மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 85
அரசுகளின் உறவும் ஊடலும்
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
கடந்த வாரக் கட்டுரையில் இழைத்துணர்ந்த அறிவியல் பேரொளி டாக்டர் வா செ கு – இந்திய விடுதலையால் நாம் எய்திய உரிமை வாழ்வையும் மொழிவழி அமைந்த மாநில அமைவையும் சுட்டிக் காட்டியிருந்தார் .
அரசியலையும் கவிதை வடிவில் உருக்கமாகக் காட்டியிருந்தார் .
தமிழ் மக்களுக்குத் தமிழ்க்காதல் ,தமிழினம் என்ற பற்று எப்போதும் மிகுந்திருந்தாலும் , அயல் மாநிலங்களை மதிப்பதிலும் – இந்திய ஒருமையைப் போற்றுவதிலும் ஒருபடி மிஞ்சியவர்கள் .
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தொடர் உலகறிந்த தமிழர் அனைவரையும் மனவிரிவோடு பாராட்டுவதாகும் .
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் . உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்று பாரதியார் பாடினாலும் அவருடைய பரந்தமனம் வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர் வாழிய பாரதம் என்றே நிறைவுறும்.
வங்கப் பெருந்தகை பங்கிம் சந்திரர் எழுதிய வந்தே மாதரப் பாடலில் ஆறு கோடிக்கரங்கள் உன்னை வாழ்த்தும் என்று வங்கத்தை மட்டும் குறிப்பிட்டிருந்தாலும் , பாரதியார் இந்திய நாடு முழுவதையும் அரவணைத்து அறுபது கோடித் தடக்கைகள் என்று மொழியெல்லையை இந்திய ஒருமைக்கேற்ப மாற்றினார் .
தமிழகத்துத் தலைவர்களைப் பற்றிப் பாரதியார் பாடிய பாடல்கள் உள்ளன .
பிற மாநிலத்து வீரர்களை அவர் போற்றியுள்ள பாடல்கள் மிகப்பல. ”
சத்ரபதி சிவாஜி “, ”
கோக்கலே சாமியார் உடல் “, ”
வாழ்க நீ எம்மான் ”, “
குருகோவிந்தர் ”, “
தாதாபாய் நவரோஜி “, ” பூபேந்திரவிஜயம் ”, “
வாழ்க திலகன் நாமம் ”,
திலகமுனிவர்கோன் ”, “
லஜபதி “,
” லாஜபதியின் பிரலாபம் ”
போன்ற பாடல்கள் இதற்குச் சான்றுகள்.
பாரதியார் காலத்து வங்க அறிஞர்களிடமோ பிற மாநிலத்துக் கவிஞர்களிடமோ இத்தகைய பரந்த நோக்கைக் காணமுடியவில்லை ?
தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு ஆகியவற்றை முற்றுமாக ஒதுக்கிவிட்டுப் பாரதநாட்டின் இதர பகுதிகளின் பெருமைகளை மட்டும் சொல்லும் பாரதியாரின் பாடல் உண்டு.
” பாரதமாதா ” எனும் தலைப்புடைய பாடலில்
“ முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடைய வில் ? “, ” இந்திர சித்தன் இரண்டு துண்டாக எடுத்தவில் யாருடையவில் ? “, “காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல்லொத்த தோள் எவர்தோள் ? ”, “
சாகும்பொழுதில் இருசெவிக்குண்டலம் தந்த தெவர் கொடைக்கை ? ”,
” பாரத நாடு பழம்பெரும் நாடு – நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதாதீர்
” என்ற பொன் வரிகள் என்றும் நினைக்கத்தக்கன ! .
“ போர்க்களத்தே பர ஞானமெய்க்கீதை புகன்ற தெவருடைய வாய் ? “, ”
புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி “, ” மிதிலை எரிந்திட வேதப்பொருளை வினவும் சனகன் மதி ”, ” தெய்வீகச் சாகுந்தலமெனும் நாடகம் செய்த தெவர் கவிதை ?
” என்றெல்லாம் இராமாயண, மகாபாரதத் தொன்மங்களும், புத்தனது அறிவுரையும், காளிதாசனின் சாகுந்தலமும், வேதங்களும், உபநிடதங்களும் காட்டப்பட்டன .
பாரதியாரின் பரந்த மனத்தை இப்பாடல் காட்டுகிறது .
இந்திய விடுதலைக்குப் பின்னர் மாநில அரசுகளும் ,மத்திய அரசும் ஒரே கட்சிச் சார்புடையதாகவே உருவாகியிருந்தன .
1967 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாநில அரசும், மைய அரசும் இருவேறு கட்சிகளால் தலைமை பெற்றன .
பேரறிஞர் அண்ணா மாநில உரிமைகள் தடைப்படுவதாக முதல் முழக்கமிட்டு எடுத்துரைத்தார் .
பேரறிஞர் அண்ணா , முத்தமிழறிஞர் கலைஞர் , புரட்சித்தலைவர் , புரட்சித்தலைவி எனத் தமிழக அரசின் முதலமைச்சர்கள் அனைவரும் மாநில சுயாட்சிக் குரலை – உரத்த குரலிலும் உண்ணாநோன்பு நடத்தியும் செயற்படுத்தினர் .
மாநில அரசுகளை நீக்கும் போக்கும் நிகழ்ந்தது .
மூதறிஞர் இராஜாஜி , உத்தமர் ஓமந்தூரார் , பெருந்தலைவர் காமராசர் ஆகிய மூவரும் மைய அரசில் ஒரே கட்சியாக இருந்தும் அதட்டும் குரலில் மைய அரசின் போக்குக்கு மறுப்புரைத்த காட்சிகளும் உண்டு .
புரட்சித்தலைவரின் உடல்நலம் குன்றியிருந்ததைக் காரணமாகக் காட்டித் தமிழக காங்கிரசு தமது கட்சியிலிருந்து ஒருவரைத் துணை முதல்வராக அமர்த்தலாம் என்ற ஆலோசனையை மத்திய அரசின் மூலம் கொடுத்தது .
அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தன் செயல்களில் உறுதியாக இருந்தார் .
இரண்டாம் முறையும் அதுமாதிரியான ஆலோசனை வர அதையும் புறக்கணித்தார்
.மாநில – மத்திய நல்லுறவில் மாறுபட்ட நிலையிலும் தன்னுடைய பாதையிலேயே காய்களை நகர்த்தினார் என்று எழுதியதோடு ஒருமுறை
என் நண்பர் எஸ் டி எஸ் – காளிமுத்துவோ என்னை மீறிப் பேசமாட்டார்கள் .
எங்களுக்குள் எப்போதும் கருத்தொற்றுமை உண்டு .
பேசுகிற வார்த்தையில் வேகமிருக்கலாம் .
அப்படிக் கருத்தொற்றுமை இல்லையென்றால் இந்த அமைச்சரவையைக் கலைத்துவிட்டு வெளியேறுவோம் என்று ஒருமுறை புரட்சித்தலைவர் குறிப்பிட்டது அந்த நேரத்தில் மைய அரசுக்கும் – இலங்கை அரசுக்கும் மறுமொழியாயிற்று அதுவே புரட்சித்தலைவரின் பதிலாகவும் இருந்தது .
இந்தக் குறிப்பை அரசியல் ஆய்வுச்செம்மல் இரா .தங்கத்துரை எழுதியுள்ளார் .
இப்படி மாநில அரசுக்கும் – மைய அரசுக்கும் உறவும் – ஊடலும் தொடர்ந்தது .
இந்நிலையில் மாநில – மத்திய உறவு பற்றித்தான் நேற்றைய கவிதை காட்டியிருந்தது .
அரசமைப்பு எப்படி அமைந்தது என்பதைச் சிறிது காணலாம் .
உரிமை வாழ்வைக் கண்டு மக்கள் ஒன்றுபட்டுப் பெருங்களிப்பில் திளைத்தனர் .
பல்மொழிகள், பல இனங்கள். அவரவர்க்குரிய பண்பாடு ,கலை பழக்க வழக்கங்களைக் கொண்ட தனித்தனிப் பகுதிகள் உள்ளன என்பதைக் காலப்போக்கில் உணரத் தலைப்பட்டனர் –
வரலாற்றாலும் நில நூலாலும் வேறு காரணங்களாலும் பல நூற்றாண்டுகளாகச் சிற்றரசுகளாகவும் பிரிந்திருந்தது
இன்று இந்நாட்டின் தனித் தன்மைகள், என்றாலும் அது பன்மையில் ஒருமை காண விரும்பிய கூட்டுக் குடும்பமாகவே திகழ்ந்தது .
பாரதக் குடும்பத்தின் ஒருமைப்பாடு தக்க வகையில் பேணிக் காக்கப்படல் வேண்டும்; சிதைக்கப்படக் கூடாது என்பதே ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் இலட்சியமாகும்.
வெள்ளையரின் அடக்கு முறையில் தோன்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தால் கட்டிக் காக்கப்படும் பாரத ஒற்றுமை உளப்பூர்வமானதா ? முழுமையானதா ? நிலையானதா ? என்ற ஐயப்பாடுகள் அழுந்தியிருந்தன .
அடிமைத்தளை அகற்றப்பட்ட பின் இந்தியர் அனைவரும் போற்றுதலுக்குரிய அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக உணர்ச்சி பூர்வமாக ஒருங்கிணைக்கப்பட்டு விட்டனர் என உறுதியாகக் கருதினர் .
இல்லையில்லை, பாரத நாடு சுதந்திரம் பெற்றதேயன்றி, அதன் உறுப்புக்களான மொழித் தேசிய மாநிலங்கள் நிறைவான தன்னாட்சியைப் பெறவில்லை;
மெய்யானதொரு கூட்டாட்சி அரசின் கீழ் முழுத் தன்னாட்சி பெற்ற மாநிலங்களை இணைத்து, அதன் வழி எழும் இந்திய ஒற்றுமைதான் நிலையானது என
அரசியல் அறிஞர் எழுதி வந்தனர் .
இருசாராரும் தம் பக்கத்தில் நின்று பட்டிமண்டபம் போலப் பேசி வந்தனர் .
ஆதாரங்கள், அரசியல் வரலாற்றுச் சான்றுகள், அரசியற் சட்ட நுணுக்கங்கள் என்று ஆவணங்கள் பலவடிவெடுத்தன !
மாநிலத் தன்னாட்சிக் கோட்பாடு அரசியற் கோட்பாடே அரசியல் கட்சியின் கொள்கையன்று.
ஒரு காலத்தில் குடியாட்சிக் கொள்கையும், சமதர்மக் கொள்கையும் உலக அரங்கில் அரசியல் கட்சிகளின் குறிக்கோள்களாக மட்டுமே திகழ்ந்தன.
ஆனால் அவையிரண்டும் இன்றைய நாளில் உலகநாடுகள் பலவற்றில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன.
கூட்டாட்சித் தத்துவத்தின் உயிர்க்கூறான மாநில சுயாட்சிக் கொள்கையும் நம் நாட்டின் அரசியல் கட்சிகளின் பொருண்மைகளாக இருப்பினும் அக்கோட்பாடு உலகின் பல்வேறு நாடுகளால் அரசியல், பொருளாதார, சமுதாய அடிப்படைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு , நடைமுறையில் உள்ளன .
இது பற்றி ஆய்ந்த வழக்கறிஞர் திலகம் கே எஸ் ஆனந்தம் ஆயிரம் பக்கங்களுக்கு மேல்
” மலர்க மாநில சுயாட்சி ” என்ற அரிய நூல் எழுதினார் .
நான் ஓர் எழுத்தாளனல்லன்; நாள்தோறும் சட்டம் பயிலும் ஒரு வழக்கறிஞன்; அரசியற் சட்ட நுணுக்கங்களை அவ்வப்போது ஆழ்ந்து நோக்கும் வாய்ப்பைப் பெற்ற சட்ட மாணவன்.
இந்திய நாட்டின் ஒருமைப்பாடு குன்றாமல், குறையாமல், அதன் பல்வேறு மாநில மக்கள், சமுதாயம், அரசியல், மொழி, பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சியையும் நல்வாழ்வையும் பெற இன்றைய இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே தேவையான வழிவகைகள் உள்ளனவா என்ற சிந்தனையோட்டத்தின் விளைவாகத் தான் இந்நூலை நான் எழுதத் துணிந்தேன் என்று அவர் தொடங்கிய வரிகள் நம் நெஞ்சைத் தொடுகின்றன .
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளைப் பகுத்துப் பார்த்து, அதன் உட்கூறுகளைச் சரிவரப் புரிந்து கொள்வதற்காக இந்திய அரசமைப்பையும், அரசமைப்பு வரலாற்றையும் , அரசியல் மற்றும் பொருளாதார நூல்களையும், பல்வேறு கூட்டாட்சி நாடுகளின் அரசமைப்புகளையும், இந்திய நாட்டின் மத்திய மாநில உறவுகள் பற்றிய ஆய்வு நூல்களையும் பயின்று அவற்றிலிருந்து திரட்டிப் பெறப்பட்ட அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்துத் தன் ஆய்வைப் படைத்தார் .
அரசமைப்பு வல்லுநர். திரு. கே. ஆர். பாம்வால் அவர்களது
“ இந்தியக் கூட்டாட்சியின் அடிப்படைகள் ”
என்ற ஆய்வு நூலில் காணப்படும் நடு நிலைக் கருத்துகளும், தமிழகத்தைச் சார்ந்த அரசமைப்பு அறிஞர் திரு. க. சந்தானம் அவர்களின் தெளிந்த ஆய்வு முடிவுகளும் , ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி. டாக்டர். இராசமன்னார் தலைமையில் நிறுவப்பட்ட மைய – மாநில ஆய்வுக்குழு அறிக்கையும் குறிப்பிடத்தக்கன ,
இன்று இந்திய அரசியல் அரங்கில் மாநில சுயாட்சிக் கோரிக்கை, புது முறுக்குடன் எழுந்து நிற்கிறது.
1974 – ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டப் பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நான் முன் மொழிந்த நாளும், அந்தத் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பெற்ற நாளும் தமிழ் மாநில வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய நாட்டு வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க நாள்கள் என்று நான் பெருமைப்படுகிறேன் என்று பேரறிஞர் அண்ணா பேசினார் .
மண்டபத்தின் மேற்பகுதியில் பளு அனைத்தையும் வைத்து விட்டு, பலமற்ற தூண்களை மண்டபத்தைத் தாங்குவதற்காக அமைப்பது என்பது கேலிக்குரிய ஒன்று.
இன்றுள்ள மத்திய அமைப்பும் மாநில அமைப்பும் இந்த நிலையில் தான் உருவாக்கப்பட் டுள்ளன.
இதனை விவரித்து, விற்பன்னர் பலரும் மாநிலங்கள் அதிக பெற வேண்டு மென்பதற்கான சரியான வாதங்களை எடுத்து வைத்துள்ளனர். அவைகள்
அலட்சியப்படுத்தப்படக் கூடியவைகள் அல்ல.
பேரறிஞர் அண்ணா மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது .
அரசினுடைய ‘இறைமை’ ( ஒப்புயர்வற்ற ஆட்சி அதிகாரம் ) என்பதற்கு நாம் கொள்ளும் பொருள் என்ன ?
அரசியல் இறைமையானது பொது மக்களிடம் நிலைத்துள்ளதென நமது அரசியலமைப்பின் முகப்புரை குறிப்பிடுகிறது .
சர்வாதத்யம் ,தனி முதன்மை ,முழுமுதன்மை என்ற சொற்களை ஆராய்ந்து இறைமை ,இறையாண்மை என்று சட்டச்சொல் மொழியாக்கம் பெற்றது .
சட்டம் சார்ந்த இறைமையானது கூட்டாட்சி ஒன்றியத்திற்கும் ( மத்திய அரசு ) அதன் அங்கங்களுக்குமிடையே ( மாநிலங்கள் ) முறையாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளது.
இன்னும் அதிகப் பயன்களை விளைவிக்கும் இறைமையைப் பெற்ற அங்கங்களாக, மாநிலங்களைத் திகழச் செய்வதற்கு அனைவரும் முயல வேண்டாமா !
முழுமையான இறைமை, குறிப்பிட்ட ஒரே ஓர் இடத்தில் எப்போதும் தங்கி விடுவதில்லை.”
“… நாம் ஒரு கூட்டாட்சியமைப்பை ஏற்றிருக்கிறோம்.
அரசமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றையாட்சி அமைப்புக் கூடாது; கூட்டாசியமைப்பு முறை தான் வேண்டுமென்று விரும்பினார்கள்.
ஏனெனில், அரசியல் தத்துவஞானிகள் பலர் சுட்டிக் காட்டியபடி , இந்தியா மிகப் பரந்து கிடக்கின்றது.”
எஃகால் செய்த வரைவுச் சட்டத்தைப் போல் வலிவான ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க முடியாத அளவிற்கு, இந்நாடு மாறுபட்ட மரபுகளையும், வேறு பட்ட வரலாறுகளையும், பல திறப்பட்ட பழக்க வழக்கங்களையும் கொண்டுள்ளது.”
நமது கூட்டாட்சி செயற்படும் தன்மையானது மாநிலங்களிடையே விரக்தி உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது .
மாநிலங்கள், சுங்கத் தொகை வசூலிக்கக் கூடிய சாதாரண நகராட்சி மன்றங்களைப்போல் விரைந்து மாறி வருகின்றன.
அவை, இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அதிக அதிகாரங்கள் அளிக்க வேண்டுமென்ற இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன.
நமது கூட்டாட்சியமைப்பின் இவ்வகையான நடைமுறை, மாநிலங்களை மேலும் மேலும் சோர்வடையச் செய்துள்ளது என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன்.
நமது அரசியல் சட்டம் ஆராயப்பட வேண்டும் – மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும் – இதனை மத்திய அரசு உணர வேண்டும் – என்பதே மாநிலங்களின் கோரிக்கையாகும் …”
நாடாளுமன்றத்தின் அறிவுசான்ற உறுப்பினர்கள் ( மாநிலங்களின் ) இந்தச் சிக்கலை ஏன் விளக்க முயலக்கூடாது .
தற்போதைய கூட்டாட்சியை, ஒரு மெய்யான கூட்டாட்சியாக மலர வைப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று அண்ணா வேண்டினார் .
துரிதமான நிர்வாகம் ,
துணிச்சலான முடிவுகள்
,துள்ளியோடும் கோப்புகள் ,
பயனளிக்கும் திட்டங்கள் ,
பாதுகாப்பான சட்டம் ஒழுங்கு ,
தொலைநோக்குப் பார்வை
,மக்கள் பங்குபெறும் நல உதவிகள் ,
எளிமையான ,
விழாக்கள் ,
களப்பணியாற்றும் அலுவலர்கள் ,
விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசாங்கம் ,
விரைவு படுத்தப்படும் நீதி
ஆகிய அனைத்தும் சேர்ந்தால் மட்டுமே நிர்வாகம் நிமிரும்,செழிப்பு சேரும் ,வளம் வாய்க்கும் ,புன்னகை பூக்கும் ,மகிழ்ச்சி மையமிடும் என்று குறிப்பிட்டது நெஞ்சைச் சிலிர்க்க வைக்கிறது .
நல்ல வலிமையான ஆட்சிக்கு நேர்மை நிருவாகத்துக்கு இந்திய ஆட்சிப்பணியின் அணிகலனாக விளங்கும் அறிஞர் இறையன்பு ஒரு வினாவுக்கு விடையளித்தார் .
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை
– ஒளவை நடராசன்
thamizhavvai@hotmail.com

Add a Comment