செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 46
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
இயற்கையோடு இசைந்த வாழ்வு !
தமிழ்மக்கள் இயற்கையை எப்போதும் போற்றி வந்தனர் .
சங்க இலக்கியங்களில் காதல் வாழ்வுக்குப் பின்னணியாக ஓங்கிய மலையும், ஒலிக்கும் கடலும், பச்சை வயல்களும் , அடர்ந்து படர்ந்த காடுகளும் பாராட்டப்பட்டுள்ளன .
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தது ,நீரினும் தண்ணளி குறிஞ்சிப் பூக்கொண்டு இழைக்கும் நாடன் என்ற குறுந்தொகைப் பாடல் நாடறிந்தது .
முதற்பொருள் ,கருப்பொருள் ,உரிப்பொருள் மூன்றும் இழைந்ததாகவே புலவர்கள் பாடல்களைப் புனைந்தனர் .”
பெட்டாங்கு ஈயும் பெருவளம் நல்கி பழுனி , நட்டனை மன்னோ, முன்னே ; ” என்று வரம்பில்லாத வளம் காட்டிய பறம்பு மலையைக் கபிலர் பாடியது நம் நெஞ்சை உருக்குவதாகும் .
நாடு ,காடு ,கடற்கரை ,மலைச்சாரல் இவை வாழும் மக்களால் வளம் பெறுகின்றன .
இயற்கையமைவு வாழ்வோடு தொடர்பு கொண்டது – தோழமை கொண்டது என்பதைக் காணலாம் .
இவ்வுலகம் ஐம்பூதங்களால் அமைந்தது .
ஐம்பூதங்கள் என்பதை வடமொழியில் பஞ்சபூதங்கள் என்று குறிப்பிட்டனர் .
ஐம்பூதங்களின் சேர்க்கையைப் பிரபஞ்சம் என்றும் வடமொழியில் கூறுவர் .
இவற்றில் சமநிலை இருப்பின் உலகம் வளமானதாகவும், நலமானதாகவும் விளங்கும் .
பூத்தல் தோன்றுதல் என்ற பொருளின் அடிப்படையில் பிறந்தது .
மனிதன் இயற்கைக்கு மாறாகச் செயற்படும்போது நிலம் ,நீர் ,தீ,வளி ,வான் மாற்றத்திற்கும், சீர்குலைவுக்கும் உள்ளாகின்றன.
இப்பி்ரபஞ்சத்தை அண்டம் என்பர்.
இவ்வண்டத்தில் உள்ளதே நிலம், நீர், காற்று, நெருப்பு(தீ), ஆகாயம்(வானம்) என்ற ஐம்பூதங்களாகும்.
இவ்வைம்பூதங்கள் குறித்த பல்வேறு தகவல்களைக் கூறினர் .
இவை அறிவியல் ஆட்பட்டவை அல்ல , பொது நிலையில் அவரவர் சூழலில் சில கருத்துக்கள் பிறந்தன .
நமது உடலைப் பிண்டம் என்றும் குறிப்பிடுவர்.
இவ்வண்டத்தில் உள்ளது நமது உடலிலும் உள்ளது.
ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆனது நமது உடல்.
இவற்றின் இயக்கத்தினால்தான் நமது உடல் இயங்கிக் கொண்டிருக்கின்றது எனலாம்.
இதனை,
” அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் ”
என்ற நெடுமொழி உணர்த்துகிறது.
நிலம்-எலும்பு, நீர்-இரத்தம், காற்று-மூச்சுக் காற்று, நெருப்பு-உடலில் உள்ள வெப்பம், வான் – உடலில் உள்ள வெற்றிடம் என்று கருதினர் .
இவற்றில் முதன்மையானதாக நிலம் விளங்குவது .
நிலத்தை மண் என்றும் கூறினர் .
இந்நிலம் அனைத்திற்கும் அடிப்படை. கல், மண், நீர் உள்ளிட்ட பல்வேறு விதமான அணுமூலக்கூறுகளின் சேர்க்கையாக இந்நிலமானது விளங்குகிறது.
நிலத்தை வைத்துப் பல பழமொழிகளையும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பொறுமையின் நிலைக்களனாக விளங்குவது நிலமாகிய மண்.
எவ்வளவுதான் அதனைத் திருத்தியும் – மாற்றியும் துன்புறுத்தினாலும் பொறுமையாக இருந்து தன்னைத் துன்புறுத்தியவர்களுக்குப் பலனைக் கொடுக்கும்.
இந்த அடிப்படையில் இயற்கையான நிலம் பற்றித்தான் பேசுவதாக முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய அழகிய எழுத்தோவியம் இனித் தொடர்கிறது .
என்ன அப்படிப் பார்க்கிறாய் ?
ஏன் திகைக்கிறாய் ?
எதற்காகக் காதைப் பொத்திக் கொள்கிறாய் ?’
பார்த்து ரசிக்கிறாய்;
என் செயல்கண்டு மகிழவும் செய்கிறாய்;
மலைத்தும் போகிறாய் – பதைக்கிறாய், பதறுகிறாய் – பயந்து நடுங்குகிறாய், பல நேரங்களில் பரவசமடைகிறாய்.
என்னை உன் கண்ணுக்குத் தெரியாது – ஆனால் உன் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் என் கைவண்ணம் என்பதைத் தெரிந்துகொள்.
என் பெயர் தெரியுமா உனக்கு ? எனக்குப் பெயரே கிடையாது; பிறகு எப்படி நீ பெயர் சொல்ல முடியும் ?
உன்னைப் போன்ற மானிடர்; உலகில் பல்வேறு தொகுப்புக்களாக இருப்போர்; அவரவர் விருப்பத்துக்கேற்ப ஒரு பெயரை எனக்குச் சூட்டி அழைப்பார்கள்.
‘ஓ ! கண்டுபிடித்து விட்டேன் ” கடவுள் ” என்பதுதான் உன் பெயர் ‘ என்பாய் – அதனையும் ” ஏற்போர் ” – ” மறுப்போர் என்று இருபிரிவினர் இருப்பதால்; பொதுப் பெயராக – யாரும் மறுக்க வொண்ணாத பெயராக ” இயற்கை ” என்றே என் பெயர், அமைந்தது அமைந்ததாகவே இருக்கட்டும்.
அடையாளத்துக்காக அப்படி வைத்துக் கொள்வோமே ! ”
எங்கெங்குக் காணினும் சக்தியடா;
ஏழுகடல் அவள் வண்ண மடா ”
என்று பாவேந்தர் பாரதிதாசன், பாரதியாருக்கு அருகில் அமர்ந்து பாடியதாகச் சொல்வார்களே; 1
அந்த சக்தி எது என்பதை பாரதிதாசனே பகருவதைப் பார் !
” விரிந்த வானே, வெளியே – எங்கும்
விளைந்த பொருளின் முதலே,
திரிந்த காற்றும் புனலும் – மண்ணும்,
செந்தீ யாவும் தந்தோய்,
தெரிந்த கதிரும் நிலவும் – பலவாச்
செறிந்த உலகின் வித்தே,
புரிந்த உன்றன் செயல்கள் – எல்லாம்
புதுமை ! புதுமை ! புதுமை ! ”
என்று அவர் பாடியதும்,
” இயற்கை ” எனும் என்னைப் பற்றித்தானே – என் சக்தியைப் பற்றித்தானே !
நான் சுவாசிப்பதைத் தென்றல் என்பாய்; பெருமூச்சு விட்டாலோ; அதனைப் புயல், சூறாவளி என்பாய் !
ஆனந்தக் கண்ணீர் விடுவேன்; அருவியென்பாய் ! கதறிப் புலம்பி, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்வேன்; பூகம்பமென்பாய் ! புதுமொழியில் ” சுனாமி ” என்பாய்; கடற்கோளினை !
இப்பொழுதாவது இயற்கையாம் என் சக்தியை உணருகிறாயா ?
என்னை எதிர்த்து உன் மானிட வர்க்கம் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.
அந்தப் போராட்டம் இரு பக்கமும் இறுதி முடிவு காண முடியாத நிலையை நோக்கியே நிகழ்ந்து கொண்டிருப்பதால்தானே; ”
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் ” என்றும்; ”
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் ”
என அய்யன் வள்ளுவரே; இயற்கையைத் தோல்வியுறச் செய்ய சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று கூறுகிறவர்;
இயற்கையே வலிமை வாய்ந்தது என்றும் அதைவிட முதன்மையானது எதுவுமில்லையென்றும் என்னை பெருவியப்புடன் புகழ்ந்துரைப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உலக மானிடருக்கும் எனக்கும் நடக்கும் போராட்ட முடிவு இழுபறி நிலையிலேயே இருப்பதை உணர முடிகிறதல்லவா ?
” அகழ்வாரைத் தாங்கும் நிலம் ” என்று இகழ்வாரைப் பொறுத்துக் கொள்பவருக்கு என்னை உவமை கூறிவிடுவதால் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்ள முடியும் என்னால் ?
நீங்கள் அளவுக்கு மீறி சோதிக்க முனையும்போது, நான்தான் என்ன செய்ய முடியும்.
இந்தியாவிலேயே மிகப் பழைய கணக்கு முப்பது கோடி மக்கள் தொகை, இப்போது நூறு கோடியைத் தாண்டிக் கொண்டிருக்கிறது என்றால் – உலக முழுதும் உள்ள நாடுகளின் மக்கள் தொகையைக் கூட்டினால்; அதற்கேற்ப வசதி வாய்ப்புகள் வாழ்வதற்கான சாதனங்களின் தேவையை நிறைவு செய்திட; என்னிடம் தானே கும்பிட்டுக் கேட்கவோ; அல்லது கொள்ளையடித்து எடுத்துக் கொள்ளவோ; அல்லது போர் நடத்திக் கையகப்படுத்திக் கொள்ளவோ திட்டமிட்டு செயல்பட மானிட சாதி மந்திராலோசனையில் ஈடுபட்டிருப்பதை நீயும் நானும் அறிய மாட்டோமா என்ன !
நான்தான் என் செய்வேன்; இரக்கமுள்ள ஜென்மம் – இருக்கும் வரை கொடுக்கிறேன் – எடுத்துப் போவதையும் கூடிய மட்டும் தடுத்து நிறுத்தாமல் இருக்கிறேன்.
என்ன இருந்தாலும் எறும்பு ஊர்ந்திடக் கல்லும் தேயும் என்பது போலக்கூட அல்லாமல் – யானைகளின் ஊர்வலமே அடிக்கடி நடந்தால் காடும் தேயுமே – நாடும் தேயுமே – உலகு சுழல்வதே ஒருநாள் ஓயுமே !
இயற்கையாம் என்னை என்ன பாடுபடுத்துகிறீர்கள் ! ஆகாரத்துக்கான பசி என்றால்; மார்பைச் சப்பி மழலையர் பாலை அருந்திக் களிப்பர் – உங்களுக்கேற்பட்டிருப்பது அறிவுப் பசியன்றோ ; அதனால் மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்திட, மார்பில் ஊறும் பால் எங்கிருந்து உற்பத்தியென்றே தேடுகின்றீர்; அதனால் ஏற்படும் உபாதையில் நான் அழுகின்றேன் – துடிக்கின்றேன் – அலை மோதுகின்றேன் – வெகுண்டெழுந்து வெடிக்கின்றேன் – இயற்கையான எனக்கு இந்தச் செயல்பாடுகள்தான் என் வலியை அறிவிக்கும் வாயில்லா மொழி !
செயற்கை வழிச் செயல்படும் நீவீர்; சிறிது அடக்கம் காட்டி என்னையும் அடக்கி வைத்து; என்னழகைப் பருகிப் பயனடையலாமே !
அப்படி இல்லாமல் அடக்கி வைத்திட அடிமைப் பெண் கிடைத்தாள் என்று; அடி மேல் அடி கொடுத்துக் கொண்டிருந்தால் ”
சாது மிரண்டால் காடுகொள்ளாது ” எனும் பழமொழி தான், மானிட வர்க்கத்தைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் !
10 -10 – 2005
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com
ஐம்பூதங்கள்
இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆனது. ஐம்பூதங்கள் என்பதை வடமொழியில் பஞ்சபூதங்கள் என்றுகுறிப்பிடுவர். ஐம்பூதங்களின் சேர்க்கையைப் பிரபஞ்சம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவற்றில் சமநிலை இருப்பின் உலகம் வளமானதாகவும், நலமானதாகவும் இருக்கும்.
மனிதன் இயற்கைக்கு மாறாகச் செயல்படும்போது ஐம்பூதங்களும் மாற்றத்திற்கும், பதிப்பிற்கும் உள்ளாகின்றன. இப்பி்ரபஞ்சத்தை அண்டம் என்பர். இவ்வண்டத்தில் உள்ளதே நிலம், நீர், காற்று, நெருப்பு(தீ), ஆகாயம்(வானம்) என்ற ஐம்பூதங்களாகும். இவ்வைம்பூதங்கள் குறித்த பல்வேறு தகவல்களை நமது முன்னோர்கள் பழமொழிகள் மூலம் தெளிவுறக் கூறிப்போந்துள்ளனர்.
அண்டமும் பிண்டமும்
நமது உடலைப் பிண்டம் என்று குறிப்பிடுவர். இவ்வண்டத்தில் உள்ளது நமது உடலில் உள்ளது. ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆனது நமது உடல். இவற்றின் இயக்கத்தினால்தான் நமது உடல் இயங்கிக் கொண்டிருக்கின்றது எனலாம். இதனை,
“அண்டத்தில் இருப்பது பிண்டத்தில்”
என்ற பழமொழி உணர்த்துகிறது. நிலம்-எலும்பு, நீர்-இரத்தம், காற்று-மூச்சுக் காற்று, நெருப்பு-உடலில் உள்ள வெப்பம், ஆகாயம்-உடலில் உள்ள வெற்றிடம் இக்கருத்தினையே மேற்கண்ட பழமொழி எடுத்துரைக்கின்றது.
நிலம்
இவ்வைம்பூதங்களில் முதன்மையானதாக விலம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. நிலத்தை பூமி, மண் என்று குறிப்பிடுவர். இந்நிலம் அனைத்திற்கும் அடிப்படை. கல், மண், நீர் உள்ளிட்ட பல்வேறுவிதமான அணுமூலக்கூறுகளின் சேர்க்கையாக இந்நிலமானது விளங்குகிறது. நிலத்தை வைத்துப் பழமொழிகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பொறுமையின் நிலைக்களனாக விளங்குவது நிலமாகிய மண். எவ்வளவுதான் அதனைக் குத்தித் தோண்டித் துன்புறுத்தினாலும் பொறுமையாக இருந்து தன்னைத் துன்புறுத்தியவர்களுக்குப் பலனைக் கொடுக்கும். பெண்களும் பொறுமைக் குணம் மிகுந்தவர்கள். தங்களுக்கு எந்தவிதத் துன்பமும் நேர்ந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு நன்மையானவற்றையே செய்வர். இதனை,
“மண்ணும் பெண்ணும் ஒண்ணு”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
பெண்மையின் உயர்வை ”மண்மகள், நிலமகள், நிலமடந்தை, பூமகள், பூமித்தாய்” போன்ற சொற்கள் விளக்குவது போன்று மேற்குறிப்பிட்ட பழமொழியும் பெண்ணின் பெருமையை விளக்குவதாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
தவறு செய்பவன் தண்டனையில் இருந்து தப்புதல் இயலாது. உறுதியாகத் தண்டனையை அனுபவிப்பான். அவன் இல்லாவிட்டாலும் அவனைச் சார்ந்தவர்கள் அனுபவிப்பர். இதனை,
“தின்ன மண்ணுக்குச் சோகை”
என்ற பழமொழி குறிப்பிடுகிறது. மண்ணைத் தின்றால் இரத்தச் சோகை ஏற்பட்டு உடலில் வலிமை என்பது இல்லாமல் போய்விடும் என்பதையே இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
(தின்ற மண்-செய்கின்ற உண்மைக்குப் புறம்பான தீய செயல்கள் சோகை-தண்டனை)
(வலி அறிவிக்கும் வாயில்லா மொழி ! )
தொடர்புக்கு :
thamizhavvai@gmail.com

Add a Comment