மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 65)
‘நல்லவர்கள் வல்லவர்களாக வேண்டும்’
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
விக்டோரியா பேரரசியார் இங்கிலாந்து நாட்டின் பெருமதிப்பிற்குரிய இணையில்லாக் கோப்பெருந்தேவியாக விளங்கினார்.
ஒருமுறை அரசியார் அங்காடிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் ஒரு பள்ளியின் பெயர்ப் பலகையைப் பார்த்தார். உடனே அந்தப் பள்ளியின் வாயிற்கதவைத் திறக்கச்சொல்லி அரசியார் இறங்கினார். தலைமையாசிரியர் திக்குமுக்காடிப்போனார்.
அரசியார் மெல்லப் பள்ளி முதல்வரின் வணக்கத்துக்கு நன்றி கூறிவிட்டு வகுப்பறைகளை ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தியதையும் கேட்டுத் திரும்பினார்கள். உடனே பள்ளி முதல்வர் அரசியார் என்னை மன்னிக்க வேண்டும். என் அலுவலக அறைக்கு வருமாறு வேண்டினார் .அரசியார் புன்முறுவலோடு அறைக்குள் நுழைந்தார்.
முதல்வர் அறையின் கதவுகளைத் தாளிட்டார் .அரசியாருக்கு முன் மண்டியிட்டுப் பேரரசியாரின் இடதுகை மோதிரத்தை முத்தமிட்டு மேன்மை மிளிரும் அரசியார், எங்கள் பள்ளிக்கு வந்தது எங்களுக்கு வாய்த்த பெரும்பேறு என்றுகூறி வணங்கினார்.
ஆங்கிலேயர்களுக்கு எல்லாவற்றுக்குமே ஒரு மரபுண்டு. வணங்குவுதற்கு – வாழ்த்துவதற்கு ஒரு நெறிப்பாடு உண்டு. அதில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். அரசியார் முதல்வரைப் பார்த்து ஆமாம் என்னை வாயிலில் பார்த்த போதே நீங்கள் அரச வணக்கத்தை மரபாகச் செய்திருக்க வேண்டுமே!
அறையைத் தாளிட்டுக்கொண்டு மரபைப் பின்பற்றுகிறீர்களே என்று கேட்டார். அந்தத் தலைமை ஆசிரியர் – பள்ளி முதல்வரின் பெயர் அர்னால்டு என்பதாகும்.
மேதகு அரசியாரே என் பள்ளிப்பிள்ளைகளை எல்லாம் நான் என் குழந்தைகளாக வளர்க்கிறேன். ஆசிரியர்கள் தான் எவருக்கும் மேலான தெய்வங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
வாயிலில் அரசியார் வந்த போதே நான் மரபைக் காத்திருக்க வேண்டும். என் மாணவர்கள் கண்ணில் படும்படி நான் அரசியார் முன் மண்டியிட்டதைக் கண்டால் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து மரபை மீறினேன், மன்னிக்கவும் என்று சொன்னார்.
அன்று முதல் உயர்ந்த ஆசிரியர்களை ஆர்னால்டு மரபைக் கடைபிடிப்பவர்கள் என்றொரு தொடரே அமைந்துவிட்டது.
பள்ளிப்பிள்ளைகள் நல்லவர்களாகவும் – அதே வேளையில் வல்லவர்களாகவும் விளங்க வேண்டும் என்று நாடு எப்போதும் விரும்பும்.
இந்த உணர்விலேயே பள்ளிப்பிள்ளைகளைப் பார்த்தவுடன் தன் ஆழ்மனத்தில் புதைந்திருந்த பள்ளிக்கல்வி – பசித்தொல்லை – தீய பழக்கங்களின் கொடுமை – நல்ல நண்பர்களைச் சுற்றி வைத்துக்கொள்ளல் என்ற கருத்தை, தன் உரையில் தொடர்வதைக் காணலாம்.——–“
ஆசிரியர்களை மதித்துப் போற்றி வாழ வேண்டிய மிகப்பெரிய கடமை மாணவ, மாணவியர்களுக்கு இருக்கிறது என்பதையும் நாம் இங்கே குறிப்பிடவேண்டும்.
பெரியவர்களை மதிக்கின்ற அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போய்க் கொண்டிருக்கிறது. அதை மாற்றி அமைத்தாக வேண்டும். பெரியவர்களை மதிக்கின்ற பண்பு நமக்கு வேண்டும். ஆமாம் போடுகின்றவர்கள் நம்மோடு அதிகமாக இல்லாமல் இருப்பது நல்லது.
நம்மைக் கண்டிக்கிறவர்கள், நம்மைத் திருத்த முயல்கின்றவர்கள் நம்மோடு இருந்தாக வேண்டும். அப்படிப் பட்டவர்களைத் தான் இங்கிருக்கின்ற மாணவ மாணவியர்களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
இரு நண்பர்கள் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நண்பர் ஒரு தவறான காரியத்தைச் செய்யப்போகும் பொழுது இன்னொரு மாணவ நண்பர் நான் சொன்னால் என்ன ஆகும்? அவருக்கோ அதில் ஆசை இருக்கிறது.
நாம் வேண்டாமென்றால் அவர் கோபித்துக் கொள்வாரோ என்று கருதி நமக்கேன் வீண்வம்பு இருக்கட்டும் என்று கருதினால், அவர் உண்மையான நண்பர் அல்லர். நாம் சொல்வதின் விளைவாக எனக்கு அந்த மாணவன் விரோதியானாலும் பரவாயில்லை அவன் திருந்தியாக வேண்டும். தவறு செய்யக்கூடாது என்று நினைத்து, கண்டிக்கின்ற மனோபாவத்தோடு எவன் நண்பனாக இருக்கின்றானோ அவன் தான் உண்மையான நண்பன்.
உள்ளே போனால், சிகரெட்டு பிடித்தால் என்ன நோய் நடிப்புக்கு வரும் பகை என்பதை இங்கே அழகாக விஞ்ஞான ரீதியில் குறிப்பிட்டுக் காண்பித்தார்கள்.
இதை நான் சொல்ல வேண்டிய காரணம், ஒரு பக்கம் சிகரெட்டுப் புகைக்காதே என்று விஞ்ஞான ரீதியில் சொல்லிவிட்டு வெளியே போனவுடன் விளம்பரத்தைப் பார்த்து விட்டு, இப்படிப் புகை பிடிப்பதா? சாய்த்துப் பிடிப்பதா? அல்லது ஒரு கையால் பிடிப்பதா என்பதையெல்லாம் ஆசைக்குச் சொந்தக்காரர்களாக ஆக்கிக் கொண்டோமானால் படித்ததற்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாமல்போகிறது.
என்ன நோய் வரும் என்று கேட்டேன். புற்று நோய் வரும் என்றார்கள். இன்னும் ஏதாவது நோய் வருமா என்றேன். ஈரல் துளைக்கப் பட்டுவிடும் என்றார்கள். ஆனால், சிகரெட் பிடிப்பவர்களிடம் சொன்னால் ஒப்பு கொள்ளப்போகிறார்களா? அவர்கள் ஒப்பு கொள்ளமாட்டார்கள்.
வேண்டுமென்றால் நமக்குச் சிபாரிசு செய்வார்கள். ஏனென்றால் அவர்களைக் குறை கூறாமல் இருக்க வேண்டுமே அதற்காக இது போன்றவைகளுக்குத்தான் சொல்லுகின்றேன்.
பகுத்தறிவு என்ற முறையிலும் அல்லது பழைய வழக்க முறைகளிலும் நமக்கு நல்லது எவை என்பதை நாம் தெரிந்து கொள்ளக்கூடிய அளவுக்குப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ அதைச் சொல்லித் தருகின்றார்கள்.
அவைகளைக் கல்வி என்று மட்டும் நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு பொருளைக் கண்டு பிடிக்கின்ற அறிவு நமக்குக் கிடைத்துவிட்டது என்று மட்டும் நாம் நிம்மதி அடைந்துவிடக் கூடாது. இதை நாம் செயலாற்றிச் செல்ல வேண்டும்.
இதைச் செயல்படுத்தித் தீர வேண்டும். நாம் எந்த அளவில் கல்வி கற்றுக் கொள்கின்றோம் என்பதை நாம் செயலில் காட்டியாக வேண்டும்.
அதன் எடுத்துக்காட்டாக நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு மாணவ மாணவியரும் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குப் பெரும்பணியை ஆசிரியர்களும் ஆசிரியைகளும் செய்தாக வேண்டும். அந்தப் பெருங்காரியத்தைச் செய்வதற்குத் தாய் தந்தையர்கள் உண்மையிலேயே ஒத்துழைக்க வேண்டும்.
உங்களுடைய அறிவு – ஆற்றல் அத்தனையும் இந்த நாட்டுக்குச் சொந்தம் என்பதை மறந்து விடாதீர்கள்.
அமரர் அண்ணா விழா, பெரியார் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் நடக்கிறது.
பெரியார் மாவட்டம், மூதறிஞர் இராஜாஜி பெயரிலே இடம், காமராஜருடைய பெயருக்குப் பல்கலைக்கழகம் இதெல்லாம் அவர்கள் இருக்கின்ற போதல்ல, இல்லாதபோது உருவாக்கப்படுகின்றன. மறந்து விடாதீர்கள்.
அதுபோல் தான் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு முறையில் நம்மாலான தொண்டை இந்தப் பாரதத்திற்கும், நம்மை வாழவைக்கும் தமிழகத்திற்கும் செய்ய வேண்டும் என்ற உணர்வோடு இந்தக் கல்வி கற்க வேண்டும்.
இந்த மாணவன் கல்வியைக் கற்று முடிந்து வந்த பிறகு இந்த நாட்டின் குடும்பத்தின் தலைவர்கள், மறந்து விடாதீர்கள்.
ஒரு மருத்துவர் இந்த ஜாதிக்குத்தான் நான் மருத்துவம் செய்வேன் என்று சொல்ல முடியாது. உதாரணத்துக்குச் சொல்லப் போனால் கொலை செய்துவிட்டு, வெடிகுண்டு வைத்துவிட்டுத் தப்பி வருகின்ற ஒரு நோயாளி ஆபத்திலே இருக்கின்றான். அவனுக்கு உதவி செய்தால் சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு மருத்துவருடைய மாபெரும் கடமை அந்த மனிதனின் உயிரைக் காப்பாற்றுவது. அவன் யாரென்பதைப் பற்றிக் கவலையில்லை. தனக்கு எந்த ஆபத்து வந்தாலும் கவலையில்லை. அந்த உயிர் பிழைத்தாக வேண்டும். இது அவனுடைய இலட்சியம்.
அதுபோல் தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்தாக வேண்டும். நம்முடைய இலட்சியம் இந்த நாடு வாழ்ந்தாக வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்ந்தாக வேண்டும். ஆகவே பிறரை வாழவைத்து, அதன் விளைவாக நம்மையும் வாழவைத்துக் கொள்கின்ற அளவுக்குக் கல்வி பயன் தரவேண்டும்.
அதிலும் அறிவாய்ந்த துறையில், அறிவியல் துறையில் அந்தப் பயிற்சி பெறுகின்ற நீங்கள் இந்த நாட்டிற்கு எவ்வளவு தனிச் சொத்தாக இருக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் இப்போது மழையெல்லாம் வருவதைப் பார்க்கிறீர்கள். எவ்வளவு ஆபத்துகள் வருகின்றன என்று உங்களுக்குத் தெரியும். ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போடவேண்டும். இப்படியெல்லாம் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். விஞ்ஞான அறிவிலே நமக்கு வளர்ச்சியும், தகுதியும் இருக்குமானால் இப்படிப்பட்ட அணைக்கட்டுகளை இன்னமும் உடைந்துபோகாமல், இடிந்து போகாமல் காப்பாற்றக் கூடிய அளவுக்குப் பலமுள்ளதாக எப்படி ஆக்குவது என்பதைப் பற்றி இன்னும் பத்தாண்டு கழித்து இங்கே இருக்கின்ற இளைஞர்கள் கண்டு பிடிக்கக்கூடிய திறமைக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.
அது இந்த நாட்டிற்குத் தகுந்தது. ஆகவே அப்படிப்பட்ட கல்வியைப் பெறுகின்ற நீங்கள் நல்லவர்களாக இருந்தாக வேண்டும். நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஏனெனில் நீங்கள் கண்டுபிடிக்கின்ற அந்த உத்திகள் இந்த நாட்டின் ஆக்கப்பூர்வமான காரியத்திற்குப் பயன்படுவதாக அமைய வேண்டுமே தவிர அழிவுப் பொருளாக அமைந்துவிடக்கூடாது.
ஆகவே நான் கருத்துகளைச் சொல்லும்போதெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லுகின்றேன். வல்லவர்களாக இருங்கள்; நல்லவர்களாக இருங்கள். தனக்கு மட்டும் அல்ல. மற்றவர்களுக்கும் நல்லவர்களாக இருங்கள்.
குறிப்பாகப் பெற்ற தாய், தந்தையருக்கும், ஆசானுக்கும், நீங்கள் நல்லவராகவே இருந்தால் இந்த உலகம் நல்லவர்களால் தான் மதிக்கப்படுகின்ற நிலைமையை உருவாக்க முடியும் என்று கூறி இந்த அறிவியல் துறையிலே நீங்கள் பெற்றிருக்கின்ற அறிவைச் சாதனையாக மாற்றி, இந்தப் பெருமை தமிழகத்திலிருந்து உலகத்துக்கெல்லாம் பரவி, தமிழகத்திற்கு மாபெரும் புகழை ஏற்படுத்தக்கூடிய நல்ல விஞ்ஞான அறிவாளிகளாக நீங்கள் திகழுங்கள்.
வாழும் நாட்டிற்குப் பெருமை தேடித் தாருங்கள். தமிழகத்தை உயர்த்துங்கள் என்று கூறி உங்கள் தொண்டுள்ளத்திற்கு நான் ஆசியும், பெரியவர்களுக்கு வணக்கத்தையும் கூறி அமைகின்றேன்.”
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை..
.- ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment