உயர் குணத்தால் ஓங்கிய செம்மல் !
அன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று நண்பகல் வீடு திரும்பி வந்தேன் .என் ஓட்டுநர் திரு.தனராஜ் இந்த வழியாகப் போகிறோம் – தெய்வத்தின் தெய்வத்தைப் பார்த்து விடலாமே ,உங்களோடு வந்து பார்க்கிறேன் என்றார் .என்னப்பா கவிதையாகப் பேசுகிறாய் என்று கேட்டேன் .தமிழார்வம் கொண்ட தனராஜ் ஐயா , என் மனைவி தெய்வம் – தெய்வத்துக்கு மருத்துவம் பார்த்துத் தேற்றிய டாக்டர் ஹண்டேவை வேறு எப்படிச் சொல்வது என்றார் .
ஹண்டே மருத்துவ நிலையத்தில் என் கார் நின்றது .நான் சென்றதுமே என்ன டாக்டர் இன்று கூட இங்கே அமர்ந்திருக்கிறீர்களே என்று கேட்டேன் சிரித்துக்கொண்டே ” நோ சண்டே பார் ஹண்டே ” என்று கூறி வரிசையில் அமர்ந்திருந்த நோயாளிகளைக் காட்டினார் .
மருத்துவம் – அரசியல் – இலக்கியம் – மனிதநேயம் ஆகிய துறைகளின் திரட்சி தான் டாக்டர் ஹண்டே .மூதறிஞர் இராஜாஜி , அரசியல் வித்தகர் அம்பேத்கர் ,புரட்சித்தலைவர் மூவரைப் பற்றியும் அவர் நினையாத நாள் இல்லை .எழுதாத ஏடுகளில்லை .அவர் விரல் நுனியில் நோய் தீர்வது மட்டுமில்லை , தமிழும் – ஆங்கிலமும் நடம் புரியும் . டாக்டரின் எளிமையான தோற்றம் எவரையும் கவரும் .
90 வயதைத் தொட்டு முடிந்த அவர் எழுதிய அஞ்சலட்டையைப் பாருங்கள் .எழுதும் அழகு எண்ணமும் அழகு ! டாக்டர் பி .சி .ராய் முதலமைச்சராக இருந்த நிலையிலும் மருத்துவப் பணியைத் தொடர்ந்து செய்தார் .நேரு பெருமகனார் ஒரு முறை வங்கம் வந்த போது மருத்துவமனையில் நான் இருப்பதால் விமான நிலையத்துக்கு வரவில்லை என்று கூறினாராம் .
என்னைவிட உயிரான பணியில் நீங்கள் பங்கு கொண்டிருக்கிறீர்கள் .அந்தப்பணி தான் உயர்வு .விமான நிலையத்தில் மாலையோடு நிற்பது வேண்டாத வழக்கம் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றார் .மூதறிஞர் காட்டிய வழியில் அரசியலை வளர்த்துக்கொண்ட டாக்டர் ஹண்டே கம்பரின் இராமகாதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கியது ஒப்பரிய பணியாகும் .
நினைத்துப் பார்த்தாலும் எங்களால் நிறைவேற்ற முடியாத பணியை காதில் நாடிக் குழலையும் கையில் எழுதுகோலையும் வைத்துக்கொண்டு அரிய சாதனை நிகழ்த்தியதை நீதியரசர் இஸ்மாயில் பாராட்டிக்கூறியதை நான் கேட்டிருக்கிறேன் .தொண்டில் கனிந்த பழமாகவும் – தோற்றத்தில் தளர்ச்சி தலைகாட்டாத பெருமிதமும் கொண்ட டாக்டர் ஹண்டே அவர்கள் தமிழக அரசால் பாராட்டப்பெற்றுக்
” கம்பர் விருது ” வழங்கப்பெற்றார் என்ற செய்தி கேட்டு எல்லையில்லாத மகிழ்ச்சி கொண்டேன் .
அமைச்சராகவும் மிளிர்ந்த அரசத் திருவின் விரலில் கம்பர் கணையாழி அணிவிக்கப்பட்டது போல் நான் உணர்ந்தேன் .
வாழ்க டாக்டரின் புகழ் ! பல்லாண்டு பாடுகிறேன் .
மன் புகழ் பெருமை நுங்கள்
மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
உயர் குணத்து உரவுத் தோளாய் !
மகிழ்வோடு
ஒளவை நடராசன்
Dr. H.V. HANDE
HANDE Hospital
20.1.2021
45, L.T .Road ,
Shenoy nagar.
Chennai 600030 .
Most dear Dr. Avvai natarajan,-
This is just to express my thanks to you for calling me up on the phone, to convey your Congratulations to me for getting the KAMBAR AWARD from the Tamilnadu Govt. In my view, you are “ தமிழ் “ in human form! years ago.
a function was arranged Mr.E.P.G Nambiyar in the Rajaji Vidyashram in Kilpauk Scholars like Prof. Chittibabu were ,present you had raised about 10 kamban’s verses and asked me to tell the audience how I had translated them.
After translating to me , you gave me100 marks ,
With regards
Your sincerely
HV Hande …

Add a Comment