நல்லி குப்புசாமி செட்டியாரின் 82 ஆம் பிறந்த நாள் வாழ்த்து(9.11.2021)
நாட்டை உயர்த்தும் நல்லியார் வாழ்க !
வணிகம் , இசை , நாடகம் , இலக்கியம்
முதலிய கலைகளில் வல்லவர் .
நல்லியார் தலைமை தாங்காத
இசை நிகழ்ச்சியோ ,நாட்டிய அரங்கோ
நடைபெறுவதில்லை .
உயர்ந்த மனத்தோடு வாழ்த்தும் உள்ளம்
அவரை அணி செய்கிறது .
கற்றவர்களோடு பழகுவதோடு தானும் தேசியம் ,
பாரதியார் பாடல்கள் ,இதிகாச புராண நூல்களில்
அடங்கிய நீதிநெறிகள் , மூதுரைகள் ,திருவாசகச் சிந்தனை
அவரால் அருமையாக எழுதப்பட்டுள்ளன .
நூலருமை தெரிந்தவர் .
நுட்பங்கள் புரிந்தவர் .
தாம் எங்கே பேசினாலும் தனது
நீண்ட நினைவுகளில் எப்படி
அந்த நிகழ்ச்சி பொருந்துகிறது என்பதை
அவர் உரையில் கேட்கும்போது வியப்பாக விளங்கும் .
இப்படித் திறமைகளின் குவியலைக் கொண்டு
பணிவும் – பெருமிதமும் இருபுறமும் ஆலவட்டம் வீச
திரு செட்டியார் நீடு புகழோடு திகழ்வதை
நான் எண்ணி மகிழ்கிறேன் ,
நூலாருள் நூல் வல்லார் என்ற தொடர்
நல்லி செட்டியாருக்கு
நூற்றுக்கு நூறு பொருந்தும் .
மெல்லிய உள்ளமும் – மேன்மையான செயலும்
கொண்டு மேதினி போற்றிட வாழும்
நல்லி செட்டியாருக்கு
என் மனங்கனிந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
தங்கள் வாழ்வு
நாட்டின் வாழ்வு
நன்மையின் வாழ்வு
நாகரிகத்தின் வாழ்வு !!
பல்லாண்டு கூறி மகிழ்கிறேன் .!
அன்போடு
ஒளவை நடராசன்

Add a Comment