அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 107
ஔவை என்னும் அருமருந்து
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
எந்தையாருடன் இணைந்து பணியாற்றிய திரு.கு. பாலசுப்பிரமணியன் அண்மையில் மடல் வாயிலாகத் தெரிவித்த இனிமையான தகவல்:
“1976-77-இல் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்த ஔவை ஐயா, என்னிடம் “நமது துறை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
அதற்கு நான்,
“கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளிவரக் காணா
நல்மருந்து போல உள்ளது”
என்று விடையளித்தேன்.
அந்த வினாவும் விடையும் வழங்கிய நாளில் மாலையில் ஒளவை அவர்கள் கம்பராமாயணம் தொடர்பிலான பட்டிமன்றம் ஒன்றிற்குத் தலைமை தாங்குவதாக இருந்தது.
“கல்லில் விழுந்து முளைத்து இலைவிட்டு நீரின்றி வாடிநிற்கும் கற்பகத் தருவின் வித்துபோலச் சீதை அசோகவனத்தில் வாட்ட முற்றிருந்தாள்” என்பது இதன் பொருள்.
அதைக்கேட்டதும் அவர் முகத்தில் புன்னகை பிறந்தது.
அந்த வாரத்தில் துறை வளர்ச்சிக்கான கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.
புதிதாக நான்கு பணியாளர்கள் பணியிடம் தோற்றுவிக்க அரசாணை வழங்கப்பட்டிருந்தது.
முன்னரே மூன்று பணியிடங்கள் நிரப்பப்படாமலிருந்தன.
நேர்முகத் தேர்வு ஒன்று நடத்தப்பட்டது.
அதில் இருபது பேர் கலந்து கொண்டனர். எழுத்துத் தேர்வும் நேர்முகத் தேர்வும் நடத்தி, ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உடனடியாகப் பணியிற் சேர்ந்தனர்.
வேறொரு நாள் என்னை அழைத்து, இப்போது வாட்டம் நீங்கிவிட்டது அல்லவா? என்று கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பட்டப்படிப்பு படித்திருந்த மொழிபெயர்ப்பாளர்கள் எல்லோரும் மாலை நேரக் கல்லூரியில் தமிழ் முதுகலை வகுப்பில் சேருவதற்குத் தூண்டி ஊக்கப்படுத்தினர்.
அதனால் பலரும் முதுகலை வகுப்பில் சேர்ந்து பட்டம் பெற முடிந்தது, குறிப்பிடப்படவேண்டிய செய்தியாகும்.
என்னுடன் பணியாற்றிய என் அன்பு கெழுமிய நண்பர், அமரர் திரு ச.க. அறிவரசன் அவர்களை இங்குக் குறிப்பிடவேண்டும்.
அவர் எம்.ஏ. (ஆங்கிலம்), எம்.ஏ. (தமிழ்), எம்.எல்.இ., பி.எட். ஆகிய பட்டங்களைப் பணியிலிருந்து கொண்டே மாலைக் கல்லூரி வாயிலாகவும் அஞ்சல் வழிக்கல்வி வாயிலாகவும் பயின்று பெற்றவராவார்.
அருள் பள்ளி மாணவராக இருந்த போது, கணிதத்தையும், தமிழையும், தனிநிலையாகக் கற்றுத் தந்தது மறக்கவொண்ணா நிகழ்வாகும்.
ஒளவை அவர்கள் தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றிப் பேசுவதைப் போன்றே, விருப்பமும் ஈடுபாடும் உடையவர்களிடம் ஆங்கில இலக்கியங்கள் பற்றியும், சேக்ஸ்பியர், சார்லஸ் டிக்கன்ஸ், தாமஸ் ஹார்டி ஆகியோரின் நாடகங்களை, புதினங்களைக் குறித்துப் பேசுவார்.
பணி நிமித்தம் அவரைக்காணச் செல்லும் போதெல்லாம் இங்ஙனம் நிகழும்.
அப்போது வெளியிலிருந்து அவரைக் காண வந்த பேராசிரியர்களும், இலக்கிய ஆர்வலர்களும் உடன் இருப்பார்கள்.
அன்பால் அரவணைத்துப் பலரையும் கட்டிப் போடும் திறனும் ஆற்றலும் உடையவர்.
நாள்தோறும் புதிதாகச் சிந்திப்பவர்; புதிய நூல்களைப் படித்துக் கொண்டேயிருப்பவர். புதிய சிந்தனையுடைய இளைஞர் குழாத்தினைச் சுற்றமாகச் சுற்றிக் கொள்ளும் இயல்பினர். யாரிடத்தும் கடுஞ்சினம் கொள்ளுதலும் முரண்படுதலும் இல்லாதவர்.
முரண்பட்டிருபவர்களையும் ஒதுக்கித் தள்ளாதவர். தமிழ் இலக்கியப் பேராறு; ஆங்கிலச் சொல்லருவி; காப்பியக் கொண்டல்; உரைநடைத் தென்றல். அவருடைய பல்வகை மக்கள் தொடர்பு ஆற்றல்கள் விரிப்பிற் பெருகும் என அஞ்சுகிறேன்.
இப்பெருமகனார் நல்ல உடல் நலத்துடனும் சிறப்பான உள நலத்துடனும் நீண்டகாலம் வாழ்ந்து தமிழ் தொண்டாற்றி வர வேண்டும் என்று வாழ்த்தி வணங்கி என் மடலினை நிறைவு செய்கிறேன்”.
எந்தையார் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகத் தலைமைச் செயலகத்தில் இருந்த போது, தலைமைச் செயலகத்தின் நூலகராக முனைவர் மலையமான் பணியாற்றினார்.
அப்போது, தலைமைச் செயலகத்தில் அகவிதழ் ஒன்று வெளிவந்தது. அதன் பெயர் ‘செய்திக் கதிர்’ ஆகும்.
அவ்விதழில் எந்தையாரைப் பற்றிய சிறப்புக் கட்டுரையில், ஆசியக் கவிஞர் மாநாட்டில் ஆங்கிலக் கவிதை படித்த மலையமானைப் பற்றிய குறிப்பும் வெளிவந்தது குறிப்பிடத் தக்கது.
தலைமைச் செயலகத்தில், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக எந்தையார் பணியாற்றிய போது, அவருக்கு நேர்முக உதவியாளராகத் துளசிராம் என்பவர் பணியாற்றினார்.
அவர் என்னிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன தகவல் மறக்கவியலாது.
“எந்தையாருக்கு முன்பு இயக்குநராகப் பணியாற்றியவர் காலத்தில் இத்தகைய மொழிபெயர்ப்புத் துறை என்று ஒரு துறை தலைமைச் செயலகத்தில் இருப்பதே பலருக்குத் தெரியாது.
முன்னாள் இயக்குநர் கு. இராசவேலுவைப் பார்ப்பதற்காக ஓராண்டில் மூன்று பேர்கள் தாம் அலுவலகத்திற்கு வந்து செல்வார்கள். ‘
ஔவையுகம்’ ஆரம்பமானதும், அலுவலகம் தன் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது!
ஓராண்டில் மூன்று பேர்கள் நுழைந்த அலுவலகத்தில், தமிழின் இனிமையைப் பருகி மகிழ்வதற்காகப் பத்து நிமிடத்திற்கு ஒருவர் என வரத் தொடங்கினர்”.
தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக வேறொரு துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த எந்தையாரின் நண்பர் க. முத்துக் கிருஷ்ணன் சொன்ன தகவல்:
“மொழிபெயர்ப்புத் துறையிலிருந்து ஒரு சுற்றறிக்கை அனைத்துத் துறைகளுக்கும் வந்தது.
‘மொழிபெயர்ப்புத் துறைக்குத் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவர் மொழிபெயர்ப்பாளர் பதவிக்குத் தேவை.
விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலாம்’ என்பது தான் அது.
தமிழ் தொடர்புடையது என்பதால் நான் விண்ணப்பித்தேன்.
என் விண்ணப்பத்தில் என் அலுவலகத் தொலைபேசி அகவிணைப்பு எண் குறிப்பிட்டிருந்ததால் இரண்டே நாட்களில் ஔவை ஐயாவிடமிருந்து அவரைச் சந்திக்கும்படி எனக்கு அழைப்பு வந்தது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டாம் தளத்திலிருந்த அவருடைய அறைக்குச் சென்றேன். வரவேற்றார். அமரச் சொன்னார். விவரங்கள் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர் சொன்ன பதில், அந்தப் பதவியைத் தங்களுக்குத் தரவியலாது என்பதுதான்.
ஐயா, நான் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு, தம்பி, இராஜா, ஒன்றுமில்லை. நாங்கள் இங்கே எதிர்பார்ப்பது ஒரு தற்காலிகப் பணியாளரைத்தான், ஆனால், நீங்களோ, தலைமைச் செயலகத்தில் பணியாளர் தேர்வாணையக் குழுவால் தேர்ச்சி பெற்று நிரந்தரப் பணியாளராகப் பணியாற்றி வருகிறீர்கள், நிரந்தப் பணியிலிருக்கும் உங்களைத் தற்காலிகப் பணிக்கு அழைக்க என் மனம் இசையவில்லை என்றார்.
அவரின் பதில், எனக்கு ஏற்புடையதாகவே இருந்தது. பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என் அறைக்கு வரலாம். என்னால் இயன்ற எதைச் செய்ய முடியுமோ அதை உங்களுக்குச் செய்ய முயல்வேன் என்றார். அதனால்தான் நான் அவரை எப்போதும் கசப்பற்ற இனிய அருமருந்து எங்கள் ஔவை என்று எல்லோரிடமும் சொல்லி மகிழ்வேன்.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (31)
ஆண்டு முழுதும் தொடர்ந்து மலரும் இயல்பிற்றாதலின் குவளையைத் தொடர்ந்த குவளை என்றார்.
இனி, குவளையின் தூநெறிகள் சாம்பி உதிர்ந்த வழிப் புதியன தொடுத்து இடையறவின்றி யஃது இருக்குமாறு செய்தலின் இவ்வாறு கூறினார் என்றும், தொடுப்போர் தொடர்புறுத்தத் தொடரரும் குவளையைத் தொடர்ந்த குவளை என்றாரென்றும் கூறுவர்.
இனிப் பழையவுரைகாரர் “ஆண்டுகள் தோறும் ஆக்க வேண்டாது தொண்டு (பண்டு) இட்டதே யீடாக எவ்வாண்டிற்கும் தொடர்ந்து வரும்” என்றும்
“இச்சிறப்பானே இதற்குத் தொடர்ந்த குவளை என்று பெயராயிற்” றென்றும் கூறுவர்.
புறவிதழொடித்த முழுப்பூவைத் தூநெறி என்றார். குவளை செங்கழுநீருமாம். குவளையும் ஆம்பலும் பைந்தழையும் விரவித் தொடுக்கப்படும் தழையுடையில் ஆம்பற்பூவை இடையிட்டு ஏனையவற்றை அதனைச் சூழத் தொடுத்த தழையுடைஈண்டு “ஆம்பல கமடிவை” எனப்பட்டது.
இவ்வாறன்றிப் பலவகைப் பூக்களையும் வண்ண மாறுபடத் தொடுக்கப்படுவது பகைத்தழை எனப்பட்டது.
இருவகையும் ஒருங்கமையத் தொடுப்பதுமுண்டு. அதனை “அம் பகை மடிவைக் குறுந்தொடி மகளிர்” (அகம் 126) என்று சான்றோர் கூறுதல் காண்க.
இனி டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள், “அலர்ந்த வாம்ப லம்பகை மடிவையர்” என்று பாடங் கொள்ளினும் பொருந்தும் எனக் கூறுவர்…..
இனி, குவளைத் தூநெறியைக் கூந்தலில் அடைச்சி யென்று கொண்டு பொருள் கூறுவாருமுளர் (பக்கம் 201).
(5) பிழையுரை.
ஆறாம்பத்தைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப்பாடிப் பெற்ற பரிசில் “கலனணிக என்று அவருக்கு ஒன்பது காப் பொன்னும், நூறாயிரங் காணமுங் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக்கோ.” பதிகம். (ப.357)
‘இன்கண் பக்கத்துக் கொண்டான்’ என்பதற்கு, சேரன் காக்கைபாடினியார் என்னும் புலவரைத் தனக்குரிய மனைவியாகத் தன்பக்கத்தில் அமர்த்திக்கொண்டான் எனப் பொருந்தாத செய்தியைச் சேரன்வஞ்சி என்னும் நூலாசிரியர் பிறழ உரைத்துள்ளார்.
“இத்தகைய பிழைபாபாடுகளுக்கெல்லாம் காரணம் சங்க இலக்கியங்களின் பொருள் நலங்களை இக்காலத்தில் சாதாரண நூற் பயிற்சியுடையாரும் தெளிந்துகொள்ளும் முறையில் அமைந்த விரிவுரை இல்லாத குறையே ஆகும். (க.வெள்ளைவாரணர். (ப. 19)
(6) பொருந்தா உரை
சுடர்வீ வேங்கை (5ஆம்பத்து)
“இருந்தலை உலக்கை எறி மிளகின் இடித்து” என்னும் அடிக்கு, “பகையரசரருடைய பெரிய தலைகளை உலக்கையால் இடிக்கப்பட்ட மிளகு போலத் தாம் ஏந்திய தோமரத்தால் இடித்து அழிக்கவும்” என்பது பொருள்.
தெவ்வர் இருந்தலைக்கு மிளகு உவமம். தெவ்வர் இருந்தலை உலக்கையெறி மிளகின் இடித்து என மாறிக் கூட்டுக. உவமத்துக்கேற்பப் பொருளிடத்துத் தோமரம் வருவிக்கப்பட்டது.
“தோமர வலத்தர்” (5) என்றும் “தண்டுடை வலத்தர்” (பதிற்.41) என்றும் வீரர் கூறப்படுதல் காண்க.
(ப.296).
இதற்கு, ‘பகை வேந்தர் தலைகளை உலக்கையால் குற்றப்பட்ட தலையினைப் போலச் சிதறும்படி செய்து’ எனப் பொருள்கொள்ள அறியாது, சேரன் வஞ்சி நூலார், “மிளகைக் குற்றும் உலக்கையினையே படையாகக் கொண்டு பகைவேந்தர் தலைகளைத் தாக்கி” எனப் பொருந்தா உரை கூறினர்.
புலவர் பற்றிய பூசல் தீர்வு
மூன்றாம் பத்தைப் பாடிய பாலைக் கோதமனார் புறநானூறு 366ஆம் பாட்டையும் பாடியிருக்கின்றார்.
இவர் பெயர், சில ஏடுகளில் கோதமனார் எனக் காணப்படுவது கொண்டு திரு ரா. இராகவையங்கார் அவர்கள் “இவ்வாசிரியயின் வேறாதல் காட்டவே பாலை யென்னும் அடையடுத்துப் பாலைக் கௌதமனாரான இவர் பெயரே புனைந்து விளங்கிய பெரியாரும் இத்தமிழ்நாட்டில் உண்டு.
இப்பாலைக் கௌதமனார் இறப்பப் பிந்தியவராவார்” (தமிழ் வரலாறு பக்கம் 245) என்று கூறுகிறார்.
பாலைக் கௌதமனார் கோதமனார் புறப்பாட்டில் பல்யானைச் செல்கெழுகுட்டுவனை ‘அறவோன் மகனே’ எனப் பாராட்டினார்.
பிற்காலத்தார் அதனைத் தருமபுத்திரன் என வடமொழிப்படுத்திப் பாண்டவனான தருமபுத்திரனைப் பாடியது எனப் பிழையாக கொண்டனர் எனக் கொள்ளல் வேண்டும்.
இப்பாட்டு இறுதியில் பாலைக் கௌதமனார் பாடியது என்றே ஏட்டில் காணப்படுகின்றது.
டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் பாலைக் கோதமனாரே, கோதமனார் எனச் சில ஏடுகளில் குறிக்கப் பெற்றனர் எனவும், பதிற்றுப்பத்து மூன்றாம் பத்துப் பாடியவரும் “விழுக்கடிப் பறைந்த” (புறம் 366) எனத் தொடங்கும் புறப்பாட்டைப் பாடியவரும் ஒருவரே எனவும் கருதுகின்றனர்” (பக்கம் 35).
எனவே மூன்றாம் பத்தைப் பாடிய பாலைக் கோதமனாரும் 366ஆம் புறப்பாட்டைப் பாடிய கோதமனாரும் ஒருவரே என்பது உறுதியாகிறது.
ஒளவை அவர்களின் இந்த உரை பதிற்றுப்பத்துப் பாடல்களின் சொல்/ நயங்களையும், இலக்கண/ இலக்கிய நுட்பங்களையும், அவற்றுள் இலை மறை காயாகப் புதைந்தும் பொதிந்து கிடக்கும் வரலாற்றுச் செய்திகளையும் உண்மைகளையும் விரித்துரைக்கிறது; அவர்தம் நுண்மாண் நுழை புலத்தையும், ஆழங்கால் பட்ட சங்க நூற் பயிற்சித் தெளிவையும், அயராத கடினஉழைப்பையும் எடுத்தியம்புகிறது.
Professor T.P. Meenakshisundaranar.
“There is an old commentary on patirruppattu whose importance can not be easily exaggerated; but to the modern reader it is but a series of algebracial formula.
The present commentary explains all that is necessary for elucidating the text for the man in the street – the defied abstraction of modern democracy; and serves, therefore, as a valuable key for unlocking the closely preserved treasure-chest of the Old commentary. (p.4)
On an occasion like this, one can not but think with reverential gratitude, of the late lamented Dr.Swaminatha Aiyar, but for whose untiring zeal and toil we could not be boasting either of patirruppattu or its ancient commentary.
what has been thus made available is now made more and more popular by the present commentator.” (p.5)
நற்றிணை
பதிப்பு வரலாறு
நற்றிணை மூலமும் உரையும்
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் அவர்கள், 1915. நற்றிணையைப் பதிப்பிக் டாக்டர் உவே.சாமிநாதையர் உட்பட பலர் முயன்றபோதும், நாராயணசாமி ஐயர் உரை எழுதிப் பதிப்பித்த நூலே முதற்பதிப்பாகிறது.
கிடைத்த ஏடுகளில் நற்றிணைப் பாடல்மூலம் மட்டுமே உண்டு; உரை எதிலும் இல்லை. பின்னத்தூரார் தமது விழுமிய புலமைநலத்தால் அரிதின் முயன்று புதிய உரை வரைந்த தனிப் பெருமையர் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
“என் நண்பரும் மன்னார்குடி பின்லே ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் நாராயணசாமிப் பிள்ளை யவர்களின் குமாரரும் போலீசில் உத்தியோகம் வகித்திருப்பவருமாகிய ஸ்ரீமத் நா சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் எனக்குப் பொருள் முட்டுப்பாடுறாது வேண்டிய அளவு உதவி, ஏடுகளைத் தருவித்துச் சோதிக்கும்படி செய்தார்கள். ”
(முன்னுரை)
“எனக்குக் கிடைத்த எல்லாப் பிரதிகளிலும் 234 ஆவது பாடலும்
385 ம் பாடல் பிற்பகுதியும் காணப்படவில்லை; அவற்றையும் தேடிச்சேர்த்த பின்னரே வெளியிட வேண்டும் என்றிருந்த யான், காலதாமதப்படுவதைக் கருதி அவைகளைப் பின் மறுபதிப்பில் சேர்த்துவிடலாம் என்னும் எண்ணத்தோடு இதனை வெளியிடலானேன்” என்று, நாராயணசாமி ஐயரின், ஆனந்த வருடம் ஆதிவாரம், 1915 முகவுரை” குறிக்கிறது.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment