POST: 2023-05-13T12:15:59+05:30

பேரறிவுப் பிழம்பு மறைந்ததே !

எந்தையாரின் இனிய நண்பரான மலேசியமணித் திருநாட்டில் மருத்துவ மாமணியாகத் திகழ்ந்து, தமிழ்நாட்டில் பெரும் புகழோடு வாழ்ந்த முப்பெரும் காப்பியச்சுடர் என்று அறிவுலகம் புகழும் டாக்டர் முருகு துரைசாமி இயற்கை எய்திய செய்தியினை பொன்னேரி பிரதாப் வாயிலாகக் கேட்டபொழுது திடுக்கிட்டேன்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிறந்து,சென்னை இலயோலாக் கல்லூரியில் (1953 )இடைநிலைப் படிப்பை முடித்தபின் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புப் பயிற்சி பெற்ற போதே (1955)பாவேந்தர் பாரதிதாசனாருடன் நெருங்கிப் பழகும் பெரும்பேறு பெற்றவர் எனவும் அவர் பல விருதுகள் பெற வேண்டும் எனவும் அடிக்கடி எந்தையார் சொல்வதுதான் என் நினைவில் நிழலாடுகிறது.

மலேசிய மணித்திருநாட்டில் 46 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவப் பணியாற்றி தாயகமாம் தமிழ்நாடு திரும்பி தமிழ்ப் பணியில் தன்னை ஆட்படுத்திக் கொண்டதோடு அணையா விளக்கு என்ற குறுங் காப்பியத்தையும்
பாவேந்தர் நினைவுகள் என்ற கவிதை நூலையும்
யாப்பிலக்கண சிறுகுறிப்பு நூலான கவிதை இலக்கணம் கற்க வாரீர் என்ற நூலினையும் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றை பாவேந்தர் காப்பியமாகவும்
அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை நான்கு பகுதிகளாக அம்பேத்கர் காப்பியமாகவும் எழுதி புகழ் பெற்றவர்.

ஆறுகள் அலை புரளக் கரை புரள ஓடுவது போல, ஆசிரியப் பாச்சீர்கள் பளிங்கைப் போலப் பாய்ந்தோடும் காப்பியமாக புத்தர் காப்பியத்தை நான்கு பகுதிகளாக வழங்கிய நூல் அரிய களஞ்சியமாகும்.

புத்தர் காப்பியத்தை வழங்கும் போதே ரௌத்திரம் பழகு என்பதை மாற்றி ” பௌத்தம் ஒழுகு ” என்றார்.

(India has not given yuddha to the world but Buddha)

நூற்றுக் கணக்கான ஆங்கில வரலாற்று நூல்களையும், தமிழ்ப் பனுவல்களையும் தோய்ந்து ஆய்ந்த புலமையும், யாப்பழகு தெளிந்த சீர்மையும் டாக்டர் முருகு துரையின் ( 15. 7 .1934 – 10.5.2023 ) பாடல்கள் பளிச்சிடுகின்றன என எந்தையார் பத்தாண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டது கல்வெட்டு வரிகளாகும்.

எந்தையாரைப் பல நிலைகளிலும் காண்பதற்காக அவருடைய செல்வ மகளுடன் இல்லத்திற்கு வருகை புரிந்து பல மணி நேரம் அளவளாவிச் சென்றதும் கண் முன்னே காட்சியளிக்கிறது.

மருத்துவ மாமணி முருகு துரை அவர்களின் பிரிவால் வாடும் மனைவி: சுஜாதா துரைசாமி ,
குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள்:பி.அறச்செல்வி கவிதா, வழக்கறிஞர் & டாக்டர் சி பிரேம் குமார் – சென்னை, இந்தியா டாக்டர் அமுதா டி & டாக்டர் நாகராஜன் சக்கரை கே மலேசியா ,டாக்டர் அறவாழி ஆனந்த துரை & டாக்டர் சாலினி பாஸ்கர் – மலேசியா ‘

ஆகியோருக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீளாத் துயரோடு

ஒளவை குடும்பம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *