சொல்லின் செல்வர் சுகி சிவம் வெளியிடும் இணைய இதழ் – ஒளி பரவட்டும் – மே மற்றும் சூன் மாத இதழ்களில் என் கட்டுரை…
“ வலம்புரியில் பிறந்த வார்த்தை வளம் ”
சொற்கள் எங்கிருந்து பிறக்கின்றன என்றால் நூல்களில் தேங்கியுள்ளன என்று நமக்கெல்லாம் தெரியும்.
ஆனால், என்னைப் பொறுத்தவரை அவையெல்லாம் வார்த்தைச்சித்தர் வலம்புரி ஜானின் நாவில் இருந்து வருபவை என்று அவருடைய ‘பாரதி-ஒரு பார்வை’ என்ற நூலில்,
கவிதை என்றால் என்ன என்று எழுதியபோது அருவியாக விழுந்தன.
“கவிதை என்பது சுகமான சொற்களின் சொர்க்கவாசல் திறப்பல்ல;
கவிதை என்பது பசும்புல் தலைகளில் பனிக்குடங்களை முத்தமிடவருகிற மோகக்காற்றல்ல;
கவிதை என்பது வெள்ளை அன்னத்தின் கொள்ளை வனப்பை அள்ளி விழுங்கிட ஆரோகணித்து வரும் வெண் நுரைப் பூக்கள் அல்ல;
கவிதை என்பது விழுந்த அடியில் விழைந்த வீக்கம்;
கவிதை என்பது இதயக்கதவுகளின் இறுக்கமான கீறல்களின் வழியாக ஒரு கோடி கல் வரைக்கும் படர்ந்து பரவும் ஓலம்;
கவிதை என்பது போகிற போக்கில் போக்கை விதிக்கும் புதுவெள்ளம்;
கவிதை என்பது சாயாத கோபுரங்களின் சரியாத பிரகடனம்!
கவிதை என்பதை சினம் – சீற்றம் – எழுச்சி – ஏக்கம்.
கவிதை என்பது கனவு – கவிதை என்பது நிழல் – கவிதை என்பது நகல் – அசல் – அனைத்தும்”
என்று, நான் 18.12.1985 காதும் கண்ணும் பதித்துக் கொண்ட கருத்துக் கோவையாகும்.
அக்காலங்களில் எங்களுடைய அண்ணாநகர் இல்லத்திற்கு நாள்தோறும் பல செய்தி இதழ்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்.
அதில் குறிப்பாக, வாரம் தவறாமல் நான் விரும்பிப் படிக்கும் இதழாக ‘தாய்’ இதழ் அமைந்தது.
தாய் இதழில் என்னை மிகவும் கவர்ந்தது கடைசிப்பக்கத்தில் ஆசிரியர்ப்பகுதியும், அவருடைய கேள்வி-பதில் பகுதியும் தான்.
ஒருமுறை ஒருவர் வினா தொடுத்திருந்தார்.
பின்னணிப்பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் குரல் வளத்தையும், பாடகர் ஜேசுதாஸ் குரல் வளத்தையும் ஒப்பிட்டுச் சொல்லுங்கள்?
அதற்கு, ‘ஞானபாரதி’ வலம்புரிஜான் சொன்ன பதில் இன்னும் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது:-
எஸ்.பி.பி.-யின் குரல் வளம் ‘மாந்தளிரைக் கோத வைக்கும் குயிலின் குளிர்காலக் குரலைப் போல’ இருக்கும்,
ஜேசுதாஸின் குரல் வளம்
‘ஆலோலத் தென்றலிலே அசைகின்ற ஆலய மெழுகுவர்த்திகள் உருக்குகின்ற மௌன சங்கீதத்தைப்போல’ இருக்கும்.
ஒருமுறை விஜய் தொலைக்காட்சியில் நண்பர்கள் பாலகிருஷ்ண்ணும், சொல்லின் செல்வர் மணிகண்டனும் வடிவமைத்த
‘சொல்லப்பட்ட சுவையோ ஆறு, சுல்தான் தொட்டால் ஏழு’
என்ற சமையல் நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினராக ‘கலைமாமணி’ வலம்புரிஜான் பங்கேற்றார்.
அப்பொழுது அவரிடம் ஒரு சுவையான ‘கேக்’ ஒன்றை அவர் அருகில் வைத்து இதைப்பற்றி நீங்கள் பேசவேண்டும் என்று நான் கேட்டபொழுது,
தான் பேசுவதற்கு முன்பு மீண்டும் சுவைத்து பார்ப்பதற்காக அக்கேக்கை மீண்டும் கேட்டுவிட்டு மீண்டும் கேட்க வைத்ததனால் ‘கேக்’ என்று பெயர் வந்ததோ என்று சொல்லித் தன் பேச்சைத் தொடங்கியது என் நினைவிலிருந்து இன்னும் நீங்கவில்லை.
தாய் இதழின் தொடக்க இதழில் அவர் எழுதிய வரிகள் பொன் வரிகளாகும்.
‘தாய் பிறக்கும் நாளும் வரும், வாய் மணக்க ஊர் புகழும், போட்ட முதல் அசலாகும், புதுப் பாட்டின் நகல் ஆகும்.
வார்த்தைச் சித்தர் தான் பேசுகிற ஒவ்வொரு கூட்டத்திலும் அவருக்கே உரிய குரல் தொனியில் தொடங்குகிற கவியரசு கண்ணதாசன் இயற்றிய வரிகள்,இளைஞராய் இருந்த என்னை மிகவும் ஈர்த்த வரிகளாகும்.
கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமைமிகு நிலப்பிறப்பின்
முதற்பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தருமுன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதிமதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே!
நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண்புலவர்
தன்னை வணங்குகின்றேன்.
வலம்புரியார் அதிகமாகப் பிறரைப் புகழ்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அவருடைய பதில்:-
“நீல வண்ண நீர்த்தீவில் சிறகுப் படகுகளில் சில்லிடுகிற செம்போத்துப் பறவை உயரமாகப் பறக்கிறது என்பது அதன் குறைபாடல்ல; இருட்டு இராத்திரிகளில் ஒரு வெளிர் நீலப்பூ இதழவிழ்ந்து தேன் விதைப்பது அதன் குற்றமல்ல; குயிலுக்குப் பாட்டும், மயிலுக்கு ஆடலும் அவைகளைக் கேட்டுக்கொண்டு வருவதல்ல.”
பதினெட்டாண்டுகளுக்கு முன்பு (18.04.2003) இலங்கையில், கம்பன் கழக விழாவில் அவரை நான் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபொழுது, ‘அப்பாவின் உரைகளை எழுத்தாய்ப் பதிவு செய்ய இயலவில்லை என்ற குற்றச்சாட்டு என்மீது விழுந்துள்ளது. என்ன செய்யலாம்?’ என்று கேட்டபொழுது, சிரித்துக் கொண்டே அவர் சொன்னார்,
“அருள்! ஒரு பறவை பறந்து போகிறது. பறக்கும்போதே இறகுகள் ஆங்காங்கே உதிரத்தான் செய்யும், உடனே, பறக்கிற பறவை கீழே இறங்கி வந்து தன் அழகான இறகுகளைக் கொத்திக் கொத்தித் திரட்டிக் கொண்டிருந்தால் பயணம் தடைபடும் அல்லவா? எனவே பறப்பதுதான் பறவைகளின் செயல்; சிறகுகளைச் சேகரிப்பதல்ல” என்றார்.
அவருடைய ஒவ்வொரு சொற்களும், நட்சத்திரக் கனகாம்பரங்கள். சான்றாக,
காத்திருக்கும் வரை நான் காற்று, புறப்பட்டால் புயல்
தொண்டை பழுதாகிற போதும் ஆற்றுகிற பொதுத் தேர்தல்த் தொண்டை மறக்கக்கூடாது.
நான் விதையைப் போன்றவன், விரல்களிலேயே இருந்தாலும் நான் விருட்சமாவேன்.
நினைத்ததும் பாடுகிற நிர்மலமான இந்த இளைஞருக்கு வீங்கு புகழ் வரவும் – ஓங்கு புகழ் வரவும் தாய் அன்போடு வாழ்த்துகிறது.
வெட்டுக்கிளிப்போல துள்ளித் துள்ளிப் போகிற அறிவு நதி
விதையாக விழுந்திருக்கிறார், இனி விளைவாக எழுவார். நமது கனவு மாளிகைக்கு கந்தர்வத் தூணாக எழுவார்.
தாழைமடலில், சந்தனக்குழம்பு கொண்டு, பித்திகை அரும்புகளால் பின்னிராப் பொழுதுகளில் முத்திரைக்கவிதை – முழுநிலாக் கவிதை – சித்திரைக் கவிதை – சீதளக் கவிதை…
மத்தாப்பூ மனிதர், கித்தாப்பு மொழிக்காரர்.
நுரைப் பூக்களின் நூதனமான சங்கீதம்.
வாழும்போதே வரலாறு ஆகிறார்.
வானங்கள் நமக்கு எல்லைகள் அல்ல.
புத்தராவது எட்டாத வானத்தில் கிட்டாத நிலவு.
வெண்பனி இமயத்திற்கு முன்பாகக் கைகட்டி நிற்கிற வெளிறிப்போன கூழாங்கல்லாக நான் உணர்கிறேன்.
மாளாத நினைவுகள் மருளாத உணர்வுகள்.
ஆறு என்றால், தயங்கித் தயங்கி ஓடுகிற ஒரு தண்ணீர் விரிப்பு. நதியென்றால் விரிந்த சடை போல வெள்ளம் மணலை ஊடறுத்துப் போவது.
உன் எதிரிகளைச் சொல், இதோ! உன்னை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன்.
எந்தப் புத்தகம் உன்னை புரட்டிப் புரட்டித் தூங்கவிடாமல் விழித்துக்கொள்ளப் பண்ணுவதாக இருந்தால் அதுவே விழுமிய புத்தகம்.
எப்போதும் வருவதல்ல கவிதை, எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை. இதயம் கனத்தால் வருவது கவிதை!
நதி குளிக்கப்போகிறது.
நீலம் நிறமல்ல.
தரைக்கு வராத தாகமில்லாத சூரியன்.
ஆகாயத்தோப்பின் அகத்திப்பூ.
சொல்லிவிடுவது வசனம்; சொல்லாமல் விடுவது கவிதை!
பிச்சிப்பூச் சொற்கள்.
நான் காற்றைச் சுவாசிப்பதில்லை, நம்பிக்கைகளை நான் சுவாசிக்கிறேன்.
அடுத்தவர் மேல் ஆயுதம் செலுத்துவது மதவெறியாகும்; அன்பு செலுத்துவது மதநெறியாகும்.
வார்த்தைகள் நடந்தால் வசனம்; நடனமாடினால் கவிதை.
கந்தர்வ அழகோடு நுரைத்துச் சிரிக்கிற நுங்கு நடை.
அந்தகாரத்தின் அசுர ஆட்டம்.
விழிப்புருவங்களை வில்லாக்கி விடுகிறது.
எட்டாத வானத்தில் கிட்டாத நிலவுகள்.
முதலை ஆள்பவன் முதலாளி; தொழிலை ஆள்பவன் தொழிலாளி.
கிழக்கு வானம் சிவக்காமல் இருக்கலாம்; கீழ்வானம் வெளுக்கவில்லை.
கபாலங்களுக்குள் முள்ளிச்செடிகள் முளைத்து விட்டன.
சமூக அநீதிக்குச் சாமர வீசிகள் வந்துவிட்டார்கள்.
மேற்கு நாடுகளில் அமைதியைத் தேடி அலைகிற பலரும் கிழக்கத்திய கலாச்சாரத்தின் கிண்கிணிக் கிரீடமான யோகாவைத் தரித்துக் கொள்கிறார்கள்.
இங்கே மழை கூட விசிறிக் கொண்டே விழுகிறது; காற்றுக்கூட இருமிக்கொண்டே நடக்கிறது.
கொடிமரங்களுக்குப் பூச்சி மருந்து அடிப்பதே வரலாறாகி விட்டது.
சிங்கம் செத்துக் கிடந்தாலும் சரி, அதன் கம்பீரத்தைக் களவாட முடியாது.
ஒருநாள் உதயராகம் பாடியே தீரவேண்டிய பாட்டு வானப்பறவை.
பாதரசப் பளபளப்பு.
நுரைத்த பூக்களின் நூதன சங்கீதம்.
செல்லாக்காசின் பொல்லாக் கோபம்.
புதிய ரேகைகளைப் புறப்பட வைத்த பூகோளப் பொறிவண்டு
விழுதுகளின் ஆட்டத்தை விமர்சிக்கும் கிளிகளுக்கு விதைக்குள்ளே உயிர் உறங்கும் வித்தகத்தை யார் உரைப்பார்?
என் இனிய நண்பர் ,சதீஷ்குமார் சீனிவாசன் 1987 ஆம் ஆண்டு தாய் வார இதழில் அண்ணல் காந்தியடிகள் குறித்த கவிதையை ….
ஒரு கல்லறையின் கண்ணீர்!
நீ
பயன்படுத்திய கண்ணாடியையும், தடியையும் பத்திரப்படுத்தினவர்கள்
நீ பயன்படுத்தச் சொன்ன பலவற்றை பறி கொடுத்து விட்டார்கள்.
பாவம்…. நீ
எங்களுக்கு வாங்கிக் கொடுத்தது விடுதலை என்று சந்தோஷப்படுகிறாய்; உனக்கு எப்படி தெரியும்;
அது விடுதலை அல்ல!
ஒரு நாள் விடுமுறை மட்டும்தான் என்று!….
வலம்புரியார் பாராட்டிய வரிகள்:
பாரதிக்கு நெருங்கிய
பெரு மரபின் கிளையில் நீ ஓர் ஒளிப்பறவை..
உன் சிறகுகளில்
காலத்தின் கெளரவம் பத்திரமாய் இருக்கிறது..
வாழ்க
வலம்புரியாரின் எழுத்தும், பேச்சும் காலக்கோயிலில் கற்பக நிவேதனமாய் என்றும் பலர் நெஞ்சங்களில் வாழ்வதை நான் பல தருணங்களில் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.
நயவுரை நம்பியின் நூலறி நண்பர், கோவைத் திலகம் அண்ணல் கிருஷ்ணகுமார் ஆண்டு தவறாமல் வலம்புரியாரின் நினைவு நாளன்று (08.05.2005), விளம்பரம் வெளியிடுவார். கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் தான் வங்கியில் உயரலுவலராய் இருந்தபோது, தாராளமான தொகையை வங்கி வாயிலாக இலக்கியக் கொடையாக வலம்புரியாருக்கு வழங்கியது தன் பேறு என்று இன்றும் சொல்லிக்காட்டுவார். அவ்வண்ணமே வலம்புரியாரின் வார்த்தைகளை நண்பர் மைபா நாராயணன் சொல்லிக் காட்டிப் பெருமைப் படுத்துவார்.
மின்னலைப்போல அவரது எழுத்து நடை, என் இளமைக் காலங்களில் விமானத்தை விட வேகமாகப் பறந்தது.
மகரந்த நடையில் மணக்கும் கட்டுரைக் கனிகளை சுகந்தமான வரிகளுக்கு அப்பாலும் வடிந்து விடாத வெள்ளமாக நுரைத்துச் சிரிக்கிறார் வலம்புரியார். நெஞ்சில் கனல் மணக்கும் நித்திலப்பூவாக வாழ்கிறார்.
‘காவியக் கவிஞர்’ வாலியின்.
“உன் வித்தக விரல்களில் விளையாடும் எழுத்துக்கள் எல்லாமே, பாக்கள்!
நாங்கள் அதைச் சுற்றி வரும் ஈக்கள்” என்னும் கவி வரிகள் கல்வெட்டு வரிகளாகும்.
“மின்னல் சாரத்திற்கு மெருகேற்றுவதும், வலம்புரியின் எழுத்து வாசலுக்கு வார்த்தைத் தோரணம் கட்டுவதும் ஒரே வகையான பணிதான். உவமைகளிலே புதுமை! உருவகங்களிலே கவர்ச்சி!” என்று எந்தையார் வலம்புரியை வரைந்து காட்டிய பெருமை வரிகளும் ஈடற்றவை.

Add a Comment