி இருந்தேன்.

எனது மாமா பேராசிரியர் இரா.குமரவேலன்,
சித்தப்பா டாக்டர் மெய்கண்டன் ஆகியோரும் எழுதி இருந்தர்.

அதைப்பார்த்த முத்தமிழறிஞர் ”உரைவேந்தர் ” கட்டுரையையும் சேர்த்திருக்கலாம் என கேட்டார்.

அந்த நினைவுகள் இப்போதும் பசுமை போர்த்தி நிற்கின்றன.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூல் வெளியீட்டு விழாக்கள், கவியரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எவையெனினும் எந்தையார் பங்கேற்பும் எளியேனின் இருப்பும் இல்லாமல் இருந்ததில்லை.

2010 ஆம் ஆண்டில், என் தந்தையார் எழுதிய ‘
அருளுக்கு ஔவை சொன்னது ’ என்ற நூல் வெளி வந்தது.

அந்த நூலுக்கு வெளியீட்டு விழா எதுவும் நடைபெறவில்லை.

ஆனால், பல இதழ்களில் நூலின் மதிப்புரைகள் வெளிவந்து கொண்டிந்தன.

துக்ளக் இதழில் மதிப்புரை வந்த அடுத்த நாள் மாண்புமிகு முதலமைச்சரின் செயலாளராக இருந்த திரு இராஜமாணிக்கம் அவர்கள், ‘ நூலை எடுத்துக் கொண்டு உடனே முதல்வர் அறைக்கு வா ’ என அழைத்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை சந்தித்த அந்த வசந்தத்தருணமும் வணக்கத்துக்குரிய வரலாற்றுத் தருணமாக அமைந்தது.

ஆற்றுப்படுத்தல் என்கிற அன்பு

ஒருமுறை எனது தந்தையாரும், தாயும் நிகழ்ச்சிக்காக நெல்லை சென்றபோது, ரயிலில் குளிர்தாங்க முடியாமல் உடல்நலிவுற்று, மதுரையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

எனக்கு தகவல் வந்து காலையில் மதுரை சென்று சேர்ந்த நேரத்தில், எனது அலைபேசிக்கு முதல் அழைப்பாக முத்தமிழறிஞரிடமிருந்து அழைப்பு வருகிறது.

ஒளவை எப்படி இருக்கிறார் என அன்பொழுக கேட்ட அந்த குரல் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது.

அதே பற்றினை கலைஞர்மீது என் தந்தையார் கொண்டிருந்தார்.

கலைஞரின் இறுதி நாட்களிலும், அவரால் பேசமுடியவில்லை என்றபோதும் என் தந்தையார் மிகுந்த துயருற்றார்.

கலைஞர் மறைவுற்றார் எனக்கேட்டு கண்ணீர்விட்டு நிம்மதியிழந்த நாட்களில் அவரைத் தேற்றுவதே பெரும்பாடானது.

தலைமேல் வைத்துத் தமிழர்கள் கொண்டாடும் வள்ளுவரை, மலைமேல் வைத்துக் கொண்டாடிய அந்த மாமனிதர் ‘ உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் ’என்கிற குறள்நெறியே வாழ்ந்தார்.

அவரிடம் அளவளாவும் நிமிடங்கள் அத்தனையும் பூவுக்கு நிகராக மணக்கும்.
பொன்னுக்கு நிகராகக் கனக்கும் !

அவரது கடைக்கண் பார்வைப் பரப்பளவில் பதியும் பேறு பெற்றவன் என்னும் பெருமிதமே எனக்கு வாழ்நாளெல்லாம் அகமகிழ்வு அளிக்கும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *