POST: 2022-10-03T10:03:28+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 73

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் !

மோசிகீரனார் ,
சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை ; கொண்கானங் கிழானையும் பாடிப் பெரும் பரிசில் பெற்று மேம்பட்டவர்.

வினையான் மிக்க வேந்தர் போந்து தானையொடு சூழ்ந்துகொண்ட காலையில், தன் தானை வாழியவே. “ இனித் தன்னையின்றித் தன் எயில்சூழ் இருக்கைக்கு
வேறு அரணில்லை ” யென்பதைத் தெரிந்து நன்னனென்பான்,

தான் தங்கியிருந்த கானத்தினின்றும் வெளிப்பட்டு வந்து தான் பிடித்த வேலைக் கைவிடாது பகைவரை வென்று தன் பண்டைப் புகழை நிறுவிய சிறப்பினைப் பெரிதும் பாராட்டிப் பேசுவர்.

ஆய் அண்டிரனுக்குரிய பொதியமலையிலுள்ள வேங்கையும் காந்தளும் போல மகளிர் மேனி மணங்கமழும் என்பர்.

இத்தகைய சிறப்பமைந்த இக்கீரனார் தம்மோடொத்த சான்றோர் சூழ வேந்துடை யவையத்திருந்தகாலை அரசற்கும் நிழல் வாழும் குடிகட்குமுள்ள தொடர்புபற்றி ஊர் ஆராய்ச்சி நிகழ்ந்தது; உயிர்க்கும் உடம்புக்குமுள்ள தொடர்பே அரசர்க்கும் அவன் நாட்டிற்கும் உள்ள தொடர்பு என்பது அவ்வாராய்ச்சியின் முடிபாயிற்று.

ஆகவே, உடம்பின் நலத்துக்கும். – கேட்டுக்கும் உயிரினது உண்மையும் இன்மையுமே ஏதுவாதல் போல் வேந்தன் உளனானால் நாடு நலமுறுதலும் இலனாயின் கெடுதலும் ஒருதலை என்றனர் ஒருசாரார்.

உடம்பின் நலத்துக்கு நெல்லும் நீரும் ஏதுவாம் அவை யுள்வழியே உயிருண்மையும், அரசுண்மையும் காணலாம்.

ஆகவே, நெல்லும், நீரும் உலகிற்கு உயிராவன என்றனர் .

பிறிதொரு சாரார்.

இவ்வாறு நாட்டிற்கு அரசே உயிரென்பாரும் பொருளே உயிரென்பாரும் எனச் சான்றோர் இரு திறத்தராகவே ஆங்கிருந்த மோசிகீரனார், ” நாடாளும் வேந்தனாவன் இவ்வுலகிற்கு யானே உயிர்; ஏனை நெல்லுமன்று; நீருமன்று என்பதை அறிந்தொழுகும் அரசுமுறை உயிர்நிலையாம் ” என்ற கருத்துப்பட இப் பாட்டினைப் பாடிக் காட்டினார்.

நெல்லு உயிரன்றே நீரு உயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால், யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

(186)

திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக் காஞ்சி, மோசிகீரனார் பாடியது.

உரை : மன்னன் உயிர்த்து மலர்தலை உலகம் – வேந்தனாகிய உயிரை யுடைத்து பரந்த இடத்தையுடைய உலகம்; அதனால்நெல்லும் உயிரன்று – இவ் வுலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று; நீரும் உயிர் அன்று; யான் உயிர் என்பது அறிகை – யான் உயிரென்பதனை யறிகை; வேல் மிகு தானை வேந்தற்குக் கடன் – வேலான் மிக்க படையையுடைய அரசனுக்கு முறைமை எ-று.

மன்னன் உயிர்த்தென்ற கருத்து: உயிரை யாக்கும் நெல்லும் நீரும் உளவாவது மன்னன் முறைசெய்து காப்பின் என்றதாம்.

விளக்கம் : “நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு, உயிரும் உடம்பும் படைத்திசினோர்” (புறம்.18) எனச் சான்றோர் கூறுதலால் “

நெல்லும் உயிரன்று நீரும் உயிரன்று ” என்றார். உயிரும் உடம்பும் கூடி நின்ற வழியும் உயிர்க்குயிராய் நின்றியக்கும் திருவருள்பே அரச முறை இன்றியமையாமையின், அதனைச் செலுத்தும் தானே உலகிற்கு உயிராதலை யறிந்து, உயிர் தானின்ற உடம்புக்குளதால் நோயைத் தான் நுகர்ந்தும் அதனைப் பேணுதல்போல, புரத்தற்கண் உள்ள துன்பமனைத்தையும் தானேற்று அதன் காப்பது கடன் என்பார், ”

யானுயி ரென்ப தறிகை கடன் ” என்றார். ” இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம், உழத்தொறூஉம் காதற் றுயிர் ” ( திருக்குறள் . 940 ) எனச் சான்றோர் கூறுதலால் உயிரது செயல் நலம் தெளியப்படும்.

திருத்தக்கதேவர் இக்கருத்தை. ” நெல்லுயிர் மாந்தர்க் கெல்லாம் நீருயிர் இரண்டுஞ் செப்பிற், புல்லுயிர் புகைந்து பொங்கு முழங்கழல் இலங்கு வாட்கை, மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய், நல்லுயிர் ஞாலந் தன்னுள் நாமவேல் நம்பி என்றான் எனக் கூறுவர்.

இக்கருத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் தன் சித்திரத் தமிழில் ஓவியமாகக் காட்டுவது தொடர்கிறது .

அரசனது அத்தாணி மண்டபத்தில் அன்றொரு நாள் ஆன்றவிந் தடங்கிய மேலோர் புலவர் அவை கூடிற்றாம் !

பல்பொருள் குறித்து விவாதம் எழுவதும் முடிவதும் பலமுறை நடக்கும்;

அங்கே பைந்தமிழ் மணக்கும். இம்முறையோ அரியதோர் கேள்வி பிறந்தது அவையில் இன்னுயிர்க்கிணை எதுவென்றும் என்புதோல் போர்த்த உடலுக்கு இணைதான் எதுவென்றும் இணையிலாப் புலவர் கூட்டம் கணைகளாய்த் தொடுத்திட கருத்துக்கள் மோதின அக்களத்தில் நெல்லும் நீரும் உயிராய் விளங்கிப் பல்லோர் உடலை வளர்த்து நில்லா நெடுஞ்சுவர் உயிரையும் நிலைக்க வைத்திடுமென்றும் நிலமாளும் வேந்தர்க்கும் அதுவே உயிராக விளங்குமென்றும் நீருக்கும் நெல்லுக்குமுள்ள சிறப்பைச் செப்பினர் சில புலவர் முரசு கட்டிலில் படுத்துறங்கி முடிமன்னன் கைகளாலே அரசு மரியாதையாக வெண்சாமரம் வீசப்பெற்ற மோசிகீரனார் எனும்புலவர் முற்றிய விவாதத்துக்கிடையே மாசு மருவிலாக் கருத்தொன்றை வெளியிட்டார் !

” என்னருமைப் புலவர் பெருமக்காள் !

இனிய கன்னலெனத் தமிழ் வடித்துத் தருகின்ற பெரியீர் !

பொன்னின் நிறம் வாய்ந்த நெல்விளையும் கழனிகளில் புனல்பாய்ந்து விதை முளைத்து, பயிரின் வேர் நனைத்து உழவனது வியர்வையெலாம் அறுவடைக் குவியலாகி உண்பதற்கு வெண்சோறு பொங்குதற்கும்;

: உண்மையது மறுக்கவில்லை
உலையிலிட நீர் வேண்டும்; உண்ண உடல் வளர உயிர் வாழ நெல்லும் நீரும்
தேவையென்பதிலும் மாற்றமில்லை.
சிந்தனைக்கு ஒரு வாதம் வைக்கின்றேன் :

சிறிதளவும் நடுமுள் நடுங்காமல் தீர்ப்பளிப்பீர் நாடாளும் அரசொன்று இருக்கும்போது – கேடான செயல்களுக்கும் கீழான குணங்கள்
அடிமையாகி,
நீரும் நெல்லும் இல்லா நிலையில் ஊரும் உலகும் தவித்திடும் வகையில் சீரும் சிறப்பும் இல்லாச் ” செங்கோல் ” செலுத்திடும் கொடுமை படைத்திடுமானால் உடலெங்கே ?

உயிரெங்கே ?

இவ்விரண்டும் ஒன்றைவிட்டு ஒன்றகன்று பிணமாக மாறிவிடும் ! அதனாலே; மன்பதை ஆளும் ஆட்சியின் மாட்சியே – அந்த மக்களுக்குயிராம்; அவர்கள் வாழும் மண்ணுக்கும்
உயிராம் !

வேற்படை விற்படையென விதவிதப்
படைகளிருப்பினும் விழிப்புடன் வேந்தன் விரைந்து செயல்படல்
வேண்டுமன்றோ ?

வெளிநாட்டுப் பகைப்புலத்தை விரட்டுகின்ற வீரமுடன் ஒளிநாடாய்த் தன்னாட்டை உருவாக்கி வைப்பதற்கு தெளிவுள்ள ஆட்சித் திறன் தேவையன்றோ ?

சோம்பலினால் நெளிகின்ற போக்கிருந்தால்; நெல் எங்கே ? நீர் எங்கே ?

அறிவார்ந்த அரசொன்றே நாட்டுக்குயிராய்
அமைந்துவிடின் அதன்பின்னர் நீர்வளமும் நிலவளமும் பிறவளமும்
நிறைந்து குலுங்கிவிடும் அறிவீர் ! ”

என்றார்.

மோசிகீரனார் மொழி கேட்டுப் புலவரெலாம் தமது வாதம் தூசியென ஒப்புக்கொண்டு தோல்வியினை ஏற்றுக்கொண்ட
நெல்லும் உயிரன்றே !

நீரும் உயிரன்றே!

எனக் கல்லில் செதுக்கிய எழுத்தாகப்
புறப்பாட்டு பூத்ததம்மா !

அது என்றும் துப்பாட்டாய்ப் பொலியும் அம்மா !

* “நெல்லும் உயிர் அன்றே ; நீரும்
உயிர் அன்றே ; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால் யான் உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”
(புறநானூறு : பாடல் : 186
பாடியவர் : மோசிகீரனார்)

பொருள் விளக்கம் : மன்னன் உயிர்த்தே = அரசை உயிராக உடையது. மலர்தலை உலகம் = பரந்துகிடக்கும் நாடு. வேன் மிகுதானை = வேற்படை மிகுதியாக உடைய சேனை. மன்பதை = மக்கள் வாழுமிடம்.

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *