மன்னாதி மன்னன் – 76
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
புரட்சித்தலைவருக்கு ஒரு புகழாரம்
வங்க மாநில நீதியரசர் அசுதோசு முகர்சி பேரறிவாளர் . கணக்குத்துறையில் கற்றறிந்த ஆய்வுப் பெருந்தகை தமது கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் ஆய்வுப் பேராசிரியராக வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்பினார் .
அப்பேராசிரியர் இருக்கைக்குரிய நிதியத்தைப் பெறமுடியாது போனதால் பின்னர் சட்டத் துறையில் சேர்ந்தார் .
தொட்ட அந்தத் துறையில் பெரிய வெற்றிகளைப் பெற்றார் .
வங்கத்தில் புகழோங்கிய நீதியரசரானார் .தாம் பயின்ற பல்கலைக்கழகத்தை அவர் எப்போதும் கண்ணாகப் போற்றினாராம் .
அமெரிக்கக் குடியரசுத்தலைவராக மாபெரும் புகழோடும் பெருமையோடும் விளங்கிய பல்கலை வித்தகர் தாமசு செபர்சன் தனது மறைவுக்குப்பிறகு தன் கல்லறையில் ” வர்ஜினியா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர் ” என்றெழுதினால் போதும் என்றாராம் .
குடியரசுத்தலைவர் பதவியை விட ஒரு பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் என்ற புகழே பொன்றாப் பெருமையுடையது என்றார் .
அறிஞர் பல்கிவாலா முகர்சியின் 125 ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய போது இவ்வாறு குறித்தார் .
ஒரு பல்கலைக்கழகம் அந்த வகையில் அறிவின் ஊற்றாக, கலைக் கருவூலமாக,சிந்தனை வயலாக ஒரு நாட்டின் மணிமகுடமாக மிளிர்கிறது .
தாம் தொடங்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நாளும் புரட்சித்தலைவர் நினைவு கூர்ந்தார் .
விமானத்தில் பறந்து வரும்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முகடுகளில் தமிழ் என்ற பெயர் தெரியவேண்டுமென்று விழைந்தார் .
அமெரிக்கத்தமிழர் ,கனடாத்தமிழர் ,தென்னாப்பிரிக்கத்தமிழர் ,மோரிசுத்தமிழர் ,மலேசியத்தமிழர் ,சிங்கப்பூர்த்தமிழர் என்ற பெயர்களில் பிரிவுகள் அமைய வேண்டும் .தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்துகிற நிகழ்வுகளில் அந்த நாடுகள் பங்கு பெற வேண்டும் என்று ஒருமுறை கூறி அதற்குரிய பெருந்திட்டத்தை வகுக்கவேண்டும் என்று கருதினார் .
புரட்சித்தலைவரின் புகழேட்டில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருஞ்சிறப்பைத் பெறுவதாகும் .
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராகிய அறிஞர் வி ஐ சுப்பிரமணியம் அவர்களிடம் இதுபற்றிப் புரட்சித்தலைவர் பேசினார் .
அறிஞர் வி ஐ சு பல்வேறு பல்கலைக்கழகங்களையும் பன்னாடுகளையும் நன்கறிந்தவர்
.தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்விருக்கையைத் தொடங்குவார்கள் .முனைவார்கள் .
சிலர் முயன்று பாதிவழி தாண்டியுள்ளனர் .ஏக தேசம் முழு வெற்றி பெறுவார்கள் .என்றார் .
புரட்சித்தலைவரின் முன் அவர் மொழிந்ததை வியப்போடு பார்த்தார் .
தமிழ்ப் பல்கலைக்கழகத்திலேயே அயல்நாடு தமிழர் ஆய்வுத்துறை என்ற ஒரு துறையைத் தொடங்கியிருக்கிறேன் என்று கூறினார்
.உலகத்தமிழர்களின் ஒருமையை அவர் எப்போதும் விரும்பியிருந்தார் .
மாநிலங்களாக , நாடுகளாக இனத்தவராகப் பிரிந்தாலும் அவரவர்களின் மொழி உரிமை ,பெருமை ,பன்னாட்டு – நலத்தை வளத்தைக் காக்க வேண்டும் என்று எப்போதும் கூறி வந்தார் .
வார்சா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் – திராவிடப் பல்கலைக்கழகத்தில் இணை வேந்தராகவும் பணியாற்றிய பெருமை கொண்டவர்தான் இப்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தை அணி செய்யும் துணைவேந்தர் கோ பாலசுப்ரமணியன் ஆவார் .
துணைவேந்தரின் வழிகாட்டுதலின்படி அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறையில் பேராசிரியராகப் புகழோடு திகழும் இரா குறிஞ்சிவேந்தன் இளமையும் – புலமையும் – தலைமையும் கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்தந்த நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ்க்கல்வி வளர்வது பற்றி எழுச்சியூட்டி ஆர்வம் காட்டி அரும்பணியாற்றுகின்றனர் .
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் தொடர்பினை வலுப்படுத்துதல் – அதன் மூலம் அவர்களின் இலக்கியம் மற்றும் பண்பாட்டினைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள துணை நிற்றல் – அயலகத்தில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு இலக்கிய-இலக்கணப் புத்தாக்கப் பயிற்சிகளை வழங்குதல் – அயலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க உதவுதல் – இன்ன பிற கல்விப்பணிகளோடு புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் ,தமிழ்ப் பள்ளிகளை ஏற்படுத்தி அதன்வழி தமிழ்க்கல்வியை மேம்படுத்துதல் ஆகிய பணிகளைத் துறை சார்பாகத் தமிழ்ப்பல்கலைக்கழகம் ஆற்றி வருகிறது .
நாடாளுமன்ற பேரவைத்தலைவராக இருந்த பலராம் ஜாக்கர் புரட்சித்தலைவரைப்போற்றியுரைத்த உரை சிறப்பானது .
மிகவும் உன்னதமான இந்த நாட்டில், உன்னதமாக நடைபெறுகிற இந்த விழாவில், உன்னதமான நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கொரு பேறு என்று நான் கருதுகிறேன்.
நீங்கள் தமிழக முதல்வர் எம். ஜி ஆர். அவர்களை மிக நன்றாக அறிந்தவர்கள்.தெரிந்தவர்கள் மட்டுமல்ல நீங்கள் அவரை நன்றாகப் பார்த்தவர்கள். ஒன்றாக உங்களுக்குள் கலந்தவர்.
இன்று முதல்வராக இருக்கிறார் என்பது மட்டுமல்ல அவரைப் பல்லாண்டுக் காலம் தமிழ் நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள்.
முதல்வரை இரு வேறு நிலைகளில் தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.
உன்னதமான ஒழுக்கம் நிறைந்த குண இயல்புகளையே நடித்துப் புகழ்பெற்ற நடிகராகத் திரைப்படங்களிலே அவரைப் பார்த்திருக்கிறீர்கள்.
அதேபோல அரசியல் வாழ்க்கையில் தன் ஆற்றலைக் காட்டுபவராகவும் அவரை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள்.
என்னுடைய கல்லூரி முதல்வர் நாங்கள் கல்லூரி நாடகங்களில் நடித்த போது சொன்னதொன்றை இப்போது நினைவு கூர்கிறேன். ”
நடிப்பது என்று சொன்னால், அதுவும் உண்மையானவராக நடித்துக் காட்டுவது என்று சொன்னால், வாழ்க்கையில் அந்த உண்மை ஒளி உள்ளவர்களால் தான் உண்மையானவராக நடித்துக் காட்ட முடியுமே தவிர, நடிப்பு வேறு வாழ்க்கை வேறு என்று அமைத்துக் கொண்டவர்களால் அப்படி நடிக்க முடியாது ” என்று அவர் கூறினார் .
நாடகத்தில் நடித்தார். படங்களில் நடித்தார் என்பது மட்டுமல்ல. இந்த உலகத்தையே நாடக மேடை என்று தான் அறிஞர் பெருமக்கள் சொல்வார்கள்.
நாமெல்லாம் இந்த உலகத்தில் பிறந்த நடிகர்கள் தாம். இந்த நடிகர்களுக்குள் மாட்சிமை தாங்கியவராய் மக்கள் திலகம் திகழ்ந்தார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் !
எனக்கொரு வடமொழி சுலோகம் நினைவுக்கு வருகிறது.
மனிதர்களை விலங்குகள் என்று எடுத்துக்கொண்டு பார்த்தால், பசி, தூக்கம். விருப்பம் இவைகளெல்லாம் இருவருக்கும் ஒன்று தான்.ஆனால், மனிதர்களை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால் அறம் சார்ந்த ஒழுக்கம் தான் மனிதனை மாட்சிமைப்படுத்துகிறது.
அந்த வகையில் அறம் சார்ந்த ஒழுக்கத்தில் நம்பிக்கையும், உறுதிப்பாடும் கொண்ட மனிதன் தான் உலகத்தில் விலங்குகளிடமிருந்து வேறுபட்ட உயர்ந்த மனிதனாக – தலையாய மனித னாகத் திகழ்வான் என்று அந்தப் பாடல் சொல்கிறது.
அந்த வகையில் தான் மனிதர்களிலிருந்து வேறுபட்ட தலையாய மனிதராகப் – புகழ் வாய்ந்த சிகரமாகத் தமிழக முதல்வர் திகழ்கிறார்கள்.
அவர் நாட்டு மக்களை எந்நாளும் வாழ்க்கையில் மறந்ததில்லை. அவர்களுக்குக் கடமையாற்றுவது. அவர்களுக்கு நலம் செய்வது தான் வாழ்க்கையின் ” உயிர்ப்பு என்ற உறுதியில் உங்கள் முதல்வர் இருக்கிறார்.
அவர் அதிகாரத்தைத் தேடிவந்ததில்லை. அதிகாரம் அவரையே தேடி வந்திருக்கிறது என்பதனால்தான்-அரசு அவரை நாடி – வந்திருக்கிறது. மக்களின் கரவொலியே அதற்குச் சான்றாகத் திகழ்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
வாழ்க்கையில் ஏழ்மை நிலையிலேயிருந்து நடிப்புத்துறையில் படிப்படியாக வளர்ந்து, நாட்டு மக்களின் மனங்களைக் கவர்கின்ற மகத்தான நிலைக்கு அவர்கள் உயர்ந்திருக்கிறார்கள்.
இது தான் இந்திய அரசியலின் நோக்கமும் ஆகும். எளிமையில் இருக்கிறவர்கள், வறுமையில் உழல்பவர்கள், மக்களின் துயரங்களைக் காண்பவர்கள், தங்களுடைய நேர்மையினாலும், நெஞ்சுரத்தினாலும், அஞ்சாத கடமை உணர்ச்சியாலும், எவ்வளவு பெரிய உன்னத நிலைமையை அடையலாம் என்பதற்குக் அவரே சான்றாகத் திகழ்கிறார்,
எல்லா வகையிலும் முன்னிலையில் நிற்கிற உங்கள் தமிழகம் மகத்தான இந்திய வீரர்களை, அரசியல் தலைவர்களை, ஆன்றோர்களை, சான்றோர்களை ஈன்றெடுத்திருக்கிறது- அந்தப் புகழ் வாய்ந்த வரிசையிலேதான் உங்கள் முதல் வரும், முன்னணியில் திகழ்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறேன்.
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரோடு நான் உரையாடிக் கொண்டிருக்கிறபோது சொன்னார்கள் :
தமிழக அரசு தன்னுடைய பதவி ஏற்ற காலத்திலிருந்து நாடறிந்த பொதுமக்களுக்கும், தியாக சீலர்களுக்கும் பிறந்த நாள் விழாக்களை மிகச் சீரோடும் சிறப்போடும் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
உங்கள் முதல்வர் எந்த இயக்கத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், நாட்டுக்கு நலம் செய்த நாயகர்கள் என்கிற அடிப்படையில் எல்லா வேறுபாடுகளையும் மறந்து அத்தனை பேரையும் உத்தமர்கள் அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும் என்ற உணர்வோடு தியாகச் சுடர்களுக்கு விழாக்களை நடத்தி வருகிறார் என்பதை நான் கேள்விப்பட்ட போது அனைவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற நன்மனம் முதல்வர் அவர்கள் பெற்றிருப்பதை என்னால் உணரமுடிகிறது.
நான் சென்ற முறை உங்கள் முதல்வரோடு மிக நெருக்கமாகவும் மனங்கனிந்தும் உரையாடியபோது அவருடைய உணர்வோ நாட்டு மக்களை ஏழ்மையிலிருந்தும், வறுமையிலிருந்தும் ஈடேற்ற வேண்டுமே என்ற ஒரே அடிப்படையில் ஆழ்ந்து கிடப்பதை, நான் காண முடிந்தது.
மக்களையெல்லாம் நாடாளுகின்ற மன்னர்கள் என்று சொல்வோம். அந்த மன்னர்களுக்கெல்லாம் மன்னர். ஒரு மன்னாதி மன்னன் யார் ? என்று இந்த மக்களைக் கேட்டால், உழவரைத் தான் குறிப்பிடுவார்கள்.
வேளாண் குடியில் பிறந்தவன் தான் அத்தனை பேருக்கும் உணவு தருகிறான் என்பதால் அந்த மன்னாதி மன்னனாகவே, உங்கள் முதல்வர் .
ஐம்பது நாடுகளுக்கு மேற்பட்ட வர்கள் கலந்து கொண்ட காமன் வெல்த் என்னும் பொதுநல நாடுகளின் தலைவர்களோடு நான் உரையாடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
காமன்வெல்த்து நாடுகளின் தலைவர்களுக்கெல்லாம் நடைபெற்ற ஒரு விருந்தில் மூன்று பிரதமர்களோடு நான் உரையாடினேன் .
ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர், கயானா நாட்டுப் பிரதமர், பிரான்சு பிரதமர் ஆகிய மூவரும் என்னிடம் உரையாடினார்கள்.
அவர்கள் உரையாடி இந்திய தேசியத் தலைவர்களையெல்லாம் புகழ்ந்து, நமது பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் நிர்வாகத் திறமையையும் பாராட்டிப் பேசினார்கள் .
இவர்களெல்லாம் பேசியதற்கு விடை தந்து பாரதப் பிரதமர் உரையாற்றுகிற போது ”
எங்கள் நாட்டுத் தலைவர்களையெல்லாம் பாராட்டினீர்கள் என்பது உண்மைதான். அவை மகிழ்ச்சி தருவது உண்மைதான் என்றாலும் கூட இந்த நாட்டின் வளர்ச்சி, இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றம் எல்லாம் ஏழை உழவனுடைய கைகளிலே தான் இருக்கிறது ” என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறினார்கள்.
அம்மையார் அவர்கள் கூறிய கருத்தை நான் எண்ணிப் பார்க்கிறபோது எந்தெந்தக் கட்சிகளிலே நாடு இருந்தாலும், உண்மையான உணர்வுகள் என்ற அடிப்படையில் அத்தனை பேரும் ஒன்றுபட்டிருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அவர்கள் பல்வேறு துறைகளிலே இருந்தாலும் அவர்கள் ஒரே வகையான கருத்தை உடையவாராகத்தான் இருக்கிறார்கள்.
ஏழை உழவனின் மேம்பாடுதான் சிறந்த பண்பாடு என்பதை சுட்டிக் காட்டுகிற வகையில் அனைவருடைய கருத்தும் ஒன்றாக இணைந்திருக்கிறது !
நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவதெல்லாம் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள நெடும்பரப்பை எடுத்துக் கொண்டால் தேசிய ஓருமைப்பாட்டுக்காகவும், நாட்டு நலங்களை ஒட்டுமொத்தமாகக் காண வேண்டும் என்ற நல்ல குறிக்கோளுக்காகவும் பாடுபடுகின்ற பெருமக்களின் வரிசையில் உங்களுடைய முதல்வர் முன்னிலையில் நிற்கிறார்கள்.
இந்தத் தமிழகம் என்பது தான் பாரத நாட்டின் பண்பாட்டையும் பாரத நாட்டின் மரபுக் கவசத்தையும் காக்கின்ற சிறந்த பகுதியாக இருக்கிறது.
நான் இந்தப் பகுதிக்கு வருகிற போது தான், என்னுடைய வழக்கமான மேலை நாகரிக உடைகளையெல்லாம் விட்டுவிட்டு அழகான வேட்டியோடும் ஜிப்பாவோடும் மகிழ்ச்சியாக வந்து நின்று பேச முடிகிறது.
இப்படிப் பண்பாட்டைப் பாதுகாத்து வருகிற இந்தத் தமிழகப் பகுதியில் உண்மையின் உன்னதமான நோக்கத்தை நிறைவேற்றுகிற அந்த ஒருமைப்பாட்டு உணர்ச்சி ஓங்க வேண்டும்.
உங்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு ஆண்டவன் எல்லா நலன்களையும் அருள வேண்டும்.
இன்றல்ல நாளையல்ல பல்லாண்டு காலத்திற்கு உங்கள் நடவடிக்கைகளும், செயல்களும், நல்ல பணிகளும் நாளும் நாளும், மேலும், மேலும் சிறக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
சேலத்தில் புரட்சித்தலைவருக்கு நடத்திய பாராட்டு விழா மலரிலிருந்து ( 10 – 12 – 1983 )….
தொடர்வோம் …
பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை
– ஒளவை நடராசன்
thamizhavvai@hotmail.com

Add a Comment