அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 85
இளமை வழிபாட்டு இயல்புகள்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
இப்புண்ணிய பூமியில் வந்து பிறப்பதற்கு தேவர்களும் கூட மிகவும் விரும்புகின்றனராம். நாம் மண்ணுலகில் – பாரத தேசத்தில் தெய்வத் தமிழ் நாட்டில் சென்று பிறக்கும் பேறு பெறவில்லையே மண்ணுலகில் – பாரத தேசத்தில் தெய்வத் தமிழ் நாட்டில் சென்று பிறக்கும் பேறு பெறவில்லையே! இங்கே விண்ணுலகில் இருந்து கொண்டு நாம் நம் வாழ்நாளை வீணாக்கிக்கொண்டிருக்கின்றோமே! சிவபெருமானால் ஆட்கொள்ளப்படும் சிறப்பு, நிலவுலகில் சென்று பிறப்பவர்களுக்கன்றோ? உரியதாக இருக்கின்றது என்று எண்ணித் திருமால் முதலிய தேவர்களெல்லாரும் ஏக்கமுற்று நிற்கின்றனராம்.
அந்த ஏக்கம் போக்கும் வகையிலும், வள்ளலார் வாக்கிற்கிணங்கவும் தருமமிகு சென்னையில் 67-ஆம் ஆண்டு நான் பிறந்து பத்துத் திங்களில் என் பெற்றோர்களுடன் என் மூத்த அண்ணன் கண்ணனும் தாய்வழிப் பாட்டனார் மாசிலாமணிப் பிள்ளையும் என்னை கே.வி.சுப்பிரமணியம் மாமா – மணிமேகலை அத்தை இல்லத்தில் அவர்கள் கண்காணிப்பில் இருக்க வைத்து, தவமிருந்து பெற்ற என் அண்ணன் கண்ணனை அழைத்துக் கொண்டு திருமுடிநீக்கு வழிபாட்டிற்காக இலங்கையிலுள்ள கதிர்காம முருகன் திருக்கோயிலுக்குச் சென்றனர். என்னிடம் இக்குறிப்பினை மாமாவும் அத்தையும் மகிழ்ச்சி பொங்க ‘என் வீட்டில் வளர்ந்த பிள்ளை நீ. என்னுடைய நான்கு பிள்ளைகளுடன் ஐந்தாம் அமுதாய் வளர்த்தேன்’ என்று சொன்ன நினைவு பலவுண்டு.
எனக்கு 4-5 வயதாக இருக்கும் பொழுது, எங்களை வளர்த்த அண்ணன் பெயர் ‘நாராயணன்’ ஆகும். அவரை நாங்கள் பெயரிட்டுச் சொல்லாமல், ‘சின்னண்ணன்’ என்றுதான் விளிப்போம். குடும்பமாக அனைவரும் கேரளத்திலுள்ள குருவாயூர் கோயிலுக்குச் சென்றபோது அங்கு அனைவரும் ‘நாராயணா, நாராயணா’ என்று உரக்கச் சொல்லும் வழக்கமுண்டு. ஏதோ என் காதில் அண்ணன் பெயரை எல்லோரும் அழைக்கின்றார்களே என்று நினைத்து, ‘சின்னண்ணா, சின்னண்ணா’ என்று நான் சொன்னதாக அம்மா அடிக்கடி சொல்லிக் காட்டுவார்கள்.
எங்கள் குடும்பம் வழிவழி சைவக் குடும்பமாகவே மிளிர்ந்து திருக்கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது இன்றியமையாத ஒழுக்கமாகும். என்னுடைய பாட்டனார் உரைவேந்தர் நாள்தோறும் செய்யும் சிவ வழிபாடு தனித்துவம் வாய்ந்தது. அவ்வழிபாட்டில் அவர் உருக்கமாகப் பாடும் வரிகள்:-
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
என்று காலை வழிபாடு நடைபெறும்போதே தன் அன்றாடப் பணிகளையும் நினைவிற் கொண்டு இடையிடையே தனக்குத் தேவையான துண்டு, பை, வேட்டி, மூக்குப்பொடிப் பேழை, காலைச் சிற்றுண்டி முதலியவை எடுத்து வைக்கப்பட்டனவா என்பதைக் கேட்டு உறுதி செய்து கொண்டும், தூங்கிக் கொண்டிருக்கும் பெயரன்களை விளித்து, ‘இன்னுமா உறக்கம்?’ எழுப்பிக் கொண்டும், தன் வழிபாட்டையும் தொடர்வதுதான் தாத்தாவின் சிறப்பாகும்.
அதற்கு இணையாக என்னுடைய பாட்டியார் லோகாம்பாள் உடனிருந்து இவ்வழிபாட்டிற்குத் துணை செய்யும் பாங்கு சீர்த்தி வாய்ந்ததாகும். இவர்கள் நடைமுறைப்படுத்திய இப்பழக்கம் அவர்களுடைய அனைத்துப் பிள்ளைகளுக்கும் (பாலகுஜம், ஔவை நடராசன், மணிமேகலை, திலகவதி, தமிழரசி, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன், மெய்கண்டான், நெடுமாறன்) வழிவழியாக வழக்கமாகி விட்டது.
நன்மனைச் சுடர்களான நரசிம்மன் மாமாவும் திலகவதி அத்தையும் விருகம்பாக்கத்தில் திருக்கோயில் வளர்ச்சிக்கெனவே விழுதாகியிருந்தனர். கூடுதல் சிறப்பாக அவர்களின் மகள் உமாவும், மருகன் மணியாரும் நெய்வேலியில் தங்கள் இல்லத்திலேயே வார வழிபாட்டுக் குழுக்களை சிறப்புடன் நடத்தி வருகிறார்கள்.
கலில் கிப்ரானின் பொன் வரிகளான ‘பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சிறகுகளைத்தான் வழங்குவார்கள். பறப்பதும், உங்கள் வாழ்வினுடைய எண்ணங்களை வார்ப்பதும் அவரவர் விருப்பம்’ என்ற கருதுகோளுக்கு இணங்க எங்கள் பெற்றோர் எவ்வித வழிபாட்டு வற்புறுத்தலையோ, கருத்துத் திணிப்பையோ செலுத்தவில்லை. தானாக விரும்பிவந்து கேட்டால் அப்பா தான் நாள்தோறும் உரக்கச் சொல்கின்ற ‘சிவ புராண’ வரிகளின் கருத்துச் சிறப்பைச் செறிவாகச் சொல்லிக் காட்டுவார்.
நான் பல நேரமும் அவர் பாடும் வரியான ‘மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே’ என்ற பொழுதெல்லாம் நான் ஏதோ அப்பா தான் செல்லுகின்ற மாலைக் கூட்டம் (மீட்டிங்) பற்றிப் பாடுகிறாரே என்றுதான் எண்ணுவேன்.
அதுபோல்,
கருத்தே புகுந்து கதிகாட்டும் கண்ணே வருக,
மெய்ஞானக் கரும்பே வருக,
கருணைபொழி காரே வருக,
மறையின் சிரமெய்ப் பொருளான வள்ளல் வருக வருகவே
என்று உருக்கமாக என் தாயார் பாடி, கருமாரி விளக்கேற்றி வழிபாடு முடிந்ததும், காநீர் அருந்துவது வழக்கம். ஆண்டுதோறும் கார்த்திகை தீப நன்னாளில் தவறாமல் விளக்கேற்றி, இறைவனுக்குத் திருவமுது படைத்து வழிபடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். மேலும், கலைமகள் வழிபாட்டின்போது வைத்து வழிபடும் புத்தகங்களை மறுநாள் படிக்கக்கூடாது என்ற வழக்கத்திற்காகவே, என் அனைத்துப் புத்தகங்களையும் கொண்டு வந்து வழிபாட்டிற்கு வைப்பது இன்றும் என் நினைவின்று நீங்காதிருக்கிறது.
பெரும்பேராசிரியர் மூதறிஞர் வ.சுப. எங்கள் இல்லத்திற்கு வருகைபுரிந்த பொழுது பள்ளி மாணவனான என்னிடம், தேவாரத்திலுள்ள ‘மாசில் வீணையையும்’, திருவாசகத்திலுள்ள ‘பூசுவதும் வெண்ணீறு’ என்ற பாடலைப் பாடு என்று சொல்லிய பொழுது திருதிருவென்று விழித்திருந்த பொழுது அப்பா, உடனே சொன்னார், ‘அவனுக்குத் தெரிந்ததெல்லாம் காவல் அதிகாரி தேவாரமும், என்னுடைய நண்பர் திருவாசமும்தானே. அவனைப்போய் இந்தப் பாடலைச் சொல் என்றால் என்ன செய்வான்’ என்று சிரித்துக் கொண்டே, போகிற போக்கில் என் அறியாமையை நுட்பமாகச் சுட்டிக் காட்டுவார். அப்பா யாரையும் கடிந்து பேச மாட்டார். ஆனால் நாம் தவறு செய்யும் நேரங்களில் அவர் உதிர்க்கிற முள் வரிகள் தைத்தவரை வாழ்நாள் முழுதும் உறுத்திக் கொண்டேயிருக்கும்.
பள்ளி மாணவனாக நான் இருந்தபோது, ஆண்டு தவறாமல் அப்பாவுடன் வடலூருக்குச் செல்வதும், வாய்ப்பு நேரும்போதெல்லாம், அப்பா பேசுகின்ற சமயப் பொழிவுகளைக் கேட்பதற்குத் திருக்கோயில்களுக்குச் செல்வதும், குடும்பமாக வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை திருவேற்காடு, மாங்காடு கோயில்களுக்குச் செல்லும் பழக்கமுண்டு. அப்பொழுது சீருந்தில் எந்தையார் கற்றுத் தந்த மந்திரம், ‘ஓம், ஸ்கிரீம், கிரீம், ஸ்கிரீம், ஓம், தும், துர்காய நம’. கோயில்களைச் சுற்றிப்பார்க்கும் பொழுது, அதன் தல வரலாறையும் இறைவனின் சிறப்பு இயல்புகளையும் விளக்கமாக அப்பா சொல்லிக் காட்டும் பாங்கினையே ஒரு கட்டுரையாக வடிக்கலாம். அண்ணாநகருக்குக் குடிபெயர்ந்த பொழுது (08.12.1973) ஓரிரு ஆண்டுகளிலேயே எங்கள் இல்லத்திற்கு அருகிலேயே அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில் குடமுழுக்குக்கு (25.04.1975) திருக்கோயிலின் மூத்த குருக்கள் முத்து சுப்பிரமண்யம் எங்கள் இல்லத்திற்கு வந்து எங்களையெல்லாம் அழைத்துச் சென்று அவ்விழாவின் சிறப்பினைக் கண்டு களிக்க ஏது செய்தார். அவருடைய மூன்று பிள்ளைகளும் கனகசபை குருக்கள், ஹரிஹர குருக்கள், இராமநாதன் அவர் வழியிலேயே திருக்கோயிலில் சீரும் சிறப்புமாக தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
சென்னை கிறித்தவ மேனிலைப்பள்ளியில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு பள்ளியிலுள்ள தேவாலயத்தில் விவிலிய வழிபாட்டுத் தொடரான ‘Our Father, who art in heaven, hallowed be thy name’ என்ற வரிகளைப் பாடுவோம். ஆயினும், நாள்தோறும் செல்லும் இப்பழக்கத்தையும் வழக்கமாக மேற்கொள்ளாமல், பள்ளிக்குத் தாமதமாகச் செல்லும் போக்கினையும் வளர்த்துக் கொண்டேன். அதே பள்ளியில், 6, 7, 8-ஆம் வகுப்பில் படித்து மனப்பாடம் செய்த திருவருட்பா வரிகளை என்றும் சொல்லுகின்ற வழக்கத்தை வளர்த்துக் கொண்டு, சில வேளைகளில் தேசிய மாணவர் படை அணிவகுப்பின் போதும், சயன கோலத்தில் வானம் பார்த்து நீச்சலடிக்கும் போதும் அருட்பா வரிகளான,
தேனாய்த் தீம்பழமாய் சுவைசேர் கரும்பாய்
பால் அமுதம் தானாய்த் தந்தருளே…
என்றும்,
பொய்யனேன் பிழைகளெல்லாம் பொருத்திடல் வேண்டும் போற்றி,
கையனேன் தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி
என்றும், அவ்வண்ணமே,
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்
என்ற அருட்பா வரிகளையும் முழுமையாகப் பாடுவது என் வழக்கமாகும்.
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (9)
மாணவர்கள் ஒவ்வொரு நூலையும் முழுப்பகுதியையும் ஆசிரியரிடம் பாடம் கேட்டே அறிவதினும், ஆசிரியர் வழிகாட்ட, அவ்வழி நின்று தம் முயற்சியால் தமக்குத்தாமே பல்வேறு நூல்களையும் பகுதிகளையும் ஊன்றிப் பயின்று தேர்ந்த தெளியும் திறம்பெற அவர்களுக்கு பயிற்சியளிப்பதையே சிறப்பும் பணியாகக் கருதினார். ஒரு நூலில் தேர்வுக்குரிய பகுதியை மட்டும் படித்தறியச் செய்வதோடு அமையாது மாணவர்களை அந்நூல் முழுவதையும் அதனோடு தொடர்புடைய பிற நூல்களையும் படித்து அறியுமாறு வற்புறுத்துவது அவர் வழக்கம்!
ஒளவையவர்கள் தம்மிடம் பயிலவரும் புதிய இளமாணவர்களுக்கு முது மாணாக்கர்களைக் கொண்டு பாடம் சொல்லவைத்து அவர்களுக்கு ஆசிரியராகும் பயிற்சியையும் அளிப்பார். அவர்கள் பாடம் சொல்லும் போது உடனிருந்து கவனித்துத் தவறும் இடங்களில் திருத்துவார். புதிதாக வெளிவரும் இலக்கிய இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் நூல்களைப் படித்து மாறுபட்ட கருத்துக்காணும் இடங்களைக் குறித்து வரச்செய்து அவை பற்றி விரிவாக விவாதித்து அவற்றிற்கு மறுப்புரை எழுதிவரப் பணிப்பார். அதனைத் திருத்திப் படியெடுப்பித்து இலக்கிய இதழில் வெளியிடச் செய்வார். இம்முறையில் நல்ல திறனாய்வாளரை உருவாக்கினார்.
அவர் இன்ன இடத்தில் இன்ன நேரத்தில் தான் பாடம் சொல்வது என்னும் வரையறை வைத்துக்கொண்டதில்லை. மாலையில் உலாவச் செல்லும்பொழுதும், சொற்பொழிவாற்ற அயலூர்களுக்கு வண்டிப் பயணம் செய்யும்பொழுதும் உடன் தொடரும் மாணவர்களுக்கு உரிய இலக்கிய இலக்கணப் பாடப் பகுதிகளில் உள்ள அரிய கருத்துக்களை அளவளாவும் முறையிலேயே எளிதில் உணருமாறு எடுத்துக்காட்டிச் செல்வது அவர் வழக்கம்.
கல்லூரி மணவருக்குக் கற்பித்தல்
ஒளவை தமிழக அமைப்பின் ஆசிரியராக இருந்தபோது தொடங்கிய இப்பாடம் சொல்லும் முறை, கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியபோதும் தொடர்ந்தது.
“நாங்கள் (பழ.நெடுமாறன், குமரிஅனந்தன், கவிஞர்கள் அப்துல்ரகுமான், காமராசன், மீரா போன்று) 18 பேர் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் சிறப்புத்தமிழ் மாணவர்கள்; ஒளவையவர்கள் எங்கள் பேராசிரியர்; திருக்குறள் பாடம் வகுப்பறையில் நடத்துவார். எடுத்தல், படுத்தல் ஓசைநயந்தோன்ற இசையுடன் தெளிவாகப் படிப்பார். படிக்கும் பாங்கிலேயே பாடல் நன்கு விளங்கும். அவர் வீடு கல்லூரியிலிருந்து நடக்கும் தூரத்தில்தான் இருந்தது. மாலையில் அவர் வீட்டிற்கு நடந்துபோகும் போது நாங்களும் பின்தொடர்வோம். எங்களில் ஒருவர் இலக்கணப் பாடத்தில் ஐயத்தைக் கேட்போம்; பாடம் சொல்லிக்கொண்டே வருவார். அந்நாளில் கலையன்னை இராதா தியாகராசன் அவர்களுக்கும் அவர்தான் ஆசிரியர். நாங்கள் வீட்டை அடைவதற்கும் அவரை அழைத்துப்போக மகிழ்வுந்து வருவதற்கும் நேரம் சரியாக இருக்கும். அன்றைக்குப் பாடம் அத்துடன் சரி; அடுத்துவரும் நாட்களிலும் இதுபோன்றே இலக்கணப்பாடம் தொடரும்.” என்கிறார் புதுவை பிரெஞ்சு ஆய்வு நிறுவனப் பேராசிரியர் விசயவேணுகோபால் அவர்கள்.
முதுகலை மாணவர்கட்குப் பாடம் நடத்தும் போது மாலையில் கல்லூரி நேரம் முடிந்த பின்னரும் – காவலாளி, ‘ஐயா! இரவு 7 மணி ஆகிறது. கதவை அடைக்க வேண்டும்’ என்று சொன்ன பின்பும் கூட பாடம் தொடரும்.
ஆசான் ஒளவை மாணவர் திறனறிந்து அதற்கேற்பக் கற்பிக்கும் முறையைக் கைக்கொண்டனர். தமிழறியாத தமக்கு ஆசிரியர் ஒளவையவர்கள் தமிழ் கற்பித்த முறை பற்றி இராதா அம்மையாரே இயம்புகிறார்;
“முதற்கண் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளச் செய்து, பின் திருக்குறள் பரிமேலழகர் உரை நூலைக் கையில் கொடுத்துப் படித்துப் பொருள் உணருமாறும், அதன்வழியே இலக்கியங்களைக் கற்குமாறும் பயிற்சியளித்தார்.”
அம்மையார் அவர்கள் பின்னாளில் நற்றமிழ்ப் புலமையும், சிவஞான செம்பொருளும் உணர்ந்த நாவலராக வலம்வந்து தம் ஆசிரியர்க்குப் பெருமை சேர்த்தார்கள். அம்மையார் பேசும் பாங்கு ஒளவையவர்களின் அடியொற்றியதாகவே அமைந்திருக்கும். சைவசித்தாந்த மாநாட்டில் அறிஞர்கள் அவாவும் வண்ணம் அவர் ஆற்றிய தலைமையுரையைக் கேட்டு பேராசிரியர் கு. சிவமணி வியந்திருக்கிறார்.
அறிஞர்கள் ஒளவையின் மாணவர்களையும் மதித்தல்
பிள்ளையவர்கள் பெரும்புலவர், பலராலும் நன்கு மதிக்கப் பெற்றவர். டாக்டர் உ.வே. சாமிநாதையர், மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசன்செட்டியார், மகாவித்வான் இராகவையங்கார், திரு.வி.க. சச்சிதானந்தம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, க. நமச்சிவாய முதலியார் போன்ற புலவர் பெருமக்கள் யான் பிள்ளையவர்களின் மாணவன் என்பதால் என்னிடம் அன்பு கொண்டு மதிப்பும் மரியாதையும் காட்டிப் பழகியது ஒன்றே, அவர்கள் பிள்ளைகளிடம் கொண்டிருந்த நன்மதிப்புக்கு ஏற்ற சான்றாகும்.
அவர் சிலர் போலத் தாம் உலகியல் வாழ்வில் உயர்வதற்கு வேண்டும் வசதிகளைப்பெற விரும்பி இருப்பாராயின், ஆங்கில மொழியில் அவருக்கு இருந்த தேர்ச்சிக்கும், தமிழ் மொழியில் அவருடைய ஆழ்ந்தகன்ற புலமைக்கும், அரிய ஆராய்ச்சி அறிவுக்கும், எம்.ஏ; பிஎச்டி போன்ற பயன்பெறும் பட்டங்கள் பலவற்றை எப்பொழுதோ எளிதில் பெற்றிருக்கலாம். தம்மைப் பற்றிய நினைவோ தம் முன்னேற்றம் பற்றிய சிந்தனையோ சிறிதுமின்றி, தாம் குறிக்கொண்ட தமிழ்த் தொண்டுக்குத் தம்மைப் பயன்படுத்திக் கொள்வதிலேயே கருத்தாயிருந்தார்.
தமிழ்ப்போராளி:
தமிழைக் கற்பிப்பதோடு மட்டுமன்றி அயல்மொழித் தாக்குதலிலிருந்து தமிழைக் காக்கும் பணியிலும் ஒளவை முனைந்து நின்றார். 1938-இல் கட்டாய இந்தியைத் தமிழகத்தில் திணிக்க அன்றைய ஆட்சியாளர்கள் முயன்றபோது அதனை எதிர்த்துக் கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதமும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அணிதிரட்டினர். அக்குழுவினர் வடஆர்க்காடு மாவட்டத்திற்கு வந்தபோது வை அவர்களை வரவேற்றதுடன் ஔவை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
“இந்தி எதிர்ப்பு சமயத்தில், நான் வட ஆர்க்காடு பணியாற்றிக் மாவட்டத்தில் கொண்டிருந்தேன். அம்மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தமிழவேளும், முத்தமிழ்க்காவலரும் வந்திருந்தார்கள். அப்பொழுது ஊரெங்கும் விழாக்கோலம் பூணுமாறு அழகுபடுத்தியிருந்தனர். வீதியில் உலா வருகின்றபொழுது உலகநாத முதலியாரும் அவரது மனைவியும் தமிழவேளின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். ‘என்னை ஏன் வணங்குகிறீர்கள்?’ என்று தமிழவேள் கேட்டதற்கு, “உங்களுக்காக வணங்கவில்லை; உங்கள் தமிழ்த்தொண்டுக்காக வணங்குகின்றோம்” என்றனர். பாராட்டுதல் கண்டபோது அஞ்சி நடுங்குகிற ஒரே தலைவர் தமிழவேள் தான். காசுகொடுத்து ஆட்களை வரவழைத்து வாழ்த்துப் பெறுகின்ற தலைவர்களையும் கண்டிருக்கின்றேன்” என்கிறார் ஔவையவர்கள்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment