POST: 2021-08-08T09:48:40+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 70

உவமைகளின் ஊர்வலம் கவியரசர் சுரதா

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

கல்லூரிக் காலங்களில் அப்பாவிடம் மிக உரிமையாகப் பேசும் கவிதைப் பெரியவர், உவமைக் கவிஞர் சுரதாவைப் (23.11.1921 – 20.06.2006) பலமுறை எங்கள் இல்லத்திலும், அப்பாவுடன் பல கூட்டங்களிலும் நான் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

எளிமையாக இருந்தாலும் எழிலார்ந்த தோற்றத்தோடு வலிமையாகத் தன் கருத்துக்களை எங்கும் அஞ்சாமல் வீசுவார்.

அவர் அணிந்திருந்த ஜிப்பாவைப் போல கருத்துக்களை மளமளவென அவர் பேசுவதைக் கேட்டு வியந்துள்ளேன்.

என்னிடம் பலமுறை அப்பா, அவருடன் வரும்போது, ‘அருள் நம் கவிஞரை வணங்கு’ என்பார்.

அதற்கு உடனே உவமைக் கவிஞர் சொல்லுவார், ‘ஓகோ, மகனுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றாய், பணிவு நெஞ்சில் இருக்க வேண்டும் தம்பி, தானாக வரவேண்டும். வலிந்து செய்யாதே’ என்பார் உரிமையாக.

அதேபோல அப்பா எங்குச் சென்றாலும், யாரிடம் பேசினாலும் உவமைக் கவிஞரை அப்பா அப்பா என்று சொல்லி பாராட்டுவதும், அவருடைய தேனூறும் கவிதைகளை அடிக்கடி உரக்கச் சொல்லி உவமைக் கவிஞரே வியந்து மீண்டும் சொல் ஒளவை என்று பாராட்டுவது வாடிக்கையாகும்.

தன்னைக் கல்லூரிப் பருவத்தில் புரட்சித் தலைவரிடம் அழைத்துப்போய் அறிமுகம் செய்ததையும் தமிழ் உலகத்திலுள்ள பலரையும் தன்னிடம் அழைத்து வந்ததையும் அப்பா சொல்லி மகிழ்வார்.

அதேபோல அப்பா என்னிடம் கவிஞர் எழுதிய ‘துறைமுகம்’ கவிதைத் தொகுப்பைப் படிக்கச் சொன்னார்.

அதேபோல அவர் சொல்லும் அரிய தகவல்களைக் கூட்டங்களில் நயமாகச் சொல்லிப் பாராட்டுவதும் அப்பாவின் தனிப்பாங்காகும்.

ஒருமுறை உவமைக் கவிஞர் சொன்னார், “அரசவைக் கவிஞர்கள் என்றால் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, கவியரசர் கண்ணதாசன் என்றுதான் நமக்குத் தெரியும்.

ஆனால் இதற்கு முன் 1941 இல் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராக மகாராஜ வாத்தியார் என்பவர் திகழ்ந்தார்.

அவர் பி.யு சின்னப்பா நடித்த தயாளன் திரைப்படத்திற்குப் பாட்டு எழுதியுள்ளார்”.

இப்படி அரிய வரலாற்றுக் குறிப்புகள் அவர் மனத்தில் அடிக்கடி புரளும்.

கல்லூரி ஆசிரியராக அப்பா இருந்தபோது வகுப்பில் உவமைக் கவிஞரின் ‘அமுதும் தேனும்’ கவிதைத்தொகுப்பிலிருந்து அசோகர் பற்றிய பாடலைச் சொல்லி அதை அப்பாவின் மாணவர் முன்னாள் அமைச்சர் டாக்டர் கா. காளிமுத்து பல கூட்டங்களில் கடல் மடைபோலப் பொழிவாராம்.

அதே போல ‘அம்பிகாபதி அமராவதி’ கதைப்பாடலையும் அழகாகச் சொல்வாராம்.

1965 ஆம் ஆண்டில் உவமைக் கவிஞர் எழுதிய கவிதைத் தொகுப்பான ‘தேன்மழை’க்குத் தமிழக அரசின் முதற்பரிசை அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கினார்கள்.

1995-ஆம் ஆண்டில் ‘தேன்மழை’ நூலுக்காக உவமைக் கவிஞருக்குக் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இராஜராஜன் விருது கிடைத்தது.

அப்போது அப்பா தான் துணைவேந்தர்.

அவ்விழாவைப் பற்றி இன்றும் சொல்லி மகிழ்வார் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின், முன்னாள் பேராசிரியர் கு.வே. பாலசுப்பிரமணியன் அவர்கள்.

ஒன்றன் மேல் ஒன்றாக அடுத்தடுத்துப் பல செய்திகளை அடுக்கிக் காட்டும் கவிஞர் சுரதாவின் உத்தியும் உழைப்பும் அளப்பரியது.

பரந்த நூலறிவும், பக்குவப்பட்ட தொகுப்பறிவும், சிறந்த மொழியறிவும் சேர்ந்திருக்கும் கவிஞர்களே காலத்தை வென்று காட்சித் தருவார்கள்.

அவர்களே சங்கச் சான்றோரின் சாரமாய், வழிவழியாகத் திகழ்வார்கள் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு கவிஞர் சுரதா ஆவார்.

23.11.1986-இல் என்னுடைய கண்ணும் காதும் குறித்த ‘கருத்துக் கோவை’யில் கவிஞர் சுரதாவின் கவிதை வரிகளைக் குறித்து வைத்திருந்தேன்.

பாலிலே குளித்திட்டாளாம்

பனிமங்கை கிளியோ பாத்ரா

மீன்கறியைத் தின்றதனால் துக்ளக் செத்தான்

மிதமிஞ்சினா லெதுவும் தீமை செய்யும்

வேற்றுமையை வினைச்சொற்கள் ஏற்ப தில்லை!

வெறும்பாட்டைத் தமிழ்ச்சங்கம் சேர்ப்ப தில்லை!!

பல்லி தலையில் நீ வந்து வீழ்ந்தால்

சண்டையாம்; தோளில் வீழ்ந்தால்

நலம்பல பெருகு மென்பர்

நானிதை நம்ப வில்லை

மானுக்குப் பின்மான்கள் செல்ல வேண்டும்

வால்குழைக்கும் நாய்சென்றால் சிறப்பு இல்லை

தேனுக்கு வேண்டுவது பாலா? வெளுப்பான்

துணிபிழிந்த தண்ணீரா? நிலவை ஏந்தும்

மலையிருக்க வேண்டாமா குறிஞ்சி என்றால்?

வயலிருக்க வேண்டாமா மருதம் என்றால்?

தலையிருக்க வேண்டாமா உயிர் இருக்க?

தமிழ்க்கவியின் உயிர்நண்பர், நெல்லை யப்பர்

இளங்கலை வகுப்பில் புரியவில்லையென்று, அப்பாவிடம் ‘உவமை’ என்றால் என்னவென்று வினவிய போது சொல்மழையாக 02.12.1986 இல் அப்பா சொன்ன வரிகள்:-

“பண்டைக் காலத்தில் புலமை நுட்பத்தை அளக்கும் அளவுகோலாக உவமை இருந்து வந்திருக்கிறது.

குறுந்தொகை என்னும் சங்க இலக்கியத்தில் கடவுள் வாழ்த்து உட்பட நானூற்றொரு பாடல்கள் உள்ளன.

பெருந்தேவனார் முதல் அம்மூவனார் இறுதியாக இருநூற்றாறு புலவர்கள் அதில் பாடியுள்ளனர்.

அவர்களுள் பதின்மூவரின் பெயர்கள், அவர்கள் தமது பாடலில் எடுத்தாண்ட உவமைகளாலேயே வழங்கப் பெறுகின்றன என்பதை அறியும் போது உவமையின் சிறப்புப் புலனாகும்.

உவமைகளின் உறுப்புகள் நான்கு.

அவை உவமானம், உவமேயம் (பொருள்), உவம உருபு, உவமைக்கும் பொருளுக்கும் உள்ள பொதுத்தன்மை என்பன.

தொல்காப்பியர் காலத்தில் உவமையே அணியாகக் கருதப்பட்டது.

அதனால்தான் செய்யுள் அலங்காரம் பற்றிக் கூறவந்த இயலுக்கு ‘உவமவியல்’ என்று அவர் பெயரிட்டார்.

இந்த உவமை அணியே பிற்காலத்தில் தோன்றிய அணிகளுக்குத் தாயாக விளங்கியது.

உவமை கவிதையில் தானாக வந்து குதித்து விடாது என்றும், ஒரு கவிஞன் நன்கு சிந்தித்தால்தான் பொருத்தமான உவமைகளைக் கூற முடியும் என்றும் அத்திறமை எல்லாருக்கும் வாய்த்தல் அரிது” என்று சொல்லிவிட்டு உவமையிலா உவமைக் கவியரசு சுரதா எப்படிக் குறிப்பிடுகிறார் என்று சொன்ன பாடல்:-

“அப்பத்தைச் சுடும் போது பொத்தல் வந்தே

அதன் நடுவில் தானாக அமைதல் போலே

ஒப்பற்ற காவியத்தில் எங்கி ருந்தோ

ஓடிவந்து கருத்துக்கள் குதிப்ப தில்லை

ஒப்பிட்டுச் சொல்லுதற்குத் திறமை வேண்டும்

உழைத்தார்க்கே அத்திறமை வந்து வாய்க்கும்

உப்பற்ற உணவுக்கும் தாய்ப்பால் போன்ற

உவமையில்லாப் பாடலுக்கும் பெருமையில்லை.” என்று சொல்லி முடித்தார்.

சுரதாவுக்குச் சிற்றிலக்கியங்களில் ஈடுபாடு அதிகம்.

அவற்றின் மூலை முடுக்குகளில் கூறப்பட்டுள்ள விநோதமான உவமைகளையெல்லாம் சுரதா விழுங்கிச் செரித்து வைத்திருக்கிறார்.

உவமை அழகில் உள்ளத்தைப் பறிகொடுத்த சுரதா, பிறர் கூறாத புதிய உவமைகளைக் கூறுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

அம்முயற்சியில் மாபெரும் வெற்றியும் பெற்றார்.

சுரதாவின் தேன்மழையில் ’குமணன்’ என்னும் பாடலில், நாடிழந்து காட்டில் தலைமறைவாகத் திரிந்த குமண வள்ளலைத் தேடிப் பெருந்தலைச் சாத்தனார் வருகிறார்.

குமணனிடம் தமது வறுமையை உருக்கமாகப் பாடுகிறார்.

இரக்கத்தால் உள்ளம் கரைந்த குமணன்,

எட்டடுக்கு மாளிகையும் நகரும் நாடும்

என் வசத்தில் இருக்கையில் நீ வந்திருந்தால்

ஒட்டகத்தின் காலடியை ஒத்த முத்தும்

ஒளிசிறந்த செம்பொன்னும் தந்தி ருப்பேன்

என்று பெருந்தலைச் சாத்தனாரிடம் கூறுகின்றான் .

கன்பூசியசு என்பவனோ சீன ஞானி

கற்றறிந்த மாமேதை உலகம் போற்றும்

அன்பாளன்; அவன்தந்தை ஊலி யாங்கை!

அவனுயரம் பத்தடியாம்; சென்ற திங்கள்

முன்கோபத் தோடென்னை வெட்ட வந்த

முட்டாளும் அவனுயரம் இருப்பான்!

என்பது உவமைக் கவிஞரின் தொடர்கள்.

இவை போன்று நுட்பமாகச் சிந்தித்து எழுதும் தொலைவு உவமைகள் (far fetched Similes) சுரதாவின் பாட்டில் மலிந்திருக்கின்றன.

முக்கோணத் தமிழகத்தைத் தலைகீழான ஆய்த எழுத்துக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

“தாய்நாட்டுப் பற்றுடைய தெலுங்கன், அந்தச்

சகந்நாதக் கவியென்போன், தலைகீ ழான

ஆய்தஎழுத் தைப்போன்று நிலப்ப ரப்பு

அமைந்துள்ள தமிழ்நாட்டில் தங்க லானான்.”

மேலும் அக்பரின் ஆசைமகள் லவங்கியின் நெற்றிக்கு உவமைக் கூறவந்த கவிஞர்,

“வட்டமிட்ட வெண்ணிலவைப் பாதியாக

மடித்ததுபோல் முற்றாத நெற்றி”

என்று குறிப்பிடுகிறார்.

சுரதாவின் நடையில் எளிமை, இனிமை, அழகு, எண்ணி முடிக்க முடியாத உவமை நான்கையும் காணலாம்.

தோல்சீவிய கரும்புத்துண்டுகளைப் போலவும், இனிக்கும் கனிச்சுளை போலவும், சிறிய சிறிய தொடர்களோடு கூடிய வினை முடிவுகள் படிப்பவரைப் பரவசப்படுத்தும். அருவியாகவும், தவழும் ஓடையாகவும், மணித்தேராகவும், நாட்டிய நங்கையாகவும், துள்ளும் மானாகவும், தென்றலாகவும் இவர் கவிதைகள் விளங்கும்.

ஆனால் புயலை இவர் பாட்டில் எங்கும் காண முடியாது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பாராட்ட வந்த சுரதா ஓரிடத்தில் அவருடைய விருத்தப்பாவின் வெற்றியையும் கீழ்க்கண்டவாறு பாராட்டுகிறார்.

திருத்தத்தில் வெற்றிபெற்றான் ஒட்டக் கூத்தன்

தீர்ப்பளித்து வெற்றிபெற்றான் கரிகாற் சோழன்

நிருத்தத்தில் வெற்றிபெற்றான் ஆட்ட னத்தி

நிதியளித்து வெற்றிபெற்றான் பாரி வள்ளல்

வருத்தத்தில் வெற்றி பெற்றார் வடலூர் வள்ளல்

வாளேந்தி வெற்றிபெற்றான் சேரலாதன்

விருத்தத்தில் வெற்றிபெற்றான் கம்பன்; அந்த

வெற்றியினை இவர்பெற்றார் என்னைப் போல!

விருத்தத்தில் கம்பனும் பாரதிதாசனும் பெற்ற வெற்றியைத் தாமும் பெற்றுவிட்டதாகச் சுரதா கூறுவது, அவரது ஆற்றலின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.

முதலடியைத் தேனாக்கி, அடுத்த டுத்து

முளைக்கின்ற தொடரடியை அமுத மாக்கி

விதவிதமாய்ச் சந்தநய நட்புண் டாக்கி

வியப்புமிகு உவமைகளால் புதுமை தேக்கிப்

பதமுடைய பாவினமாம் விருத்த மாக்கிப்

இயற்ற லானான்.

படைநடத்தல் போல் நடக்கும் நடையும்; சங்கப்

பழந்தமிழ்நூல் அடையாள நடையும்; பாட்டின்

இடையிடையே இசையசைவு நடையும்; ஓடை

ஏந்திவரும் அலைநடையும் கூட்டிக் காட்டி

மடைதிறந்த வெள்ளம்போல் கவிதை தந்தார்.

மலைபோன்று தலைநிமிர்ந்து உவமை தந்தார்.

தடைநடையே அவ்வெழுத்தில் இல்லை! வாழைத்

தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு?

வெடித்தவுடன் விரைந்தோடும் ஆம ணக்கின்

விதையென்றால் பாரதிக்கப் பொருந்தும்; கீழே

அடித்தவுடன் மேலெழும்பும் பந்தென் றிட்டால்

அது புரட்சிக் கவிஞருக்கே பொருந்தும்; வீரம்

தொடுத்தமைத்த பாவேந்தர் பாடல் மக்கள்

துணைக்குதவும் தொகைப்பாடல்! வல்வில் ஓரி

விடுத்தகணை தவறியதே இல்லை! வேந்தர்

வெடிமருந்துக் கவிதைகளும் தோற்ற தில்லை!

எந்தையாரைப்பற்றி; கவிஞர் சுரதாவின் புகழ்பெற்ற கவிதையொன்றில்,

“எதுவரைக்கும் தமிழறிஞன் இந்த நாளில்

ஏற்றமிகக் கொண்டிடுவான் என்று கேட்டால்

இதுவரைக்கும் என்றெடுத்துக்காட்ட இங்கே

இவரைத்தான் நான் சுட்டிக் காட்டுகின்றேன்!

மது சுரக்கும் தமிழ்ப் பேச்சால் மதியின் மாண்பால்

மணிதெறிக்கும் உரைவீச்சால் தேன் கனிந்த

அதிமதுரக் கனிப்போலப் பழகும் இந்த

ஔவை நடராசன் தான் வாழ்க வாழ்க!”

என்ற வரிகள் கல்வெட்டு வரிகளாகும்.

கவிஞர் சுரதாவின் வழிமுறையினராகப் பலர் வலம் வந்தாலும் அவருடைய நிகரற்ற உவமைகளின் நெறியில் ஒப்பற்ற கவிஞராக மற்றுமொரு சுரதா என்று அவராலேயே மகிழ்ந்து போற்றப்படுபவர் கவிஞர் நீலமணி மட்டுமே திகழ்வதை எந்தையார் இன்றும் பெரிதும் பாராட்டி வருகிறார்.

நீலமணியின் வரிகளிலேயே சொல்ல வேண்டுமென்றால்,

“சுரதா

இவர் சாதாரண மனிதர்!

கவிதைகளின் தாய்ப்பால்

இவர் கவிதைகளை மட்டுமா எழுதினார்?

கவிஞர்களையுமல்லவா எழுதினார்.

ஒளிச்சேர்க்கையை அனுமதித்த

நிழல் இவர்.”

—–

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

சிறுபாணாற்றுப்படை

ஓய்மாநாட்டு நல்லியக்கோடனை, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

சிறிய யாழ் கொண்டு பாடும் பாணணை ஆற்றுப்படுத்திப் பாடியது.

பரிசில் பெற்று வருகின்ற கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியோரை, வரும்வழியில் பார்த்துத் தாங்கள் பெற்றுவந்த மிகுசெல்வத்தைப் பெறுமாறு சொல்லியனுப்புவது இதன் இலக்கணம், பாணர்-பண்ணிசைத்துப் பாடுவோரைக் குறிக்கும்.

‘எழுசமங் கடந்த எழுவுறழ் திணிதோள்,

எழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்,

விரிகடல் வேலி வியலகம் விளங்க,

ஒருதாள் தாங்கிய வுரனுடை நோன்றாள்.

நறுவீ நாகமு மகிலு மாரமும்

துறையாடு மகளிர்க்குத் தோள்புணை யாகிய

பொருபுனல் தரூஉம் போக்கரு மரபின்

தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய

நன்மா விலங்கை மன்ன ருள்ளும்

மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்

உறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்

களிற்றுத்தழும் பிருந்த பெயன்மழைத் தடக்கைப்

பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை

நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு

தாங்கரு மரபின் தன்னுந் தந்தை

வான்பொரு நெடுவரை வளனும் பாடி,

முன்னாள் சென்றன மாக விந்நாள்’

முன்னாள் சென்ற பாணன், இந்நாள் செல்லும் பாணனை எதிர்கொள்கிறான்.

வள்ளல்கள் என்று வையம் புகழ்ந்த எழுவரும் இந்நாள் இல்லை என்கிறான்.

ஆனால், இந்நாளிலும் அவர் எழுவரின் கொடைத்தொழிலைத்தான் மேற்கொண்டு, வாழ்ந்து வருபவன், ஓவியர்குலத் தோன்றல் நல்லியக்கோடன் என்பவனே. பரிசில் பெற்று வருகின்ற பாணன், தான் பெறுவதற்கு முன்னிருந்த ஏழ்மைநிலையை எடுத்துச் சொல்கிறான்.

பரிசில் பெற்றுத் திரும்புகின்ற இப்போதோ, நல்லியக்கோடனிடமிருந்து பெற்றுவரும் தேர், யானை, பல்வேறு பொருள்கள் குறித்தும் பேசுகிறான். எதிர்வரும் பாணனும், அவனிடம் சென்றால், அனைத்தையும் பெறலாமென்றும் கூறுகிறான்.

நல்லியக்கோடன், விரிகடல் சூழ்ந்த பெருநிலப்பரப்பைக் கொண்டவன்; ஈரமுள்ள அவன், வீரமுள்ளவனாகவும் இருக்கிறான்; தினவெடுத்த திண்டோளும் கொண்டவன்; நீராடும் மகளிர்க்கு மணப்பொருளும் மலர்மாலையும் கொடுப்பவன்; குற்றமற்று விளங்குபவன்; பழுதில்லாததும், குறி தப்பாததுமாகிய வாளொடு விளங்குபவன்; பெரும்புலியின் பெருவீரம் கொண்டவன்; வீரத்தின் அடையாளமாகிய விழுப்புண்ணை உடலில் தாங்கியவன்.

அத்தகு நல்லியக்கோடன், இருக்குமிடம் அருகில்தான் உள்ளது என்கிறான்.

வானளவு உயர்ந்தோங்கி நிற்கும் அவனது பெருமலையின் சிறப்பைக் கூறுகிறான்.

வள்ளலின் உயர்பண்புகளையும், கொடைச் சிறப்புகளையும் கூறி, எதிர்வந்த பாணன் விரும்பியவற்றையெல்லாம் வரையாது வாரி வழங்குபவன் – அவற்றையும் உடனே உங்களுக்குத் தருபவன் என்றெல்லாம் கூறி, ஆற்றுப்படுத்துகிறான்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

உவமைகளின் ஊர்வலம் கவி

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

கல்லூரிக் காலங்களில் அப்பாவிடம் மிக உரிமையாகப் பேசும் கவிதைப் பெரியவர், உவமைக் கவிஞர் சுரதாவைப் (23.11.1921 – 20.06.2006) பலமுறை எங்கள் இல்லத்திலும், அப்பாவுடன் பல கூட்டங்களிலும் நான் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். எளிமையாக இருந்தாலும் எழிலார்ந்த தோற்றத்தோடு வலிமையாகத் தன் கருத்துக்களை எங்கும் அஞ்சாமல் வீசுவார். அவர் அணிந்திருந்த ஜிப்பாவைப் போல கருத்துக்களை மளமளவென அவர் பேசுவதைக் கேட்டு வியந்துள்ளேன். என்னிடம் பலமுறை அப்பா, அவருடன் வரும்போது, ‘அருள் நம் கவிஞரை வணங்கு’ என்பார். அதற்கு உடனே உவமைக் கவிஞர் சொல்லுவார், ‘ஓகோ, மகனுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றாய், பணிவு நெஞ்சில் இருக்க வேண்டும் தம்பி, தானாக வரவேண்டும். வலிந்து செய்யாதே’ என்பார் உரிமையாக. அதேபோல அப்பா எங்குச் சென்றாலும், யாரிடம் பேசினாலும் உவமைக் கவிஞரை அப்பா அப்பா என்று சொல்லி பாராட்டுவதும், அவருடைய தேனூறும் கவிதைகளை அடிக்கடி உரக்கச் சொல்லி உவமைக் கவிஞரே வியந்து மீண்டும் சொல் ஒளவை என்று பாராட்டுவது வாடிக்கையாகும்.

தன்னைக் கல்லூரிப் பருவத்தில் புரட்சித் தலைவரிடம் அழைத்துப்போய் அறிமுகம் செய்ததையும் தமிழ் உலகத்திலுள்ள பலரையும் தன்னிடம் அழைத்து வந்ததையும் அப்பா சொல்லி மகிழ்வார். அதேபோல அப்பா என்னிடம் கவிஞர் எழுதிய ‘துறைமுகம்’ கவிதைத் தொகுப்பைப் படிக்கச் சொன்னார். அதேபோல அவர் சொல்லும் அரிய தகவல்களைக் கூட்டங்களில் நயமாகச் சொல்லிப் பாராட்டுவதும் அப்பாவின் தனிப்பாங்காகும். ஒருமுறை உவமைக் கவிஞர் சொன்னார், “அரசவைக் கவிஞர்கள் என்றால் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, கவியரசர் கண்ணதாசன் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் இதற்கு முன் 1941 இல் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராக மகாராஜ வாத்தியார் என்பவர் திகழ்ந்தார். அவர் பி.யு சின்னப்பா நடித்த தயாளன் திரைப்படத்திற்குப் பாட்டு எழுதியுள்ளார்”. இப்படி அரிய வரலாற்றுக் குறிப்புகள் அவர் மனத்தில் அடிக்கடி புரளும்.

கல்லூரி ஆசிரியராக அப்பா இருந்தபோது வகுப்பில் உவமைக் கவிஞரின் ‘அமுதும் தேனும்’ கவிதைத்தொகுப்பிலிருந்து அசோகர் பற்றிய பாடலைச் சொல்லி அதை அப்பாவின் மாணவர் முன்னாள் அமைச்சர் டாக்டர் கா. காளிமுத்து பல கூட்டங்களில் கடல் மடைபோலப் பொழிவாராம். அதே போல ‘அம்பிகாபதி அமராவதி’ கதைப்பாடலையும் அழகாகச் சொல்வாராம்.

1965 ஆம் ஆண்டில் உவமைக் கவிஞர் எழுதிய கவிதைத் தொகுப்பான ‘தேன்மழை’க்குத் தமிழக அரசின் முதற்பரிசை அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கினார்கள். 1995-ஆம் ஆண்டில் ‘தேன்மழை’ நூலுக்காக உவமைக் கவிஞருக்குக் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இராஜராஜன் விருது கிடைத்தது. அப்போது அப்பாதான் துணைவேந்தர். அவ்விழாவைப் பற்றி இன்று சொல்லி மகிழ்வார். தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின், முன்னாள் பேராசிரியர் கு.வே. பாலசுப்பிரமணியன் அவர்கள்.

ஒன்றன் மேல் ஒன்றாக அடுத்தடுத்துப் பல செய்திகளை அடுக்கிக் காட்டும் கவிஞர் சுரதாவின் உத்தியும் உழைப்பும் அளப்பரியது. பரந்த நூலறிவும், பக்குவப் பட்ட தொகுப்பறிவும், சிறந்த மொழியறிவும் சேர்ந்திருக்கும் கவிஞர்களே காலத்தை வென்று காட்சித் தருவார்கள். அவர்களே சங்கச் சான்றோரின் சாரமாய், வழிவழியாகத் திகழ்வார்கள் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு கவிஞர் சுரதா ஆவார்.

23.11.1986-இல் என்னுடைய கண்ணும் காதும் குறித்த ‘கருத்துக் கோவை’யில் கவிஞர் சுரதாவின் கவிதை வரிகளைக் குறித்து வைத்திருந்தேன்.

பாலிலே குளித்திட்டாளாம்

பனிமங்கை கிளியோ பாத்ரா

மீன்கறியைத் தின்றதனால் துக்ளக் செத்தான்

மிதமிஞ்சினா லெதுவும் தீமை செய்யும்

வேற்றுமையை வினைச்சொற்கள் ஏற்ப தில்லை!

வெறும்பாட்டைத் தமிழ்ச்சங்கம் சேர்ப்ப தில்லை!!

பல்லி தலையில் நீ வந்து வீழ்ந்தால்

சண்டையாம்; தோளில் வீழ்ந்தால்

நலம்பல பெருகு மென்பர்

நானிதை நம்ப வில்லை

மானுக்குப் பின்மான்கள் செல்ல வேண்டும்

வால்குழைக்கும் நாய்சென்றால் சிறப்பு இல்லை

தேனுக்கு வேண்டுவது பாலா? வெளுப்பான்

துணிபிழிந்த தண்ணீரா? நிலவை ஏந்தும்

மலையிருக்க வேண்டாமா குறிஞ்சி என்றால்?

வயலிருக்க வேண்டாமா மருதம் என்றால்?

தலையிருக்க வேண்டாமா உயிர் இருக்க?

தமிழ்க்கவியின் உயிர்நண்பர், நெல்லை யப்பர்

இளங்கலை வகுப்பில் புரியவில்லையென்று, அப்பாவிடம் ‘உவமை’ என்றால் என்னவென்று வினவிய போது சொல்மழையாக 02.12.1986 இல் அவர் சொன்ன வரிகள்:-

“பண்டைக் காலத்தில் புலமை நுட்பத்தை அளக்கும் அளவுகோலாக உவமை இருந்து வந்திருக்கிறது. குறுந்தொகை என்னும் சங்க இலக்கியத்தில் கடவுள் வாழ்த்து உட்பட நானூற்றொரு பாடல்கள் உள்ளன. பெருந்தேவனார் முதல் அம்மூவனார் இறுதியாக இருநூற்றாறு புலவர்கள் அதில் பாடியுள்ளனர். அவர்களுள் பதின்மூவரின் பெயர்கள், அவர்கள் தமது பாடலில் எடுத்தாண்ட உவமைகளாலேயே வழங்கப் பெறுகின்றன என்பதை அறியும் போது உவமையின் சிறப்புப் புலனாகும். உவமைகளின் உறுப்புகள் நான்கு. அவை உவமானம், உவமேயம் (பொருள்), உவம உருபு, உவமைக்கும் பொருளுக்கும் உள்ள பொதுத்தன்மை என்பன. தொல்காப்பியர் காலத்தில் உவமையே அணியாகக் கருதப்பட்டது. அதனால்தான் செய்யுள் அலங்காரம் பற்றிக் கூறவந்த இயலுக்கு ‘உவமவியல்’ என்று அவர் பெயரிட்டார். இந்த உவமை அணியே பிற்காலத்தில் தோன்றிய அணிகளுக்குத் தாயாக விளங்கியது. உவமை கவிதையில் தானாக வந்து குதித்து விடாது என்றும், ஒரு கவிஞன் நன்கு சிந்தித்தால்தான் பொருத்தமான உவமைகளைக் கூற முடியும் என்றும் அத்திறமை எல்லாருக்கும் வாய்த்தல் அரிது” என்று சொல்லிவிட்டு உவமையிலா உவமைக் கவியரசு சுரதா எப்படிக் குறிப்பிடுகிறார் என்று சொன்ன பாடல்:-

“அப்பத்தைச் சுடும் போது பொத்தல் வந்தே

அதன் நடுவில் தானாக அமைதல் போலே

ஒப்பற்ற காவியத்தில் எங்கி ருந்தோ

ஓடிவந்து கருத்துக்கள் குதிப்ப தில்லை

ஒப்பிட்டுச் சொல்லுதற்குத் திறமை வேண்டும்

உழைத்தார்க்கே அத்திறமை வந்து வாய்க்கும்

உப்பற்ற உணவுக்கும் தாய்ப்பால் போன்ற

உவமையில்லாப் பாடலுக்கும் பெருமையில்லை.” என்று சொல்லி முடித்தார்.

சுரதாவுக்குச் சிற்றிலக்கியங்களில் ஈடுபாடு அதிகம். அவற்றின் மூலை முடுக்குகளில் கூறப்பட்டுள்ள விநோதமான உவமைகளையெல்லாம் சுரதா விழுங்கிச் செரித்து வைத்திருக்கிறார். உவமை அழகில் உள்ளத்தைப் பறிகொடுத்த சுரதா, பிறர் கூறாத புதிய உவமைகளைக் கூறுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அம்முயற்சியில் மாபெரும் வெற்றியும் பெற்றார்.

சுரதாவின் தேன்மழையில் ’குமணன்’ என்னும் பாடலில், நாடிழந்து காட்டில் தலைமறைவாகத் திரிந்த குமண வள்ளலைத் தேடிப் பெருந்தலைச் சாத்தனார் வருகிறார். குமணனிடம் தமது வறுமையை உருக்கமாகப் பாடுகிறார். இரக்கத்தால் உள்ளம் கரைந்த குமணன்,

எட்டடுக்கு மாளிகையும் நகரும் நாடும்

என்வசத்தில் இருக்கையில் நீ வந்திருந்தால்

ஒட்டகத்தின் காலடியை ஒத்த முத்தும்

ஒளிசிறந்த செம்பொன்னும் தந்தி ருப்பேன்

என்று பெருந்தலைச் சாத்தனாரிடம் கூறுகின்றான் .

கன்பூசியசு என்பவனோ சீன ஞானி

கற்றறிந்த மாமேதை உலகம் போற்றும்

அன்பாளன்; அவன்தந்தை ஊலி யாங்கை!

அவனுயரம் பத்தடியாம்; சென்ற திங்கள்

முன்கோபத் தோடென்னை வெட்ட வந்த

முட்டாளும் அவனுயரம் இருப்பான்!

என்பது உவமைக் கவிஞரின் தொடர்கள். இவை போன்று நுட்பமாகச் சிந்தித்து எழுதும் தொலைவு உவமைகள் (far fetched Similes) சுரதாவின் பாட்டில் மலிந்திருக்கின்றன.

முக்கோணத் தமிழகத்தைத் தலைகீழான ஆய்த எழுத்துக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

“தாய்நாட்டுப் பற்றுடைய தெலுங்கன், அந்தச்

சகந்நாதக் கவியென்போன், தலைகீ ழான

ஆய்தஎழுத் தைப்போன்று நிலப்ப ரப்பு

அமைந்துள்ள தமிழ்நாட்டில் தங்க லானான்.”

மேலும் அக்பரின் ஆசைமகள் லவங்கியின் நெற்றிக்கு உவமைக் கூறவந்த கவிஞர்,

“வட்டமிட்ட வெண்ணிலவைப் பாதியாக

மடித்ததுபோல் முற்றாத நெற்றி”

என்று குறிப்பிடுகிறார்.

சுரதாவின் நடையில் எளிமை, இனிமை, அழகு, எண்ணி முடிக்க முடியாத உவமை நான்கையும் காணலாம். தோல்சீவிய கரும்புத்துண்டுகளைப் போலவும், இனிக்கும் கனிச்சுளை போலவும், சிறிய சிறிய தொடர்களோடு கூடிய வினை முடிவுகள் படிப்பவரைப் பரவசப்படுத்தும். அருவியாகவும், தவழும் ஓடையாகவும், மணித்தேராகவும், நாட்டிய நங்கையாகவும், துள்ளும் மானாகவும், தென்றலாகவும் இவர் கவிதைகள் விளங்கும். ஆனால் புயலை இவர் பாட்டில் எங்கும் காண முடியாது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பாராட்ட வந்த சுரதா ஓரிடத்தில் அவருடைய விருத்தப்பாவின் வெற்றியையும் கீழ்க்கண்டவாறு பாராட்டுகிறார்.

திருத்தத்தில் வெற்றிபெற்றான் ஒட்டக் கூத்தன்

தீர்ப்பளித்து வெற்றிபெற்றான் கரிகாற் சோழன்

நிருத்தத்தில் வெற்றிபெற்றான் ஆட்ட னத்தி

நிதியளித்து வெற்றிபெற்றான் பாரி வள்ளல்

வருத்தத்தில் வெற்றி பெற்றார் வடலூர் வள்ளல்

வாளேந்தி வெற்றிபெற்றான் சேரலாதன்

விருத்தத்தில் வெற்றிபெற்றான் கம்பன்; அந்த

வெற்றியினை இவர்பெற்றார் என்னைப் போல!

விருத்தத்தில் கம்பனும் பாரதிதாசனும் பெற்ற வெற்றியைத் தாமும் பெற்றுவிட்டதாகச் சுரதா கூறுவது, அவரது ஆற்றலின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.

முதலடியைத் தேனாக்கி, அடுத்த டுத்து

முளைக்கின்ற தொடரடியை அமுத மாக்கி

விதவிதமாய்ச் சந்தநய நட்புண் டாக்கி

வியப்புமிகு உவமைகளால் புதுமை தேக்கிப்

பதமுடைய பாவினமாம் விருத்த மாக்கிப்

இயற்ற லானான்.

படைநடத்தல் போல் நடக்கும் நடையும்; சங்கப்

பழந்தமிழ்நூல் அடையாள நடையும்; பாட்டின்

இடையிடையே இசையசைவு நடையும்; ஓடை

ஏந்திவரும் அலைநடையும் கூட்டிக் காட்டி

மடைதிறந்த வெள்ளம்போல் கவிதை தந்தார்.

மலைபோன்று தலைநிமிர்ந்து உவமை தந்தார்.

தடைநடையே அவ்வெழுத்தில் இல்லை! வாழைத்

தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு?

வெடித்தவுடன் விரைந்தோடும் ஆம ணக்கின்

விதையென்றால் பாரதிக்கப் பொருந்தும்; கீழே

அடித்தவுடன் மேலெழும்பும் பந்தென் றிட்டால்

அது புரட்சிக் கவிஞருக்கே பொருந்தும்; வீரம்

தொடுத்தமைத்த பாவேந்தர் பாடல் மக்கள்

துணைக்குதவும் தொகைப்பாடல்! வல்வில் ஓரி

விடுத்தகணை தவறியதே இல்லை! வேந்தர்

வெடிமருந்துக் கவிதைகளும் தோற்ற தில்லை!

எந்தையாரைப்பற்றி; கவிஞர் சுரதாவின் புகழ்பெற்ற கவிதையொன்றில்,

“எதுவரைக்கும் தமிழறிஞன் இந்த நாளில்

ஏற்றமிகக் கொண்டிடுவான் என்று கேட்டால்

இதுவரைக்கும் என்றெடுத்துக்காட்ட இங்கே

இவரைத்தான் நான் சுட்டிக் காட்டுகின்றேன்!

மது சுரக்கும் தமிழ்ப் பேச்சால் மதியின் மாண்பால்

மணிதெறிக்கும் உரைவீச்சால் தேன் கனிந்த

அதிமதுரக் கனிப்போலப் பழகும் இந்த

ஔவை நடராசன் தான் வாழ்க வாழ்க!”

என்ற வரிகள் கல்வெட்டு வரிகளாகும்.

கவிஞர் சுரதாவின் வழிமுறையினராகப் பலர் வலம் வந்தாலும் அவருடைய நிகரற்ற உவமைகளின் நெறியில் ஒப்பற்ற கவிஞராக மற்றுமொரு சுரதா என்று அவராலேயே மகிழ்ந்து போற்றப்படுபவர் கவிஞர் நீலமணி மட்டுமே திகழ்வதை எந்தையார் இன்றும் பெரிதும் பாராட்டி வருகிறார். நீலமணியின் வரிகளிலேயே சொல்ல வேண்டுமென்றால்,

“சுரதா

இவர் சாதாரண மனிதர்!

கவிதைகளின் தாய்ப்பால்

இவர் கவிதைகளை மட்டுமா எழுதினார்?

கவிஞர்களையுமல்லவா எழுதினார்.

ஒளிச்சேர்க்கையை அனுமதித்த

நிழல் இவர்.”

—–

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

சிறுபாணாற்றுப்படை

ஓய்மாநாட்டு நல்லியக்கோடனை, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. சிறிய யாழ் கொண்டு பாடும் பாணணை ஆற்றுப்படுத்திப் பாடியது. பரிசில் பெற்று வருகின்ற கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியோரை, வரும்வழியில் பார்த்துத் தாங்கள் பெற்றுவந்த மிகுசெல்வத்தைப் பெறுமாறு சொல்லியனுப்புவது இதன் இலக்கணம், பாணர்-பண்ணிசைத்துப் பாடுவோரைக் குறிக்கும்.

‘எழுசமங் கடந்த எழுவுறழ் திணிதோள்,

எழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்,

விரிகடல் வேலி வியலகம் விளங்க,

ஒருதாள் தாங்கிய வுரனுடை நோன்றாள்.

நறுவீ நாகமு மகிலு மாரமும்

துறையாடு மகளிர்க்குத் தோள்புணை யாகிய

பொருபுனல் தரூஉம் போக்கரு மரபின்

தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய

நன்மா விலங்கை மன்ன ருள்ளும்

மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்

உறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்

களிற்றுத்தழும் பிருந்த பெயன்மழைத் தடக்கைப்

பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை

நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு

தாங்கரு மரபின் தன்னுந் தந்தை

வான்பொரு நெடுவரை வளனும் பாடி,

முன்னாள் சென்றன மாக விந்நாள்’

முன்னாள் சென்ற பாணன், இந்நாள் செல்லும் பாணனை எதிர்கொள்கிறான். வள்ளல்கள் என்று வையம் புகழ்ந்த எழுவரும் இந்நாள் இல்லை என்கிறான். ஆனால், இந்நாளிலும் அவர் எழுவரின் கொடைத்தொழிலைத்தான் மேற்கொண்டு, வாழ்ந்து வருபவன், ஓவியர்குலத் தோன்றல் நல்லியக்கோடன் என்பவனே. பரிசில் பெற்று வருகின்ற பாணன், தான் பெறுவதற்கு முன்னிருந்த ஏழ்மைநிலையை எடுத்துச் சொல்கிறான். பரிசில் பெற்றுத் திரும்புகின்ற இப்போதோ, நல்லியக்கோடனிடமிருந்து பெற்றுவரும் தேர், யானை, பல்வேறு பொருள்கள் குறித்தும் பேசுகிறான். எதிர்வரும் பாணனும், அவனிடம் சென்றால், அனைத்தையும் பெறலாமென்றும் கூறுகிறான். நல்லியக்கோடன், விரிகடல் சூழ்ந்த பெருநிலப்பரப்பைக் கொண்டவன்; ஈரமுள்ள அவன், வீரமுள்ளவனாகவும் இருக்கிறான்; தினவெடுத்த திண்டோளும் கொண்டவன்; நீராடும் மகளிர்க்கு மணப்பொருளும் மலர்மாலையும் கொடுப்பவன்; குற்றமற்று விளங்குபவன்; பழுதில்லாததும், குறி தப்பாததுமாகிய வாளொடு விளங்குபவன்; பெரும்புலியின் பெருவீரம் கொண்டவன்; வீரத்தின் அடையாளமாகிய விழுப்புண்ணை உடலில் தாங்கியவன். அத்தகு நல்லியக்கோடன், இருக்குமிடம் அருகில்தான் உள்ளது என்கிறான். வானளவு உயர்ந்தோங்கி நிற்கும் அவனது பெருமலசிறப்பைக் கூறுகிறான். வள்ளலின் உயர்பண்புகளையும், கொடைச் சிறப்புகளையும் கூறி, எதிர்வந்த பாணன் விரும்பியவற்றையெல்லாம் வரையாது வாரி வழங்குபவன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *