POST: 2022-03-05T12:08:56+05:30

நாடகக் கனவு கலைந்தது !

ஆங்கிலச் செய்தித்தாள்களை அன்றாடம் எழுத்தெண்ணிப் படிக்க வேண்டும் என்று எந்தையார் எனக்கு வற்புறுத்தினார் .ஆனால் அதை நான் பொறுமையாகக் கடைப்பிடிக்கவில்லை .

நான் அலுவலில் சேர்ந்த பிறகு என் தந்தையார் சொன்ன கருத்தை என் மாணவர்களுக்கு வற்புறுத்தினேன் .

அதே நிலையில் தான் என் மகன் அருளுக்கு இந்தப் பாடத்தை வலியுறுத்தினேன் .

இதில் ஓரளவு அருள் சிறந்த வெற்றி பெற்றவர் .

எனக்கு அது மகிழ்ச்சியைத் தருவதாகும் .

இப்போதும் கூட வாரத்திற்கு ஒருமுறை தான் படித்த ஆங்கிலச் செய்திகளின் சாரத்தை என்னிடம் சொல்வார் .

அப்படிக் கூறியதில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆங்கில டைம்சு ஆப் இந்தியா நாளிதழில் திரு கே எஸ் ஆர் மறைவு என்ற செய்தியைக் கூறியதும் என் மனம் அதிர்ந்தது .

தலைமைச் செயலகத்தில் நான் பணியாற்றிய போது வாரந்தவறாமல் அங்கேயே பணியாற்றிக் கொண்டிருந்த இராசேந்திரன் என்னை அடிக்கடி வந்து பார்த்துக் கலைகளைப் பற்றி ஏராளமான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருப்பார் .

அவர் கண்ட கனவுகள் கற்பனைகள் எனக்கு அப்போது மருட்சியைத் தந்தன .

தலைமைச் செயலக நாடகக் குழுவில் இயலிசை நாடக மன்ற செயற்பாடுகளில் அவர் பெரும் பங்கு வகித்தார் .

அந்த நேரம் கலைமாமணி பத்மஸ்ரீ நடிகர் விவேக்கும் பணியாற்றிக் கொண்டிருந்தார் .

திரு இராசேந்திரனைத் தில்லியில் பணியாற்ற வாய்ப்பு வந்த போது அதற்குப் பல தடைகள் விதித்தார்கள் .

அப்போது பணியாளர் நிருவாக சீர்திருத்தத் துறையில் அரசு செயலாளராக உயர்ந்த நிலையில் திருமதி ஜே அஞ்சனி தயானந்த் அவர்கள் பணியாற்றினார் .

அவர் வங்கத்தைச் சார்ந்தவர் .

கே எஸ் ஆருக்கு இருந்த தடைகளை நான் வற்புறுத்தி அவர் திறமையைக் கருதித் தில்லிக்கு அனுப்பிய நினைவு என் உள்ளத்தை இப்போது நெகிழ வைக்கிறது .

ஆற்றல் வாய்ந்த இளைஞர்கள் கலையார்வத்தில் மூழ்கித் திளைக்கும் போது அவர்களை நெறிப்படுத்துவது நம்முடைய கடன் என்று எப்போதும் நான் நினைப்பதுண்டு .

தில்லியில் உள்ள தேசிய நாடகச் சிந்தனைப் பள்ளியில் அவர் பணியில் சேர்ந்தார் .

ஆண்டு தவறாமல் என்னை வந்து கண்டு தான் இயக்கிய சில நாடகங்களுக்கு அழைப்பும் தந்தார் .

நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தான் தஞ்சைக்கு செல்கிறேன் எனக்கு வாய்ப்புத்தரவேண்டும் என்று பெரிதும் வேண்டினார் .

பல்கலைக்கழக விதிகள் அவர் விருப்பத்திற்கு இடம் தரவில்லை .

பிறகு தில்லியில் பல்வேறு நாடகங்களை நடத்திக்காட்டி கே எஸ் ஆர் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கினார் .

என் மகன் அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக இருந்தபோது நான் மறவாமல் குறிப்பிட்டவர்கள் இருவர் .
முனிர்கா இராமகிருஷ்ணன் , நாடகப்பள்ளியில் கே எஸ் ஆர் இருவரும் மறைந்துவிட்டனர் .

கற்பனை வானில் எப்போதும் திரிந்த அந்தக் கலைமணியின் பிரிவு கலக்கத்தைத் தருகிறது .
அவர் மறைவு தாங்க முடியாதது .

இதை எழுதும்போது என் நண்பரும் அகர முதலித் திட்டத்தின் துணை இயக்குநராகவும் மிளிர்ந்த திரு கண்ணன் எனக்கு அனுப்பிய செய்தியையும் குறிப்பிட்டாக வேண்டும் .

இவரது காதல் திருமணத்தை அப்பா தான் நடத்தி வைத்தார்.

எல்டாம்சு சாலையிலுள்ள முருகன் கோயிலில்
நடந்தது.

முடியும் தறுவாயில் பெண் வீட்டாரின் பெரும்படை தாக்க வந்தது.

மணமக்களுடன் நானும் தனிச்செயலர் சௌந்திரராசனும் அப்பாவை மீட்டெடுத்தோம்.

மகிழுந்து (TMV 1234 Ambassodor )மின்னல் வேகத்தில் பறந்தது.ஓட்டுநர் வெங்கடேசனின் திறனை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது

அவர் மறைந்துவிட்டார்
என்பதை நம்ப மனம் மறுக்கிறது.

அப்பா பாராட்டியவர்களுள் அமெரிக்காவில் ஐ நா வில் பணிபுரியும் இரா.கண்ணனும் இராசேந்திரனும் குறிப்பிடத் தக்கவர்கள்.

பலரையும் பாராட்டும் உயர்ந்த பண்பு அப்பாவுக்குண்டு என்றாலும் இந்த இருவரையும் உச்சி மோந்ததைக் கண்ணாரக் கண்டவன் நான் என்பது அகரமுதலியின் கண்ணன் அவர்களின் குறிப்பாகும்.

ஈர விழிகளோடு

ஒளவை நடராசன்
5 3 2022

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *