வழிகாட்டும் வான்மதிகள்
தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்மருத்துவர் ஜே.ஜி. கண்ணப்பன் அவர்களின் துணைவியார், முனைவர் வாசுகி கண்ணப்பன் வரைந்த ‘வழிகாட்டும் வான்மதிகள்’ என்ற நூலில், என்னுடைய தாயார் மருத்துவமாமணி தாரா நடராசன் குறித்து வரைந்த அருஞ்சொல் காவியம் பின்வருமாறு:-
டாக்டர் தாரா நடராசன்,
“மனையாளாய் மனையறம் காத்தவர்
மருத்துவத்தில் மழலைகள் நலம் காத்தவர்
மக்களுக்கு நல்லறம் புரிந்தவர்
காரோட்டும் சாரதியாய் மிளிர்ந்தவர்
மங்கல, மங்கள மாதரசி’’.
“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
பங்கயற் கைநலம் பார்த்தல்லவோ- இந்தப்
பாரில் அறங்கள் வளருதம்மா”
என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் பாடலுக்கேற்ப டாக்டர் தாரா நடராசன், மங்கையாகப் பிறந்து, மங்கையர்கள் பின்தங்கியிருந்த காலக்கட்டத்தில், பெண்களுக்கு அரிதான மருத்துவம் பயின்று, செய்யும் தொழிலையே தெய்வம் எனக் கொண்டு, சமூகத்திற்குத் தேவையான அறச்செயல்களைச் செய்து மகிழ்ச்சியும், நிறைவும் கொண்டவராவார்.
சொல்வேந்தர் ஔவை நடராசன் அவர்களின் கரம் பற்றி, இணையராய் இல்லறத்தை நல்லறமாய் நடத்தி,
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.”
என்ற குறளுக்கேற்ப, உயர்ந்த கொள்கையோடு, குறிக்கோளோடு வாழ்ந்து, வழிகாட்டியாக விளங்கிய உத்தமப் பெண்மணி.
பிறப்பு
இவர் வேலூரில், 1932 ஜூலை 15 அன்று பிறந்த தமிழ் மகள்.
திரு. என்.மாசிலாமணி, திருமதி பொன்னம்மாள் அவர்களுக்குப் பிறந்த தவமகள்.
இவர் உடன் பிறந்த மூத்த சகோதரியின் பெயர் பரமேஸ்வரி.
இவரின்மேல் அதிகமான பிரியமுள்ளவர்.
படிப்பு
சிறுவயதில், சென்னையில் செயின்ட் வில்லியம் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தார்.
அந்தக் காலத்தில் பள்ளிக்கு அனுப்புவது என்பதே பெரிய விஷயம்.
அதிலும் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படிப்பது என்பது முடியாத ஒன்று.
எப்படியோ சென்னை செயின்ட் வில்லியம் என்ற ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சேர்ந்து படித்தார்.
ஆங்கிலம் பேசினாலே சிரிப்பார்களாம்.
சீருடை அணிவதையும் விமரிசிப்பார்களாம்.
அத்தனை எதிர்ப்பிற்கிடையில் மூன்றாம் வகுப்பு வரை அங்குப் படித்தார்.
அந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப்போரின் விளைவால், அழிவுகள் அதிகமாக இருந்தது.
அதனால் படிக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் குடும்பம் வேலூருக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதனால் வேலூருக்குச் சென்று ஏழாம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை வேலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.
எதிர்ப்புகளுக்கிடையே வேலூரிலேயே, ஊரிஸ் கல்லூரியில் 2 ஆண்டுகள் இன்டர்மீடியேட் படித்தார்.
பள்ளியில் படிக்கும் போதும் எதிர்ப்புதான்.
இன்டர்மீடியேட் படிக்கும் போதும் எதிர்ப்புதான்.
இவருடைய சொந்தக்காரர்கள் அத்தனை பேரும் எதிர்த்தனர். இப்படி எதிர்ப்புகளுக்கிடையில், இவர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார் என்றால் அதற்குக் காரணம் இவருக்குக் கல்வியில் மேல் குறிப்பாக மருத்துவக் கல்வியில் இவர் கொண்டிருந்த தீராத ஆசையும், தன்னம்பிக்கையுடன் கூடிய திட நம்பிக்கையும் தான்.
அதுமட்டுமல்ல, இவர் தந்தையின் ஆதரவும், இறையருளும்தான் என்று கூறியிருக்கின்றார்.
ஏனெனில் இவர் அப்பாவிடம் இவரைக் கல்லூரியில் சேர்க்க வேண்டாம் என்று பலரும் இவரது தந்தையிடம் சொன்னதும் உண்மை என்று வெளிப்படையாக இவர் கூறியிருக்கிறார்.
அப்பொழுது சென்னையில் இருந்த ஒரே மருத்துவக்கல்லூரி மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மட்டும்தான் என்று அறிய முடிகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்பு முடிந்த பின், எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை,
திருவல்லிக்கேணி அரசு கோஷா மருத்துவமனை,
இராயப்பேட்டை அரசு மருத்துவமனை என, பல மருத்துவ மனைகளில் வேலை பார்த்திருந்தார்.
கோசா மருத்துவமனையில் வேலை பார்க்கும் பொழுது, தலைசிறந்த தோல் மருத்துவ நிபுணரான மருத்துவர் தம்பையா அவர்களின் தங்கை, டாக்டர் ஷீலா அவர்கள், குழந்தை மருத்துவராக அங்குப் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.
அந்த மருத்துவ மனைக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 500 குழந்தை நோயாளிகள் வருவார்கள்.
எத்தனை வகையான வியாதிகள் ஏற்படுகின்றன என்பதையும், எத்தனை தாய்மார்கள் அலறி அடித்துக் கொண்டு வருகிறார்கள் என்பதையும் பார்க்கப் பார்க்க, இவர் மனம் பாரத நாட்டின், வருங்காலத் தூண்களான குழந்தைகளுக்கு வரக்கூடிய நோய்களைத் தீர்க்க வேண்டும், அதற்கான படிப்பைப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் கோசா மருத்துவமனையில் தான் உதித்திருக்கிறது.
டாக்டர் ஷீலா அவர்கள் கொடுத்த ஊக்கத்தாலும், எம்.எம்.சி.யில் சேர்ந்து, டி.சி.எச். என்ற குழந்தை மருத்துவச் சான்றிதழ் படிப்பையும், தொடர்ந்து எம்.டி. மேற்படிப்பையும் படித்து முடித்திருக்கிறார்.
அவர் வாழ்ந்த காலத்தில் பெண்கள் படிப்பது சுலபமான செயலல்ல.
அதிலும் மருத்துவத்துறையில் படிப்பது என்பது முயற்கொம்பு.
முன்வைத்த காலைப் பின்வைக்கக் கூடாது என்ற மன உறுதியுடன் கூடிய வைர நெஞ்சத்தால், அதனையும் மீறிப் படித்தார்.
திருமணம்
இவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்னவென்றால், தன்னுடைய திருமணம்தான் என்று கூறியிருக்கிறார்.
மாமா ஔவை துரைசாமி அவர்களின் மகனான ஔவை நடராசன் அவர்களையே திருமணம் செய்து கொண்டார்.
இவருடைய வீட்டில் இருந்து தான் அவர் படித்திருக்கின்றார்.
பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு உற்சாகம் கொடுத்ததே இவருடைய அப்பா மாசிலாமணி தான்.
இவரின் தந்தைக்கோ, மருத்துவருக்கு மகளை மணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை.
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்ததால், இறுதியில் காதல் வென்றது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்ற வாக்கு இவர்கள் வாழ்க்கை மூலம் உறுதி செய்யப்படுகிறது.
இவர்கள் திருமணம் 1961, டிசம்பர் 10-ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் மிகச் சிறப்பாக நடந்தது.
கணவர், தமிழ், இலக்கியம், மேடை என்று அவரது வேலைகளைப் பார்ப்பார்.
இவர் மருத்துவமனை, க்ளினிக் என்று இவருடைய வேலைகளைப் பார்ப்பார்.
இப்படி அவரவர் வேலைகளை அவரவர் பார்த்து, கடமையையே கண்ணாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.
ஒவ்வொரு நாளும் இரவு உணவு உண்ணும்போதுதான் காலையில் இருந்து நடந்ததை எல்லாம் பேசிப் பகிர்ந்துகொள்வார்களாம்.
மாமா மகன், என்பதுடன் படிக்கும் காலத்தில் இவர் மருத்துவம், கணவர் தமிழ் இலக்கியம் என்கின்றபோது வாழ்க்கையில் போட்டியோ, மன வேறுபாடுகளோ வருவதுண்டா என, பலரும், இவரிடம் கேட்பார்களாம்.
அதற்கு இவர்கள் ஒத்த மனம் என்பதால் அவ்வாறு வந்ததில்லை,
மேலும் இருவரும் அவரவர் வேலைகளில் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்ததால் அதற்கு நேரமுமில்லை என்று சிரித்துக்கொண்டே சொல்வார்களாம்.
பிள்ளைகள்
இவருடைய பிள்ளைச் செல்வங்கள் நால்வர்.
முதலில் ஒரு பெண் குழந்தை ‘ஷீலா’ பிறந்து சிறு வயதிலேயே விண்ணுலகம் அடைந்துவிட்டாள்.
அடுத்துப் பிறந்தது ஆண் குழந்தை. அவன் பெயர் கண்ணன்.
இரண்டாவது ஆண் பிள்ளை அருள்.
மூன்றாம் பிள்ளை பரதன்.
கண்ணனும், பரதனும் மருத்துவர்கள் ஆவார்கள்.
மருமகள்கள் சாந்தி கண்ணன், நிஷா பரதன் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள்.
மகன் அருள் அவரின் அப்பா போல் தமிழ் இலக்கியம் படித்து, முனைவர் பட்டம் பெற்றவர்.
மருமகள் சாலைவாணி, பி.இ படித்தவர்.
டாக்டர் தாரா அவர்கள் சிறிது நாட்கள் கிளினிக் வைத்துப் பார்த்திருக்கிறார்.
பிறகு குழந்தைகளின் படிப்பு, கவனிப்பு மிக முக்கியம் என்று எண்ணி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை நிறுத்திக்கொண்டார் என்று அறிய வரும்போது தன்னுடைய தொழில், வருமானம் இரண்டையும் விடத் தன் பிள்ளைகளுக்குச் சிறந்த தாயாக இருக்கவேண்டும் என்ற, இவருடைய எண்ணத்தின் மூலம் இவரின் தாய்மை உள்ளத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

Add a Comment