POST: 2022-07-25T10:15:52+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 63

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

அயலவர் ஆராய்ந்த அருந்தமிழ் !

பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவத் துறவிகள் தமிழிலிருந்த திருக்குறள் நீதி இலக்கியங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள்.

அவர்கள் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் சமயச்சார்பான நூல்களை எழுதவும் தமிழைக் கையாள வேண்டியிருந்ததால் தமிழின் கட்டமைப்பையும் சொல்வளத்தையும் உணர்ந்து கொண்டார்கள்.

இராபர்ட்டி நொபிலி ( Robert De Nobile ), சீகன் பால்கு ( Ziegenbalg ), வீரமாமுனிவர் ( Beschi ) போன்றவர்கள் சமயப் பணியோடு தமிழ்ப் பணியும் செய்து தமிழின் பெருமையை மேலை அறிஞர்களுக்குத் தொட்டுக் காட்ட முடிந்தது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் நன்கு அறிமுகமான பிறகே செம்மொழித் தமிழின் பெருமை உலக அறிஞர்களின் பார்வையைக் கவர்ந்தது.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் இந்தோ-ஐரோப்பியக் குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல என்பதைக் கால்டுவெல்லுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து சொல்லிய எல்லிஸ் ( F.W. Ellis ) தமிழின் தொன்மை பற்றியும் ஆங்காங்கே குறிப்பிடுவார்.

ஈபுரு மொழிக்கும் தமிழுக்கும் உள்ள நெருக்கத்தைச் சான்றுகளோடு எடுத்துக்கூறும் எல்லிஸ்,பொதுவாக இந்திய மொழிகளிலும், சிறப்பாகத் தென்னிந்திய மொழிகளிலும் காணப்படும் நெடுங்கணக்கு, எழுத்துமுறை, சிங்களம், பர்மியம், ஜாவா மொழிகளின் நெடுங்கணக்கும் எழுத்து முறையும் தமிழிலிருந்தே பெறப்பட்டன என்பதை நிறுவும்
என்பார்.

திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களை ஆங்கிலத்தில் விளக்கங்களோடு தரும் அவரது நூலில், தமிழின் சொல்வளம் பற்றிப் பல அரிய குறிப்புகள் உள்ளன. அன்னார் ‘ அறம் ‘ எனும் தமிழ்ச் சொல்லை ‘ virtue ‘ என்று மொழிபெயர்த்தாலும் அது சுட்டும் பல பொருள்களைப் பட்டியலிட்டுக் காட்டுவார்.

பழம் பெரும் செம்மொழியான கிரேக்கத்தில் ‘ இனியவை கூறல் ‘ என்ற தொடருக்கு நேரடியான தொடரோ சொல்லோ இல்லாததால் அரிஸ்டாட்டில் தடுமாறுவதை அவர் நகையாடுவதைக் காணலாம்.

Aristotle describes it as the intermediate habit between flattery and moroseness, between that disposition which inclines the feeble-minded in all cases to sacrifice their own opinions in deference to others and that by which men are excited to
contend for the mere sake of contention.

ஐரோப்பிய அறிஞர்கள் சிலர் இந்திய மொழி எதிலுமே ‘ gratitude ‘ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல் இல்லையென்றும் அதற்குக் காரணம் அப்பண்பு இந்தியர்களுக்கு இல்லையென்றும் கூறியுள்ளது பொய்க்குற்றச் சாட்டும் அவதூறும் ஆகுமென்பார் எல்லிஸ்.

திருவள்ளவரின் ‘ செய்ந்நன்றி அறிதல் ‘ எனும் அதிகாரம் ஒன்றே இதற்குத்தக்க விடையாகும் என்று கூறித் தமிழ் மொழியின் சொல்வளத்தையும் தமிழரின் பண்பாட்டுச் சிறப்பையும் ஒருங்கே நிலைநாட்டுவார்.

தமிழின் தொன்மை பற்றிக் கால்டுவெல் ( Caldwell ) தமது திராவிட ஒப்பிலக்கணம் ( Dravidian Comparative Grammar ) எனும் ஆங்கில நூலில் கூறும் கருத்துக்களில் பல செம்மொழித் தமிழின் நுட்பக் கூறுகளைப் புலப்படுத்தும்.

அவர் கருத்தின்படி, திராவிட மொழிக்குடும்பமானது இந்தோ – ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் சிரிய மொழிக் குடும்பத்திற்கும் ஓர் இணைப்புப் பாலமாக இருந்திருக்க வேண்டும்.

சில கூறுகளில், சிறப்பாக, இடப்பெயர்களைப் பொறுத்தவரையில் மொழி வரலாற்றில், இந்தோ – ஐரோப்பிய நிலைக்கும், சிதிய நிலைக்கும், அவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்த நிலைக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த மொழியோடு திராவிட மொழிக் குடும்பம் தொடர்புடையது.

மொழிகளுக்கும் மொழிக்குடும்பங்களுக்கும் உள்ள உறவு பற்றிய ஆய்வில் இடப்பெயர்கள், குறிப்பாக, தன்மை முன்னிலை ஒருமைப் பெயர்கள் தெளிவுதரக் கூடியவை.

ஏனெனில் அவையே ஏனைய மொழிக் கூறுகளைவிட நிலைத்த தன்மை கொண்டவை; காலத்தால் அதிக மாறுபாட்டிற்கு உட்படாதவை. தமிழிலுள்ள சுட்டுப் பெயர்களும் அவற்றை ஒட்டிய வினாச் சொற்களும் அழகானவை, சீரொழுங்குடையவை.

உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும் அல்லது குடும்பத்திலும் இதனையொத்த, அல்லது இதற்கு அடுத்தநிலையில் வைக்கக்கூடிய முறை இல்லை.

I need not call attention to the beautiful and philosophical regularity of this quadruple set of remote, proximate, and intermediate demonstratives and interrogatives. In no other language or family of languages in the world shall we find its equal or even its second. திராவிட மொழிக்குடும்பமானது வடமொழிக்கு முற்பட்ட சில தொன்மையான மொழிக் கூறுகளை இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சிறப்பாக, அதன் சுட்டுப் பெயர்கள் வடமொழியலிருந்து கடனாகக் கொள்ளப்பட்டவையல்ல.

மாறாக, அவை வட மொழியும் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் இத்தகைய தொன்மையான அடிப்படைக் கூறுகளை எங்கிருந்து பெற்றனவோ அந்தத் தொன்மொழியோடு தொடர்புடையவை.

இந்தோ – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் தொன்மையான மூலம் என்று கருதப்படுகின்ற வடமொழிக்கும் முன்னைய மொழியோடு திராவிட மரபுத் தொடர்கள் நெருக்கமான உறவு பெற்றுள்ளதற்குச் சான்றுகள் தென்படுகின்றன.

அதேசமயத்தில் அவை சிதிய மொழிக்குடும்பத்தோடு, சிறப்பாக, உக்கிரிய ( Ugrian ) மொழிகளோடு, மேலும் நெருக்கமான, மேலும் தெளிவான, மேலும் அடிப்படையான உறவு
கொண்டிருந்தமையும் தெளிவாகிறது.

பேராசிரியர் ப மருதநாயகம் ஆங்கிலத்திலும் – தமிழிலும் சீரிய புலமை வாய்ந்தவர் .அண்மையில் செம்மொழிக்கலைஞர் விருது பெற்ற தனிப்பெருமைக்குரியவர் .செம்மொழியை நிலைநிறுத்திக்காட்டும் செய்திகள் பலவற்றை பல நிமிடங்களில் எடுத்துக்காட்டியுள்ளார் .

முத்தமிழறிஞர் கலைஞர் பெருந்தகை எழுதிய காலப்பேழையும் – கவிதைச்சாவியும் என்ற நூல் தமிழின் பெருமையைக் காட்டும் களஞ்சியம் .உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இந்நூல் வளர்வது குறிப்பிடற்குரியது. கவிதைகளுக்கிடையே வரலாற்றுச் சான்றுகளையும், ஆவணங்களையும், இடையிடையே செருகப்படுகின்ற தற்கால நிகழ்ச்சிகள் சிலவற்றையும் உரைநடையில் சொல்லிச் செல்கிறது. கவிதைகளின் அமைப்பும் வடிவமும் சொல்லும், பொருளுக்கேற்ப மாறுபடுகின்றன.

சில கவிதைகள் மிக நீண்ட வரிகளையும் சில மிகச்சுருங்கிய வரிகளையும் இன்னும் சில இரண்டு வகையான வரிகளையும் கொண்டுள்ளன. ”

பொது உலகம் ” என்னும் முதல் கவிதை சிறுசிறு வரிகளைக் கொண்டது.

பழந்தமிழர் பன்னாட்டுத்தொடர்பு ‘ குறு அடிகளோடு தொடங்க நீண்ட அடிகளில் முடிகிறது. ”

ஆங்காங்கு அடையாள முத்திரை ‘ நீண்ட அடிகளையும் மிக நீண்ட அடிகளையும் கொண்டது. ”

காரவேலன் கண்டு நடுங்கிய கட்டுக்குலையாக் கூட்டணி ” எனும் கவிதை இடையில் அப்பாத்துரையார் எழுதிய வரலாற்றுக்குறிப்புகளை உள்ளவாறு உரைநடையாகவே கொடுக்கிறது.

” கனக விசயர் கல் சுமந்த வரலாறு ” சிறிய அடிகளுடன் கவிதையாகத் தொடங்கி மூன்று காட்சிகளைக் கொண்ட ஓரங்க நாடகமாக உருமாறுகிறது.

சில கவிதைகள் சங்க இலக்கிய வரிகளை அப்படியே தந்து பொருளைக் கவிதையில் தெளிவாக்குகின்றன.

பல சங்கச் சான்றோர் செய்யுட்கள் எளிய கவிதை வடிவமே பெற்று இன்பம் சேர்க்கின்றன. ‘

செம்மொழி விடியலை ‘ அறிவிக்கும் கவிதை சங்க காலத்துப் பெண்பாற் புலவர்களின் பெரும் பெயர்ப்பட்டியலைத் தந்து சங்க இலக்கியத்தின் பெருமை பற்றிய அரிய செய்திகளை வழங்குகிறது .

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *