குறள் முழக்கம்
தி.வ.ஆ.2053 ஆனி-26
22.7.2022
இலவச இணைய இதழ்
ஔவை அருள் வழங்கும்
குறள் விளக்கம்
வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய யெல்லாம் பிற
இங்கே பிளாரென்சு நைட்டிங்கேல் வாழ்க்கை நினைவுகூரத்தக்கது.
இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணி காலத்திய பெருஞ்செல்வந்தருக்கு மகளாகப் பிறந்த பிளாரன்சு வளர்ந்து வந்த பொழுது தானொரு செவிலியாக வேண்டுமென்று பெரிதும் விரும்பினார்.
ஆனால், அக்காலத்தில் செவிலியரைப் பற்றி மிகவும் மோசமான கருத்து நிலவி வந்தது.
அதுவும் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பிளாரன்சு நைட்டிங்கேல் போன்றோர் செவிலியராவதென்பது நினைத்துக் கூடப் பார்க்க இயலாத ஒன்று.
1845 ஆம் ஆண்டு அவருடைய இருபத்தைந்தாவது வயதில் சாலிசுபரி மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்ற அவர் விரும்பியபொழுது அவருடைய தந்தை கடுமையான தடை விதித்தார்.
தனது குடும்பத்தாரின் எதிர்ப்பால் சற்றே மனம் வெதும்பிய போதிலும், செவிலியாகப் பயிற்சி பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளைக் கண்டுபிடித்தார்.
குடும்பத்தாருடன் இலண்டனுக்கும் ஐரோப்பிய நகரங்களுக்கும் சுற்றுலா சென்ற பொழுது மருத்துவமனைகளுக்கும், சேரிகளுக்கும்,பள்ளிகளுக்கும், பணிமனைகளுக்கும் சென்று தொண்டாற்றினார்.
மருத்துவமனைகள் தோன்றி வளர்ந்த வரலாற்றையும் சிகிச்சைக்குப் பின் ஓய்வு பெறும் விடுதிகளைப் பற்றியும் ஆய்வு செய்தார்.
மக்கள் நல்வாழ்வுத் துறையினரும் மருத்துவக் குழுக்களும் வெளியிட்ட ஆய்வு
அறிக்கைகளில் மூழ்கிப் போனார்.
செருமனியின் கெய்செர்வொர்த்து மருத்துவ நிறுவனத்தின் ஆண்டறிக்கையினை அவருடைய தோழி அனுப்பி வைத்தார்.
அந்நிறுவனம் நற்பண்பு கொண்டமகளிருக்கு செவிலியர் பயிற்சி அளித்தது.
அந்தப் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு தன் பெற்றோருடன் நான்கு ஆண்டுகள் போராடி அனுமதி பெற்றார்.
அவருக்கு முற்றிலும் ஏற்றவர் என்று அவருடைய குடும்பத்தார் கருதியவரை மணம் புரிய மறுத்து விட்டார்.
தனது பணிகளைத்தொடருவதற்கு ஏதுவாக சுதந்திரமாக இருப்பதென்று முடிவு செய்தார்.
அவருடைய குடும்பத்தாருடைய எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை.
1853 ஆம் ஆண்டில் அவருடைய முப்பத்தி மூன்றாம் வயதில் இலண்டனில் பிணியற்ற சீமாட்டியருக்கான பராமரிப்பு நிறுவனத்தில் ஊதியமற்ற பதவியில் ஒருவாறாக அமர்த்தப்பட்டார்.
அங்கே மிகச் சிறந்த நிருவாகி என்று புகழ் பெற்றார்.
1854 ஆம் ஆண்டு முடிவில் ஆங்கிலேயப் போர் வீரர்கள் கிரிமியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
கருங்கடலின் வடக்குக்கரையில் துருக்கிக்காக உருசியாவுக்கு எதிராகப் போர் புரிந்தனர்.
அப்போது போர் தொடர்பான செய்தித்தாள்கள் வெளிவரத் தொடங்கியிருந்தன.
கிரிமியப் போர்க்களத்தில் காயமுற்ற வீரர்கள் சிகிச்சையின்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செய்தி ஆங்கிலேயப் பொதுமக்களுக்கு எட்டியது.
அங்கு சென்று பணியாற்வதற்கு இராணுவத்துறையினரிடமிருந்து வந்த அழைப்பினை பிளாரென்சு ஏற்றுக் கொண்டு ஆறே நாட்களில் முப்பத்தெட்டு செவிலியரைத் திரட்டிக் கொண்டு கான்ஸ்டான்டிநோபிள் சென்றடைந்தார்.
இராணுவ முகாம்களிலும் மருத்துவமனைகளிலும் 2400 க்கும் மேற்பட்ட காயமுற்ற வீரர்கள் கவனிப்பாரின்றி முடைநாற்றத்தில் கிடந்தனர்.
அதிகப்படியான சாவுகளை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருந்த இராணுவ மருத்துவமனையின் செயல்பாட்டினை மேம்படுத்துவதென உறுதி பூண்டார்.
சாதாரணக் குடும்பப் பெண்டிரை அனுப்பி வைத்துவிட்டதாகக் கொக்கரித்துக் கொண்டிருந்த இராணுவ அலுவலர்கள் மத்தியில் தனது அளப்பரிய மனத்திட்பத்தால் தனிப்பட்ட முயற்சியில் நிதி திரட்டி தேவையான உயிர்காக்கும் மருந்துகளையும் சிகிச்சைக்கான கருவி கரணங்களையும் பெற்று தனது அயர்வரியா உழைப்பினால் 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 41 விழுக்காடாக இருந்த இராணுவ மருத்துவமனையின் இறப்பு வீதத்தை மே மாதத்தில் இரண்டு விழுக்காடாக மடியச் செய்தார்.
கண்டிப்பான நடைமுறைகளாலும், உறுதியான ஒழுங்கமைப்பாலும், ஒவ்வொரு செயலிலும் உன்னிப்பாகக் கவனம் செலுத்தியதாலும், அயராத உழைப்பாலும், வெல்லற்கரிய மனத்திட்பத்தாலும் அந்நிலை சாத்தியமாயிற்று.
போர் முடிவுற்றபின் வெற்றி வீராங்கனையாக, விளக்கேந்திய நங்கையாக இங்கிலாந்து திரும்பிய நைட்டிங்கேல் கிரிமியக் காய்ச்சலால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறக் கூட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அடிக்கடி மயக்கமும் வலிப்பும் ஏற்பட்டு மிகுந்த சோர்வினால் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாகவே கிடந்தார்.
இருப்பினும் தனது சாய்வு நாற்காலியில் இருந்தவவாறு வில்லியம் பர் என்கிற இணையற்ற புள்ளியியல் வல்லுநருடன் இணைந்து 800 பக்கங்கள் கொண்ட நூல் ஒன்றைத் தனது சொந்தச் செலவில் அச்சிட்டு வெளியிட்டார்.
அவர் இயற்றிய மருத்துமனைக் குறிப்புகள் எனும் நூல் மிகவும் புகழ் பெற்றது.
நலிவுற்ற நிலையிலும் அவர் எழுதிய 12000 கடிதங்களும் 200 நூல்களும் ஆய்வு அறிக்கைளும் புள்ளியியல் வரைபடங்களும் அவர்தம் புகழ்பாடும் நினைவுச் சின்னங்களாக நிலைத்து நிற்கின்றன.
போர்வீரர்களுடைய குடியிருப்புகளின் வசதிகளையும் அவர்களுடைய வாழ்க்கை நிலையினையும் மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய தொண்டு மதிப்பிடற்கரியது.
https://thirukkural.fandom.com/ta/wiki

Add a Comment