POST: 2022-04-18T10:28:30+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 49

மறுபிறப்பும் மறப்பும் !

அம்மூவனார் மனைக்கண் இருந்து அறம்புரிந்து ஒழுகும் புலவர் தலைமகன், இன்றியமையாத வினை குறித்து வெளிநாடுகட்குச் சென்றான்.

தலைமகள் அவன் வற்புறுத்த சொல்லைத்தேறி மீண்டு வரும் நாளை எதிர்நோக்கியிருந்தாள்.

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்ற பொருளுரைக்கு ஏற்பத் தலைமகள், அவன் பிரிவாற்றாது நாளும் மெலிவுற்றாள்.

அது கண்ட தோழி, தலைவனது வினையாண்மையையும், பிரியுங்கால் அவன் வற்புறுத்த சொற்களையும் எடுத்துக்காட்டிப் பிரிவாற்றியிருத்தலே பெருங்கற்பு எனச் சொல்லித் தேற்றினாள்.

தலைமகள் ஆற்றாமை மிக்கிருந்தாளாயினும், தோழி வருந்தாமைப் பொருட்டுத் தான் ஆற்றியிருப்பதாகக் கூறுவாளாய்.

” தோழி, என் தோள்கள் மெலிந்தொழிந்தன; அவர் குறித்த நாள்களும் கழிந்தன; அவர் சென்ற நெறியை நோக்கி நோக்கிக் கண்கள் ஒளிகுன்றிக் காட்சித்திறம் இழந்தன; என் அறிவும் என்னின் நீங்கி மயக்குற்றது; வேட்கை நோயும் மிகுந்துளது; அதன்மேல் மாலைப் போதும் நெருங்கிவிட்டது; எவ்வாறு இவற்றைத் தாங்கி ஆற்றுவேனோ ?

ஆற்றாமையால் இறந்துபாடு எய்துமாயினும்யான் அதற்கு அஞ்சுவேனல்லேன்; இறப்பே னாயின் பிறத்தலுண்டாம்; பிறக்குமிடத்து வேறு பிறப்பாய் விடின் என் காதலனை மறந்தொழிவேனோ என்று அஞ்சுகின்றேனாகலின், பிரிவுத்துயரை ஆற்றியிருப்பன்; நீ கவலற்க என்றாள்.

இக்கூற்றின்கண், தான் ஆற்றாது இறந்துபடுதற்கேற்ற காரணங்கள் உளவாயினும், இறந்தவழித் தன் காதலனை மறப்பதற்கஞ்சிச் சாதலை விரும்பாது ஆற்றியிருப்பல் என்று தலைமகள் கூறுவது கண்ட அம்மூவனார் அவளது காதலொருமையை வியந்து இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார்.

மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஏட்டில் அம்மூவனார் பெயர்க்கு மாறாகக் கழார்க்கீரன் எயிற்றியார் பெயர் காணப்படுகிறது

நற்றிணையில் நலங்கனிந்த இப்பாடல் பிரிதல் நயம் காட்டுகிறது .

அம்மூவனார் பிரிவுத்துயரையும் – மனக்கலக்கத்தையும் சொல்லோவியமாகக் காட்டுவதில் வல்லவர் .

சுவையான இப்பாடலைத் தெரிவுசெய்து முத்தமிழறிஞர் கலைஞர் சங்கத்தமிழில் இதற்குத் தரும் விளக்கத்தைக் காணலாம் .

மறுபிறப்பு உண்டென்றால் மறக்க நேரிடுமோ ?

மறுபிறப்பு மாந்தர்க்கு உண்டென நம்பிய
மங்கையொருத்தியின் காதல் நினைவினை;

மழைத் தமிழ்ப்புலவர் அம்மூவனார் என்பார்
மாம்பழக் கதுப்பென வழங்கினார் அன்று !

நற்றிணை நானூறு தொகுப்பில் ஒரு பாடலில்
கற்பினை அணியாய்ப் பூண்டவோர் அழகி;

காதலன் வருகைக்குக் கடுந்தவம் இருந்து
காதல் வெப்பத்தால் கண்ணீரில் குளித்தாள் !

“வருவதாய்ச் சொன்ன நாளும் முடிந்தது; வந்து
தருவதாய்ச் சொன்ன இன்பமும் தொலைந்தது !

மூங்கிலைப் போல் தோளென்று முத்தங்கள் தந்தார் – அது
ஏங்குதல் காணாமல் அவர் எங்குச் சென்றார் ?

மூடுகின்ற இமைகளுக்கு வேலையின்றி விழியிரண்டும்
காடு நோக்கி வழிபார்த்துக் கதிகலங்கிக் காத்திருக்கும் !

சேதி அறிந்து இந்தச் செந்தாமரை மொட்டுதனைச்
சேர்த்தணைத்துச் சுகம் அளிக்க வாராரோ ?

அறிவும் என்னைக் கைவிட்டு அடியோடு விலகியது;
அந்திமாலைப் பொழுதுவர காதல் நோயோ பெருகியது !

அவரின்றி அணுப்பொழுதும் வாழ்வதிலோர் பயனில்லை;
சுவரின்றி இருக்கின்ற கூரைக்கு வீடென்று பெயருண்டோ

விரலுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு இசைபொழிய
வீணைக்கென்று வேறொரு வழிதான் இனி ஏது ?

இழுத்து, விட இருக்கின்ற மூச்சுப்பைகள்
இரண்டில் ஒன்றை இழந்தாலோ கவலையில்லை !

இதயத்தில் சரிபாதி வெட்டுண்டு பிரிந்து போனால்
இறப்பதுதான் உயிர் இயற்கை !

இதயம்போல் இருந்தோம் நாங்கள்; அவரோ
உதயக் கதிர் ! மேற்றிசையில் மறைந்து போனார்.

இருளகற்றி என்வாழ்வில் ஒளிப்பந்தல் வேய்வதற்கு
அருள் சுரந்து அவர் மீண்டும் எழாததுதான் ஏனோ ?

மறப்பதற்கு முடியாது என்னால் – அதனால்
இறப்பதற்குத் துணிந்துவிட்டேன் ! உயிர்

துறப்பதற்கு முன்னால் ஓர் அச்சம் ! மறு
பிறப்பு உண்டென்று கூறுகின்றார்; சரி !

எப்பிறப்பு எடுத்தென்ன பயன் எனக்கு ?
எனை அவருக்கென ஒப்படைத்துவிட்டேன்; எனவே

அப்பிறப்பும் அவரை மறக்காமல் வாழ்கின்ற
இப் பெண்பிறப்பே வாய்த்திடுமா ? என எண்ணி;

நோவதாலே வலிமையில்லை நலிகின்றேன்;
சாவதற்கும் அஞ்சுவதால் மெலிகின்றேன் !”

என்று தலைமகள் தவித்த நிகழ்ச்சியை
நின்று நிலைக்கும் நற்றிணைப் பாடலில்,

அம்மூவனார் தொகுத்தளித்தார் – அதனைத்தமிழ்
அமுதமென அருந்திக் களித்திடுவோம் நாமே !

* “தோளும் அழியும் நாளும் சென்றென
நீளிடை அத்தம் நோக்கி வாளற்றுக்
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து
அறிவு மயங்கிப் பிறிதா கின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று
யாங்கா குவென்கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப்பிறி தாகுவது ஆயின்
மறக்குவேன் கொல், என் காதலன் எனவே ! ”
( நற்றிணை : பாடல் – 397 பொருள் விளக்கம் : பாடியவர் : அம்மூவனார் )

பொருள் விளக்கம் :

அத்தம் = காடு அல்லது பாலை. வாள் = ஒளி. தௌவுதல் = கெடுதல். என்நீத்து = எனைவிட்டு விலகி. பிறிது = வேறு. மறக்குவேன் கொல் = மறந்துவிடுவேனோ ?

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *