உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் – தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலம் நடத்திய செம்மொழி வேந்தர் முத்தமிழறிஞர் கலைஞரின் 98-ஆவது பிறந்தநாள் பெருவிழா
பன்முக ஆளுமையர் கலைஞர்
(16.06.2021 காலை 10.30 மணி
வாழ்த்துரை:-
முனைவர் ஔவை அருள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு அரசு
போராட்டமே வாழ்வின் தேரோட்டம் என்ற தொடருக்கு இலக்கணமாக நாளும் பகை நடுவில் நின்று வென்றவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் .
அறிவொளியின் வெள்ளம் பொங்கிப்பரவி அறியாமை இருளையும்
மூட நம்பிக்கை ,மடமையைக் கலைத்து, மக்கள் மனம் விரிவடைந்து, அகண்ட பார்வையால் அனைவரையும் உறவினராகத் தழுவி , மனிதநலம் காக்கும் மாண்புடைய அறிவுத் தலைவர்களாகக் கொண்டாடத் தமிழினம் விளங்க வேண்டும் என்பதற்கு முன்னோடியாக விளங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்,
மரபின் பெருமிதத்தோடு இந்நாள் முதலமைச்சரின் தந்தையார் எந்நாளும் தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர் கலைஞரை நினைவுகூரும் பொன்னான நாள்.
பேரறிஞர் அண்ணாவிற்கு ஒரு தலைமுறை தம்பியாகவும் தமிழகத்திற்குத் தமிழினத் தலைவராகவும் இருந்தவர்.
ஆரூரில் இளம்பருவத்திலேயே எழுத்துப்பணிக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டு மக்கள் மன்றத்தில் மாபெரும் சிறப்புற்றார்.
எண்ணங்களையெல்லாம் வண்ணமாக்கும் கலைச்செம்மையும் செழுமையும் நிரம்பப்பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய 97 ஆவது பிறந்த நாளினை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சிறப்பாக சூன் 16 முதல் சூன் 30 நடத்துகிறார்கள்.
கலைஞர் பெருந்தகையின் எண்ணற்ற நாடகங்கள், திரைப்படங்கள் ,எழுத்தோவியங்கள் ,கனல் கக்கும் தீப்பொறிகளின் எழுச்சியுரைகள் அனைத்தும் நம்முடைய நெஞ்சில் ஊறியிருக்கின்றன.
குறிப்பாக நம் மொழியைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்ததோடு செம்மொழியை நம் மொழியாக வளமுறச் செய்தவர் முத்தமிழ் அறிஞர் என்றால் அது மிகையாகாது.
திருவள்ளுவரையும், சங்கப்பாடல்களையும் , இளங்கோவையும் இன்றைய வாழ்விற்கேற்ப மீட்டுருவாக்கி நாட்டு மக்களிடையே நடமாடச் செய்த பெருமை கலைஞரையே சாரும்.
திருக்குறளை உயிருள்ள தமிழ் ஓவியமாக்கித் தந்தவர் .
சிலம்பைச் சமூக உணர்வுள்ள நாடகத் திரைக்காவியமாக்கியவர்.
முன்னைப் பழமைக்கும் பழமையான சங்கப்பாடல்களைப் பின்னைப் புதுமையாகப் புத்தாக்கம் செய்து பழமையில் ஒளிந்திருந்த புதுமையைக்கூடப் புதுமையாக வெளிக்கொணர்ந்து இன்றைய தமிழ்ச்சமுதாயத்திற்கு ஏற்ற முறையில் ஏற்றமுற எழிலார்ந்த காவியமாகத் தந்தவர்தான் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் .
முத்தமிழ் அறிஞரின் எண்ணற்ற பணிகளுக்கு மத்தியிலும் எழுபதாண்டுகளுக்கு முன்னர் நடந்த முதல் கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணாவைத் தலைமை தாங்க அழைத்து வழிமொழிந்து பேசிய முத்தமிழறிஞர் கலைஞர் கூறிய தொடர்கள் என்றும் அழியாதவை
”வாழ்வு மூன்றெழுத்து –
வாழ்விற்குத் தேவையாம் பண்பு மூன்றெழுத்து ,
பண்பிலே பிறக்கும் அன்பு மூன்றெழுத்து ,
அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து ,
காதல் விளைக்கும் வீரம் மூன்றெழுத்து ,
வீரர் செல்லும் களமும் மூன்றெழுத்து ,
களத்திலே பெற்றிடும் வெற்றி மூன்றெழுத்து ,
வெற்றிக்கு அழைக்கும் அண்ணா மூன்றெழுத்து ,
அவர் தாங்கும் தலைமை மூன்றெழுத்து ,
காத்திருந்து தங்கள் கட்டளைக்கேற்ப நாங்கள் ஆற்றும் கடமையும் மூன்றெழுத்து”
என்று முழங்கினார்.
முத்தமிழ் அறிஞருடைய புகழ் சொல்லும் பல திட்டங்களை இன்றைய முதல்வர் பொலிவுற நிறைவேற்றுகிறார்.
பேரறிஞர் அண்ணாவிற்காக அவர் எழுதிய வரிகள் முத்தான வரிகளாகும்.
கலைஞர் கூறிய இந்த வரிகள் இன்றும் பொருத்தமானவை.
நீ தந்த விளக்கை எடுத்து நடக்கின்றோம் !
நெய்யிட்டுத் திரியிட்டு உதவுகின்றார் தமிழ் மக்கள்
கடும் மழையில் அணையாமல் காற்றுக்கு நடுங்காமல்
கரம்பொத்திக் கைவிளக்கைக் காக்கின்றோம்
அடித்தளத்து மக்களுக்கு அடுக்கடுக்காய்ச் சாதனைகள்
உங்கள் வழியில் அயராமல் நடப்பதற்குத் துணை நிற்போம் !
என்ற வரிகளுக்கு ஏற்ப நமது அரசு வெற்றி நடையிடுகிறது.
கலைஞரின் படைப்புகளாகப்
10 புதினங்கள்,
06 வரலாற்றுப்புதினங்கள்
25 கட்டுரை நூல்கள்
21 நாடகங்கள்,
16 சிறு கதைகள்
09 கவிதை நூல்கள்,
37 சிறுகதைகள்,
06 உரைநூல்கள்,
01பயண நூல்,
10 தன் வரலாறு
77 திரைப்படங்கள்
02 தொலைக்காட்சித் தொடர்கள்
13 பொன்மொழிகள் சிந்தனைக்கருத்துகள்
12 தொகுதிகள் சட்டமன்ற உரைகள்
3517 உடன்பிறப்புக்கு எழுதிய மடல்கள் (27.10.2016 இல் இறுதிக் கடிதம்)
என ஏராளமாக எழுதியவர்.
75 திரைப்படங்களில் அவரது பங்களிப்பு உண்டு.
13 சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராத தலைவர் அவர்.
அவரின் மேடைப் பேச்சுகளைத் தொகுத்தால்,பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும்.
அண்மையில் கூட ஒரு கணக்கெடுத்திருக்கிறார்கள் முத்தமிழறிஞர் பேசியது எழுதியதைத் தொகுத்தாலே ஏறக்குறைய பத்து இலட்சம் பக்கங்கள் நம் மத்தியில் இருக்கும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.
முத்தமிழ் அறிஞருக்காக ஓர் ஆய்விருக்கையை நிறுவ வேண்டும்.
திருவாசகமணி அவர்கள் ஒருமுறை மிக அழகாக ஆங்கிலத்திலே குறிப்பிட்ட ஒரு தொடரைச் சொல்லி என் பணிவான வாழ்த்துரையை நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
Dr. Kalaingar is a rare phenomenon and a rarer miracle in modern India not only in Tamilnadu.
He is an intellectual giant and a cultural cupid and who sweeped the modern world with a majestic mien and dazzling dyanamism and an inspiring admiration to all at everyone .
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நினைவோட்டமே நிலையாக நம் வாழ்வை நிறுத்துகிறது என்று சொல்லி அமைகிறேன்.
என் உரையை பாங்கற ஒளியிழை செய்து உதவிய அமெரிக்க வாழ் ஆசிரியர் திருமதி தேமொழிக்கு நனி நன்றி

Add a Comment