மாந்தளிரைக் கோதவைத்தக் குயில்
வணிகவரித் துறை வாயிலாக 2012-2013ஆம் ஆண்டுகளில் திரைப்படங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றது.
அத்தருணங்களில், பாட்டரசி திருமதி வாணி ஜெயராமன் அவர்களின் கணவர் திரு. ஜெயராமன் சீருந்தினை ஓட்டிக்கொண்டு வர இருவரும் திரையரங்குகளுக்கு வருவது வாடிக்கை.
அமைதியாக, ஆற்றொழுக்காக என்னிடம் தமிழியல் பொருண்மைகளைத் திருமதி வாணி ஜெயராமன் அளவளாவி எந்தையார் நடத்திய பட்டிமன்றங்களைச் சென்னை தொலைகாட்சியில் கண்டு மகிழ்ந்ததையும் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் நிகழ்ச்சியில் எந்தையாரிடமிருந்து அவர் விருது பெற்றதையும் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
அப்பொழுது, நான் ”என்னுடைய தாயாரும் அவர்களின் மூத்த சகோதரியும் வேலூரில் ஊரிசு கல்லூரியில் உடன் பயின்ற தோழிகள்”
என்று சொன்னபோது மிகவும் மகிழ்ந்து தன்னுடைய இசைப் பயணத்திற்கு ஊன்றுகோலாகவும் தூண்டுகோலாகவும் தனது தாயாரும் தனது சகோதரிகளும் இருந்தனர் என்று குறிப்பிட்டார்கள்.
பாடும் குயில் வாணி ஜெயராம் அம்மையார் தன் குரலால் வெற்றி பெற்றதைப் போல விரலாலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதற்குச் சான்றாகத் தான் எழுதிய 60 பக்கக் கவிதை நூலான
”ஒரு குயிலின் குரல்” என்ற நூலை எனக்கு 30.4.2012 அன்று பரிசாக வழங்கிப் பெருமைப்படுத்திய பொழுது நான் சொன்னேன்.
’‘பொழுது புலர்ந்ததும் பூக்கள் மலரும் என்பார்கள் பூக்களை விட புத்தகங்கள் பூத்துக் குலுங்குகின்றன வரவேற்போம்” என்றேன்.
உடனே, மாந்தளிரைக் கோத வைத்தக் குயில் திருமதி வாணி ஜெயராம் நீண்ட நேரம் சிரித்து மகிழ்ந்ததை இப்பொழுதும் எண்ணிப் பார்க்கிறேன்.
அவர்களின் பிரிவு வருத்தமளித்தாலும், அவர் பாடிய எண்ணற்றப் பாடல்கள் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்றன.
துயருடன்
அருள்

Add a Comment