தினமணி – 16.6.2023
வெள்ளிக்கிழமை
பக்கம் எண் : 8
விளம்பரம் என்பதொரு கூட்டுக்கலை !
புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவே தாயகம் என்று சொல்லப்படுவது போல, விளம்பரங்களுக்குக்கூட அமெரிக்கா தான் தாயகம் என்று சொல்லலாம்.
அமெரிக்காவில் விளம்பர நிறுவனங்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு ‘ மாடிஸன் அவென்யு ‘ எனும் பிரபல விளம்பர நிறுவனத்தின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.
‘ ஒரு பொருளின் விளம்பரத்திற்காக ஒரு டாலர் செலவு செய்யப்படுகிறது என்று சொன்னால் அப்பொருளின் விற்பனை எழுபது டாலரை எட்டினால் தான் அந்த விளம்பரம் வெற்றியடைந்ததாகப் பொருள் ‘ என்று அமெரிக்க விளம்பர வட்டாரத்தில் கூறுவார்கள்.
எனவே, நூற்றுக்கு நூறு மடங்கு அல்லது போட்ட முதலுக்குப் பத்து மடங்கு என்ற அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தருவதற்குத்தான் இப்பொழுது விளம்பரங்கள் பயனுடையதாக மாறியிருக்கின்றன.
அமெரிக்க அதிபராக இருந்தவர் பிராங்ளின் டி. ரூஸ்வெல்ட் அவர் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அரசியல் மற்றும் போர் அரங்கில் பல சாதனைகள் புரிந்தவர்.
மிகவும் சுறுசுறுப்பானவர் என்று பெயர் பெற்றவர்.
அவருடைய உள்ளத்தை விளம்பரத்துறை மிகவும் கவர்ந்தது.
அதன் நுட்பமும், உத்திகளும் அவற்றால் விளையும் பயன்களும் அவரை வியப்பில் ஆழ்த்தின.
ஒரு முறை அவர்,
‘ என் வாழ்க்கையை நான் மீண்டும் முதலிலிருந்து தொடங்க நேருமானால், மற்ற எந்தத் துறையையும் விட விளம்பரத் துறையையே தேர்ந்தெடுப்பேன் ‘ என்று சொன்னார்.
விளம்பரம் என்ற சொல்கூட, கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தான் தமிழில் புழக்கத்தில் இருக்கிறது. ‘
விளம்புதல் ‘ என்றால் பிறருக்குப் பரவலாக எடுத்துச் சொல்லுதல் என்பது பொருள்.
உணவு பரிமாறுவதைக் கூட’விளம்பு ‘ என்று கூறும் வழக்கமுண்டு.
இன்னும் ‘ ரசத்தை விளம்பு ‘ என்று சொல்லும் வழக்கமுண்டு.
‘ சுற்றுலா ‘, ‘ கூட்டுறவு ‘ என்ற சொற்களைப் போல விளம்பரம் என்ற சொல்லும் தமிழுக்கு நல்வரவாயிற்று.
ஆங்கிலத்தின் பொருளை விட அழுத்தமான கனத்தை கொண்ட அரிய சொல்லாக இது அமைந்திருக்கிறது.
எழுத்தறிவு இல்லாத மக்களிடையே ஒரு அந்நாளில் ‘ பறையறைதல் ‘ என்ற வழக்கமிருந்தது.
ஊர்ச்செய்திகளை எல்லாம், யானையின் பிடரியின் மேல் அமர்ந்து முரசறைகின்ற பணியைச் செய்தவர்க்கு ‘ வள்ளுவன் ‘ என்ற பெயர் கூட இருந்ததாம்.
கல்வியறிவு பெருகப் பெருகத்தான் கலையறிவு கூட நுணுக்கம் அடையும்.
மெல்ல மெல்ல கல்வி நலம் ஓங்கி வருவதால் தான் சுவரொட்டிகள், விளம்பரங்கள், துண்டு அறிக்கைகள், தகவல் அறிக்கைகள், செய்தித் தொடர்கள் இவை எல்லாம் வரத் தொடங்கின.
தமிழிலும் சிலர் விளம்பரக் கலையைப் பற்றி ஆய்வேடு எழுதி முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
விளம்பரமில்லாமல் எதுவும் விலை போகாது என்பதுதான் இன்றைய எதார்த்த நிலையாகும்.
அனைத்துத் துறைகளையும் வளைத்து வைத்திருக்கும் அடிப்படைக் கலையாக விளம்பரம் பெருகி வருகிறது.
எதற்கு எது விளம்பரம் என்று பட்டியல் போட்டால் அது மிகவும் நீளும்.
விளம்பரம் என்பது காவியம், ஓவியம், பொருள்களின் உண்மை, அறிவு, நுணுக்கம் முதலிய அனைத்துக் கலைகளும் ஒன்றாகத் திரண்டு இருக்கிற கலைகளின் கதம்பம் என்று குறிப்பிடலாம்.
விளம்பர நிறுவனங்கள் பல நிலைகளில், அறிவார்ந்த நிறுவனங்களாக ஓங்கி வளர்கின்றன.
பொருள்களையும் தாண்டி, வணிகத்தையும் தாண்டி,
அரசியல் திட்டங்கள் தீட்டுவதில்கூட விளம்பர உலகத்தின் பங்கு பெரிதாகவுள்ளது.
தொழில் நுணுக்கம் சார்ந்த பெருந்துறையாக விளம்பர நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன.
விளம்பரத்தில் வரும் வாசகம், அதன் வனப்பு, அதனுடைய அளவு, நிறம் எல்லாமே துல்லியமாக வரையறுக்கப்படுகின்றன.
மக்கள் மனங்களை அது எவ்வாறு கவரும், எப்படிப்பட்ட உண்மைகளை எந்தெந்த வகையில் எடுத்துச் சொல்லலாம் என்பதையும் முன்னரே திட்டமிட வேண்டும்.
கிட்டதட்ட மொழியியல் சார்ந்த துறைகளெல்லாம் எப்படி அறிவியல் நுணுக்கங்களாக மாறிவிட்டனவோ அதுபோல விளம்பரம் என்பதும் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டு, பல்வேறு கலை அழகுகளை நாள்தோறும் வளர்த்துக் கொண்டே வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.எஸ். வாசன், தான் தயாரித்த ‘ ஔவையார் ‘ திரைப்பட விளம்பரத்தில் ‘
ஆலயம் தொழுவது சாலவும் நன்று,
ஔவையார் படம் பார்ப்பது அனைவருக்கும் நன்று ‘
என்ற வரிகளை இடம்பெறச் செய்திருந்தாராம்.
விளம்பரங்களை வடிவமைக்கும்பொழுது ஒரு கருத்தரங்கைபோல, ஒரு பட்டிமன்ற நிகழ்வைப்போல் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர், ஒருங்கிணைப்பாளர், வரைவாளர், வடிவமைப்பாளர்கள் ஒருங்கே அமர்ந்து அந்த விளம்பர மலர்ச்சியை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுவது வழக்கம்.
விளம்பரங்கள் ‘ காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும் ‘ விரைவுத்தன்மை வாய்ந்ததாக அமைகின்றன.
ஏனெனில், பருவத்துக்கு பருவம் கருத்துகள், சூழ்நிலை, விளம்பரப் பொருள்களின் தரம், விலை ஆகியவை மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும்.
கல்விக்கு நாம் எவ்வளவு முதன்மை தருகிறோமோ அதே முதன்மையை நாம் செய்தித்தாள், தொலைக்காட்சிக்கும் வழங்க வேண்டும்.
இது தகவல் யுகமாக மாறி வருகிறது.
ஆட்சிப்பீடம் என்ற நாற்காலியின் நான்காவது காலாக செய்தித்தாள்கள் அமைகின்றன.
இதனால் தான் பேரறிஞர் டிஸ்ரேலி செய்தி இதழை, ‘ நான்காம் துாண் ‘ என்று வர்ணித்தார்.
காலம் மாற மாற வெவ்வேறு துறைகளுக்காக வேறு வேறு இதழ்கள் இப்போது வெளிவருகின்றன.
பொதுவான நாளிதழ்கள் தவிர நிலவியல், அறிவியல், வணிகம், வேலைவாய்ப்பு, கணிப்பொறி, தொழில் வாய்ப்பு என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இதழ்கள் எனப் பல்கிப் பெருகியுள்ளன.
வணிகர்கள்,அலுவலர்கள்,
விற்பனையாளர்கள்,
சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், வரைவாளர்கள் என்ற ஆறுமுகங்களோடு விளம்பரக்கலை தன் பங்காளர்களை வடிவமைக்க விரும்புகிறது.
கல்வியும் தொழிலும் நம் இரு கண்கள் என்று நாம் உணரத் தலைப்பட்டிருக்கிறோம்.
ஒன்றை உருவாக்குவது தொழில், அதைச் சரியாக்குவது கல்வி.
தொழில் வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சியும் தேவைப்படுகிறது.
விளம்பரம் இவை இரண்டோடும் கலந்ததாகும். எதை விளம்பரப்படுத்துகிறார்கள் ?
தொழில் வளங்களைத்தானே !
ஒரு காலத்தில் விளம்பரத்தை ‘ கலை ‘ என்றார்கள்.
அதை இப்போது ‘ விஞ்ஞானம் ‘ என்கிறார்கள்.
கலையில் அழகு முதன்மை பெறுவது போல விஞ்ஞானத்தில் அளவு, நுணுக்கம், உண்மை என்ற மூன்றும் தான் மூளை, இதயம், உறுப்பு போலச் செயற்படுகின்றன.
இப்போது எல்லாமே கல்வியாகிவிட்டது என்றால், பொருண்மையும் ஆராய்ச்சியை, அளவீட்டை, பொருத்தத்தை ஆராய்கின்றன என்று தான் பொருள்.
இன்று கணினிப் பயன்பாட்டுடன் இணையப் பயன்பாடும் சேர்ந்து, உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது.
உலகில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இணையதளங்களும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை ஏற்று அந்த விளம்பரங்களைத் தங்கள் தளங்களுக்கேற்றவாறு தயார் செய்து தங்களது தளங்களில் காட்சிப்படுத்தியும், நவீனத் தொழில்நுட்ப வழிமுறைகளைப் பின்பற்றியும் விளம்பரதாரர்களுக்குப் புதியதொரு விளம்பர வாய்ப்பை அளிக்கின்றன.
இந்த விளம்பர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட வணிக நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத் தயாரிப்புகளுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பைப் பெற்றன.
நிறுவனங்கள் தங்களுடைய செயற்பாடுகளையும், வெற்றிகளையும் ஊரார்க்கு உணர்த்தியே ஆக வேண்டும் என்பதலால்
விளம்பரம் என்பது செலவல்ல, வரவுக்கு தரும் வரவேற்பிதழாகும்.
எனவேதான் விளம்பரம் என்பது எங்கும் பரவி நின்று, அது இல்லாத இடமில்லை என்று கூறுமளவுக்கு துரும்புக்கும் விளம்பரம் தூணுக்கும் விளம்பரம் என்று சொல்லுகிற அளவுக்கு விளம்பரத்துறை வளர்ந்து வருகிறது.
நான் தனியார் நிறுவனமொன்றில் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்ததால் அத்துறை குறித்த சில செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொண்டேன். அவ்வளவே.
– ஒளவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை.
தமிழ்நாடு அரசு ….

Add a Comment