செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – பகுதி – 34
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
உலகம் போற்றிடும் திலகம் – நெல்சன் மண்டேலா !
தென்னாப்பிரிக்கத் திருநாட்டின் ஒப்பற்ற திலகமாக ஓங்கி உயர்ந்து மறைந்த நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவைப் போற்றாத நாடுகளில்லை .
புகழாத ஏடுகளில்லை .
வாழ்க்கையில் இன்ப துன்பம் இரண்டையும் ஒன்றாக எண்ணி மாபெரும் விடுதலைத் தழும்புகளை ஏற்ற மண்டேலா அவர்களை நம் நாட்டு மக்கள் காந்தியடிகளை மகாத்மா என்று மதித்தழைப்பது போல மகிபா என்ற செல்லப்பெயரால் கருப்பர் இனம் மண்டேலாவைக் காணும் போதெல்லாம் மகிபா என்ற சொல்லை சொல்லிச்சொல்லி கண்ணீர் மல்க உருகினார்கள் .
தென்னாப்பிரிக்க தலைமையினைப் பெற்ற பிறகும் எல்லா நிலைகளிலும் வெள்ளையர் இனத்தையும் வேறுபாடு காட்டாமல் அரவணைத்த மகத்தான உள்ளம் மனித இனத்தில் காண்பது அரிது .
ஆயிரம் அரசியல் பணிகளைத் தோளில் சுமந்து கொண்டு ஓய்வறியாமல் உழைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் எத்தனையோ செய்திகளைப்பற்றி எழுதியிருந்தாலும் நெல்சன் மண்டேலாவைப்பற்றி நெஞ்சுருக எழுதிய கட்டுரை எவ்வளவு தகவல்களைத் திரட்டி வழங்குகிறது என்பதைக் காணும் வகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இந்தக் கட்டுரை இனி தொடர்கிறது .
1990 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11 ஆம் நாள் காலை திருச்சியில் திராவிட முன்னேற்றக் கழக மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது; மகிழ்ச்சி பொங்கிட துள்ளிக் குதித்துக் கொண்டு மேடையிலிருந்த ஒலிபெருக்கியின் முன்னால் நான் வந்து நின்றேன்.
அலைகடலெனக் குழுமியிருந்த தமிழ் மக்களைப் பார்த்துச் சொன்னேன்.
” தமிழ்ப் பெருங்குடி மக்களே !
கழக உடன்பிறப்புக்களே ! எல்லையற்ற மகிழ்ச்சியை ஏந்தி வந்துள்ள செய்தி;
27 ஆண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்கா நாட்டின் கறுப்பர் இனத்தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டு விட்டார் –
இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட மாநாட்டுப் பந்தலில் குழுமியிருப்போர் அனைவரும் எழுந்து நின்று தொடர்ந்து கையொலி செய்யுங்கள் ”
இந்தக் கருத்தமைந்த என் வேண்டுகோள் கேட்டு;
மண்டேலா விடுதலையால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோர் மாநாட்டில் ” நான் போதும் போதும் ”
என்று கையமர்த்தும் வரையில், கடலில்லா திருச்சியில் கடலலைகளின் முழுக்கத்தைச் செய்தனர்.
உலகமே அந்த ஒரு மனிதனின் சிறைவாசத்தைத்தான் அப்போது பேசிக் கொண்டும், கண்கலங்கிக் கொண்டுமிருந்தது.
தென்னாப்பிரிக்கா நமது அண்ணல் காந்தியடிகள் இந்திய மக்கள் உரிமைக்காக குரல் எழுப்பி அறப்போர் முறையை அறிமுகப்படுத்திய மண் !
அண்ணல் நடத்திய அந்தப் போராட்டத்தில் இந்திய நாட்டின் தமிழ் நிலத்துக்குச் சொந்தக்காரர்களான நாகப்பன், நாராயணசாமி என்று வாலிபர்களும், தில்லையாடி வள்ளியம்மாள் என்ற பெண்மணியும்; சிறை புகுந்து, உடல் நலிந்து, உயிர் விட்டார்கள் என்பது வரலாறு –
அந்த வரலாறு என்றும் நினைக்கப்படும் வண்ணம் கழக ஆட்சியின் கைவண்ணத்தால் உருவான அரிய சின்னங்கள் இன்றும் அழியாச் சின்னங்களாக விளங்குகின்றன.
தென்னாப்பிரிக்காவிலும்கூட நமது இந்தியப் பிரதமராக நமது அணியின் நாயகராக விளங்கிய திரு. குஜ்ரால் அவர்கள் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் அந்தத் தியாகிகளின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்பது உணர்ச்சிமிக்க ஓர் நிகழ்ச்சியாகும்.
அந்தத் தென்னாப்பிரிக்காவில் கறுப்பர் இன விடுதலைக்காக வெள்ளையர் ஆதிபத்தியத்தை எதிர்த்து 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா; பின்னர் விடுதலைக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றது பற்றியும் – அவரது துணைவியர்கள் அவரது தியாகப் போருக்குத் துணைநின்றது பற்றியும் – அவரின் வாழ்க்கை வரலாறு கூறும் ஏற்றத் தாழ்வுகள் பற்றியும் – எதுவும் விளக்க வேண்டிய அவசியமின்றி; அந்த மாவீரனின் வைர நெஞ்சம் – அவன் வளர்ந்த சூழ்நிலை – ஏற்றுக் கொண்ட அடக்குமுறை – கட்டிக்காத்த தன்மான உணர்வு – வழுக்கல் இல்லாத பொது வாழ்வு – இவையனைத்தும் அவனது இளமைக் காலத்திலேயே வாய்க்கப் பெற்றவைகளாக இருந்ததை எண்ணி, வியப்பு அடைகிறோம் –
அவ்வழி வளரும் இளைஞர்கள் எவராயினும் வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளோம்.
1918 ஜுலை 18 மண்டேலா பிறந்த நாளாகும் கறுப்பின மக்களிடையே நெல்சன் மண்டேலா குடும்பத்தினர்
கோசா இன வகையைச் சேர்ந்தவர்கள்.
அக்குலத்தின் தலைவராக மண்டேலாவின் தந்தை இருந்தார்.
அவர் பெயர் லென் கான்யிஸ் வா காட்லா என்பதாகும்.
அவருக்கு நான்கு மனைவிகள் – பனிரெண்டு குழந்தைகள் – மூன்றாம் மனைவியின் மகன் தான் நெல்சன் மண்டேலா .
குடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர் குடும்பத்துக்கு மொத்தம் மூன்று சின்னஞ்சிறு குடில்கள் – ஒன்று சமைத்திட ஒன்று பொருள்களை சேமித்திட -ஒன்று உறங்கிடப் பாய்களில்தான் படுக்கை அவர்கள் அனைவருக்கும் !
ஆரம்ப வயதில் ஆடு, மாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு – அவர் அன்னை எழுதப் படிக்க அறியாதவர் – ஆயினும் மகனைப் பள்ளிக்கூடத்துக்கும் அனுப்பி வைத்தார்.
1928 ஆம் ஆண்டுக்குள் மண்டேலாவின் தந்தை இறந்து விடவே, அந்தத் தந்தையின் மைத்துனரான ஜோன்கின்டாபா என்பவர், மண்டேலாவின் படிப்பைக் கவனித்துக் கொண்டார்.
கியுனு எனப்படும் மண்டேலா பிறந்த ஊரில் ஓய்வு நேரங்களில் பெரியோர்கள் கூறும் தமது இனத்தவர் பற்றிய பழைய கதைகளையும், வெள்ளையர்களால் தம்மின வரலாறுகள் மறைக்கப்பட்டதையும், வெள்ளையர் நுழைவுக்கு முன்பு அங்கிருந்த கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறைகளையும் பெரியோர்கள் கூறிடக் கேட்டு புத்துணர்ச்சி பெறும் மண்டேலா, படிப்பையும் விடவில்லை, ஆடு மாடு மேய்க்கும் வேலையையும் தொடர்ந்தார்.
அதே சமயம் தமது இனத்தாரின் துயர்துடைத்து, உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமென்று அந்த இளம் வயதிலேயே அழுத்தமான உறுதி பூண்டார் மண்டேலா.
1938ஆம் ஆண்டு உறவினர் ஜோன் கின்டாபா முயற்சியினால் மண்டேலா; முதலில் ” கெல்ட் டவுன் ” கல்லூரியிலும் – பிறகு “ போர்ட்ஹேர் ” கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார்.
அப்போதுதான் அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத் தொடங்கியது.
அங்கே வெளியிடப்பட்ட இன வேற்றுமைக் கொடுமையை எதிர்த்து இளைஞர் மண்டேலா தலைமையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படவே; கல்லூரி நிர்வாகம் மண்டேலாவை வெளியேற்றியது.
ஆம்- மண்டேலாவுக்கு அவர் நடத்திய உரிமைப்போரில் கிடைத்த முதல் தண்டனை அது !
மன்னிப்பு கேட்டுக் கொண்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்று கூறப்பட்டது.
அதை மானப் பிரச்சினை என்று கூறி மறுத்து விட்டார் மண்டேலா.
பின்னர் தனது மாமன் மகன் ஜஸ்டிஸ் என்பவருடன் சேர்ந்து ஜோகன்ஸ்பெர்க் நகருக்குச் சென்று தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்தார்.
அங்கிருந்தும் அவரது உறவினர் தூண்டுதலால் வெளியேற்றப்பட்டதால்; மண்டேலா சட்டம் படித்திட முனைந்தார்.
* லாசாசிடிங்ஸ்கி ‘ என்ற வெள்ளைக்கார வழக்கறிஞரிடம் சட்டக் கல்வியில் பயிற்சி பெற்றுத் திறமையாளரானார்.
மண்டேலா வாழ்க்கை கட்டுப்பாடுமிக்கது என்றும், அதிகாலையில் எழும் வழக்கமுடையவர் என்றும் – நாளும் தவறாமல் நடைப் பயிற்சி மேற்கொண்டவர் என்றும் – எளிமையான உணவே அருந்தி, எப்போதும் சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர் என்றும் – பெண்களுக்குத் துணையாக அடுக்களை வேலைகளில் கூட ஈடுபடுவார் என்றும் – அவரது சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
கறுப்பர் இன மக்களுக்கும் வெள்ளையருக்குமிடையே கடுமையான புகைச்சலும் – மோதுதல்களும் இருந்தபோதிலும்; மண்டேலா, இருதரப்பு மாணவர்களிடமும் பரந்த மனத்துடனும் பண்பாட்டுடனும் நேசமாகப் பழகி, அமைதியாகக் காந்திய வழியிலே அறப்போர் நடத்தி இன வேற்றுமைக் கொடுமையை அகற்ற நினைத்தார் !
1948 ஆம் ஆண்டு மண்டேலா இளைஞர் அணியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால கட்டத்தில், கறுப்பின மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் அவர் கண்களை உறுத்தின.
” காபிர் ” என்ற இழிந்த வார்த்தையின் கறுப்பின மக்கள் அழைக்கப்பட்டதையும் – தெருக்களில் நடமாட முடியாமல் தடுக்கப்பட்டதையும் – மண்டேலாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அது மட்டுமா ?
கறுப்பின மக்களின் நிலங்களை வெள்ளையர் பறித்துக் கொண்டனர் – வெள்ளையர் கறுப்பரிடையே காதல் மற்றும் கலப்பு மணங்கள் – சட்ட விரோதமாயின – இனப்பகை; பெரும் பகை – கறுப்பினத்தாருக்கு வேலைகள் மறுக்கப்பட்டன – கேளிக்கை இடங்களில் அவர்களுக்கு அனுமதியில்லை – மீறினால் கடும் தண்டனை.
இந்தக் கொடுமைகளை எதிர்த்து; 1948 இல் இளைஞர் அணியின் செயலாளரான மண்டேலா;
1949 இல் கூட்டிய மாநில மாநாடு ஒன்றில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த தீர்மானம் நிறைவேற்றினார்.
அதைத் தொடர்ந்து அவர்
1951 இல் இளைஞர் அணியின் தலைவராகவே தேர்வு செய்யப்பட்டார்.
வெள்ளையர் வெறித்தனத்தை எதிர்த்து அமைதியாக அரும்பிய மண்டேலாவின் அறப்போர்; புரட்சி மலராகவும் பூத்திடத் தவறவில்லை .
கறுப்பு இன மக்களின் மாணவர் போராட்டமும் தொடங்கியது.
புரட்சிகள் – கிளர்ச்சிகளின் விளைவாக – சிறைப்பட்ட மண்டேலாவை நாட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால்; விடுதலை செய்வதாகத் தென்னாப்பிரிக்க வெள்ளையர் அரசு கூறியது.
அதற்கு மண்டேலா மறுப்புரைத்து, ”
எங்களுக்கு சுதந்திர உரிமை இல்லையென்றால், நான் அடைபட்டுள்ள சிறைச்சாலையே எனக்குத் திருப்தி அளிக்கக்கூடியது ” என்று கூறிவிட்டார்.
அவர் நடத்திய போராட்டங்களின் தொடர்ச்சியாக நீண்ட காலச் சிறை வாழ்க்கையைத்தான் அவர் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது .
சிறையில் ஆரம்ப நிலையில் கேவலமான உணவு, பசியை அடக்கக் கூடியதல்ல – கல் தரையின் மீது பக்குவதற்கு ஒரு பாய் ,நாளேடுகள் வைத்திருந்தால் சிறை சட்டப்படி தண்டனை நாள் முழுவதும் வேலை – ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும் உடைகள் அவிழ்க்கப்பட்டுச் சோதனை .
இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்த மண்டேலா இளமை முதல் அவர் கொண்ட வைராக்கியத்தின் எதிரொலியாக சிறைக் கொடுமைகளைப் பற்றி அவர் சொன்ன வாசகம் பின் வருமாறு :
“ சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு
ஆளாக்கவில்லை.
சிறைக்கு வெளியே என் மக்கள்
அனுபவிக்கும் துன்ப துயரங்களை எண்ணித்தான்
நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள
முடியாமல் இருக்கிறேன் ‘
என்பதாகும்.
மண்டேலாவின் இந்தத் தியாக வாழ்க்கை தென்னாப்பிரிக்க நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல; இந்தப் பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டு புத்துலகம் காணத் துடிக்கின்ற ஏறுநடை இளைஞர்களுக்கெல்லாம் இதய கீதமாகும்.
12-9-2005
தொடர்புக்கு :
thamizhavvai@gmail.com

Add a Comment