POST: 2021-02-04T07:12:42+05:30

அண்ணலாரும் – அடிகளாரும் !

தமிழக அரசில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் வழங்கிய தகைமைப் பரிசில் பெற்ற அடிகளாரையும் அண்ணலாரையும் நான் போற்றி மகிழ்கிறேன் .

பிப்ரவரித் திங்கள் முதல் நாள் நன்னாளாகப் – தமிழ் வளர்ச்சிக்குப் பொன்னாளாகப் பொலிவுற்றது .

சன்மார்க்க உலகத்தின் புண்ணியக் கண்ணாகப் புகழோங்கித் திகழும் ஊரன் அடிகளார் ஆற்றிய பணிகள்
ஒப்பரியன – உவமை கடந்தன .

அடிகளார் துறவுக்கோலம் தரித்த திருநாளில்(23.5.1967) அருட்செல்வரோடு நானும் திருச்சி சென்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றோம் .

திருவருட்பாப் பதிப்பையும் – இராமலிங்க அடிகளார் வாழ்க்கைச் சரிதத்தையும் – ஆய்வுக் குறிப்பையும்
வேறு எவரால் நிறைவேற்ற முடியும் !

வள்ளற் பெருமான் வாய்மொழியைத் தெள்ளத்தெளிந்த தமிழில் வையகமெல்லாம் சென்று வாரி வழங்கிய திறமையும் – பெருமையும் ஈடற்றவை .

வாழ்வு முழுவதும் திருவருட்பா ஆய்விலேயே திளைத்து எழுத்தாலும், பேச்சாலும், ஞான உரை வழங்கும் ஊரன் அடிகளாரை எண்ணும் போது மணிவாசகர் மொழிந்த ” ஊரன் மற்று யாவர்க்கும் ஊதியமே ” என்ற தொடர் நினைவில் நிலைத்து நிற்கிறது .

வள்ளலார் விருதினை அடிகளாருக்கு வழங்கியதால் தமிழக அரசு தனிப்பேறு பெற்றது .

ஊரன் அடிகளாரின் திருப்புகழ் வெல்க !
திருப்பணிகள் வளர்க !!
என்று வணங்கிப் போற்றுகிறேன் .

அறிஞர் கோமான் அண்ணல் பேராசிரியர் கு சிவமணி அவர்கள் ஒருமாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணியாய்த் திகழ்பவர் .

எழுத்தெண்ணிக்கற்ற பழுத்த தமிழ்ப் புலமையும் – சட்ட மொழிக் களஞ்சியத்தைத் தமியராய் இருந்து அயராதுழைத்து வழங்கிய திறமும் என்றும் இன்புறத்தக்கவை .

தமிழ்மொழியின் தனி மாட்சியை தம் ஆய்வால் நிறுவிக்காட்டிப் பேரொளியாய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் திருப்பெயரால் அமைந்த பரிசினை அண்ணலுக்கு வழங்கினர்.

கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் குறித்தது போல ” பட்டத்து யானக்குப் பட்டாடை தருவது போல ” என்று அத்தொடரையே மீளவும் கூறிப் பல்லாண்டு உரைக்கிறேன் .

சரபோசி மன்னர் கல்லூரிக்கு நான் பணியில் சேர்வதற்கு (1959)என்னை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் (திரு லோகநாதன்) கல்லூரி முதல்வரிடமும் (திரு முருகையன்), இவன் என் தம்பி உங்கள் அடைக்கலம் என்று கூறிய பழஞ்சொல் என்னை நெகிழ வைத்தது .

எந்தையார், அறிஞர் சிவ .குப்புசாமி அவர்கள் பெயரைச் சொல்லும் போதெல்லாம் நன்றி துளிர்க்கப் பேசிக் கரந்தையில் உனக்குப் பெரியப்பாவின் இல்லம் இருக்கிறது – அண்ணன் சிவமணி ஆவன செய்வார் ,நீ சென்று வரலாம் என்று அனுப்பினார்கள் .

அறிஞர் சிவமணி மெலிந்த மேனியும் – பொலிந்த வனப்பும் வாய்ந்தவர் .

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் பயின்ற போது இவர் வடிவழகிலும் – குண நலனிலும் மனத்தைப் பறிகொடுத்தவர்களை நான் அறிவேன்.

பேராசிரியர் சிவமணி அவர்கள் எந்த நிலையிலும் பதவி விழைவே இல்லாமல் வாழ்ந்து வருகிறார் .

எந்த நேரத்திலும் எவர் எங்கு வந்து கேட்டாலும் ஐயம் தெளிவிக்கும் மதிநுட்பம் நூலோடு உடைய மதிவாணராக இவரைத் தமிழுலகம் போற்றுகிறது .

வாழையடி வாழையாக என் மகன் அருளுக்கு அவ்வப்போது ஊக்க உரை வழங்கி உயர்த்தும் பேராசிரியரை அண்ணலாரை வணங்கி வாழ்த்துகிறேன் .

பணிவுள்ள
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *