செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 72
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
வேந்தனும் – வேழமும் !
மேகத்தைப் பிழிந்து நீரெடுத்து – மலைகளின் தாகத்தைத் தீர்க்கின்ற குளிர்காற்று; மெல்ல நடைபயிலும் மேன்மைமிகு தகடூர் நாட்டில் வெல்லத் தமிழ் சுவைக்கும் அதியமான் நெடுமானஞ்சி வேந்தன்;
அத்தாணி மண்டபத்தில் வழக்கம்போல் ஆன்றோர் சான்றோர் கொத்தான மீசைகொண்ட தளபதிகள் அமைச்சர் பெருமக்கள்,அமர்ந்திருந்து நாட்டுவளம் பெருக்க அரிய கருத்துரைகள் அள்ளிப்பொழிந்தபோது; அகமகிழ்ந்து பாராட்டிப் புகழ்ந்தேத்தி அதியமான் நெடுமான் மன்னன் அனைவரையும் வாழ்த்தி நின்றான் !
அதுகண்டு ஒளவைப்பிராட்டியார் ஆனந்தக்கண்ணீர் ததும்ப; முடிமன்னன் முகம்பார்த்து முறுவலித்துக் கவிதையொன்றை முல்லைப்பூச்சரம்போலத் தொடுத்தெடுத்து என்றும் அழியாத முத்தாரமாய்ப் பதியவைத்தாள் புறப்பாட்டில் !
அந்தச் சத்தான செய்யுள் தரும் உவமை நயம் உணர்ந்துமகிழ்க !
பற்றும் பாசமும் பரிவும் கொண்டு தன்னைச் சுற்றியிருப்போர் யாவரேயாயினும் அவர்பால் அதியமான் காட்டும் அன்பும் பண்பும், அத்துடன் எளிமையாய்ப் பழகிடும் இனிமைத்தன்மையும் – ஒரு தலைவனுக்குரிய தகுதியாமன்றோ !
இந்தத் தமிழ் நிலம் பெற்ற பெருமையாமன்றோ !
நினைத்துப் பார்த்தாள் நெடுமானஞ்சியின் இனிய இயல்பை;
தேனில் நனைத்துக் கோத்தாள் தமிழ்க்கனிகளைக் கவிதையாய் !
” இமைபோலும் இந்த நாடு காக்கும் காவல் அரணே !
எமையறிந்து எளிமையுடன் பழகும் தலைவா !
உனையெண்ணும் போதெனக்கு நான் கண்ட
-யானையொன்றின் நினைவே மிகும் !
உவமையாக அதன் செயலை ஒப்பிடுதலே
உனக்குத்தகும் !
நீர்த்துறையில் இளைஞர் கூட்டம் நிறைந்து நின்று
– தனது நீண்ட தந்தத்தைக் கழுவிக் குளிப்பாட்டும் போழ்து; பிஞ்சுப்பிள்ளைகளின் விளையாட்டுப் பொருள் போல
அவர்கள் அஞ்சுவதற்கெதுவுமின்றி எளிதாய்த்தோன்றும் அந்த
யானை !
அதன் எளிய தன்மைபோல எமை அணுகிப் பழகும்
நீயும்; மதம் கொண்டால் அந்த யானை, மருண்டெழுந்து
கிளம்புதல் போல் மாற்றாரின் படைகண்டால் மண்ணதிர விண்ணதிரப்
புயற் காற்றாக மாறிடுவாய் !
பகையொழிக்கச் சீறிடுவாய் !’
இளஞ்சிறாருடன் நீர்த்துறையில் நிற்கின்ற யானை போல எம்மனோர் மனம் மகிழ எளியவனாய் நீ திகழ்ந்திடினும்; எதிரிகளின் முன்னால் நீ கனல் கக்கி நிமிர்ந்து நின்று
– நோக்குங்கால்; அதிரடிகள் எடுத்து வைக்கும் மதயானை போலன்றோ
விளங்குகின்றாய் ! ”
அனுபவத்தில் ஔவை கண்ட யானையின் செயலிரண்டினையும் அதியமான் மன்னனுக்குப் பொருத்திப் பாடியதின் அழகே
அழகு !
” ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழா அலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும, எமக்கே; மற்றதன் துன்னருங் கடாஅம் போல இன்னாய், பெரும, நின் ஒன்னா தோர்க்கே ! ”
( புறநானூறு : பாடல் : 94 பாடியவர் : ஔவையார் )
பொருள் விளக்கம் :
குறுமாக்கள் = இளம்பிள்ளைகள். கோடு = தந்தம். கழாஅலின் = கழுவுதல் காரணமாக. கடாஅம் = யானைக்குப் பிடிக்கும் மதம். துன் = நெருக்கம். ஒன்னாதோர் = பகைவர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் கருப்பு வரிகளைத் தொடர்ந்து புறநானூற்றின் பழைய உரையில் இந்தப்பாடல் இடம்பெற்ற வகையும் உரை விளக்கத்தையும் தொடர்ந்து காணலாம் ,
திருவோலக்கத்தின்கண் அரசர் சூழ விருப்பினும் போர்க் களத்தேபடைநடுவண் இருப்பினும், ஒளவையார்க்கும் அவரொத்த புலவர்க்கும், அதியமான் இன்முகமும் இன்சொல்லும் உடையவனாய் இருந்துவந்தான்.
அவனது அவ்வொழுகலாறு மிக்க மகிழ்ச்சி தந்தமையின் அதனை யவர் இப்பாட்டின்கண், ” பெரும. நீ எமக்கு இனியையாய் ஒன்னாதார்க்கு இன்னா செய்பவனாய் உள்ளாய் ” என்று சிறப்பித்துள்ளார்.
திணை: வாகை; துறை: அரசவாகை. அவன் பொருது புண்பட்டு நின்றானை அவர் பாடியது.
உரை : ஊர்க்குறு மாக்கள் – ஊரின்கட் சிறுபிள்ளைகள்; வெண் கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் – தனது வெள்ளிய கோட்டைக்கழுவுதல் காரணமாக நீரையுடைய துறைக்கட்படியும்; பெருங் களிறு போல – பெரிய களிறு அவர்க்கு எவ்வாறு எளிதாய் இனிதாம் அவ்வாறே; எமக்கு பெரும இனியை – எங்களுக்குப் பெரும நீ இனியை; மற்று அதன் துன்னரும் கடாஅம் போல – மற்றதனுடைய அணைதற்கரிய மதம்பட்ட நிலைமை எவ்வாறு இன்னாதாம் அதுபோல; பெரும நின் ஒன்னாதோர்க்கு இன்னாய் – பெரும நின் பகைவர்க்கு இன்னாய் எ-று.
கழாஅலின் என்பதற்குக்
கழுவப்படுதலா லெனினு மமையும்
விளக்கம்:
மனவுணர்வு நிரம்பாமையின், இளஞ்சிறுவர்களைக் “ குறு மாக்கள் என்றார்; “ மடக்குறு மாக்களோ டோரையயரும், அடக்கமில்போழ்து ” ( கலி.82 ) என்றாற் போல. மதம் பட்டயானை பாகர்க் கடங்காது மறலு மாதலால், அது பற்றித் துன்னரும் கடாஅத்து நிலைமை யென்றார்.
பெருமைக்கும் வலிக்கும் களிறு உவமமாயிற்று. கடாஅம்; ஈண்டு ஆகுபெயராய்க் கடாம் உண்டாகிய நிலைமை குறித்து நின்றது, சுழாலின் என்றதற்குக் கழுவுதல் காரணமாக என்று கூறாமல், கழுவப்படுதலால் என்று பொருள் கூறினும் பொருந்தும் என்பதாம். பெரும என இருமுறை கூறியது அவரது காதன்மை யுணர்த்தி நின்றது.
தொடர்புக்கு :thamizhavvai@gmail.com

Add a Comment