இன்முகத்திலகம் ஏகாம்பரம் ! – நூற்றாண்டுப் பிறந்த விழா தொடங்கவிருக்கிறது.(9.10.1923-10.4.1996)
திருநாவுக்கரசர் திருமுறையில் அப்பன் நீ!
அம்மை நீ !
ஐயனும் நீ !
அன்புடைய மாமனும் நீ! மாமியும் நீ! என்ற தொடரை எப்போதும் நான் நினைப்பதுண்டு .
எங்கள் தாய்மாமன் எளியோர்க்கு உதவும் ஏகாம்பர மாமா அவர்களின் நூற்றாண்டு விழா தொடங்கவிருக்கிறது .
அவர் திருமுகம் என் எதிரில் தெரிகிறது .
எங்கள் அப்பா வாய் மணக்க ஏகாம்பரம் என்று நூறு முறையாவது கூப்பிடுவார் .
மைத்துனன் மீது அவ்வளவு ஆர்வம் .
என் தந்தையின் மனங்கவர்ந்ததோடு அவர்க்குப் பணி செய்வதில் எவரும் அவரை விஞ்ச முடியாது .
நாங்கள் 10 பேரும் மாமா என்று அன்பொழுக அழைப்போம் .
என்ன வேண்டும் என்று தட்டாமல் வாங்குவார் .
எங்கள் வீட்டில் விழா ,திருமணம் என்றால் எங்கள் மாமா ஆரணியிலிருந்து வந்து தானே முன்னின்று நடத்துவார் .
18,20 வயதிலேயே அரசுப்பணியில் சேர்ந்து விட்டார் .
அண்ணா பிள்ளை அவர்கள் இளமையிலேயே எங்கள் பாட்டியாரிடம் மூன்று செல்வங்களை விட்டுவிட்டு மறைந்துவிட்டார் .
கைம்பெண்ணான(1924) எங்கள் பாட்டியார் கண்ணீர் சிந்தாத நாளில்லை .
காலம் கண் திறந்தது .
மூத்த பெண் லோகாம்பாளுக்கு(1911) ஒப்பற்ற பெருமானாக ஒளவை துரைசாமி மணமகனாக வாய்த்தார் .
இரண்டாம் திருமகள் ஞானாம்பாள்(1918) சித்தி என்று தான் எப்போதும் அழைப்போம்.
கடமைத்திலகம் திருமணி மணியம் சுந்தரமூர்த்தி அப்பாவுக்கு வாழ்க்கைத் துணைவியாய் வாய்த்தார் .
ஞானாம்பாள் என்ற பெயர் எப்படியோ மருவி கானு என்று அம்மா கூப்பிட்டார் .
அதே போல எங்கள் அருமைச் சித்தியார்
மாமா ! என்று பரிவோடு பழகுவார் .
இவர்கள் இருவருக்கும் இளையவர் ஏகாம்பரம் .செய்யாற்றில் தான் உயர்நிலைக்கல்வி முடித்தார் .
அப்பா ஏனோ அவரைத் தமிழ் படிக்கச் சொல்லவில்லை .
அந்த நாளில் நாளும் நாலு பேராவது அப்பாவிடம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி தமிழ் வித்துவான் பாடம் படித்தனர் .
கற்பனை வளமும் ,
கலைத்திறமையும் ,
சிந்தனைச் செல்வமும்
வாய்ந்த எங்கள் மாமனுக்குப் பெண் கொடுக்க மாமன்மார் பலர் முன் வந்தனர் .
ஆனால் அவர் விரும்பியபடியே வேலூரில் செல்வத் தமக்கையார் குசலாம்பிகையை மணந்தார் .
மாமன் ஏகாம்பரம் தான் எனக்கு முதல் மேடைப் பேச்சை எழுதிக் கொடுத்தார் .
அவர் தொட்டதால் தான் நான் உயரத்துக்கு வர முடிந்தது .
அவர் தன் மகனைப் போல என்னை எங்குச் சென்றாலும் அழைத்துக் கொண்டு அரவணைத்தார் .
என் திருமணத்தையும் நான் விரும்பியபடியே எதிர்நீச்சலிட்டு அவர்தான் மதுரையில் நடத்தினார் .
மாமன் குடும்பத்தில் மூன்று மாணிக்கங்கள் மக்கட் செல்வங்களாக உள்ளனர் .
ஒப்பற்ற டாக்டர் இளமதி ,
ஈடில்லாப் புவியியல் அறிஞர் வானவன் ,
இணையற்ற பொன்மகள் தேன்மொழி
இவர்களை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன்
.இளமதியும் – வானவனும் அமெரிக்காவில் 40 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக மக்கட்செல்வங்களுடன் மிளிர்கின்றனர் .
தேனுக்குப் பிறந்த மகனும் – மகளும் நிறுவனங்களில் புகழ்ச் சிகரத்தில் அமீரகத்திலும் – சென்னையிலும் புகழோடு திகழ்கிறார்கள் .
எழுதப்பல எண்ணங்கள் உள்ளன .
வாழ்க ஏகாம்பர மாமாவின் புகழ் !
ஒளவை நடராசன்

Add a Comment