ஆசிரியர் ஔவை துரைசாமிக்கு 15-07-1940 அன்று, மாணவர் மாவண்ணா தேவராஜன் திருவத்திபுரத்திலிருந்து வரைந்த கடிதம்:-
1. வரைசாரும் போளூர் விட்டு மாற்றினர் செங்கத்திற்கப்
புரை சார் தன்னாட்சி மன்றப் புல்லர்கள் ;
.எனினும் என்றும்
மரைசாரும் மணந்தான் போமோ? மாணிலாச் சேற்றிருந்தும்
துரைசாமிப் பெரியோய் !
நின் சீர் துலங்கிடா தழிந்துபோமோ ?
2. விண்ணிலா ஒளியைக் கங்குல் மறைத்திட முனைதல் போன்று
கண்ணிலாக் கயவர் செய்கை;
தாழ் மரக்கிளையை வெட்டி
மண்ணில் சாய்த்திடினும் அக்காழ் மரந் தழைத்திடுதல் போலத்
தண்ணளி மிக்கோய் !
நின் சீர் தழைத்தினி தோங்கும் நன்றே!
3. கோதிலா குணக்குன்றே கேள் ! கோடி என் வணக்கம்,
நின்றன்
தீதிலாத் தாட்கே நன்றி செப்பியான் எழுதுகின்றேன்.
மாதிலா இல்போல், வெண் செம் மரையிலாக் குளம் போல் நாளும்
ஆதரவுடையோய் !
உம்மை அங்கு விட்டு அழகிழந்தோம்.
4. யாவரும் நலமே; இங்கே ! யாயினும் பேரன்புள்ளோய் !
ஏவுறும் எம்புண் கண்ணை இன்று நீக்கிடுவான் ஈண்டு
மேவுற வருவீர் என்று மிகுபசியாளன் சோற்றிற்கு
ஆவலாய் நோக்கல் போல் யாம், ஐய ! நின் வரவை நோக்கி,
5. விழிகளும் பூத்துப்போய் எம் விழையுளம் வெறுப்பைக் கொண்டே
”அழிக அக் கொடியோர்” என்றின்றின்றளித்தன சாபம்;
தூயோய்!
பழிகளார் அரசமைத்த பாழ்கொடும் ஆட்சி வீழ்த்தும்
வழிகளைக் காண்போம்
எங்கள் வருத்தமும் தீர இன்றே !
6. இளமையில் திளைத்தாடுங்கால் இறைவனும் வானும் நற்சீர்
வளமையார் பண்பும் நம்பால் வந்தருகாடி நின்ற;
களம்முறும் கவல் காலத்தைக் காதலால் சேரச் சேர;
உளமவை விட்டு நீங்கி ஓடின தூரத் தூர !
7. எட்டவே ஓடும் அந்த இறைவனை வானைக் கையால்
கட்டியே அணைக்க எண்ணிக் கலங்கினும் அவைதாம் நம்மைக்
கிட்டுதல் இலையே.; என்றும் !
கீழ்மையில் அதுபோல் ஆயன்
வெட்டிய மரம்போல் நின்று மாழ்கியே வெதிர்ப்புற்றேனே !
8. என்னிளம் பருவத்தும்மை எதிரிலே பெற்று நின்றும்
நின்னியற் றேனை யுண்ண நினைத்திடா ஒரு மண்டே போல்
துன்னியே நின்றேன்;
காலம் சூழ்ந்த இன்றும்மைக் கூடி
உன்னரும் சொற்றேன் இன்பம் உண்ண யான் நினைத்தேன் அந்தோ!
9. நினைத்ததும் எம்மை விட்டு நீங்கினிர் போளூருக்கே!
மனத்துயர்மிகலும் உம்மை மகிழ்ந்துடன் கண்டு தேன்போல்
இனித்திடும் உம்சொல் கேட்டே,
இன்புற எனலும் தாங்கள்
தனிதெமை விட்டீர்;
இன்னும் சேய்மையில் செங்கம் சார்ந்தீர் !
10. ஈதுமக் கழகோ? ஐயா !
ஏங்கிடும் எமைத் தேற்றாமல்
பேதுற யாங்கள் நீவிர் பிரிந்திடல்; இனிமே லேனும்
ஓதிட அருள்வீர்
யானும் உயர்ந்திடும் வகை செய்வீர் என்
கோதறத் தமிழ்த் தேர்விற்குக் (VidwanVIID)கூட்டுவீர் என்றேயுள்ளேன்
11. ஊழியச் சங்கத் தேர்வில் (MPSC) உடல் நலமுறிச் சீட்டொன்று
ஏழையேன் அளித்தும்
அந்தோ! எடைகுறைவாற் றோற்றேன் காண்.
ஆழிசூழ் உலகம் போ ற்றும் அருந்தமிழ்ப் புலவோய் !
இன்று
சூழுமத்தேர்விற்கேக மறுமுறை துணிந்தேன் யானே !
12. ஆதலால் என் பண்பெல்லாம் அமைத்தொரு மதிப்புச் சீட்டுச்
சாதகமாய்த் தந்தே நல் தகைபெறச் செய்வீர் ஐயா !
மேதகு மிக்கோய் !
மேன்மேல் மிகவுயர்ந் தோங்கி
நின் சீர்
ஆதவன் போல என்றும் அவனியில் ஒளிர்க !
வாழி !
இங்ஙன்,
ஆணை வழி நிற்கும் மாணவன்,
எம்.ஏ. தேவராஜன்.

Add a Comment