POST: 2021-09-23T09:42:31+05:30

பெருமைக்குப் பெருமை

நூலறிவும் நுழைபுலமும் வாய்ந்த பெரும் பேராசிரியர் திருக்குறட் செல்வர் என்று நான் என்றும் புகழ்ந்து போற்றும் பெருந்தகை
இ சுந்தரமூர்த்தி அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்பதை மகிழ்ந்து பாராட்டுகிறேன் .

அறிஞர் சி பா அவர்களின் செல்ல மாணவராய்ச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் என் மகன் அருள் முதுகலை பயின்ற போது பேராசிரியர் இ சு எவ்வளவு மென்மையாகவும் – மேன்மையாகவும் திருக்குறளில் தோய்ந்த நிலையில் பாடம் நடத்தியதைப் பலமுறை சொல்லி மகிழ்ந்திருக்கிறான் .

மாணவர் உள்ளம் கவர்ந்த பேராசிரியர் திருக்குறள் அறக்கட்டளையில் , மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் உரையாற்றிதைப் பலமுறை பாராட்டிக் குறிப்பிட்டிருக்கின்றான் .

என்னைப் பார்க்கும் போதெல்லாம் – நான் பேசத் தொடங்கும் போதெல்லாம் , அப்பா எப்படியிருக்கிறார் ? நீ அவரோடு இருப்பது எனக்கு நிறைவாக இருக்கிறது என்று நூறு முறையாவது கூறியிருப்பார் என்று அருள் சொல்வதுண்டு .

ஆன்ற அறிவும் – அடங்கிய பண்பும் ஒருங்கே அணி செய அமைந்த பேராசிரியரால் நிறுவனம் மேலும் நிமிர்ந்து நின்று புகழெய்துமாக !

வாழ்த்துக்களோடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *