POST: 2021-07-24T10:13:19+05:30

ஈரமான நினைவுகள் ….

டாக்டர்.ஒளவை நடராசன் கவிக்குயில்களின் சரணாலயம்!

இதுவரை நான்
கவிஞர் வைரமுத்து

முதற் பதிப்பு அக்டோபர் 1983

என் கல்லூரி நாட்கள் ….
ஒரு நாள்…
டாக்டர். ஔவை நடராசன் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து
இந்தா ஈற்றடி எழுது

இது ஓர் ஈற்றடி-
சரிதானா சொல்லுங்க என்று வினவினார்.

உடனே, தப்பு என்றேன்.

ஈற்றடி இந்தா எழுது என்று இருந்தால் சரி என்றேன்.

(பக்கம் 76)

நட்சத்திரங்களைப் பற்றி ” ஒலிப்பூக்கள் ” என்ற தலைப்பில் என்ற ஒரு அகவல் ஆரம் கட்டியிருந்தேன்.

அதன் படிம அடுக்குகளை பார்த்து புலவர் தமிழ்ப்பித்தன் வியந்தார்.

நட்சத்திரங்களைப் பார்த்து
எந்தக் கண்ணகி எதை உடைத்தாளோ ?

இந்தப் பரல்கள் எப்படி வந்தன ?

மின்மினிப் பறவைகள் மேகக் கிளைகளில்
பொன்மணிக் கூடுகள் புதுப்பித்தனவா ?

வெள்ளிச் சிமிழ்கள்;
விசும்பு வயலில்
நள்ளிருள் நடத்தும் நாற்று நடுவுகள்
சுந்தர மங்கையர் சொர்ச்ச நாட்டிலே
செந்தளிர் குழந்தையைச் செவியோடு அணைத்துத்
தாய்ப்பால் கொடுக்கையில் தவறிய துளிகள் !

காய்த்துச் சிதறிய கற்பக விதைகள் !
கண்டேன்;
கண்டதைக் கண்களில் ஏந்தினேன் !
எண்ணிப்பார்க்க எண்ணிப் பார்த்தேன்
எண்ணுவது எப்படி ?
என்னைப் பார்த்தேன்.

( வைகறை மேகங்கள் …பக்கம் 20 ….)

என்றெல்லாம் நான் எழுதியிருந்த அந்த அகவல், ஓவியர் குமார், ஓவியர் முத்து இவர்கள் வரைந்த சித்திரங்களோடு தமிழரசு பத்திரிக்கையில் ஒரு முழு பக்கமாக விசுவரூபம் எடுத்து வெளிவந்தது.

அந்தக் கவிதையைப் படித்து விட்டுத்தான் அருமை அண்ணன் ஔவை நடராசன் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துப் பாராட்ட வேண்டுமென்று பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தார்.

அன்று வகுப்பறையில் இல்லை.

பூக்களை வாசிக்கப் புல்வெளிக்கு போயிருந்தேன்.

திரும்பி வந்த பார்த்தபோது எனக்காக ஒரு கடிதப்பூ காத்திருந்தது.

அன்புள்ள வைரமுத்து !
ஒளிப்பூக்கம் படித்தேன்;
உள்ளம் சிலிர்த்தேன்.

உங்கள் சுந்தர வார்த்தைகள்
என்னைச் சொக்க வைத்தன.

உங்கள் விரல்கள் வெல்க !

என்று கடிதமெழுதி ஔவை கையொப்பமிட்டிருந்தார்.

ஓ ! அறிமுகமில்லாத ஓர் அறிஞன் எனது வாசல் தேடிவந்து வாழ்த்தியிருக்கிறானே !

எனது இதயம் சிலிர்த்தது.
விழிகள் வியர்த்தது!

டாக்டர். ஔவை நடராசன் கவிக்குயில்களின் சரணாலயம்.

ஒரு சரணாலயமே இந்தக் குயிலைத் தேடி வந்ததே என்ற குதூகலித்து குதித்தேன்.

ஆனால், அடுத்த நாளே அவரைச் சந்திக்க ஆசைப்படவில்லை.

அவரது வாழ்த்துக்களை நான் மதித்தேன்.

(பக்கம் 153,154,155 .)

ஆருயிர் அண்ணன் டாக்டர் ஔவை நடராசனோடு நான் கொண்ட இலக்கிய நட்பு என் இலக்கியப் பயணத்தில் ஓர் அழிக்க முடியாத அத்தியாயம்.

தன் கிளைகளையும் விழுதுகளையும் விரித்து அத்தனை பறவைகளுக்கும் நிழல் கொடுக்கும் ஆலமரம் அவர்.

ஆஸ்துமாகாரன் கூடி இமயமலையைப் பாராட்டுவது போல அவரை ஒப்புக்கொள்ளாதவர்கள் கூட அவரது சொக்கத் தமிழில் சொக்கிக்போகிறார்கள்.

அப்போது தான் முளைத்துக் கொண்டிருந்து எனக்கு அவரது பாராட்டு மழையானது,
விமர்சனம் வெயிலானது.

எனக்கு வாழ்த்துக் கடிதம் தந்தமைக்கு அவருக்கு நன்றி தெரிவிக்க ” வைகறை மேகங்களோடு ” சென்றபோது அவர் அதிலுள்ள கவிதைகள் ஒன்றுவிடாமல் ஒப்பித்தார்.

டாக்டர் ஔவை நடராசன் தமிழகத்தின் முன்னணிக் கவியரங்குகளுக்கு என் பெயரை முன்மொழிந்தார்.

(பக்கம் 171,172 …..)

புலவர் பொன்னிவளவன்,
கவிஞர் குடியரசு,
புலவர் ஆடலரசு,
தஞ்சைக் கூத்தரசன்,
கிறித்துவக் கல்லூரி நண்பர் பேராசிரியர் இராசகோபாலன் போன்ற இலக்கிய பெருமக்களோடு அண்ணன் ஔவை நடராசனின் தலைமையில் தமிழகமெங்கும் தமிழ் ஊர்வலத்தில் என் கல்லூரி நாட்களில் நான் கலந்து கொண்டேன்.

ஆரம்பத்தில் என்னோடு கொஞ்சம் ஒட்டாமலிருந்தவர்கள் ,மேடையில் என் தமிழைக் கேட்ட பிறகு தழுவிக்கொண்டார்கள்,

அவர்களோடு சேர்ந்தால் பிணம் கூட சிரிக்காமல் இருப்பது சிரமம்தான்.

மற்றவர்களை காயப்படுத்தாமல் இரத்தம் வரவழைப்பது புலவர் பொன்னிவளவனுக்கு கைவந்த கலை.

(பக்கம் 179 …..)

அண்ணன் டாக்டர் ஔவை நடராசன் அவர்களின் அலுவலகமும் – இல்லமும் இந்தக் குயிலுக்கு வெயில் நேரத்து விருட்சமாயின.

என் சிந்தனையிலும், இலக்கியத்திலும் ஏற்பட்ட மாற்றத்தை அவர் செறித்துக் கொள்வதற்கு கொஞ்சம் சிரமப்பட்டார் என்ற போதிலும் என் மீது அவர் கொண்டிருந்த அன்பில் அணுவளவிலும் அகலவில்லை.

உங்களிடம் வேறு கெட்டப்பழக்கம் எதுவும் கிடையாது,

ஆனால் கவிதையே ஒரு கெட்டபழக்கமாக இருக்கிறது.

கவிதையை ஒரு போதை வஸ்து மாதிரி துய்க்கிறீர்கள் என்பேன்.

அப்போதும் கூட ஔவை இந்தக் குற்றச்சாட்டில் இருக்கும் உவமை நயத்தில் உருகிப்போவார்.

அவரிடம் எங்கள் நேசத்தை ( பொன்மணியுடன் காதலை ) நான் அரை வார்த்தைகளால் வெளிப்படுத்திய போது, அவர் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தார்.

எம்.ஏ முடித்துவிட்டு, கலைத்துறைக்கு போவதாகத் தான் எனக்குத் திட்டம்.

ஆனால், கலைத்துறையை நம்பி கல்யாணம் செய்து கொள்ள முடியாது.

அடுப்பில் நெருப்புக்கு வழி செய்யாமல் நான் வெளியே வேள்வி வளர்க்க முடியாது என்று ஔவை சொன்னபோது,

எம்.ஏ முடித்துவிட்டு வேலை;
பிறகு திருமணம்;
பிறகு இலக்கியம் – கலை,
இதுதான் எனது திட்டமென்றேன்.

அவர் என் பேச்சு வயதுக்கு மீறி இருப்பதாய் எண்ணிச் சிரித்தாலும், அதிலிருக்கும் உண்மையை, உறுதியை மெச்சினார்.

என் கனவுகளின் ரதத்தை விட்டு நான் யதார்த்த வீதிக்கு இறங்கி வரத்தொடங்கினேன்.

(பக்கம் 206 ..).

டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கும், சீரிய பண்பாளர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களுக்கும், பொன்மணிக்கும் எம்.ஏ தேர்வுக்கு முதல் நாள் தெரிவித்துவிட்டு தேர்வு மண்டபத்திற்குள் நுழைந்தேன்.

ஒவ்வொரு தேர்விலும் முதலெழுத்து எழுதியதையும் – முற்றுப்புள்ளி வைத்ததையுமே நான் அறிவேன்.

அந்த மூன்று மணி நேரங்களிலும் நான் விடைத்தாள்களில் விழுந்து, கரைந்து காணாமல் போயிருக்கிறேன்.

(பக்கம் 214 ….)

திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன.

சூரியன் தன் கிரணங்களைச் சுருட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாலை வேளையில் டாக்டர் ஒளவை அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

பிப்ரவரி இரண்டாம் தேதி எனக்குத் திருமணம்.

அன்று மட்டும் உங்கள் கார் வேண்டும் எனக்கு என்றேன்.

அவரது நிலையில் நான் இருந்தாலும் அவரைப் போலவே மௌனமாக மறுத்திருப்பேனோ ?

அதனால் எனக்கு கோபமில்லை. ஆனால் வருத்தமிருந்தது.

இந்த நிகழ்ச்சியைத்தான் பின்னாளில் இப்படி ஒரு கவிதையாக எழுதினேன்.

அடியே காதலி !
என் சம்யுக்தா !

நம்மை
கல்யாண தேசத்திற்குச்
சுமந்து செல்ல
சமூக லாயத்தின்

எந்தக் குதிரையும்
சம்மதிக்காத போது
உன் அரண்மனையிலிருந்து
நடந்தே வந்தோம்
நாம் இருவரும் …

திருத்திய எழுதிய தீர்ப்புகள்
( பக்கம் 33,34 …)

ஆனால் நிஜத்தில் நாங்கள் நடந்து போகவில்லை;
வாடகை குதிரையை வாங்கிக்கொண்டோம்.
( பக்கம் 224,225 )

கலைஞன் பதிப்பகம் திரு. மாசிலாமணி அவர்கள் பழகச் சிறந்த பண்பாளர்.

எதையும் ஊன்றிக் கற்பவர்.

உறுதியாய் விமர்சிப்பவர்.

வித்தியாசமான விஷயங்களைப் பதிப்பிக்கிறவர்.

அண்ணன் ஔவை நடராசன் அவர்கள் அந்த அன்பாளரை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.

என் புதுக்கவிதைகளின் பொறுக்கு மணிகளைத் தேர்ந்தெடுத்ததில் திருத்திய எழுதிய தீர்ப்புகள் தயாரானது.

ஜஸ்டிஸ் மகராஜன் தலைமையில் அண்ணன் மாண்புமிகு
ராஜா முகமது உட்பட பலரும் பங்கு பெற்ற அந்த வெளியீட்டு விழா புதுக்கவிதைக்கு ஒரு திருவிழா என்று போற்றப்பட்டது.

விழாவில் பேசிய கவிஞர் சுரதா தமிழில் உலவிக்கொண்டிருக்கும் பொய்யான புதுக்கவிதைகளையெல்லாம் இந்நூல் முறியடித்துவிடும் என்று முரசறைந்தார்.

திருத்தியெழுதிய தீர்ப்புகள் தமிழகமெங்கும் முளைக்கும் சக்தி கொள்ள நிலங்களையெல்லாம் விதைகளாய் விழுந்தன.

அதை ஒட்டிய ஆண்டுகளில் தான் எந்த அலிபாபாவின் மந்திரத்திற்கும் திறக்காத திரையுலகத்தில் இராட்சச கதவுகள் தெறித்து விழுந்த சத்தத்தின் திசைகளின் விழிகள் திறந்தன.

திரு.மாசிலாமணி அவர்கள் என் கவிதை நூலுக்கு அட்டை படம் வரைந்த அருமை அண்ணன் ஓவியர், திரு.உபால்டு அவர்களை எனக்கு அறிமுகம் செய்த வைத்தார்.

ஒரு மழை மாதத்தின் அதிகாலையில் அண்ணன் திரு.உபால்டு, திரு.பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.

என் பாடல் ஏடும், கவிதை நூலும் கைகளில் கனக்க பாரதிராஜா இல்லத்தில் ஓர் ஆர்வப்பரபரப்போடு அமர்ந்திருந்தேன்.

( பக்கம் 231,232,233 )

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *