POST: 2022-03-06T08:21:30+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 99

பயன் கருதாமல் வாழும் வாழ்க்கையே மிகவும் உயர்ந்தது!

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

மலேசிய நாளிதழான தமிழ் நேசனில், 17.06.1983, வெள்ளிக் கிழமை, அன்று வெளிவந்த, ‘உழைப்பு என்பது, பயனைப் பெறுவது இல்லை பயன் கருதி வாழ்கின்ற வாழ்க்கையைக் காட்டிலும், எவ்விதப் பயனையும் கருதாமல் செய்யக்கூடிய வாழ்க்கை மிகவும் உயர்ந்தது’ என்று திரு.வி.எஸ். கோடிவேல் தலைமையில் மாரியம்மன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் முனைவர் ஔவை நடராசன் பேசிய உரை வருமாறு:-

“நம்முடைய உள்ளத்தின் உணர்வுகள் எல்லாம் ஓரிடத்திலே சென்று, முறையிட வேண்டும், அந்த முறையீடுதான் வழிபாடு என்ற பெயரில் பிறக்கிறது என்பதை நம்முடைய சான்றோர்கள் கண்டுள்ளனர்.

வழிபாடும் முறையீடும்தான் நாம் ஆலயத்துக்குள் நுழைகின்றபோதும், நம்முடைய துயரங்களையெல்லாம் எடுத்துச் சொல்லுகின்ற போதும், நம்முடைய துன்பம் குறைகின்றது.

அவலங்கள் மறைகின்றன.

நம்முடைய உணர்வு மென்மை படுகிறது என்பதுதான் வழிபாட்டின் தன்மையாகும்.

தமிழ் மக்களுக்குரிய கூறு இதுவென்று, இந்த மொழியைப் பேசும் மக்களுடைய வாழ்க்கையின் இயல்பு என்ன?

வழிபாடு செய்வதிலும், திருக்கோயில்கள் எழுப்புவதிலும் நாம் செல்லுகின்ற இடங்களில் அமைதிக்குக் கோயில் வடிவத்தைச் சமைத்துக் கொள்வதிலும், தமிழ் மக்களுடைய உதிரத்திலே உறைந்து கிடக்கின்ற உண்மையாகும்.

நான்கு தமிழர்கள் ஒன்று சேர்ந்து இருக்கின்றார்கள் என்று சொன்னால், அந்த ஒற்றுமையின் வெடிப்பினால், ஒரு சிறு திருப்புளியினால், தமிழகத்தில் குலோத்துங்க சோழன் என்பவன், ‘எண்தோள் ஈசருக்கு எண்பது மாடம் அமைத்தான்’.
இறைவனுக்குக் கோயில்
இந்தக் கோயில் கட்டுவது கோயில்களைப் புனைவது என்பது, நாம் நம்புகின்ற இறைவனுக்குக் கோயில் கட்டுவது என்ற பழக்கத்தினாலே தான். தம்புசாமிப் பிள்ளையென்ற பெருந்தகை, தொடக்கியதனால்தான் இன்று இப்பெரிய வடிவம் பெற்றிருக்கிறது.

கோயில்கள் கட்டுவதில், என்ன சிறப்பு என்பதை நாம் அறிவோம்.

நம்முடைய உணர்வுகளை எடுத்துச் சொல்லுகிற போது, நம்முடைய அவலங்களையெல்லாம் நெஞ்சு கல்லாக இருக்கும்போது, கரைந்து உருகுமாறு அமைந்தது தான் தமிழ் மொழியாகும்.

நாம் முறையிடுகின்றபோது நம்முடைய துன்பங்களையெல்லாம் இறைவனிடம் எடுத்துச் சொல்லுகின்றோம்.

உள்ளத்தை உருக்குகின்ற திறம், நமது நெஞ்சத்தைப் பாகாக ஆக்கும் இயல்பு,

நம்முடைய மொழிக்கு உண்டு, இதனை நான் சொன்னால், உங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கும்.

இதனை ஒரு கிறித்தவப் பெருந்தகை தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

இயந்திரவியல் இயந்திர நுட்பங்களை எடுத்துக்காட்டுவதற்கு மிகவும் சிறந்த மொழி என்ற இடத்தைச் சோவியத் யூனியன் மொழி பெறுகின்றது.

மொழிகளின் சிறப்பு

அப்போது, தமிழ் மொழிக்கு என்ன சிறப்பு என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆங்கிலத்தை வணிகமொழியென்றும், இலத்தீன் மொழியைக் காதல் மொழியென்றும், பிரெஞ்சு மொழியைத் தூதுவர் மொழியென்றும், ஜெர்மன் மொழியை அறிவியல் மொழியென்றும், நூதனக் கருவிகளை எடுத்துக் காட்டுவது, உருசிய மொழியென்றும், வேத உண்மைகளை வடமொழி காட்டுவது சிறப்புடையது என்றும், அரசியல் சட்டங்களை எடுத்து எழுதுவதற்குப் பயன்படுகிற மொழியென்று பிரெஞ்சு மொழியென்று சொல்லுகிறார்கள்.

வேதங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள், ஆகிய உண்மைகளை எடுத்துக்காட்டி விளக்குவது வடமொழிக்குத் தனிச்சிறப்பு உண்டு.

இன்றைக்கு ஏற்பட்டுள்ள அறிவியல் மாட்சியையெல்லாம் காண்பதற்கு, ஜெர்மன் மொழி மிகவும் தேவைப்படுகிறது.

ஆங்கில மொழிக்கு உள்ள பெரிய சிறப்பு என்னவென்றால், வணிகத்துக்குப் பயன்படுவதால், அது உலகில் முதன்மை வகிக்கிறது.

இலத்தீன் மொழிக்குள்ள சிறப்பு, சட்டத்தின் கூறுகளை எடுத்துச் சொல்வதில் தனித்தன்மை இருக்கிறது.

இனிமையாகவும், அன்போடு பழகிக் காதல் மொழிகளை எடுத்துக் காட்டுவதற்குப் பயன்படுகிற இலத்தீன் மொழியென்று சொல்லப்படுகிறது.

மொழியைக் காணும்போது ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பெருமிதம் உண்டென்று உலக அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர்.

ஆங்கில நாட்டுக்குப் பெரிதாக விளங்கும் ஆங்கில மொழிக்கும் தனித்தன்மை உண்டு.

ஜெர்மன் மொழிக்கும் ஒரு பெருமிதம் இருக்கின்றது.
வடமொழிக்கு ஒரு பெரிய தனித்தன்மையும் உண்டு.

இப்படியெல்லாம் உலக மொழிக்குள்ள கூறுகளையெல்லாம் ஆராய்ந்த அறிஞர்கள், தங்களின் கருத்துகளாக மொழிகளைப்பற்றிச் சொல்லி வைத்துள்ளார்கள்.

ஆலய வழிபாடு

ஆலய வழிபாட்டைச் செய்வதிலும், அருள்நெறித் திருக்கூட்டத்தினர் பாடிய பாடல்களைச் செவிமடுத்தேன்.

நல்ல அன்பு, பணிவு, உணர்வோடு ஆலயத்தின் மீது கொண்டு ஆர்வமான எழுச்சியோடும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்; கண்டு மனம் பூரிக்கின்றேன்.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் இயல்பு அல்லது தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படும் இயல்புகளில், அவரவர்களுக்குத் தனிக்கூறுகள் உண்டு என்று சொல்லப்படுகிறது.

ஒருவர் மட்டும் உழைத்திருந்தால், இந்த மாரியம்மன் ஆலயம் எழும்பியிருக்க முடியாது.

ஆனால், இந்த ஆலயம் எழுப்புவதற்குப் பலருடைய உழைப்பு இருந்திருக்கிறது என்பதை மட்டும், எவரும் மறந்து விடக்கூடாது.

தஞ்சையிலிருக்கும், பெருங்கோயிலைக் கண்டபோது, இது யார் கட்டிய கோயில் என்று கேட்டார் ஒருவர்.

இவர், பல நினைவுச் சின்னங்களைப் பார்த்து வந்தவராதலால், இந்தக் கோயிலைக் கண்டதும், இதில் அவரது கவனம் செலுத்தியது.

இந்தத் தஞ்சைக் கோயிலை இராஜராஜன் அமைத்தான்.

இந்தப் பெரிய கோயிலை அமைத்திருக்கின்றானே, அந்த வேந்தன் இவன் வாழ்ந்த அரண்மனை எங்கே என்று கேட்டார். உடனிருந்தவர்கள் கூறுகையில், இராஜராஜன் கட்டிய அரண்மனையைத் தாங்கள் பார்த்தது கிடையாது என்று சொன்னார்கள்.

இராஜேந்திரனுடைய அரண்மனை இன்று அங்குக் கிடையாது.

நாம் நம்முடைய வீடுகளை அமைத்துக் கொள்வதிலேயே சிறப்பு இருக்கிறது என்று தமிழக வேந்தர்கள் கூறுகின்றனர்.

பரம்பொருள் வாழும் திருக்கோயில்தான் நாமும் வாழ்வதற்குத் தக்க இடம் என்றும், கோயில் கொண்டு தான் குடிபடைகள் வாழ வேண்டும் என்றும், ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதை அறிவோம்.

மன்னர்களில் பலர், அரண்மனையைக் கட்டுவதற்குப் பதில் திருக்கோயில்களையே தமிழக மன்னர்கள் கட்டிவந்தனர் என்று சொல்லப்படுகிறது.

உறவினர்களைக் காட்டிலும், தம்மைக் காட்டிலும், உடையவன் ஒருவன் இருக்கிறான்.

எனவே, உலகம் என்பதும், வாழ்க்கை என்பதும் வாழ்க்கையைக் கடந்து உலகத்தை வாழவைக்கும் பெருந்தகைக்கு, பெரும்பொருட்கு, பரம்பொருளுக்குக் கோயில் எழுப்புவது சிறப்பே தவிர, வாழ்வதற்காக எழுதிக் காட்டிய அறிஞர்கள் தமிழ் மொழியின் தனிக்கூறும், சிறப்புக்கூறும் எதுவென்று சொன்னால், அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சொன்னால், தமிழ் மொழி, பக்தி மொழி என்று சொல்லிப் பெருமை படுத்தினார்கள்.

ஊரைச் சொன்னாலும், பேரைச் சொல்லாதே

தஞ்சாவூர் என்ற ஊரில் பிறந்த புலவர், தன்னுடைய பெயரைச் சொல்லாமல் போய்விட்டார்.

அதனாலேயே அப்புலவருக்குக் கோவூர்க் கிழார் என்ற பெயர் வந்தது.

தமிழ் நாட்டிலே ஒரு பழமொழி உண்டு. ‘ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே’ என்று.

அதனாலே தான், தங்கள் ஊர்களைச் சொன்னார்களே தவிர, பெயரைச் சொல்லாமல் போய் விட்டார்கள்.

இன்றைக்கும் கூட, சீர்காழி பாடினார், சிதம்பரம் சங்கீதக் கச்சேரி எப்படியிருக்கிறது என்று சொல்வார்கள்.

என்னுடைய தந்தையார் திண்டிவனத்துக்குப் பக்கத்து ஊரான சிற்றூரில் பிறந்தவர்.

அந்தச் சிற்றூருக்கு ஔவையார் குப்பம் என்பது பெயர்.

பள்ளி ஆசிரியர் சொன்னதினால், ஔவை துரைசாமி என்று என் தந்தை அழைக்கப்பட்டார்.

பிறகு, நான் என் பெயருடன், ஔவை நடராசன் என்று வைத்துக் கொண்டேன்.

மலேசிய இந்துத் திருக்கோயில்கள் அமைப்பின் சார்பில் நான் இங்கு வந்திருக்கின்றேன்.

சோமசுந்தரத்தை மறந்துவிட்டுப் பெருமழைப் புலவர் என்று அழைக்கத் தொடங்கினர்.

பிறகு பெருமழை என்று அழைக்கப்பட்டது.

ஔவை துரைசாமி

நடித்ததினால் ஔவை சண்முகம் வந்தது.

திரையில் நடித்ததினால் ஔவை சுந்தராம்பாள் பெயர் வந்தது.

ஔவை நாடகத்தை எழுதியதால், ஔவை எத்திராஜ் என்று ஒருவர் இருக்கிறார்.

இலக்கியப் புலமை பெற்றதினால், ஔவை துரைசாமி இருந்தார்.

இந்த ஔவை எப்படி முளைத்தது என்று கேட்கப் பட்டது.

இந்த மாறுதலினால் மறைந்த முத்துராமலிங்க தேவருக்கு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயர் அமைந்தது.

பசும்பொன் என்பது குணத்தைக் குறிக்கும் தன்மையாக இயல்பாக இருந்தாலும் கூடப் பிறந்த சிற்றூருக்குப் பசும்பொன் என்று பெயர்.

அதனாலேயே மறவாமல் தனது பெயருடன் பசும்பொன் என்று இணைத்துக் கொண்டார்.

புலவர் சோமசுந்தரனார் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவர்; பெருமழை என்ற ஊரில் பிறந்தவர்; அதனாலேயே பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் என்று அவரை அழைத்தனர்.

ஆவூர் என்ற ஊரில் பிறந்தார் ஒரு புலவர். ஆனால் ஆவூர் பெயர் இருந்ததே தவிர அவரது பெயர் இல்லாமல் போய் விட்டது. எனவே, ஆவூர் கிழார் என்ற பெயர் விளங்கிற்று.

தமிழ் நாட்டில் ஊரைச் சொல்லுகின்ற பழக்கமும், அதன் பின்னால் பெயரைச் சொல்லுகின்ற பழக்கமும் இருந்து வந்திருக்கிறது.

இந்த அடிப்படையில் தான் ஊரை எழுதி, தனது பெயராகச் சொல்லிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அங்கே இருந்தது.

லால்குடியைப் போல் ஒருவர் இருக்கின்றாரா? குன்னக்குடிக்கு நிகருண்டா? என்றெல்லாம் நாம் சொல்வதற்கு ஊரின் பற்றை விடாத இயல்பு என்ற தன்மை தமிழ் நாட்டு மக்களுக்கு இருந்தது, இன்னும் இருந்து வருகிறது.

ஒருவர், ஒருமணி நேரம் பேசுவது என்பதும், மற்றவர்கள் அமர்ந்து கேட்பது என்பதும் ஒருவகை அடிமைத் தனமாகும்.

இப்பொழுதெல்லாம் இருதரப்பும் கலந்துரையாடுவதே சிறப்புடையது.

அதைவிட்டு, சிலர் பேசுவதையே தொழிலாக்கி, ஒருவரே பேசுவதும், பிறர் கேட்பதும் தலைவிதியாகி விட்டது.

இம்முறை மாற்றப்பட்டு, கலந்துரையாடல் முறைகள் வளர்ச்சியுற வேண்டும்” என்று ஔவை நடராசன் முத்தாய்ப்பாய்ச் சொல்லி விழாப் பேருரையை நிறைவு செய்த பொழுது ஆலயத்தில் கூடிய பெருமக்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலியெழுப்பினர்.

——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (23)

உவேசா – ஒளவை பதிப்புக்கள், ஒர் ஒப்புநோக்கு
புலவர் பெயர் விளக்கம்

உறையூர் இளம்பொன் வாணிகனார் (பாட்டு 264)
உ.வே.சா:

இவர் வணிகர்.

ஒளவை: இளம்பொன் என்பது ஓடுதலைடைய மாற்றுக் குறைந்த பொன்னாகும்.

இதனை வாணிகம் செய்தது பற்றி இவர் இளம்பொன் வாணிகனார்.

இத்தகைய வாணிகர் காவிரிப்பூம்பட்டினத்தில் மதுரையிலும்,தஞ்சையிலும், காஞ்சியிலும், பிற நகரங்களிலும் இருந்தனர்.

பொன் வகைகள் சாதரூபமும், கிளிச்சிறையும்,இளம் பொன்னாதலால் இவற்றை உரைத்து உரையால் அறுதியிட்டு வாணிகம் செய்வோர் இளம்பொன் வாணிகர் ஆயினர்.

இளம்பொன் சாத்தன் கொற்றனார் என்னும் சான்றோருடைய தந்தையாரும் இவ்வகையினரே.

முல்லைப்பாட்டின் ஆசிரியராகிய நப்பூதனாருடைய தந்தையும் பொன்வாணிகரே என்றாலும் அவர் இளம்பொன் வாணிகன் அல்லர்.

சான்றோர் கூட்டத்தில் இவர் இயற்பெயர் வழங்காது இளம்பொன்வாணிகன் என்ற பெயரே பயில வழங்கியமையின் இந்நூலைத் தொகுத்த ஆசிரியர் உறையூர் இளம்பொன் வாணிகனார் என்றே குறித்தறிந்தார்.

குறமகள் இளவெயினி (157)

உ.வே.சா: “குறமகள் இவருக்கு இப்பெயர் சாதியால் வந்தது.”

ஒளவை: “இளவெயினனார் என்னும் சான்றோர் ஒருவரும் குறமகள் குறியெயினியார் என்னும் சான்றோர் ஒருவரும் நற்றிணைப் புலவர் வரிசையுட் காணப்படுகின்றனர்.

இந்த இளவெயினியாரே நற்றிணையில் வரும் குறியெயினியராகலாம் என்றும், புறப்பாட்டு இளமைக் காலத்திலும் நற்றிணைப் பாட்டுப் பிற்காலத்தும் பாடப்பட்டிருக்கலாம் என்றும் நற்றிணைப் பாட்டில் இவர், “நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு என்னோடு நிலை யாதாயினும் என்றும் நெஞ்சுவடுப்படுத்துக் கேட்டவரறியாதே” (நற்றிணை 357) என்று பாடிய சிறப்பால் குறிப்பெயினியார் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும் என்று அப்பெயர் ஏடு எழுதியோரால் குறியெயினியார் என எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் நற்றிணை உரைகாரர் கூறுகிறார்.”

வான்மீகியார் (358)

ஒளவை: “வடமொழியில் இராமாயணம் எழுதிய வால்மீகியார் வேறு, இவர் வேறு.

வடமொழிப் புலவரான வான்மீகியது நூலில் ஈடுபாடு கொண்டிருந்ததாலோ இவர் தந்தையாருக்கு வட வான்மீகி பால் உண்டாகிய அன்பினாலோ இவருக்கு இப்பெயர் உண்டாயிற்று எனக் கொள்ளலாம்.

வான்மீகனார் எனவும் வழங்கப்படும் அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல். புறத் 20) என்பதன் கண்ணுள்ள ஒரு வழக்கால் தெரிவது வடமொழியில் உள்ள முனிவர் பெயர்களைப் பண்டைத் தமிழ் ஆசிரியர் புனைந்து விளங்கினர் என்பது செந்தமிழ் நாட்டு நல்லிசைப் புலவர்கள் பெயர் கொண்டு தெளியலாம்.

இவர் வட வான்மீகி முனிவர் வழியினர் என்று இராகவையங்கார் கருதுகிறார்.

இதனால் இப்பாடல் ஆசிரியர் காலத்தில் வடவர் கூட்டுறவு தமிழகத்தில் நன்கு பரவி இருந்தது என்பது தெளிவாக விளங்குகிறது.

விளக்கம்: இந்தப் பாட்டை பாடிய ஆசிரியர் பெயர் வான்மீகையார் எனவும் காணப்படுகிறது.

இது உண்மைப் பாடமாயின் செந்தமிழ்ச் சான்றோர் ஒருவரது தமிழ் இயற்பெயராதலால், வடவான்மீகியாரோடு தொடர்பு யாதும் இல்லை.

வான்மீகையார் என்பது, மழை மேகம்போல் மேம்பட வழங்கும் ஈகையை உடையவர் என்று பொருள்படும்.”

பெருந்தலைச் சாத்தனார் (151)

உ.வே.சா: “பெருந்தலைச் தெய்வத்தான் என்பது தெய்வத்தான் வந்த இயற்பெயர்.

குமணனது தலையை இவர் பாதுகாத்தது பற்றியோ உறுப்பு பற்றியோ இப்பெயர் முன் அடைமொழிசார்த்தப் பெற்றது போலும்.

ஆவூர் மூலங்கிழாரென்பவருடைய புதல்வர் இவர்”

ஔவை: “பெருந்தலைச்சாத்தனார் பெருந்தலை என்னும் ஊரினர்,

இப்பெயரால் தமிழகத்தில் பல ஊர்கள் உண்டு; இன்ன நாட்டினர் எனத் துணிய முடியவில்லை.

அகநானூற்றுப் புலவர் வரிசையில் இவர் பெயர் ஆவூர் மூலங் கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் என்று காணப்படுகிறது.

இவர் தந்தை ஆவூர் மூலங்கிழார் என்பதும், இவரின் பெற்றோர் இருந்தது ஆவூர் மூலம் என்பதும் இவர் வாழ்ந்தது பெருந்தலை என்பதும் துணிவாம். இவருக்குத் தலை பெருத்து இருந்த காரணத்தால் பெருந்தலைச் சாத்தனார் எனப்பட்டாரென்பாரும் உண்டு.”

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *