தினசெய்தி – 15 7 2022
பக்கம் எண் : 4
மறைமலையடிகளார் மாட்சி !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை
தன் வாழ்வைத் தவவாழ்வாக்கித் தவ வாழ்வைத் தமிழ் வாழ்வாக்கி, தமிழ் வாழ்வுக்காகத் தனிப்பெரும் இயக்கமாக, தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழறிஞர் மறைமலையடிகள் ஆவார்.
தனிமனித நிலையில் தொடங்கிய இவர்தம் வாழ்வு, தமிழின் தனித்தகைமை வாய்ந்ததாகச் சிறந்தமைக்கு, இவர்தம் அயராத உழைப்பும், ஓய்வு காணாப் பெருமுயற்சியும், தன்னிலை குன்றாத கொள்கைப்பிடிப்பும்
உறுதுணையாகின.
ஓய்வறியா உழைப்பில் உருப்பெற்ற மறைமலையடிகளின் வாழ்வு, மாண்புமிக்கது; மனிதம் பொதுள்வது; தன்னிலை இழவாது, தமிழர்தம் தகுநிலை உயரப் பொதுநிலை வாழ்வாகத் துலக்கமாவது.
வேதாசலம் என்னும் தனிமனிதத் தோற்றம், தனித்தமிழின் தோற்றமாகி,– மறைமலையடிகளாய் மலர்ந்து மணம் வீசிய மாண்பு என்றும் நினைந்து போற்றற்குரியது ( 15.7.1876 அன்று தோன்றி, 15.9.1950 அன்று மறைந்த அடிகளின் வாழ்க்கைக் காலம் அளவில் சிறிது என்றாலும், ஆற்றலில் பெரிது.
சொக்கநாதப்பிள்ளை, சின்னம்மையார் இணையருக்கு 1876 ஆம் ஆண்டு மகவாய்ப் பிறந்த இவருக்கு, பிறந்த ஊரின் பெருந்தெய்வமாகிய வேதாசலம் என்ற பெயரையே பெற்றோர் இட்டனர்.
அது வடமொழிப் பெயராகலின், அதனையே அழகு தமிழாக்கி, ( வேதம் – மறை, அசலம் – மலை. ஆக,) மறைமலை எனக் கொண்டு, வாழையடி வாழையென வந்து தமிழ்வளர்க்கும் நேயத்தோடு, ‘ அடிகள் ’ என்னும் சொல்லையும் இணைத்து, மறைமலையடிகள் என ஆக்கிக் கொண்டார்.
அதன்வழி எத்தனையோ பேர் தத்தம் பெயர்களைத் தமிழாக்கிக் கொள்ள முன்னோடியாய்த் திகழ்ந்தவர், இவர்.
பெயர்களில் மட்டுமா, பெரும்பயன்பாட்டில் இருந்த அயல்மொழிச் சொற்கள் அத்தனைக்கும் நிகரான அருந்தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப் பெரும்பணியாற்றியவர்.
இவரால்தான்,
அக்கிராசனர்- தலைவர் ஆனார்; காரியதரிசி – செயலாளர் ஆனார்; வியாபாரம் – வணிகம் ஆயிற்று; விஞ்ஞானம் – அறிவியல் ஆயிற்று; சேவை – தொண்டாயிற்று.
தனித்தமிழ் குறித்த இவரது சொற்பொழிவுகள், தமிழகத்தில் பல தூயதமிழ்ப் பேச்சாளர்களை உருவாக்கியது; தனித்தமிழ் எழுத்தோ, பல தூயதமிழ்ப் படைப்பாளிகளைத் தோற்றுவித்தது.
இதனால், ‘ அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள் ’ என்று மறைமலையடிகள் குறித்து தமிழ்த்தென்றல் திரு.வி.க. புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.
இவ்வாறு, தயக்கமின்றித் தமிழை – தனித்தமிழாகப் பயன்படுத்தி வெற்றி கண்ட இவருக்குத் தமிழும் தெரியும்; வடமொழியாகிய சமஸ்கிருதமும் தெரியும்; அந்நிய மொழியாகிய ஆங்கிலத்திலும் நல்ல புலமையுண்டு.
ஆயினும், தன்னிகரில்லாத் தமிழ், வாழ்வியலுக்கு உரிய அனைத்துச் சொற்களையும் தகு பொருள் காட்டி உணர்த்தி நிற்கிறபோது எதற்கு பிறமொழிச் சொல் என்று புரிய வைத்தார்.
நடைமுறையில் எழுதி, பேசி, இயக்கம் கண்டு வெற்றி கொண்டார்.
இன்றைக்கு அந்தப் பேரியக்கம் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, நூற்றாண்டும் கடந்துவிட்டது.
திருவள்ளுவர் ஆண்டு 1947 இல் ( ஆங்கில ஆண்டு 1916 ) தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கத்திற்கு, இப்போது அகவை, 106.
இறையுறை ஆலயங்களிலும், கலையுறை பள்ளிகளிலும் பட்டியலினத்தவருக்கு இணையுரிமை வேண்டும் என முழக்கமிட்ட இவர், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைத் தண்டனையும் பெற்றார் என்பது வரலாறு.
இளம் வயதில், தந்தை இறக்கத் தடைப்பட்ட கல்வியைத் தாயின் துணைகொண்டு பெற்றுச் சிறந்தார்.
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கர் நாராயணசாமி பிள்ளையிடம் இலக்கியங்களையும், சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தத்தையும் கற்றறிந்த இவர், தொடக்கத்தில் ‘ சித்தாந்த தீபிகை ’ என்னும் மாத இதழில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
‘ முருகவேள் ’ என்னும் புனைபெயரில் பல வார இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.
தமிழ் கற்பிக்கும் வேட்கையால் அதற்கான தேர்வுகளை எழுதித் தேர்ச்சியுற்று, 1898 முதல் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்றார்.
செறிவும் நுட்பமும் சிறந்து விளங்க, மாணாக்கர்க்குத் தமிழ் கற்பித்த அடிகள், காரைக்காலில் இருந்து வெளிவந்த திராவிட மஞ்சரி, பாஸ்கர ஞானோதயம், மற்றும், நாகப்பட்டினத்திலிருந்து வெளிவந்த நாகை நீலலோசனி ஆகிய கிழமைத்தாள்களுக்குப் பல கட்டுரைகளை எழுதினார்.
1903ஆம் ஆண்டு மாணாக்கர்தம் வேண்டுகோளை ஏற்று,, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகிய நூல்களுக்கு ஆராய்ச்சியுரை எழுதி வெளியிட்டார்.
இன்றளவும் தமிழ் பயில்வோர்க்கு இனிய நூல்களாக அவை திகழ்கின்றன.
1902 ஆம் ஆண்டு ’ ஞானசாகரம் ’ எனும் இதழையும் 1905 – ல் சைவ சித்தாந்த மகாசமாசத்தையும் தோற்றுவித்த இவர், 1912 ஆம் ஆண்டு வள்ளலாரின் வழியில் சென்னை பல்லாவரத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் தொடங்கினார்.
அவையாவும் பின்னர் தனித்தமிழ்ப்பெயர்கள் கொண்டு விளங்கின.
ஞானசாகரம் – அறிவுக்கடல் ஆயிற்று; சமரச சுத்த சன்மார்க்க சங்கம் – ‘ பொதுநிலைக் கழகம் ’ ஆயிற்று.
அச்சுப் பணிகளுக்காகத் திருமுருகன் அச்சுக்கூடத்தை நிறுவிப் பல்வேறு நூல்களை வெளிக்கொணர்ந்த மறைமலையடிகள், மணிமொழி நூல்நிலையம் எனும் பெயரில் நான்காயிரம் நூல்கள் கொண்ட அரிய நூல்நிலையத்தையும் உருவாக்கினார்.
சைவமும் தமிழும் தம்மிரு கண்களாகப் போற்றிய இவர், சைவ சித்தாந்த நெறிகளை அயல்நாட்டார் அறிந்துகொள்ள ‘ மிஸ்டிக் மைனா ’, ‘ தி ஓரியன்டல் விஸ்டம் ’ ஆகிய ஆங்கில இதழ்களையும் நடத்தினார்.
செய்யுள், புதினம், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி எனப் பல துறைகளிலும், நூல் பல படைத்ததோடு, திருவொற்றியூர் முருகன் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் உள்ளிட்ட செய்யுள் நூல்களையும் யாத்துத் தமிழன்னைக்குச் சூட்டினார்.
சிந்தனைக் கட்டுரைகள், அறிவுரைக் கொத்து, சிறுவர்க்கான செந்தமிழ், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், இந்தி பொது மொழியா ? போன்ற கட்டுரை நூல்களையும் குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள் உள்ளிட்ட புதின நூல்களையும் எழுதி வெளியிட்ட இவர். வடமொழியில் காளிதாசர் வகுத்த, சாகுந்தலத்தைத் தமிழாக்கி, சாகுந்தல நாடகம் எனத் தந்தார்.
இவர் படைத்த இன்னொரு நாடகம், அம்பிகாபதி அமராவதி என்பதாகும்.
மேலும், இலக்கிய மற்றும் கால வரலாற்று ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டு இவர் படைத்த நூல்கள் பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், சோமசுந்தர நாயகர் வரலாறு முதலியனவாகும்.
அத்துடன், பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், வேளாண் நாகரிகம், மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி ? என்பதான வாழ்வியல் ஆய்வு நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார்.
சமயம் சார்ந்த நிலையில், சைவ சித்தாந்த ஞானபோதம், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவமாகா, பழந்தமிழர் கொள்கையே சைவ சமயம், தமிழர் மதம் முதலிய நூல்கள் புதுமையும் பொதுமையும் வாய்ந்தவை,
மறைபொருளியலை உணர்த்தும், மரணத்தின் பின் மனிதர் நிலை, யோகநித்திரை அல்லது அறிதுயில், தொலைவிலுணர்தல் என்னும் மறைபொருளுணர்ச்சி. மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ஆகிய நூல்கள் இவர்தம் அரிய படைப்புகளாகும்.
சுருக்கமாய்ச் சொன்னால், மறைமலையடிகளின் மாண்புறு வாழ்வானது, குறித்த கால எல்லைக்குள் தோன்றி மறைந்த தனிமனித வரலாறன்று; கால காலத்திற்கும் நின்று வழி காட்டி ஒளிகூட்டும், தமிழ்ப் பேரியக்கம்.
இதனை, மறைமலையடிகளின் மதிப்புறு எழுத்தும், பொருள்மலி சொல்லும் உறுதி குன்றா நற்செயலும் இனிது உணர்த்தும் என்பதில் ஐயமில்லை.

Add a Comment