நாடகச்செம்மல் ,சட்டமன்ற மேலவை உறுப்பினர் அவ்வை தி க சண்முகம் அவர்களின் மணி விழாவின் போது 26.4.1972 நாவேந்தர் ஒளவை நடராசன் அவர்களின் வாழ்த்துப்பாடல்
அணிவிழா முரசம் ஆர்க்கவே !
தங்க நிலாவைத் தந்திடும் வானமே
செங்கதிர்ச் சுடரையும் சேர்த்துத் தந்திடும்
என் கடன் கலைப்பணி என்ப தோடன்றி
மன்பதைக் காகும் மக்கட் பணியை
அரசியல் வழியிலும் ஆற்றிட முனைந்து
சிலம்புச் செல்வரின் சிந்தனை நுதலாய்
முன் முகம் பொலியும் சண்முக மிவர்தான்
ஆரூர்க் கலைஞரின் அழகிய விரல்கள்
மீட்டப் பாடிடும் மேலவை வீணை
ஈரச் சேறால் இளகிய தஞ்சையில்
பாரக் கற்களால் பழுத்த கோபுரம்
எழுப்பிய இராச ராச சோழன்
இன்றோ கட்டிய அழகிய கோவில்
கால்வைக்க முடியாது நிற்பதால், நமது
நெஞ்சம் நெகிழும். அன்றே அவனை
அரங்க நாதனாய் ஆக்கிய திவரே.
கூனிக் குறுகி ஒளவையாய் நடித்து
வானுற நிமிர்ந்து வண்புகழ் பெற்றார் !
புடைவைப் பாட்டியாய்ப் பொருத்தமாய் நடித்ததால்
அவ்வை என்றே அன்போ டழைத்தனர்
அதனால் ஒட்டுமாங் கனியாய் உன்பேர்
எங்கட் கெல்லாம் இனிப்ப தாயிற்று ;
மணிவிழாக்கொள் மாப்புகழ் அவ்வையே !
அணிவிழா முரசம் வாகை ஆர்க்கவே !

Add a Comment