மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 63)
‘ஒருகொடியில் இரு மலர்கள் – கலையும், அறிவியலும்’
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
ஏன்? எப்படி? என்ன? எங்கே? எது? யார்? என்ற ஆறு வினாக்களும் தான் அறிவியற் சிந்தனையை வளர்க்கும் செம்பயிரின் நாற்றங்கால்களாகும். பிறந்து தவழ்ந்து நிற்கப் பழகி நடக்கும்போதே இந்தக்கேள்விகள் குழந்தைகளின் உள்ளத்தில் உருவாகும் எனவே இளம்பருவத்தினர் கேள்விகள் கேட்டால் விரும்பி வரவேற்கவேண்டும். பெரும்பாலும் எதிர்த்துப் பேசாதே ஏன் என்று கேட்காதே என்று அதட்டியும் அடக்கியும் பிள்ளைகளை வளர்ப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இயல்பாகக் கலை உணர்வு கொண்டவர்களுக்கு அறிவியல் போக்கும் மனமும் அமையா என்று ஒரு காலத்தில் கருதினர். இந்நாளின் கல்வி அறிவால் சுற்றுச்சூழல் எழுச்சியால் கருவிகளின் தொழில் நுணுக்கத்தால் எல்லாக் கல்வியும் எல்லோர்க்கும் வரும் என்ற நிலை அமைந்தது நமக்குப் பெருமையாகும்.
மழலையர் நரம்பியல் மருத்துவர் மெய்கண்டான் அறிவியலுக்குத் தந்த விளக்கம். இளம்பிள்ளைகள் மனனம் செய்ய வேண்டிய வரிகளாகும் .
அறிவியல் என்றவுடன் அஞ்ச வேண்டாம்
இது பாடப்புத்தகங்களின் ஒரு பகுதி அல்ல!
சிந்தனைக்குரிய ஒரு வழி
அறிவியல் கலைகளுக்குக் காலன் என எண்ணியவர் உண்டு
கலைகளுக்கு இன்னொரு கண்ணோட்டம்
அறிவியல் என்பதில் ஒரே ஒரு கஷ்டம்
யார் எதைச் சொன்னாலும் உடனே ஏற்றுக் கொள்ளாது?
மனதளவில் நிரூபணம் தேவை!
பரிசோதனை செய்து பார்க்கச் சொல்லும், எதையும் கேள்வி கேட்கும்?
மேகங்கள் மிதப்பதை!
மழைத்துளியின் உருவத்தை!
வானவில்லின் நிறப்பிரிகையை!
உலக உருண்டையின் உண்மையை!
சூரிய ஒளி குவி ஆடியில் காகிதத்தை எரிப்பதை!
தண்ணீருக்குள் குச்சி உடைந்ததாய்த் தெரிவதை!
நிழல்கள் நீண்டு போவதை!
கனமான கப்பல் கடலில் மிதப்பதை!
பாறையில் தெரியாத முகம் பளிங்கில்
பளபளப்பாகத் தெரிவதை?
மூளை தலைக்குள் இருக்கும் சதை
பயிற்சி செய்யச் செய்ய வலுவடையும் உரம்பெறும்
அறிவியல் என்பது தேர்வுக்காக
மனனம் செய்து மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல
வாழ்வுக்காக உள்வாங்கிக் கொண்டு வருவதை
யோசித்து வரவேற்கும் சிந்தனை வளர்ச்சி
மெய்ப்பொருள் காணவும்
நுண்பொருள் தேடவும்
நுணங்கிய கேள்வியும்
இழைத்து உணர்ந்து ஈட்டவும்
நுண்மான் நுழைபுலம் போற்றவும்
நுழையும் செய்தியை வடித்துப் பிரிக்கவும்
விழையும் உள்ளத்தை விரிக்கும் புதுப்புலன்!
விதிகள் பல கொண்டவைதான் விஞ்ஞானம்,
அறிவியல் ஒரு வித்தை!
அறிவியல் ஆனந்தம்!
அறிவியல் இன்பம்! அறிவியல் வியப்பு!
அறிவியல் அறிவு! அறிவியல் வாழ்க!
நாடகத்தில் திரைப்படத்தில் நடித்துத்தான் தன் வாழ்க்கையைப் பயனுடைய உயரிய வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட தனிச்சிறப்பு புரட்சித்தலைவருக்குப் புகழ் சேர்த்ததாகும். ஆனால் நடிப்புக்கு வந்த பிறகு கலை, காட்சி, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, தொடர்பாக்கம், இசையமைவின் நுணுக்கங்களைக் கூரிய கண்களோடு கண்டறிந்து எந்தக் கருவியையும் பொலிவாக இயக்கிக்காட்டும் அறிவியல் மனம் புரட்சித்தலைவரிடம் பொதிந்திருந்தது.
அந்தந்தத் துறைகளிலேயே ஊறிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் புரட்சித்தலைவரைக் கண்டு அண்ணாந்து வியந்தனர். புத்தாக்க அறிவியல் ஆய்வு மனப்பான்மையை வளர்த்து அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்று இந்நாளில் அறிவியல் தொழில்நுட்ப மையங்கள் பல ஊக்குவிப்புத் திட்டங்களை வழங்குகின்றன.
புரட்சித்தலைவர் ஒருமுறை கோவையில் 20-11- 1979 அன்று நடைபெற்ற மாநில அறிவியல் கண்காட்சி நிறைவு விழாவில் ஆற்றிய நல்லுரையை இப்போது காணலாம்.
“மேடையிலே வீற்றிருக்கின்றவர்கள் பேசிய பேச்சுகளால் மட்டுமோ அல்லது நான் உள்ளே சென்று அறிவியல் துறையிலே தங்கள் திறமையை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்ற மாணவ மாணவிகளைச் சந்தித்து அவர்களுடைய ஆற்றல்மிகு விளைவுகளைப் பார்த்ததினாலேயோ ஏற்படுகின்ற ஒரு மகிழ்ச்சி மட்டுமல்ல!
மாணவ மாணவியர்களை நான் பார்க்கும் பொழுதெல்லாம் என் உள்ளத்திலே எந்த அளவிற்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றதோ, அந்த அளவுக்கு அச்சமும் ஏற்படுகிறது என்பதை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். காரணம், இவ்வளவு தெளிந்த நீரோடைபோல் இருக்கின்ற மனதுக்குச் சொந்தமான – மாணவ மாணவியர்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் காத்துப் புதுமையோடு உருவாக்க வேண்டிய மாணவ – மாணவியர்கள் இதே களங்கமற்ற கலக்கமற்ற, குழப்பமற்ற மனத்தோடு தொடர்ந்து வாழ வேண்டும், வளர வேண்டுமே என்பதில் தான் என் உள்ளம் அச்சப்படுகின்றது. காரணம், உங்களுக்கே தெரியும்.
நாகரிகம் என்ற பெயரால், எங்கோ, நாம் இழுத்துச் செல்லப்படுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதுதான், இவ்வளவு தெளிவான ஆராய்ச்சி ஆர்வமிக்க தொண்டு செய்ய வேண்டும் என்ற துணிவுமிக்க எண்ணத்திற்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்ற நீங்கள் எவ்வளவு நல்ல சூழ்நிலையில் வளர்க்கப்பட வேண்டும் என்பதை நான் எண்ணிப் பார்க்கின்றேன். உங்களுடைய உள்ளத்திலே இருக்கின்ற நல்ல எண்ணம்நல்ல குணம் – நல்ல ஆற்றல் அறிவு இவை அத்துணையும் இந்த இந்தியத் துணைக் கண்டம் முழுவதற்கு மட்டுமல்ல உலகத்திற்கே சொந்தம் என்பதை இங்கே நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
அறிவியல் என்பது பொதுக்கல்விக்கு மேலாக நுணுக்கத்தின் ஆழத்தைக் கண்டறிய உலகுக்கு வாய்த்த நுழைவாயிலாகும். மின்விளக்கை என்று கண்டறிந்தாரோ அந்த அறிவியலாளர் தனக்கோ தன் குடும்பத்துக்கோ மரபுக்கோ வாரிசுக்கோ உரிமை கோரவில்லை. அதை உலகுக்கே அளித்துள்ளார். எரிகிற விளக்கெல்லாம் எடிசனை நமக்கு நினைவூட்டுகிறது.
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
– உன் நரம்போடு தான் பின்னி வளரணும் அறிவு வளர்ச்சி
அதுதான் அறிவியல் எழுச்சி
என்று பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் வரிதான் என் நினைவுக்கு வந்தன.
அறிவியற்பேரறிஞர் ஐன்ஸ்டீனுடைய உருவத்தை எனக்குப் பரிசு தந்திருக்கிறார்கள். எங்கே பிறந்தார், எந்த மொழிக்குச் சொந்தக்காரர் என்று எண்ணிப் பார்த்து இந்த ஐன்ஸ்டீனை இன்றைய தினம் எத்தனை பேர் பாராட்டுகிறார்கள். இந்தச் சிலையை இங்கே எனக்குத் தருகின்ற நேரத்தில், இங்கே இருக்கின்ற மாணவ, மாணவியர் யாராவது ஒருவருடைய சிலை ஒரு காலத்தில் மேடையில் வழங்கக்கூடிய தகுதியை என்றாகிலும் ஒரு நாள் பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன். உங்களுக்குச் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.
அப்படியானால் இந்த ஐன்ஸ்டீன் யாருக்குச் சொந்தமென்றால் உலகுக்குச் சொந்தம். அறிவியல் துறைக்குச் சொந்தம். ஆகவே உங்களுடைய அறிவும், ஆற்றலும் இந்த வட்டத்திற்கு மட்டுமல்ல உலகம் என்ற கோளத்திற்கே சொந்த மென்பதை இங்கே நான் மீண்டும் குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஒரு காலத்தில் தொடங்கிய சிந்தனை சீர்குலைந்து தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டது. மதம் என்பது ஏதேனும் ஒரு சிலரின் போக்கின் அடிப்படையில் தான் உருவாயிருக்க வேண்டும் என்பதை இங்கே நான் சொல்ல விரும்புகிறேன். இதில் ஏதோ ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு வீணாகக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். மதம் எதற்காக ஏற்பட்டது என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால், ஒரு மனிதனை நல்லவனாக இருக்க வேண்டும் நல்ல குணங்களுக்குச் சொந்தக்காரனாக இருக்க வேண்டும் நல்ல பண்புள்ள மனிதனாக இருந்தாக வேண்டும் என்பதற்காகத்தான் சில நெறிப்பாடுகளைத் தோற்றுவித்தார்களே தவிர, அந்த எண்ணம் உங்களுடைய உள்ளத்திலே தோன்றிப் பிரிவினையை உருவாக்க வேண்டுமென்று விரும்பியிருப்பார்களேயானால், அதில் நாட்டில் உள்ள நிலைமைகளைப் பகுத்துப் பார்த்து, இது கெட்டது, இது தீமை பயக்கத்தக்கது இதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற வகையில் பகுத்தறிவு என்ற அந்தப் பகுத்துப் பார்க்கும் அறிவைப் பயன்படுத்தி,அது எந்தக் காலத்திலே தோன்றியது யாருக்காக உண்டாகியது என்பதைப் பற்றிய விவரத்திற்குப் போகும் போது தான் பிரச்சினைகள் வருகின்றன. ஆனால் நோக்கம் என்னவென்றால் மனிதனை நல்லவனாக, நல்லவர்களாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகத் தான் பெரியவர்கள் அந்தக் காலத்தில் மதத்தை உருவாக்கினார்கள் என்பதை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
ஏதோ அறிவியல் துறையிலே நடைபெறுகின்ற ஒரு நல்ல நிகழ்ச்சியில் ஒரு நெறியை நல்லதா? கெட்டதா? அது பகுத்தறிவுக்குச் சொந்தமானதா? இல்லையா? என்ற பிரச்சினையை ஏன் எடுத்துக் கொண்டேனென்றால் நீங்கள் இங்கு என்ன தான் அறிவியல் துறையிலே திறமை வாய்ந்த பொருள்களைக் கருவிகளை உக்திகளைக் கண்டுபிடித்தாலும் வீட்டிற்குப் போகும் போது சுற்றுப்புறத்திலிருக்கின்ற சூழ்நிலையைச் சந்திக்கும் பொழுது சுற்றுச் சார்புகள் எங்கே இழுத்துச் செல்கிறது என்பதை எண்ணுகின்ற பொழுது நீங்கள் குழப்பம் அடைய வேண்டிய நிலைமைகூட ஏற்படலாம்.
அதை நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றால், ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னைப் பற்றி எண்ணுகின்ற நேரத்தில், அந்த நாட்டினுடைய நிலைமையைப் பற்றியும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற அளவிற்குத் தான் வெறும் பாடப் புத்தகத்தைப் படித்தால் போதாது. அந்தப் படிப்பினால் கூடிய அறிவைச் செயல்படுத்திப் பார்ப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்று இங்கே சொல்லியிருக்கின்றார்கள். இந்த அரசுதான் இதில் அக்கறை கொள்கின்றது.
எந்த மனிதனும் புத்தகப் புழுவாக இருந்து பயனில்லை. அதற்கு – என்ன உதாரணம் சொல்வார்கள் என்றால், சில புழுக்கள் அல்லது பூச்சிகள் புத்தகத்தை அப்படியே அரித்துத் தின்றுவிடும். அதனால் அந்தப் புத்தகத்திற்கும் பயனில்லை. அந்தப் புத்தகத்திலே இருந்த கருத்துக்கும் பயனில்லை. அந்தப் புழுவினுடைய வாழ்விற்கு உணவாக இருந்தது. அவ்வளவு தான். அதற்காகத்தான் பெரியவர்கள், “நீ புத்தகப் புழுவாக இருக்காதே – புத்தகப் பூச்சியாய் இருந்துவிடாதே” என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அறிவியல் துறையைப் பற்றிப் பேசும் பொழுது இயற்பியல், வேதியல், உயிரியல் இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தருகின்றார்கள். அதைப்பற்றி நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள்.
எனக்குள்ள மகிழ்ச்சி, உள்ளே நான் சென்று பார்க்கும் பொழுது எனக்கு விளக்கம் தர முயன்ற உடன்பிறப்புகள், தமிழிலே எவ்வளவு அழகாக – சுத்தமாக, கலப்பில்லாமல் இனிப்பான தமிழில் சொன்னார்கள் என்பதை எண்ணிப் பார்த்து, பார்த்து நான் பெருமையடைகிறேன்; பூரிக்கின்றேன். ஏதோ ஆங்கிலம் இல்லாவிட்டால் விஞ்ஞானம் வளராது. ஆங்கிலம் இல்லாவிட்டால் மனிதன் வளரவே மாட்டான், ஆங்கிலம் இல்லா விட்டால் மனிதனுக்கு அறிவே இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் சொல்லுகின்ற நிலைமை மாறி, மற்ற நாடுகள் போல அவரவர்களுடைய மொழியில் குறிப்பாக ஜப்பானைப் போல், அவரவர்களுடைய தாய்மொழியில், என்கின்ற திறமையைத் தகுதியை, தரத்தை இங்கே மற்றவர்கள் முன்னிலையில், மற்றவர்கள் புரிந்து கொள்கின்ற வகையில் செய்து காட்டியதையும், சொல்லியதையும் நான் பெருமையோடு இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.”
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment