மக்கள் குரல் – 23 8 2022
பக்கம் எண் : 1
3 பேருக்கு ரூ.10 லட்சத்துடன் செம்மொழி தமிழ்
விருது: ஸ்டாலின் வழங்கினார்
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் 16 நூல்களையும் வெளியிட்டார்
சென்னை, ஆக.22
மூன்று தமிழ் அறிஞர்களுக்கு ரூ.10 லட்சம் மற்றும் செம்மொழி தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
செம்மொழி நிறுவனம் வைத்துள்ள இலக்குகளை அடைய அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22 ந் தேதி) சென்னை பெரும்பாக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில்,
2020 ம் ஆண்டிற்கான விருதினை முனைவர் ம.ராசேந்திரனுக்கும்,
2021- ம் ஆண்டிற்கான விருதினை முனைவர் க. நெடுஞ்செழியனுக்கும் வழங்கினார்.
தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004 ம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்று கலைஞர், ஒன்றிய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், 2006 ம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான ஒன்றிய நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.
பின்னர் 2008 ம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சிறப்பினை கருதி கலைஞர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.7.2008 அன்று தம் சொந்த நிதி ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக அளித்து ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’-யை நிறுவினார்.
இவ்விருது, இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு. கருணாநிதியின் உருவச்சிலையும் அடங்கியதாகும்.
தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் விருதுகளை வழங்கி ஸ்டாலின் பேசியதாவது:
.
இந்த நாள், சிங்காரச் சென்னையினுடைய 383- ம் ஆண்டினுடைய பிறந்தநாள்.
22.08.1639 – என்பது சென்னை உருவாக்கப்பட்ட நாள்!
தமிழர்கள் வாழும் இந்த தாய்த் திருநாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அரசு தான் தி.மு.க. அரசு அண்ணா தலைமையிலே என்பதும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
அதேபோல் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த தலைநகருக்கு சென்னை என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரைச் சூட்டியதும் தி.மு.க. அரசு தான்.
இதேபோல், மூவாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்ததும் தி.மு.க. அரசு தான்.
உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என உலகின் பல மொழியியலாளர் களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் போற்றுகின்றனர்.
நமது தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்கவேண்டும் என கலைஞர் கூறியதையும் அதற்காக அவர் எடுத்த முயற்சிகளையும் நாடு நன்றாக அறியும்.
தமிழுக்குச் செம்மொழித் தகுதியை ஒன்றிய அரசு 2004 ல் வழங்கிய பின்பும் கலைஞர் ஆற்றிய பணிகள் தமிழக வரலாற்றில் இன்றும் நிலைத்து இருக்கக்கூடியவை.
மைசூரில் இயங்கி வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்து தந்தவரும் கலைஞர் தான்.
* செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில்தான், தமிழ்நாடு அரசு 2007, நவம்பர் 5 ம் நாள், சென்னைப் பெரும்பாக்கத்தில் 16.586 ஏக்கர் (6.71.5 ஹெக்டேர்) நிலம் வழங்கியது.
1 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில், அந்நிலத்தினைச் சமன்படுத்தியும் வழங்கியது அன்றைய கழக அரசு.
இந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பிரதமரால் என் முன்னிலையில் 12.1.2022 அன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
அதுதான் இன்று நாம் காணக்கூடிய இந்த மாபெரும் கட்டடம்.
2008 ம் ஆண்டு நடந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய கலைஞர் மகத்தான அறிவிப்பு ஒன்றைச் செய்தார்.
“150 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு, அந்தக் கனவு நனவாக வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே நான் கொண்ட நினைவு.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் காலூன்றுகின்ற இந்த இனிய நாளில் எனக்கென்று உள்ள சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை நிறுவனத்தின் பொறுப்பில் கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை ஒன்று நிறுவிட வழங்குகிறேன்” என்று பெருமிதத்தோடு கலைஞர் குறிப்பிட்டார்.
விருதுகள்
“கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” வாயிலாக ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்குக் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது.
செம்மொழி விருது;
ரூ.10 லட்சம்
இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய அளவில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், கருணாநிதியின் உருவம் பொறித்த நினைவுப் பரிசும் அடங்கியதாகும்.
முதல் விருது 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய ஜனாதிபதியால் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா’வுக்கு வழங்கப்பட்டது. இடையில் 2011 முதல் 2019 ம் ஆண்டு வரை இது அறிவிக்கப்படாமல் இருந்த அந்த விருதுகளுக்குக் கழக அரசு பொறுப்பேற்றவுடன், விருதாளர்கள் முறையோடு தேர்ந்தெடுக்கப்பட்டு 22.1.2022 அன்று நடைபெற்ற விழாவில் பரிசுகள் அளிக்கப்பட்டன.
இன்றைய தினம் 2020 ம் ஆண்டுக்கான விருது முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரனுக்கும்,
2021 ம் ஆண்டுக்கான விருது பேராசிரியர் க.நெடுஞ்செழியனுக்கும், 2022 ம் ஆண்டுக்கான விருது பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூயிக் செவ்வியாருக்கும் வழங்கப்படுகிறது.
விருது பெற்ற மூவரையும் தமிழ்நாடு அரசின் சார்பில் நான் நெஞ்சார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
ராசேந்திரனுக்கு விருது
* தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த சிறப்புக்குரியவர் ம.ராசேந்திரன்.
பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்தவர் ராசேந்திரன். வரலாற்றின் கருவூலம் என்று சொல்லப்படுகின்ற மெக்கன்சியின் சுவடிகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் பணியாற்றியவர். குறள் பீடம், அகர முதலித் திட்டம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநராக இருந்தவர். இத்தகைய சிறப்புக்குரியவரை தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் இயக்குநராக முதலமைச்சர் கலைஞர் 2008 ம் ஆண்டு நியமித்தார். ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர்தான் இப்போது விருது பெறுகிற நம்முடைய ம.ராசேந்திரன்.
இன்றைக்கு பொதுநூலகச் சட்டத்திருத்த உயர்நிலைக்குழுத் தலைவராக இருக்கிறார். 14 நூல்களை எழுதி இருக்கிறார். 12 நூல்களை பதிப்பித்தும் உள்ளார். கணையாழி இலக்கிய இதழின் வெளியீட்டாளராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் வேந்தராகவே நித்தமும் செயல்படும் ம.ராசேந்திரனுக்கு கலைஞர் பெயரிலான இவ்விருது வழங்கப்படுவது மிக, மிகப் பொருத்தம்.
நெடுஞ்செழியன் தமிழுக்கும், தமிழினத்துக்கும், திராவிட இயக்கத்துக்கும் தொண்டாற்றுவதற்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன். இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழரும், தமிழரின் அடையாளங்கள், சங்க காலத் தமிழர் சமயம், தமிழர் இயங்கியல், உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும், ஆசீவகமும் அய்யனார் வரலாறும் ஆகிய பல்வேறு நூல்களைப் படைத்தவர்.
பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் தொடர்ந்து எழுதி வரக்கூடியவர் பேராசிரியர். எழுதுபவர் மட்டுமல்ல, இன உரிமைப் போராளி அவர். அவருக்கு இந்த விருது தரப்பட்டது பெருமைக்குரியது.
பிரான்ஸ் நாட்டு அறிஞர்
2022 ம் ஆண்டுக்கான கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை, பிரான்ஸ் நாட்டு அறிஞரான முனைவர் ழான் லூயிக் செவ்வியார் பெறுகிறார். இவர், தமிழர் அல்லாதவர்கள் பண்டைத் தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள உதவும் படைப்புகளை வெளியிட்டு வருவதோடு, ஆய்வுப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பழந்தமிழ் இலக்கண ஆய்வுகளில் மிக்க ஆர்வம் கொண்டவராக விளங்குகிறார். பல உலக ஆய்வு நிறுவனங்களோடு இணைந்து இத்தகைய பணிகளை அவர் செய்து வருவது சிறப்புக்குரிய ஒன்று.
இந்த வகையில், தகுதியும் தமிழ்ப் புலமையும் வாய்ந்த மூவர் இந்த விருதினைப் பெறுகிறார்கள்.
முத்தமிழறிஞரின் முயற்சியால் சென்னையில் செயற்பட்டு வரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. ஒன்றிய அரசினுடைய வழிகாட்டுதலோடு, தமிழ்நாடு அரசின் நெறிப்படுத்தலோடு, சிறந்ததொரு மொழிப் பணியினைச் செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
தொல்பழங்காலம் முதல் கி.பி. 6 ம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தமிழ் மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.
செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும், ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்த நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிறுவனத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்குத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. ஏனென்றால், இது தமிழ் மொழிக்கான அமைப்பு. ஏனென்றால் இன்று நடப்பது தமிழின் ஆட்சி, தமிழின ஆட்சி. கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் நான் சில அறிவிப்புகளைச் செய்தேன்.
செம்மொழி சாலை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்துள்ள சாலையைச் ‘செம்மொழிச் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்து நமது அரசு செயல்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலமாக அமைக்கப்படும் என்று அப்போது நான் சொன்னேன். அதற்குரிய பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
16 நூல்கள் வெளியீடு
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற முழக்கத்திற்கேற்ப காலத்துக்கேற்ற கருத்துக்களை கண்டறிந்து இன்று 16 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக, செம்மொழி நிறுவனத்தை நான் பாராட்டுகிறேன்.
அண்மையில் கூட, இந்தியப் பிரதமரை நான் வரவேற்றபோது செம்மொழி நிறுவனம் வெளியிட்ட தொல்காப்பியம், ஆங்கில மொழிபெயர்ப்பை அன்பளிப்பாகத் தந்தேன்.
தமிழ்மொழிக்கும், வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களைச் செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடையத் தமிழ்நாடு அரசு எப்போதும் துணைநிற்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
-இந்த விழாவில் தமிழ் ஆட்சிமொழி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், தமிழ் வளர்ச்சி துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, இயக்குநர் சந்திரசேகரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
TRINITY MIRROR – 23 8 2022 – PAGE NUMBER : 1
Stalin presents Karunanidhi Semmozhi awards to Rajendran, Nedunchezhian, releases 16 books
Chennai, Aug 22:
Chief Minister Stalin presented the Kalaignar Karunanidhi Semmozhi awards to M. Rajendran for the year 2020 and K. Nedunchezhian for the year 2021.
The awards are presented by the Kalaignar M. Karunanidhi Tamil Aivu Arakkatalai, which was set up by the former Chief Minister after the Central Institute of Classical Tamil was set up in 2008.
The awards were presented to those who excelled in archaeology, study of stone inscriptions, coins, literature, fictional literature, research in literature, translation and fine arts.
The award carries Rs. 10 lakhs cash award, certificate and statue of Karunanidhi.
The Kalaignar Karunanidhi Semmozhi award for the year 2020 presented to M Rajendran. He is the former vice Chancellor of Tamil University.
The Kalaignar Karunanidhi Semmozhi award was presented to K. Nedunchezhian for the year 2021. He was the professor of Tamil University.
It was announced that the award for the year 2022 will be presented to French Tamil Scholar. The award will be presented later since he could attend the award function.
Chief Minister Stalin released 16 books at the function held at Central Institute of Classical Tamil in Chennai, in the presence of Industries Minister Thangam Thennarasu, Health Minister Ma Subramaniam, Tamizhachi Thangapandian, Arvind Ramesh, MLA, Magesan Kasirajan, officials were also present.
[23/08, 14:59] Pratap: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.8.2022) சென்னை , செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில், 2020-ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும், 2021-ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்பித்தார். உடன், மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் திரு.மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் உள்ளனர்.

Add a Comment