தைப்பூசம் தவறாதீர்
===================
தைப்பூசம் தவறாதீர்கள் என்பது வள்ளலார் வாய்மொழி என்பார்கள்.
தமிழ்த் திங்களாகிய தை மாதத்தில் முழுநிலவு தோன்றும் நாளில் விடியல் வேளையில்
நிலாவின் நிழல் மேற்கிலும், கதிரொளியின் தோற்றம் கிழக்கிலும் நடுவில் சபையில் காட்டப்பெறும் சோதிப்பிழம்பும் தைப்பூச மாட்சியை ஒருவாறு சுட்டிக்காட்டும் .
இந்த மூன்று ஒளிகளின் நுணுக்கத்தைத்தான் தைப்பூசம் என்பார்கள்.
தமிழகத்தில் தைப்பூசம் நெடுங்காலமாக நடைபெற்று வருகின்ற திருவிழாவாகும்.
“மைப்பூசும் ஒண்கண் மடநல்லார், மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”
என்பது திருஞானசம்பந்தர் திருமொழி.
கோயில்களில் நடைபெறுகின்ற இந்த விழாவைப் பொருள் செறிந்த பொதுமை விழாவாக வடலூரில் மாற்றிய பெருமை வள்ளலாரைச் சாரும்.
எளிய மக்கள் திரண்டு நின்று வடலூரில் கண்ணீர் மல்க வழிபாடு செய்வது, கண்கொள்ளாக் காட்சியாகும்.
—– ஔவை நடராசன்

Add a Comment