POST: 2021-05-18T09:22:43+05:30

உஷா என்னும் ஒளி விளக்கு (3.6.1960-17.5.2021) அணைந்ததே!ஓலம்! ஓலம்!

என் ஆருயிர்த் துணைவி தாராவின் தமக்கையார் தியாகத்திற்கு விளக்காக வாழ்ந்து மறைந்த திருமதி பரமேசுவரி அம்மையாரின் மக்கட் செல்வங்களை தம் மக்கட் செல்வங்களாக பரிவு காட்டி உருகியவர் என் துணைவியார்.

திருமதி சுதா நலங்கிள்ளி ,திருமதி உஷா மதனகோபாலன் திருமணங்களை முன்னின்று நடத்தினோம்.

திருமதி உஷா தன் அன்னையார் பணி செய்த தலைமை அஞ்சல் அலுவலகத்திலேயே நாற்பது ஆண்டு பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.

சென்னைப் புறநகரில் இருந்து திருமதி உஷா வாரம் தவறாமல் தாராவையும் என்னையும் கண்டு பேச வருவது வாடிக்கை .

ஒரு வாரம் தவறினால் தாரா துடிதுடித்துப் போவார்… அலுவலகத்திற்கு பேச வேண்டும் ஏன் உஷா தொலைபேசியை எடுக்கவில்லை என்று கலங்குவார்.

தாராவின் நிறை வாழ்வில் ஒப்பற்ற துணையாக பெற்றெடுத்த மகளாக நெருங்கி இருந்தவர் உஷா தான்.

அன்பும் ஆர்வமும் ததும்ப பேசுவதோடு ஏன் சித்தியை நீங்கள் கூட்டத்திற்கு அழைத்துப் போகவில்லை என்று அதட்டும் குரலில் வினவுவார்.

மனம் விரும்பி மணந்த மதனகோபாலனோடு இருவருமாக இணைந்து வருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியில் திளைப்போம்.

தாரா மட்டும் இருந்திருந்தால் தன் உயிர் கொடுத்து உஷாவை மீட்டு இருப்பார்.

சித்தி காத்திருக்கிறார் என்று நினைத்து உஷா தனியாக சென்று விட்டாரே!

தீநுண்மியின் தீராப் பசிக்கு எங்கள் குடும்ப திலகத்தையா திருடுவது?

காலை முதல் மாலை வரை நோய் நிலையிலேயே அருமை மகன் பரணி மகள் சுடர்க்கொடி மதனாவோடும் மருத்துவமனைகள் பல தேடி அலைந்தாரே என்று என்னிடம் சொன்ன போது மனம் இடிந்தது .

ஞாயிறு மாலை மருத்துவமனை சேர்ந்தார் காலை விடிந்தது உஷாவின் கதையும் முடிந்தது.

சிறகொடிந்த பறவைகளாக கணவரும், தம்பியும் ,மகளும்,மகனும் ஓவென்று அலறுகிறார்கள்.

ஓலம்! ஓலம்!

என்று நான் எவரிடம் சொல்வேன் இடரை எப்படிக் கடப்பேன்.

இன்னா தம்ம இவ்வுலகம் ஏங்கிப் புலம்பும்

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *