அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 63
“முத்தாரம் வழங்கிய மு.வ”
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
கல்லூரிகளில் கல்வி நிறுவனங்களில் தமிழ்த் துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பொதுவாகப் புதினம், சிறுகதை எழுதும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்ததில்லை என்றே கருதிய வரையறையை நகர்த்திப் பெரும் பெயரும், உயரிய புகழும் பெற்ற மாபெரும் தமிழ்ப் பேராசிரியராக தமிழகம் கை குவித்து வணங்க மிளிர்ந்தவர் அறிஞர் மு.வ. (25.4.1912-10.10.1974) ஆவார்.
உலகப் புதின வரலாற்றை ஆராய்ந்தால் பெரும்பாலான எழுத்தாளர்கள் செய்தி / வார / மாத / காலாண்டு இதழ்களின் வாயிலாகவே தங்கள் படைப்புக்களையும், புதினங்களை தொடர்களாக வெளியிட்டுச் செல்வமும், செல்வாக்கும் பெற்றனர்.
இதற்கும் விதிவிலக்காக துணைவேந்தர் மு.வ. விளங்கினார்.
இவருடைய பன்னிரெண்டு புதினங்களும் நேர் அச்சு வடிவில் பாரி நிலையத்தின் வெளியீடாக வந்தது என்பது தனிச்சிறப்பாகும்.
மு.வ.வின் புதினங்களைப் படிக்கும்போதே மொழியின் ஒலிவளம், தமிழ்நாட்டின் நில அமைப்பு, தமிழர்களின் வாழ்வுநிலையை எடுத்துச் சொல்லும்போது படிப்பவர் அனைவருக்கும் மொழிப்பற்று மீதூர்ந்து பெருகும்.
புதினம், சிறுகதை, நாடகம், கடித இலக்கியம், பயண இலக்கியம், இலக்கிய வரலாறு, இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறனாய்வு, மொழியியல், வாழ்க்கை வரலாறு, சிந்தனை, குழந்தை உளவியல், சிறுவர் இலக்கியம் ஆகிய எழுத்துத்துறைகளில் வல்லவராக மு.வ. ஒளிர்ந்தார்.
அவருடைய எழுத்தைப் படித்து மதுரையிலிருந்து சென்னைக்குத் தனியாக துணிந்த வந்து பச்சையப்பர் கல்லூரியில் அவர் மாணவராகச் சேர்ந்தவர் என் தந்தையார்.
அப்பா அடிக்கடி எங்களிடம் சொல்வது சென்னைக்கு நான் வந்ததற்கு நான்கு காரணங்கள்.
1. படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் பச்சையப்பர் கல்லூரி
2. பேரறிஞர் அண்ணா பயின்ற கல்லூரி
3. தமிழ்க்கடல் மு.வ. மாணவராக மிளிர வேண்டும் என்ற கனவு
4. மாமன் மகள் தாரா மீது ததும்பிய காதல்
மு.வ.வின் மாணவராக இருந்தாலும் அவரிடம் பாடம் பயின்றாலும் அவரின் அடக்கமான மாணவர் என்ற நிலையை என்னால் பெற முடியவில்லை என்று அப்பா சொல்வார்.
அவருடைய நெருங்கிய நண்பர் இ.சு.பாலசுந்தரம் அப்பாவின் நெருக்க வலையிலிருந்து பிரிந்த நிகழ்வை பேராசிரியர் மு.வ தன் புதினத்தில் ஒரு கதை வாயிலாகவே வரைந்தார் என்றும் சொன்னதுண்டு.
என் பெற்றோரின் திருமணம் நிறைவேறிய பிறகு மு.வ வரைந்த வாழ்த்து மடலை இன்று வரை அப்பா மறவாமல் பேணி வருவதை நல்லாசிரியர் மேல் மதிப்புக்கொண்ட நன் மாணாக்கர் நிலையை அறியலாம்.
திருமண வாழ்த்துக் கடிதம்
“திரு. மு. வரதராசன்,
தமிழ்ப்பேராசிரியர்,
செனாய் நகர்,
சென்னை 600 030.
11.12.1961
அன்புடையீர்,
வணக்கம். திருமண அழைப்பு இன்றுதான் வரப்பெற்றேன். திருமணம் (10.12.1961) நன்கு நிறைவேறியிருக்கும்.
மணமக்கள் நலமெல்லாம் நிரம்பி நீடு வாழ இறைவன் அருள்க.
வாழிய திரு நடராசன்–திருமதி தாரா நடராசன்!
அன்புடன்
மு.வ.”
அப்பா அடிக்கடி என்னிடம் சொல்வது, “எதுவும் பிறக்கும்போதே வருவதில்லை; எல்லாம் பழக்கம்தான்”.
அதேபோல பேராசிரியர் மு.வ.வினுடைய ‘கயமை’ புதினத்திலிருந்து ஒரு மேற்கோளைத் தவறாமல் சுட்டிக் காட்டுவார்.
“கால் புல்தரையிலும் நடந்து பழக வேண்டும்;
கல்மேட்டிலும் நடந்து பழக வேண்டும். இல்லையானால், தொல்லைதான்.
காதும் அப்படித்தான்.
இனிய கொஞ்சுமொழியும் கேட்டு மகிழ வேண்டும்;
கடுமையான வசைச் சொற்களையும் கேட்டுப் பழக வேண்டும்.
செவி கைப்பச் சொல் பொறுக்க வேண்டும்
என்று வள்ளுவர் சொன்னது மூவேந்தர்களுக்கு மட்டுமல்ல உங்கள் மூன்று பேருக்கும்தான்”
என்று அடிக்கடி கல்லூரிக் காலங்களில் அப்பா சொல்லிக் காட்டுவார்.
கூடுதலாக ஒரு தகவலையும் அப்பொழுது சொன்னார்,
“பேராசிரியர் மு.வ.விற்கு மூன்று ஆண்மக்கள், அவர்கள் முறையே, திருநாவுக்கரசு, நம்பி, பாரி. அம்மூவருமே மருத்துவ மாமணிகளாக மிளிர்கிறார்கள்” என்றும் சொல்வார்.
அதேபோல, மு.வ.வின் சிறந்த மாணவர் என்னை வழிநடத்திய பேராசிரியர் எந்தையாரின் நெருங்கிய நண்பர் சி.பா.வின் மூன்று ஆண்மக்கள், முறையே, சேரன், வளவன், செழியன் ஆவார்கள்.
அதேபோல, இவ்வரிசையில் எங்கள் பெற்றோருக்கும் கண்ணன், அருள், பரதன் என மூவரும் ஆண்மக்களே!
அல்லி புனைகதையை 1986ஆம் ஆண்டு கல்லூரியில் பயிலும் போது தொடக்கத்திலேயே வந்த வரிகள் என் நெஞ்சை விட்டு இன்றும் நீங்கவில்லை.
“பெற்றோருக்கு உள்ள மயக்கம் எதுவென்றால் ஒழுங்கு, தெளிவு, முயற்சி, ஊக்கம் ஒன்றும் இல்லாத மகனைப் பற்றி கவலை இல்லையாம்.
இவையெல்லாம் இருந்தும், நன்றாக வாழ்வேன் என்று தெரிந்திருந்தும், எனக்காகக் கவலைப்படுகிறார்கள் பெற்றோர்கள்”.
இக்கதையைப் படிக்கும் பொழுதே எத்தனை இலக்கிய / சமய / வரலாற்றுச் சான்றுகளைத் தன் தெள்ளிய தமிழ் நடையில் உளவியல், நுட்பவியல் அறிஞரைப் போல நூலாசிரியர் எழுதியுள்ளதை நினைந்து போற்றலாம்.
ஓரிடத்தில்
“அறிவின் ஆற்றல் தடுமாறுகிறது; காட்டிக் கொடுக்கிறது. அன்பின் தியாகம் வலுப்படுத்துகிறது; வழுவாமல் காப்பாற்றுகிறது. விவேகாநந்தர், இராமகிருஷ்ணர், நிவேதிதையார் மலைகள், நானோ சிறு மணற்குன்று.
எது குற்றம் என்ற ஓர் கதையை வெளியிடுவதாகவும், வெளியிட்ட நிலையம் பறம்பு நிலையம் என்று தன் நூல்களை வெளியிடும் பாரி நிலையத்திற்குப் புகழ் சேர்க்கும் முறையாக எழுதியுள்ளதையெல்லாம் நுணுகிப் படித்து அறிந்தேன்.
அவர் எழுதிய கதைகள்,
செந்தாமரை (1946),
கள்ளோ காவியமோ (1947),
பாவை (1948),
அந்த நாள் (1948),
மலர்விழி (1950),
பெற்ற மனம் (1951),
அல்லி (1952),
கரித்துண்டு (1953),
கயமை (1956),
நெஞ்சில் ஒரு முள் (1956),
அகல் விளக்கு (1958),
வாடா மலர் (1960),
மண் குடிசை (1961),
அவர் எழுதிய புதினப் பாத்திரப் பெயர்கள் மோகன், மங்கை, செல்வநாயகம், வடிவு, சந்திரன், மெய்யப்பன், அறவாழி, மெய்கண்டார், கமலக்கண்ணர், அருளப்பன், சீராளர், திலகம், பாவை, செந்தாமரை, மான்விழி, மென்மொழி, தேமொழி, ஆணவர், வசீகரன், காஞ்சனை, சந்திரன், கற்பகம், வேலய்யன், கயற்கண்ணி, இமாவதி, மாலன், பாக்கியம்
தமிழ் உலகத்தின் தனிப் பெயர்களாகும். ‘
பாரிமுனை’ என்ற கவினார்ந்த பெயரினை அணிசூட்டியவர் ஈடு இணையற்ற பெரும்பேராசிரியர் மு.வ. அவர்களே.
அவ்வண்ணமே, ‘கள்லோ? காவியமோ? என்ற அவரின் தலைசிறந்த புதினத்தில்
மங்கை பேசும் வரிகள் இன்னும் சிலிர்க்க வைக்கின்றன.
“மானம் வந்தபோது நான்தான் அரசி; என் நாடி நரம்புகள் என் அடிமைகள். என் மனத்தை நான் ஆள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கின்றது. என் உடலுக்கு அமாவாசையாய் என் உள்ளம் என்னும் மானம் இருண்டு தோன்றுகின்ற காலத்திலும், என் ஆட்சியைக் கைவிட்டதில்லை. அப்போதும் காதல் என்னும் நந்தாவிளக்கு எனக்குக் குன்றா ஒளிவீசித் தவறாமல் காக்கின்றது. நிறைகாக்கும் காப்பை இந்த நாடி நரம்புகளின் பேரால் தகர்க்க முடியுமா? இதனால்தான், ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்று அந்த உலகப் பெருந் தலைவரும் கேட்டார்”.
“தான் விரும்பிப் பயன்கொண்ட பழுத்த என் எழுத்துப் பணியிலிருந்து நான் ஓய்வு பெறமாட்டேன், எழுத்து என் உயிருடன் கலந்து விட்டது” என்றெழுதிய பேராசிரியர் மு.வ.வின் பெருமிதம் எல்லையற்றது.
இன்றைக்கு நமது அரசு அறிவிப்பாகவே நூல்களைப் பரிசாகத் தாருங்கள். பூங்கொத்துகளைத் தவிர்த்து விடுங்கள் என்கிறார்கள்.
ஆனால், ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் திருமணப் பரிசுகளாக மு.வ.வின் நூல்களை மட்டுமே பரிசாகவே மகிழ்ந்து வழங்கினார்கள்.
நேற்றைக்குக் கூட வேறு துறையின் சார்புச் செயலர் என்னிடம் நேரில் வந்து மு.வ எழுதிய திருக்குறள் உரையை 300 படிகளை பாரி நிலையத்தில் வாங்கித் தருக என்ற போது பெருந்தகை மு.வ. காலங்காலமாக நினைக்கப்படும் தமிழ்க்கு வாய்த்த தனிப்பெரும் பேராசிரியராவார்.
பேரறிஞர் மு.வ. தன் நூலான ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கத்’திற்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க.விடம் அணிந்துரை பெற்றார்.
ஏனைய நான்கு புதினங்களுக்கும் ‘பாயிரம் மாணவர் தரலாம்’ என்ற நன்னூல் உரைக்கேற்ப பேராசிரியர் மாணவர்களான
அறிஞர் ம.ரா.போ.குருசாமி, சி.வேங்கடசாமி,
கா.அ.சீ. ரகுநாயகன், இரா.சீனிவாசன்
போன்றோர் முன்னுரை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இளங்கலை வகுப்பில் மு.வ.வின் ‘மொழி வரலாறு’ நூல் தான் பயின்ற நூலாகும்.
இயல்பாக எந்த நூலையும் படித்தாலும் பொருள் விளங்கும்படி படிப்பது தான் அனைவரின் முயற்சியாகும். ஆனால் இந்நூலில் ஒவ்வொரு பக்கத்தின் இறுதித் தொடர்கள் பல இலக்கண நுணுக்கம் வாய்ந்தவை.
மொழியியலில் மேனாட்டு அறிஞர்களின் ஆங்கில மேற்கோள்கள் அணிவகுத்து நின்றன.
அதில் குறிப்பாக அந்தந்த ஆங்கிலத் தொடர்களை மிக எளிமையாகத் தன் அருவி நடையிலேயே பேராசிரியரின் மொழிபெயர்ப்பு மிளிர்ந்தன.
சான்றாகப் பழங்காலச் சொற்களாக இராமல் புதியனவாக ஏற்படும் சொற்களானால், அவை ஒப்புமையாக்கம் தவறாமல் ஒழுங்காக அமைகின்றன.
‘காரன்’ என்ற புதிய விகுதி ஏற்கும் சொற்கள், தயிர்க்காரன், வீட்டுக்காரன், பணக்காரன், கடன்காரன், கடைக்காரன் என ஒரே ஒழுங்காக அமைவது காணலாம்.
ஒப்புமையாக்கத்தால் இத்தகைய சொற்கள் பற்பல அமைந்து மிக வேகமாகப் பெருகுதல் உண்டு, அவை பெருகிப் பரவும் வேகம், தொற்று நோய்கள் பரவும் வேகத்தை நினைவூட்டுவதாகக் கூறுகிறார் அறிஞர் எசுபர்சுன்.
இளங்கலை பயிலும்போதே தமிழ் மொழிக்கு பிறமொழிச் சொற்கள் இணைப்பது தேவையில்லை என்பதை மிக நுட்பமாக அறிந்து கொண்டேன்.
அதற்கு ‘மொழி வரலாறு’ பாடம் நடத்தும்போதே இந்த மேற்கோள்தான் என் நெஞ்சில் பசுமரத்தாணி போலப் பதிந்து விட்டது.
இன்றும் பலர் என்னை ஏன் ஆங்கிலச் சொற்களை இணைத்தே எழுதலாமே என்று கேட்கும் போதெல்லாம் எசுபர்சினின் மேற்கோள் தான் நினைவில் நிற்கும்.
“இருள் வானத்தில் ஒளிக் கீற்றாய் மின்னும் சொற்களைக் கடன் வாங்குவதற்குரிய காரணங்கள் மூன்றாகும்.
முதலாவது, தம்மிடம் இல்லாத புதியபொருள்களை அவற்றின் பிறமொழிப்பெயர்களைக் கடன் வாங்குதல்.
இரண்டாவது, ஒரு மொழியாரிடமிருந்து செல்வாக்கோ, உயர்வோ பெற்றுள்ள ஒரு துறையைக் கற்கும்போது அதற்குரிய அம்மொழிச் சொற்களையும் கற்றும் கையாளுதல்.
மூன்றாவது, மொழிபெயர்ப்பாளர்கள் சோம்பலின் காரணமாக, தம் மொழிச்சொற்களைத் தேடிக்காணாமல், பிறமொழிச் சொற்களை அப்படியே கொண்டு வந்து கலந்து சேர்த்தல்.”
கடித இலக்கியங்களில், தங்கைக்கு, நண்பருக்கு என்று பேராசான் மு.வ. வரைந்த கடிதங்கள் கருத்துக் கருவூலங்களாகும்.
நண்பருக்கு என்று ஒன்பது கடிதங்களை நம்பி என்பவர் வளவனுக்கும் எழிலுக்கும் எழுதுவது போலப் பாங்குறத் தன்னுடைய வாழ்வியல் கருத்துகளை எழிலார்ந்த நடையில் எழுதிய கடிதங்கள் தமிழுலகத்திற்குப் பெருங்கொடை எனப் போற்றலாம்.
எழிலுக்கு ஓரிடத்தில் எழுதும்போது, உலக மக்களுக்குப் புரிய வேண்டும் என்ற பெருமனத்தைக் குறிப்பிடுகிற வரிகளை என் கருத்துக் கருவூலத்தில் 30.07.1986 அன்று குறித்திருந்தேன்.
“வேகமான உணர்ச்சி கானாறு போன்றது. நமக்கும் பயன்படாமல் விரைவில் வடிந்து போகும்.
கானாற்று வெள்ளம் திறந்த மலைக்கும் காட்டுக்கும் பயன்படாமல் அடுத்துள்ள காட்டுக்கும் மேட்டுக்கும் பயன்படுகிறது.
வேகம் மிகுந்த உணர்ச்சியும், தற்காப்புக்குப் பயன்படுவதில்லை. தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படுவதில்லை.
உறங்கும் எதிரியைத் தட்டியெழுப்பி விழுப்புடன் வாழுமாறு செய்து காப்பாற்றுவதற்கே மறைமுகமாகப் பயன்படுகிறது.”
என்ற அவரின் ஆணை வரிகளை நம் வாழ்வின் கல்வெட்டு வரிகளாகப் பொறிக்க வேண்டும்.
——
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
பொருநராற்றுப்படை
பொருநராற்றுப்படையென்ற தொடர் – பொருநரையாற்றுப்படுத்தும் நூல் எனப்பொருள்படும்:
இரண்டாம் வேற்றுமைத்தொகை. ஆற்றுப்படை – வழியிற்செலுத்துவது என ஏழாம் வேற்றுமைத் தொகை. இங்குப் பொருநரென்ற சொல், ஒருவரைக்கூறும் பன்மைக்கிளவியாகும்.
பொருநர்.மற்றொருவர் போல வேடங்கொள்பவர் : இப்பொருநர், ஏர்க்களம்பாடுவோர் போர்க்களம்பாடுவோர் பரணி பாடுவோரெனப் பலர்.
அவர்களுள் இப்பொருநன் . போர்க்களம் பாடுபவன் :
இவ்விஷயம், “போந்தைத்தோடுங் கருஞ்சினை, அரவாய் வேம்பினங்குழைத்தெரியலும், ஓங்கிருஞ்சென்னி மேம்படமிலைந்த, இருபெருவேந்தருமொருகளத்தவிய, வெண்ணித்தாக்கிய வெருவருநோன்றாட், கண்ணார்க் கண்ணிக் கரிகால்வளவன்”
எனப் – போர்க்கள வெற்றியை எடுத்துக் கூறுதலாலும், இப்பொருநன் தடாரிப்பறை கொட்டுபவன் என்பது “கைக்கசடிருந்தவென் கண்ணகன்றடாரி,…ஒன்றியான் பெட்டாவளவையின்” என வருவதாலும் அறியப்படும்.
ஆற்றுப்படை யென்பது – கூத்தர் முதலியவர்களுள் ஒருத்தர் கொடையாளியான ஒருவனிடத்துத் தாம் பெற்ற செல்வத்தை எதிர்வந்த இரப்போர்க்கு உணர்த்தி அவரும் அந்தக்கொடையாளியினிடம் தாம் பெற்றது போலவே பொருளைப்பெறுமாறு வழிப்படுத்துவது.
இது.புறப்பொருளான பாடாண்டிணையின் துறைகளுள் ஒன்று.
இதன் இலக்கணம்- “கூத்தரும் பாணரும் பொரு நரும் விறலியும், ஆற்றிடைக்காட்சி யுறழத்தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க்கறிவுறீ இச், சென்று பயனெ திரச்சொன்ன பக்கமும்” என்று தொல்காப்பியத்துக் கூறப்பட்டுள்ளது.
இதன் பொருள்:-ஆடல்மாந்தரும் பாடற்பாணரும் கருவிப்பொருநரும் இவருட் பெண்பாலராகிய விறலியும் என்னும் நாற்பாலரும் – தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவித்து, அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவை யெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும் என்பது.
ஒவ்வொருவரும் இங்ஙனம் தாம். பெற்ற செல்வத்தை இரவலர்க்கு அறிவுறுத்தி வழிப்படுத்துதற்கு உரியராயினும், கூத்தர் முதலியோரே எதிர்வந்த கூத்தர் முதலியோர்க்குத் தாம் பெற்றதைக் கூறி அவரை வழிப்படுத்துவதாகச் செய்யுள் செய்வதே கவிமரபு.
இங்ஙனம் இயற்றப்பெற்றவை-
கூத்தராற்றுப்படை பாணராற்றுப்படை பொருநராற்றுப்படை விறலியாற்றுப்படை என வழங்கும்.
இந்தப் பொருநராற்றுப்படை, நக்கீரனார் முதலிய கடைச்சங்கப் புலவர்களாலியற்றப்பட்ட பத்துப்பாட்டுக்களுள் இரண்டாவது. பத்துப்பாட்டுக்களான – திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு,
மதுரைக்காஞ்சி,
நெடுநல்வாடை,
குறிஞ்சிப்பாட்டு,
பட்டினப்பாலை,
மலைபடுகடாம்
என்பன.
(இவைகளைப் பத்துப்பாட்டு எனத் தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் இன்னாரென விளங்கவில்லை.)
இந்நூல்- 248 – அடிகளையுடைய நேரிசையாசிரியப்பாவாலாகியது: இந்த ஆசிரியப்பா முழுதும் ஓரோசையாக அகவலோசையே கிடப்பின் படிப்போர்க்கு ஊக்கங்குன்றுமென்று 177 – அடிகளுக்குப்பின் படிப்போர்க்கு ஊக்கம்பெருகுமாறு இருசீர்வஞ்சியடிகள் 46 – இடையிடையே வரத் தொடுத்து அகவலோசையன்றி வேற் றோசையாகிய தூங்கலோசை முதலியன விரவிவரப் பாடிய ஆசிரியரின் திறமை மிகவும் பாராட்டுதற்கு உரியது:
ஆசிரியப்பாவில் வஞ்சியடிவரலா மென்பதை ” ஆசிரியநடைத்தேவனஞ்சி ” என்று தொல்காப்பியனார் பெறவைத்தமை காண்க.
186 – ஆவது அடியை ” ஈற்றி யாமை தன்பார்ப் போம்பவும் ” என நாற்சீரடியாகப் பிரிக்கவும் இடமுண்டு.
ஈற்றயலடி முச்சீரடியாலமைந்தது, இச்செய்யுள் நேரிசையாசிரியப்பாவாதலாலாகும்.
இஃது பரிசில்பெறக் கருதிய ஒருபொருநனை, பரிசில் பெற்றானொரு பொருநன் இளஞ்சேட்சென்னிபுதல்வனாகிய கரிகாற்பெருவளத்தானிடத்திற் செல்லுமாறு வழிப்படுத்தியதாகக் கற்பித்து முடத்தாமக்கண்ணியார் பாடியது: (தாம் ஒருபொருநனாகவும், மற்றொருபொருநனைத் தமக்குப் பரிசுகொடுத்தவனிடத்தே ஆற்றுப் படுத்துவதாகவும் இவ்வாறு படைத்துக்கொண்டு கூறுதல், கவி மரபு.)
இதனை இயற்றியவர்-முடத்தாமக்கண்ணியார்: “இயற்பெயர் முன்னர்” என்னுஞ் சூத்திரவுரையில் ‘ ஆர் ‘ விகுதி பன்மையோடு முடிதற்கு முடத்தாமக்கண்ணியார் வந்தாரென்பது உதாரணமாகக் காட்டப்பெற்றிருத்தலால், இவர்பெயர் ‘ முடத்தாமக்கண்ணி ‘ என்று தெரிகின்றது. இப்பெயர் உறுப்பால் வந்ததென்றும், இவர் பெண்பாலாரென்றும் கொள்ள இடமுண்டு. இவரைப்பற்றி வேறுவிவரமொன்றும் தெரியவில்லை.
ஆசிரியர் நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டுக்கும் உரையெழுதியுள்ளார்.
அவ்வுரை இல்லாவிடின், இக்காலத்தார்க்குப் பத்துப் பாட்டுப்போன்ற பழைய நூல்களுக்குப் பொருள் ஒருசிறிதும் புலப்படாது :
ஆயினும், அவ்வுரையை உள்ளபடியே பதிப்பித்தால், அவ்வாசிரியர் சில இடங்களில் இங்கே ஒரு சொல்லையும் எங்கேயோ கிடக்கும் மற்றொரு சொல்லையும் பிணைத்துப் பொருள் கூறும் வழக்கமுடையராதலால் நேராகச் சொல்லக்கூடிய பொருள் தவறுதலாலும், மாணவர்க்குப் பொருள் விளங்குவது அருமையாமாதலாலும் அங்ஙனஞ்செய்யாது, பெரும்பாலும் அவ்வுரையை ஆதாரமாகக்கொண்டு, நேராகவே பொருள் சொல்லுதற்கு உரியனவாத் தோன்றுமிடங்களில் வருந்திப்பொருள் கூறாது நேராகவே அந்வயித்து எளிய நடையில் இவ்வுரை எழுதப்படுகிறது.
கரிகாற்பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தக்கருதும் பொருநன் ஆற்றுப்படுத்துபவனை நோக்கி, ‘பரிசில்கொடுப்பாரைத்தேடிச் செல்லும் நீ வேறு வழியிற்போகாது என்னையெதிர்ப்பட்டது, உனது முன்னைய நல்வினைப் பயனே’ என்று முதல் 59 – அடிகளில் அன்னான் தன்னை வழியிடைக் கண்டதைப் பாராட்டிக் கூறுகின்றான் : முதலில் மூன்று அடிகளால் ஆற்றுப்படுத்துபவன் ஆற்றுப் படுத்தக்கருதும் பொருநனை விளிக்கின்றான்:
1-3: அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது
வேறுபுல முன்னிய விரகறி பொருந !
(1) அறா அ – இடையறாத, யாணர் – செல்வவருவாயினையுடைய, அகல் தலை – அகன்ற இடத்தையுடைய, பேர் ஊர்-பெரிய ஊர்களிடத்து,
(2) சாறு கழி வழி நாள் – விழாக்கழிந்த பின்னாளில், சோறு நசை உறாது – (அங்கே பெறுகின்ற) சோற்றை விரும்பு தல் செய்யாமல்,
(3) வேறு புலம் முன்னிய – (விழாக்கொண்டாடும்) வேறோரிடத்தை (அடைய)க் கருதிய, விரகு. அறி-உபாய்த்தை யறிந்த, பொருந-பொருநனே!
திருவிழா நடந்து முடிந்த ஊரிலே பின்னுஞ்சோறு
கிடைக்குமென்றாலும் அங்கே தங்கியிராது புதிதாகத் திருவிழா நடக்கும் வேறூரை நாடிச்செல்பவன் இந்தப் பொருநனென்க.
திருவிழாக் கழிந்தபின்பும் இரண்டொருநாள் அங்கு உணவுகிடைக்குமேனும் உணவு இடுபவர் வெறுக்குமளவும் அங்குத்தங்குவது நன்று அன்று என்றுகருதி, திருவிழாநடக்கின்ற வேற்றுப்புலத்துக்குச் செல்வதனால், பொருநனுக்கு ‘விரகறி’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
திருவிழாக்காலங்களில் பலர்க்கும் உணவு இடுதல் முற்காலத்து இயல்பு என்பது, இதனாற் பெறப்படும்.
பொருந-அண்மைவிளி: “அண்மையினியல்பு மீறழிவும் ” என்பது,4 – ஆவது அடிமுதல் 24 – ஆவது அடிவரை, பொருநனுடன் செல்லும் பாடினி பாலையாழ் வாசித்துக்கொண்டு பாடுவதைக் கூறுகின்றான் :
அவற்றுள் 19-அடிகளால் அந்தப்பாடினி வைத்துக்கொண்டுள்ள பாலையாழ், பத்தல் முதலிய உறுப்புகளைக் கொண்டிருத்தல் கூறப்படும்.
4: குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
குளம்பு வழி அன்ன – ( மானின் ) குளம்பு அழுத்திய இடத்தையொத்த, கவடு படு – இரண்டருகுந் தாழ்ந்து நடு உயர்ந்த, பத்தல் – பத்தலினையும், குளம்பு – விலங்குகளின் அடிப்பாதம். பத்தல் – குடுக்கை போலுள்ளயாழின் ஒருறுப்பு. கவடு – பகுப்பு.
“கொன்றைகருங் காலிகுமிழ் முருக்குத் தணக்கே” என்பதனால், பத்தற்கு – மரம், குமிழும் முருக்கும் தணக்குமாமென்பர். (கோட்டிற்கு மரம் கொன்றையும் கருங்காலியுமாம். கீழ் 13 – ஆம் வரி உரைகாண்க.)
வளரும்…
– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment