தினசெய்தி – 29 1 2023
பக்கம் எண் : 4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 146
பீடும் சிறப்பும்
முனைவர் ஔவை அருள்
தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வு தொடர்பாக தொடர்ந்து யாம் வெளியிட்டுவரும் ஆய்வுச் சுருக்க உரை பின் வருமாறு :
The language of stress weakened in the absence of subject Tamils and at the same time the printed text nearly killed the pulpit, the performing Pammalite streamed across the Tamil firmament with surety and ease.
Though this was so, both the scholar and the actor in the absence of the critic were weakened protozoa of the same species to coalesce and they poured out what they understood from their love a stream of duplications imperfect renditions that passed into the substance of the other.
It was an art of conjugation.
The scholar and the actor divided with vigor over the Shakespeare original and united.
The union was the simplest due to their
like – mindedness.
This process can be better appreciated with an analogy.
Like the colonical protozoan, the English of Pammal’s times was active and small while Tamil was passive and large.
The difference between the colonizing and the colonized acted in a big way; and the scholar’s psyche began to discover sex in the act of appropriation.
The love for Shakespeare grew from here with hesitation.
Even after Pammal, some Tamils have tried the older methods of reproduction of Shakespeare alternation queerly with the new; but the scholars.
After Swami Vibulananda the Tamil word approached Shakespeare cautiously like some timid Dante approaching Beatrice.
The Tamil rhythms of prose attached themselves to the outer threads of Shakespeare’s English.
The careful stand of exit was through a retreat from the theatrical through means of characterological understanding.
The English never mistook the Tamil for an assailant; possibly it was a sophisticated system which preferred a compromise to an amour.
When the Tamil loving English scholars touched Shakespeare, he went through the ritual of modesty.
He retracted coyly though his Tamil was larger and stronger than the masculine English.
The Tamil slid down the thread of thought while the English excitedly pursued her.
At last the Tamil let herself be caught, and gave Shakespeare the delightful delusion of mastery – The Romanticism of this sort in Shakespeare – epiphenomenon was to be seen in words of Aru. Somasundaram and S. Maharajan.
Scarcely was this over, when the Tamil of English loving Tamil scholars leapt upon Shakespeare and consumed him with all the cynicism of consummated love.
————
சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில் இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில் 16.02.2021 அன்று பேசிய
உரைக் குறிப்பு
பகுதி – 8
சிலப்பதிகாரத்திற்கும் மணிமேகலைக்கும் ஒளவையவர்கள் எழுதியுள்ள ஆராய்ச்சிக் குறிப்புகள், உரைவேந்தராகக் கொண்டாடப்படும் ஒளவையவர்களின் புலமைப் பெருமைக்குச் சிறந்த சான்றுகளாக மிளிர்கின்றன.
சிலப்பதிகாரக் கட்டமைப்பு முழுவதையும் ஊன்றிக் கவனித்து ஆராய்ந்திருக்கிறார் ஒளவை.
“இடையிடையே அடிகள் தொடுத்திருக்கும் உரைநடைகள் மிக்க அழகு வாய்ந்தவை.
ஆயினும் அவை, இக்காலத்து நாம் எழுதும் உரைநடை போலாது பாட்டுத் தன்மை விரவியுள்ளன.
இது கருதியே இவற்றை “உரைப்பாட்டு” என்று கூறுகின்றனர்.
(இதனை டிரைடன் (Dryden) என்பாரும், இவ்வாறே Poetic Prose என்று கூறுவர்).
இவ்வுரைப் பாட்டுக்களைச் சில இடங்களில் உரைப்பாட்டு என்றும், சில இடங்களில் கட்டுரை என்றும் இந்நூல் (சிலப்பதிகாரம்) வழங்குகின்றது.
இராமாயணம் முதலிவற்றுள் உத்தரகாண்டம் என்பது நின்று எஞ்சிய பகுதிகளை உரைப்பதுபோல……….
உரைபெறு கட்டுரை என்னும் பகுதி உரைக்கின்றது.
இதுவும், மேலே கூறிய உரைப் பாட்டுவகையைச் சேர்ந்ததேயாகும்” என்கிறார் ஒளவை.
புகார்க் காண்டம் என்பதற்குக் கொலைவினைக் காண்டம் அல்லது கோவலற் காண்டம் என்றேன்.
பெயரிடவில்லை என்ற கேள்வியைத் தமக்குத் தாமே எழுப்பிக்கொண்டு, “இவர் (இளங்கோவடிகள்) கூறியதுபோலப் புகார்க் காண்டம் என்னாது, கொலைவினைக் காண்டமென்றோ, கோவலற் காண்டமென்றோ, பிறிதென்றோ வகுத்துப் பெயர் கூறலுறின் அமங்கலத் தலைப்பு, குறையுறக் குறியிடல் முதலிய பல குற்றம் நிகழக் காண்கின்றோம்” என்கிறார் ஒளவை.
வேற்றிசை விரவாத தனிப்பாட்டைக் ‘காதை’ என்று வழங்குவதே முறையென்பதும் ஒளவையின் ஆழ்ந்தகன்ற ஆய்வுக் கருத்தாகும்.
டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள், “காதையென்பதை இசையோடு பாடப்படுவதாகிய செய்யுள் என்று பொருள்படுகிற ‘காதா’ என்னும் வடமொழிச் சிதைவென்று கொண்டால் யாதோர் இழுக்குமின்று என்று வடமொழியாளர் கூறுவர்” என்றெழுதியிருப்பதுடன் ஒளவை மாறுபட்டுரைக்கிறார்.
“இசையுள் நாடகவுறுப்பும் விரவிவரும் பகுதிகளைக் ‘காதை’ என்று குறியாது, பிறவற்றையே அக்’காதை’யென்னும் சொல்லால் அடிகள் (இளங்கோவடிகள்) குறித்திருத்தலின், அவ்’வடமொழியாளர்’ கூறுவது, நூலாசிரியர் கருத்துக்கு முற்றும் மாறாக இருத்தலின், அது பெரியதோர் இழுக்காம் என்று தெளியத் தோன்றுகிறது” என்று ஆய்வுத் திறத்துடன் ஒளவை மறுத்துரைக்கக் காண்கிறோம்.
எனினும், உ.வே.சா.வையும் விட்டுக் கொடுக்காமல், “இது குறித்தே திரு. ஐயரவர்களும், “இதனாலேயே இந்நூலின் பல பகுதிகள் காதையென்று பெயர் பெற்றன போலும்” என நெகிழ்ந்தோதிச் சென்றனர்” என்றெழுதி, உ.வே.சா.விடம் காணப்படும் நெகிழ்வுத்தன்மையைப் புலப்படுத்திவிடுகிறார் ஒளவை.
தாம் கூறிய கருத்துக்குத் தாமே தடை விடையெழுப்பிச் சரியான கருத்தைத் துலக்கிக் காட்டுதலும் ஒளவையின் உரை மாண்பாகும்.
“இனி, “வாழ்த்துக் காதையுள்”, பல்வகை இசையும் கூத்தும் விரவிய பாட்டுக்கள் வந்திருத்தலால், காதையென்னும் சொல் இசையோடு விரவிய பாட்டுக்கும் உரித்தாம் என்பது அடிகள் கருத்தாமன்றோ எனின், வாழ்த்துக் காவிக்கு அது பெயரன்றாதல், அடிகட்கு அது கருத்தன்மை இனிது துணியப்படும். வாழ்த்துக் காதைக்கு, “வாழ்த்து” என்பதே பெயரெனப் பதிகம் கூறுகின்றது” என்று ‘அமைதி’ காண்பதிலும், ஒளவை சிறந்த திறனுடையவராவார்.
‘கானல்வரி’யின் சுருக்கத்தை, எவ்வளவு திறமையாக ஒளவை புலப்படுத்துகிறார் என்பதைப் பின்வரும் அவரின் உரைக் குறிப்பால் அறியலாம். ”
விழாக் கழித்த உவா நாளில், மக்கள் கடலாடச் செல்கின்றனர்.
மாதவியும் கோவலனும் கடற்கரைக்குச் சென்று புன்னை நீழற் புதுமணற் பரப்பில் இனிதிருக்கின்றனர்.
அப்போழ்து, வசந்தமாலை என்னும் தோழி, யாழொன்றை மாதவியின் கையிற் கொடுக்க, அதனை அவள் கோவலன்பால் தந்து பாட வேண்டுகின்றாள்.
அவனும் தான் ஒன்றின் மேல் மணம் வைத்துக் காவிரி பற்றியும் கடற்கானல் பற்றியும் பல்வகை வரிப் பாட்டுக்களைப் பாடுகின்றான்.
பாட்டுக் கேட்ட மாதவி, ஊழ்வினையால், அவன் வேற்றுக் குறிப்புடன் பாடினானெனப் புலந்தாள்போல் அவ்யாழைத் தான் வாங்கி, வேறு குறிப்புத் தோன்ற இசைக்கின்றாள்.
அக்குறிப்புணர்ந்த கோவலன் நெஞ்சிற் புலந்து அவளின் நீங்கித் தன் மனையை அடைகின்றான்.
மாதவியோ, அவன் பிரிவாற்றாது பெருந்துயர் எய்துகின்றாள்” எனக் கவித்துவம் மிளிரும் நடையழகுடன், இளங்கோவடிகளின் சொற்களையே பயன்படுத்திக் ‘கானல்வரிச் சுருக்கம் வரைகிறார் ஒளவை.
கண்ணகி பற்றிய எத்தகைய பெருமிதமான எண்ணம் ஔவைக்குண்டோ, அத்தகைய உயர்ந்த கருத்துடனேயே மாதவியையும் காண்கிறார் நம் ஒளவை.
“ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்; கோடும் புருவத்து உயிர் கொல்வை மன் நீயும்; பீடும் பிறர் எவ்வம் பாராய்; முலை சுமந்து வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய்!” எனக் கோவலன் பாடுகிறான்.
இதன் பொருளென்ன? “கடலிலே ஓடுகின்ற படகினைத் துணையாகக் கொண்டு, நின் தமையன்மார், உயிர்களைக் கொல்கின்றனர்.
நீயும் நின் வளைந்த புருவத்தின் துணைகொண்டு, என் உயிரினைக் கொல்வாயோ?
நினது பெருந்தகைமையினையும், பிறர் படும் வருத்தத்தினையும் எண்ணிப் பாராமல், நீ இவ்வாறு நடக்கிறாய்.
முலையின் பாரத்தைச் சுமந்து வாடுகின்றதே, நின் சிறிய மெல்லிடை!
அதனை நீ முதலில் இழந்துவிடாதே!”
எனக் ‘காதல் குறும்பு’ கொப்பளிக்கக் கோவலன் பாடுகிறான்.
இதுதான் இப்பாடலின் பொருள். இங்குப் “பீடும் பிறர் எவ்வம் பாராய்” என்று வரும் இளங்கோவடிகளின் கவிநயமிக்க தொடரைப் “பிறர் எவ்வம் பார்த்தல் பீடு” எனச் சொல் வரிசை மாற்றிப் பொருள் கொள்கிறார் ஒளவை.
“பிறருக்கு உண்டாகும் துன்பத்தைப் பார்த்து இரங்குவது உனக்குப் பெருமை; நீ அதனைப் பார்ப்பாயாக” என்றும் குறிப்பெழுதியிருக்கிறார்.
‘பிறர் எவ்வம் பார்த்தல் பீடு’ எனக் கோவலன் கூறியதற்கு மாறாகத்தான், பெரும் பீடுடையவள் தான் என்பதை,
“நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோம்”
என்ற தொடரால் மாதவி நிலைநாட்டிவிடுகிறாளெனலாம்.
மாதவியின் இப்பெரும் பீடை நன்குணர்ந்தவர் ஒளவை என்பதால் தான்,
“திருந்திய அறிவும் பொருந்திய கல்வியும் விரிந்த மனமும் உடையவள் (மாதவி)………..
இதனையறியாது, இக்கால நாடக மாக்கள், மாதவியை வன்கண்மையும் பொருள் வேட்கையும் பொய்யன்புமுடைய ‘மாதகி’யாக்கி நடித்துத் திரிகின்றனர்” என்றழுதிக் கற்பரசி மாதவிக்குப் பெருமை சேர்க்கின்றார் ஒளவை.
பொதுநோக்கில் பல கருத்துகளைப் பேசினாலும், ஔவையின் உரைக் குறிப்புகளில் சைவச் சமயச் சார்பும் இல்லாமலில்லை.
“இவர் (இளங்கோவடிகள்) காலத்தே நம் தமிழ்நாட்டில் இந்திரன் முதலிய சிறுதெய்வ வழிபாடும், வேள்வி செய்தலாகிய வைதீகச் சமயமும், புத்த சமண சமயங்களும் பரவியிருந்தன.
தமிழ்நாட்டிற்கே உரிய சிவ வழிபாடாகிய, இக்காலத்தே சைவம் எனப்படும் – தமிழ்ச் சமயமும் இருந்துவந்தது” என்று ஔவை எழுதுவதால், இரண்டு கருத்துகள் நிலைநாட்டப்படுகின்றன.
அ. தமிழ்நாட்டிற்கே உரியது சிவ வழிபாடு
ஆ. சைவம் என்பது தமிழ்ச் சமயம்.
பழங்காலச் சமூகத்தில் சமய வழிபாடு பரவியிருக்கவில்லை என்ற கருத்திற்கு மாறாகச் சிவ வழிபாடு மற்றும் சைவத்தின் தொன்மையை ஒளவையவர்கள் இங்குப் பேசுவது சிந்திக்கத்தக்கதாகும்.
ஆனால், இளங்கோவடிகளின் மனக்கருத்தைத் துல்லியமாகக் காட்டுவதிலும் ஒளவை பின்தங்கிவிடவில்லை.
“இளங்கோவடிகள் இச்சமயங்களிடத்தே காழ்ப்புச் சிறிதுமின்றி, அவ்வவற்றின் தகுதியினைத் தக்காங்கு அறிந்திருந்தனர்.
அவற்றைக் கூற வேண்டுமிடங்களில், அவ்வவற்றுக்குரியவர் போலவே கூறுவது கொண்டு, அவரைச் சமணர் என்பாரும், வைதீகச் சமயத்தவர் என்பாரும் பல திறத்தர் உளராயினர். ஆயினும், இவரைச் சைவர் என்றே துணியுமாறு டாக்டர் உ.வே. சாமிநாதையர் கூறுகின்றார்” என்றெழுதித் தமக்குத் துணையாக உ.வே.சா.வையும் இழுத்துக்கொள்கிறார் ஒளவை.
அதேவேளையில், நடுவுநிலைமை மாறாமல், சிலப்பதிகாரத்தின் காலம் பற்றிய சிக்கலுக்குக் கற்போர் ஏற்கும் வகையில் – ‘அது மேலும் ஆராயப்பட வேண்டியது’ – எனக் கருத்துரைக்கிறார் ஒளவை.
“இளங்கோவடிகள் காலம் முதல் கயவாகுவின் காலமான கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும் என்று கொள்ளப்படுகிறது.
இனி, வேறு சிலர், இச்சிலப்பதிகாரக் காலம் மூன்றாம் நூற்றாண்டு என்றும், வேறு சிலர் ஆறாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இக்கூற்றுக்களை நோக்கின், இப்பேரிலக்கியத்தின் கால ஆராய்ச்சி இன்னும் முற்றுப் பெறாதிருத்தல் தெரிகிறது.
இது நன்கு தெளிவாகி வரையறுக்கப்படுந்துணையும், இளங்கோவடிகள் இற்றைக்குச் சற்றேறக்குறைய ஆயிரத்தெண்ணூறு யாண்டுகட்கு முன்னிருந்தவர் என்று கூடல் சிறப்புடைத்தாம்” என்ற நடுநிலைக் கருத்தையே பதிவுசெய்துள்ளார் ஒளவை.
தாம் உரைக் குறிப்பெழுதும் நூல்களின் சிறப்பையும், நூலாசிரியர்களின் வரலாற்றையும் ஆழ அகலமாக வரைவதென்பது ஔவையின் தனிப் பண்பாகும்.
எவ்வளவு தெளிவாகச் சிலப்பதிகார ஆசிரியர் பற்றிச் சிலம்பின் பதிகத்தைத் தழுவிக் குறிப்பெழுதுகிறார் ஒளவை என்பதைப் பாருங்கள்.
“இவ்விலக்கியத்தை இயற்றிய சான்றோர் இளங்கோவடிகள்.
இவர் சேரர் குடியில் பிறந்தவர்.
இவருடைய தந்தை, ”
ஆராத்திருவின் சேரலாதன்”
என்னும் வேந்தர் பெருந்தகை;
தாயார் நற்சோணை எனப்படுவார்.
சேரலாதனுக்கும் நற்சோணைக்கும் செங்குட்டுவன், இளங்கோ என மக்கள் இருவராவர்.
இவருள் செங்குட்டுவன் மூத்தவன். ஒருநாள் மக்கள் இருவரும் தன் தந்தையுடன் இனிதிருக்குங்கால், நிமித்திகள் ஒருவன் வந்தான்.
வந்தவன், இளங்கோவை முடிமுதல் அடிகாறும் ஏற இறங்க நோக்கி, “இவனே அரசுரிமை பெறுவன்” என்றான்.
அது கேட்ட செங்குட்டுவன், சினந்து எரி தவழ நோக்கினன்.
மூத்தோன் இருப்ப, இளையனான தான் அரசுரிமை எய்துதல் ஆகாதெனக் கொண்டு, இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டார்.
அதனால் இவ்விளங்கோ, இளங்கோ அடிகள் எனச் சான்றோரால் சிறப்பிக்கப்படுவாராயினர்.
இவ்வரலாறு இச்சிலப்பதிகாரத்திற்கு உரைவிரித்த ஆசிரியர் அடியாருக்கு நல்லாரால் பின்வருமாறு,
“குமரியொடு…… அந்தமில் இன்பத்து அரைசாள் வேந்து ஆயினன்” என்றுரைக்கப்படுகிறது” எனச் சொல்ல வேண்டியவற்றைச் சுருக்கமாகச் சொல்லிக் கருத வேண்டியவற்றை நன்குணர வைப்பது, ஒளவையின் புலமைத் திறமாகும்.
ஒளவையின் உரைக் குறிப்புகளை ஆழ்ந்து கற்போர், நீண்ட நெடிய பண்பாட்டு வரலாற்றைக் கொண்ட தமிழ்ச் செவ்விலக்கியங்களின் அரிய நுட்பங்களைக் கற்றுப் பயன் பெறுவது திண்ணம்.
– வளரும் . . . .
– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment