எங்கே மறைந்தாரோ !
என் இனிய நண்பர் பேராசிரியர்
கண சிற்சபேசன் (15.4.1934-17.4.2022)
மறைவு திடுக்கிட வைத்தது .
நான் பச்சையப்பனில் படித்தபோது அவர் மாநிலக்கல்லூரியில் படித்தார் .
பேராசிரியர் தெ பொ மீ கேட்டார் .நீயே ஒரு கல்லூரியைத் தேவகோட்டையில் தொடங்கலாமே என்றார் !
திருமிகு சிற்சபேசன் செல்வக்குடும்பத்தில் பிறந்த சீர்மை கொண்டவர் .
தியாகராசர் கல்லூரியில் இருவரும் ஒன்றாகப் பணியாற்றினோம் .
இருவரும் ஒரு நேர்காணலுக்குப் புதுதில்லி சென்றோம் .
பிறகு நாராயணன் செட்டியார் கல்லூரியில் பேராசிரியரானார் .
அவர் அறியாத தொழிலில்லை .
எதையும் எளிமையாக எடுத்துச் சொல்லும் நகைச்சுவை நலம் அவரிடம் பொங்கி வழிந்தது .
என் தந்தையார் எழுதிய நற்றிணை உரைக்கு இவர் அணிந்துரையை விரும்பிக் கேட்டுப் பெற்று வெளியிட்டார் .
ஒரு மாதத்துக்கு முன்தான் அவர் பூம்புகார் பற்றி எழுதிய மணிவாசகர் பதிப்பக நூலுக்கு நான் பாராட்டுரை
எழுதினேன் .
” புதிய சிந்தனையுடன் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள நண்பர் திரு.கண.சிற்சபேசன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நூலாசிரியர் இத்தகைய தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்தாற்றித் தமிழ்வளம் சேர்த்திட வாழ்த்திப் போற்றுகிறேன்.
என் தந்தையார் எழுதிய நற்றிணை உரைக்குப் பேராசிரியர்
கண சிற்சபேசன் அணிந்துரை எழுதிய ஆற்றல் வாய்ந்தவர் .
சிந்தனைக்களஞ்சியமாக மிளிரும் பேராசிரியர் புலமைத்திறத்தை என் தந்தையார் பலமுறை பாராட்டியுள்ளார் .
பேராசிரியர் கண சிற்சபேசன் இலக்கியம் ,எழுத்து ,பேச்சு ,எண்ணம் ,நகைச்சுவை ,கணக்கியல் எனப் பல்வேறு கலைகளில் சீரோங்கிய புலமைவாணர்.
எதனையும் தன் புதிய போக்கால் அழகுறப் புனையும் கலைத்திலகம் அவர் ” .
என்னைவிட என் மகன் அருளை எங்குப் பார்த்தாலும் ஆரத்தழுவி –
நீ ஒளவையின் பேரன் ! எனக்கு மற்றொரு மகன் என்பார் .
அப்பா ! அவர் என்னைத் தொலைபேசியில் என்னோடு பேசி அண்ணாநகருக்கு வருகிறேன் என்றார் .
அப்படி வர இசைந்த முகம் எங்கே என்று கலங்கிப் புலம்புவதைத் தவிர வேறு ஆறுதல் இல்லை !
ஆறாத துயரோடு
ஒளவை நடராசன்

Add a Comment