மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 73
புரட்சித்தலைவர் பொன்மனத்தில் பூத்த புதுத்துறை !
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
பாரத நாடு விடுதலை பெற்றதும் மாணச் சிறந்த மக்களாட்சியை நாமே அமைத்துக் கொண்டு அதற்கேற்ற அரசியல் அமைவை அறிஞர்கள் வரைந்தளித்தனர்
.தலைமை அரசும் அதன் கிளைகளாக மாநில அரசுகளும் , துணை மாநில அரசுகளும் அமைந்தன .
ஆறு மலை எல்லைகளைக் கொண்டோ மக்கட் தொகையைக்கொண்டோ மாநில எல்லைகளை அமைப்பது பற்றி ஆராய்ந்தபிறகு மொழிவழியாக மாநிலங்கள் அமைவது தக்கதென்று முடிவு செய்தனர் .
ஒருமொழி பேசும் மாநிலமே ஒரோ வழி இரண்டு மாநிலங்களாகவும் பிரிந்தன .
மக்களைக் காக்கும் நெறிப்பாடுகளாகக் கல்வி – நல்வாழ்வு – உணவு – வேளாண்மை – தொழில் – கூட்டுறவு – சுற்றுச்சூழல் – போக்குவரவு – சிற்றூர் – பேரூரைக் கொண்ட ஊராட்சி – இடர் நேராத வண்ணம் மக்களைக் காக்கும் காவல் முறை – சட்டம் ஒழுங்கு நெறி – குடிசைமாற்று மின் திட்டங்கள் – வடிகால் – நீர் மேலாண்மை எனத் துறைகள் அமைந்தன
.நாளும் புதிய பிரிவுகள் தோன்றி மாநில அரசுகள் தம்மைச் செழுமைப்படுத்தின . .
இத்துறைகளைத்தாண்டி அனைத்திலும் உயிரோட்டமாக மொழி – கலை – பண்பாடு முதலிய உயிர்நரம்பாகிய மேம்பாட்டுக் கிளைகள் கல்விப் பிரிவிக்குள்ளேயே முதலில் இணைந்திருந்தன .
ஆங்கில ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் – மக்கள் தொடர்பிலும் ஆங்கிலமே முதன்மை பெற்றிருந்தது .
அந்நிலையிலும் கூட எளிய மக்களுக்கு நாட்டின் நடப்புக்களை அறியுமாறு செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் மக்களுக்கு வாழ்வோடு பின்னியிருந்த அவரவர் தாய்மொழியில் அரசின் ஆணைகளும் ,விதி முறைகளும் ஊடகங்களின் செயற்பாடுகளும் தாய்மொழியில் வடிவம் பெற்றன .அப்படி அமைந்தவோர்ப்பிரிவு தான் மொழிபெயர்ப்புத் துறையாகும் .
நமது மாநிலத்தில் மக்களுக்கு இயல்பாகவே ஓங்கி ஒளிர்ந்திருந்த தமிழ்க்காதல் தமிழ் வளர்ச்சித்துறையின் தனி வளர்ச்சியாக உருவாயிற்று .
தமிழ் வளர்ச்சியே கலைகளையும் , பண்பாட்டு நிலைகளையும் வரையறை செய்து மக்களுக்கு வாழ்வியல் வளம் ஊட்டும் பிரிவுகளாகவும் அமைந்தன .
புரட்சித்தலைவர் இந்த நிலையில் 1984 ஆம் ஆண்டு முதன் முறையாக தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையைத் தோற்றுவித்து அரசு செயலாளராக ஒரு தமிழறிஞரை அமர்த்தம் செய்ததும் கண்டு தமிழ் மனங்கள் பெருமை பெற்றன .
இந்நிலையில் மொழிப்பற்று குறுகிய நாக்குடையதென்று சிலர் பேசி வந்த போது தமிழ் கூறும் நல்லுலகமே மகிழ்ச்சியில் திளைத்தது. அந்த மகிழ்ச்சியின் நெகிழ்ச்சியில் ஆட்சி
நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் மாந்தநேயத்திற்கு ஊட்டம் அளிப்பன .
விடுதலைப்போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய அண்ணல் காந்தியடிகள் உலகளாவிய பரந்தநோக்கில் எண்ணினாலும் இந்திய விடுதலை போலத் தம் வாழ்க்கை வரலாற்றைத் தாய்மொழியாலேயே வரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
சான்றாக வால்டர் ஸ்காட் எழுதிய கவிதை ஆங்கில நாட்டு மக்கள் நாளும் சொல்லி மகிழும் பாடலாகும்
” ஈதென் சொந்த ஊர்; ஈதென் பிறப்பிடம் ”
எனத் தன்னுள்ளே எப்போதாயினும்
உன்னுதற்கு ஒண்ணாத் தன் உணர்வில்லா
ஒருவனேனும் உயிருடன் உளனோ ?
அந்நிய நாட்டினில் அலைந்து பின் தன்னூர்
நோக்கிக் காலடி போக்கிய காலையில்
உள்ளம் குளிரா ஒருவனும் உளனோ ?
இத்தகை ஒருவன் இருப்பனே ஆயின்
சென்று ‘அவன் யாவன் ?’ என்று நன்கு அறிதி !.
உயரிய பட்டம் உடையோன் ஆயினும்
பெயரால் அவன்மிகப் பெரியவன் ஆயினும்
ஆசையே விரும்பும் அளவிலா நிதியம்
படைத்தவனாயினும் பரவசத்துடன்
எப்பாணரும் அவன்புகழ் பாடுதல் ஒழிவர் !.
தன்னையே யாவுமாய் உன்னும் இப்புன்மையோன்
இடம்பொருள் ஏவல் இவை இருந்தும் தான்
இருக்கையிலே நல்லிசையெலாம் இழப்பன்.
இவ்வாறு இருமுறை இறந்து இப்பதடி
புலம்புவார் அற்றும் புகழ்சிறிது மற்றும்
பாடல் பெறாதும் பண்டுதான் தோன்றிய
இழிய புன் புழுதிக்கு இழிந்து செல்குவனே !.
( மொழிபெயர்ப்பு : கோபால கிருஷ்ணமாச்சார்யார் )
முனைவர் பேராசிரியர் ப மருதநாயகம் எழுதிய பாரதி பதினாறு நூலிலிருந்து …..
இனத்தையும், மொழியையும், நாட்டையும் போற்றிப்பாடிய பாங்கிலேயே உலகநோக்கில் தமிழ்மக்கள் பரந்த மனம் கொண்டவர் என்பதற்குப் பல சான்றுகள் காணலாம்
.உலகம் என்ற சொல் தமிழ் நூல்களின் தொடக்கமாகும் .”
எந்தன் பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திடவேணும் ” என்று பாரதியார் பாடினார் , அதே மனத்தோடு இத்தாலி நாட்டு மாஜினி பற்றியும், ஜெர்மனியால் தாக்குண்ட பெல்ஜியம் பற்றியும் சோவியத் புரட்சிபற்றியும் கவின்மிகுந்த கவிதைகளை வரைந்ததை நாடு நன்கறியும் .
இந்த நிலையில் தமிழ் வளர்ச்சி, நாட்டு வளர்ச்சி, உலக ஒருமைக்கு உரமூட்டுவதாகும் என்பதை நாடு முழுமையாக உணர வேண்டும்
” மொழி ஒரு கருவி தானே என்று சிலர் பேசியதுண்டு
.உடலும் ஒரு கருவி தானே .உடல் நலவாழ்வுக்கு ஒரு கணம் தவறாமல் விழிப்பும் செலவும் நாட்டில் எத்தனை கோடிகள் செலவாகின்றன .
மொழி உயிரோடு பின்னிய உணர்வுச் செறிவாகும் ” .
மொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் அப்போது வரைந்த தமிழ்க் கட்டுரை என்னைப் பற்றியதே என்றாலும் தமிழ் வளம் பற்றிய கருத்தை எப்படி அறிஞர்கள் எதிர்நோக்கினர் என உணரலாம் .
புரட்சித்தலைவரின் பொன்மனத்தில் இக்கட்டுரை பெரிதும் கவர்ந்தது என்பதை நாணணிந்து குறிப்பிடுகிறேன்
.இந்தச் சூழலில் தான் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை என்ற புதிய துறை புரட்சித்தலைவரின் பொன்மனத்தில் பூத்தது .
தமிழ் புரிந்த தனித்தவம் என்றெழுதிய கட்டுரை எந்நாளும் போற்றத்தக்கதாக விளங்குகிறது
.தமிழ் வளர்ச்சி – பன்பாடு என்ற பெயரில் தமிழக அரசு இதற்கொரு புதிய அமைச்சகத்துறை ( secretariat ) அமைத்திருப்பது , நமது தமிழக அரசு செய்துள்ள பெரும் புரட்சி
, நம் பெருந்தலைவர் மேதகு ம .கோ .இராமச்சந்திரன் அவர்கள் தம் தண்தமிழ்ப் பாங்கினால், தமிழ் மக்களுக்கு அளித்துள்ள , இச் சித்திரைப் புத்தாண்டின் , இதயம் குளிர்விக்கும் நற்பரிசு இதுவாகும் .
அரசின் கீழுள்ள பல துறைகளுக்குரிய கொள்கைகளை வகுத்து வழங்கப் பல அமைச்சகங்கள் ( Ministries ) உண்டு .
அமைச்சர் பெருமக்களின் கருத்தின் படி செயலாற்றப் பல செயலாளர்கள் ( secretaries ) இருக்கின்றனர் .
அமைச்சர் என்னும் சொல் மந்திரியைக் குறிக்கும். அதே சொல் செயலாளரையும் குறிக்கும். எனவே, அமைச்சர்கள், செயலாளர்களில் துணை கொண்டு ஆட்சி புரிந்து வரும் அலுவலகத்தை அமைச்சகம் ( secretariat ) என்கிறோம். அரசின் உச்ச நிறுவனம் இது.
அரசுத் துறை பலவற்றில் , மொழி பெயர்ப்புத்துறை , தமிழ் வளர்ச்சித்துறை , பழங்கலைத்துறை , அகர முதலித்துறை , உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பண்பாட்டுத்துறை , இயலிசை நாடக மன்றம், ஓவியக் குழு , சிற்பக் கல்லூரி , இசைக் கல்லூரி ஆகிய துறைகளும் பலவாண்டுகளாக இருக்கின்றன.
உலகத் தமிழ்ச் சங்கமும் விரைவில் இத்துறையின் முயற்சியினால் மலரவுள்ளது .
இந்நாளில் , தமிழ் பல வகையில் வளர்ச்சியுற்றுள்ளது என்றாலும், தமிழ்ப் பண்பாடு நிறைந்த மனிதனாகத் தமிழன் வாழ்கின்றான் என்று சொல்வதற்கில்லை.
உலக மக்கள் ஒருவருக்கொருவர் கருத்தறிந்து கொள்வதற்குத் திட்டமிடும் நினைப்பை உதறித் தள்ளிவிட்டு மனிதப் பண்புடன் வாழ்வதற்கு வகை செய்வதோ, உலகத்தின் மிகப் பழம் பண்பாடான தமிழ்ப் பண்பாட்டின் குறிக்கோளாகும்.
பண்போடு வாழ வழி காட்டும் தமிழ்க் கொள்கைகளை , நம் மக்கள் கடைப்பிடிக்கவும், உலகம் ஏற்று மனம் மாறவும் , ஆவன புரிவதற்கு இன்னும் சில துறைகளையும் இவ்வனைத்துத் துறைகளையும் , ஒருங்கிணைத்துத் தமிழ்ப் பண்பு விளங்கும் தகை சான்ற நோக்கத்துடன் அமைக்கப் பெற்றிருப்பதே, தமிழ் வளர்ச்சி – பண்பாடு அமைச்சகம் ஆகும்.
புரட்சி மனம் பூண்டு இயங்கும் நம் அரும்பெறல் முதல்வர் பெருமானாரின் அரும் படைப்பு .
‘ நாடறிந்த நடராசனைத் தவிர, வேறு எவரையும் , இவ் அமைச்சகத்தின் செயலாளராக அமர்த்தியிருந்தால், இவ்வளவு பொருத்தமாக இருந்திருக்காது.
டாக்டர் ஒளவை . நடராசன் அவர்கள், தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு முதலியவற்றிற்கு ஒரு பல துறைப் பண்டகம் ( super Market ) இவர் பற்றி எந்தச் செய்தியையும் எந்த நேரத்திலும் இரு மொழியிலும் எடுத்தியம்பும் , ஆற்றல் மிக்கவுர் ; தமிழ்ப் பண்பாட்டின் திருவடிவம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக , என் உழுவலன்பின் உடன் பிறந்தாரென நான் போற்றிவந்த,முது பெருந்தமிழ்ச் சான்றோர், உரை வேந்தர் திருமிகு ஔவை சு. துரைசாமி அவர்களின் முதல் திருமகனார் எனக்கு அரும் மகனாரென இயங்குபவர்.
இவரை இவ்வரிய பணிக்குத் தேர்ந்திருப்பது எனக்குத் தனி வகையாக தொரு மன நிறைவையளிக்கிறது.
முதல்வர் பெருந்தகையாரின் முழு நம்பிக்கைக்கும் உரியவரென இச்செல்வத் திருவினார் , இப்புது அமைச்சகத்தின் புகழ் எங்கெங்கும் மணம் கமழ்ந்து பெரும் பயன் விளையுமாறு பணியாற்றி வர இறைவன் அருள் புரிய இறைஞ்சுகிறேன் .
நமது தவத்தில் தகு பயனாக நமக்கு வாய்த்துள்ள நம் தமிழக – அரசு நீடு நிலவுக ! –
அதனை உலகம் போற்ற இனிது இயக்கிக் கொண்டு , இந்தப் புது அமைச்சகத்தை அமைக்கும் அருட்பெருஞ்செயலைப் புரிந்துள்ள மாண்புயர் புரட்சித்தலைவர் பெருமானார், பொன்மனச் செம்மலார் பல நலங்களுடன் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி வணங்குவோமாக !
22.4.1984.
தமிழ் வளர்ச்சி பலநிலைகளில் தழைத்தோங்கி ஒளிர்வதும் அறிஞர்களும் – நூலாசிரியர்களும் – மொழிக்காவலரும் – அகவை முதிர்ந்தோரும் – சிந்தனையாளர்களும் நூற்றுக்கணக்கில் புலமைப்பரிசில்களைப் பெற்று மகிழ்வதை நாம் நாளும் கண்டு போற்றுகிறோம் .
ஆயிரக்கணக்கில் அரிய கருவூலங்களை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் – தமிழ்ப் பல்கலைக்கழகமும் – அகர முதலித் திட்ட இயக்ககமும் தமிழின் சீரிய இலக்கியங்களை அயல் மொழிகளில் உரியாரைக்கொண்டு மொழிபெயர்த்து வெளியிடும் மொழிபெயர்ப்புத்துறையும் செயலாற்றுகின்றன .
ஒரு மொழியை எப்படித் தம் நுழைபுலனால் நுணுகி ஆங்கில அறிஞர்கள் நோக்குகின்றனர் என்பதை பொறியாளரும் தமிழ்ப் புதையலுமாக விளங்கும் கனடா அறிஞர் செல்வகுமார் எனக்கு அனுப்பிய ஒரு குறிப்பை அவிழ்பதமாகக் காட்டுகிறேன் .
ஒருமொழியில் ஆளப்பெறும் சொல் வகைகளின் ( பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் முதலானவை ) வீதம் மொழிக்கு மொழி மாறுபடும்.
பேச்சுமொழிக்கும், எழுத்துமொழிக்கும் இடையே கூட மாறுபடும்.
ஆங்கிலத்தில் சில படைப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றில் எவ்வளவு பங்கு வினைச்சொல், பெயர்ச்சொல் என்று சிலர் அலசி இருக்கின்றார்கள்.
ஆபிராகாம் இலிங்கன் அவர்களின் கெட்டிசுபெர்கு உரையை அலசி அதில் உள்ள 272 சொற்களில் கீழ்க்கண்டவாறு சொல்வகைகள் உள்ளன என்று காட்டியுள்ளார் ஒருவர்
ஒன்பது படைப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றில் இவை எப்படி அமைந்துள்ளன என்று சிறு ஆய்வும் செய்துள்ளார்.
இதுபோலத் தமிழிலும் செய்ய வேண்டிய பணிகள் எண்ணற்றவையாக உள்ளன .
அமைச்சர் பாண்டியராசன்
சொற்குவைத்திட்டம் தொடங்கியிருப்பது மொழிக்கு வளம் சேர்க்கும் நற்பணியாகும் .
தொடர்வோம் …
பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை
– ஒளவை நடராசன்
thamizhavvai@hotmail.com

Add a Comment