முதுமை எனும் பூங்காற்று
முதுமை ஒரு வரம்
முதியோர் நலம் காக்கும் மாத இதழ்
முதுமை – மூதுரை
பக்கம் எண் 30
முதுமை நலம் காப்பதையே தன் வாழ்க்கையின் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு மருத்துவத்துறையில் மகத்தான பணி ஆற்றி வருகின்ற தாமரைத்திரு டாக்டர் வி .எஸ் .நடராசன் பணிகளைச் சிறப்பாகத் தமிழகம் பொதுவாகப் பாரத நாடு முழுவதுமே பாராட்டி மகிழ்கிறது .
முதியோர்களின் நலம் காப்பதற்காக 100 குறிப்புகளைத் தொகுத்துச் சிற்றேடாக மூதறிஞர் வி .எஸ் .என் தந்திருப்பதைக் கண்டு என் கண்களில் நீர் மல்கியது .
கொள்ளை நோய் கொடுங் கூற்றாக உலகை வாட்டி வதைக்கும் இந்நாளில் முதியோர் பலர் அந்நோய்க்கு இரையாவதை நாம் கண்டு கலங்குகிறோம்.
இந்த நிலையில் முதுமையைச் செல்வமாகக் கருதி ” முதுமை என்னும் பூங்காற்று ” என்று அன்பு கனிந்த மனம் கொண்ட நம் டாக்டர் 100 குறிப்புகளை – 10 தலைப்புக்களாக எடுத்துத் தொகுத்து வழங்கியிருக்கிறார் .
101 ஆவது குறிப்பாக – ஒன்றைச் சேர்க்க வேண்டுமென்றால் முதியோர் அனைவர் கையிலும் இந்த நூல் இருந்தால் என்றைக்கும் விழிப்புணர்வு ஏற்படும் என்பதாகும் .
90 வயது அல்லது 85 வயதுக்கு மேற்பட்டவர்களை அந்தந்தப் பகுதியில் ஒரு கணக்கெடுத்து டாக்டருடைய மேற்பார்வையில் ஒரு குழு அமைத்து ஒரு மாதத்துக்கு ஒருமுறை முதியோர்களைக் கண்டு ஆவன செய்ய வேண்டும் என்று அரசு முடிவுசெய்து அரசு அவருக்கு ஒரு தனி நிதி நல்கையை வழங்கினால் உண்மையாக முதுமைக்கு அரசின் பரிசாக அந்த முறைமை அமையும் .
முதியோர்க்குக் கண்ணாடி ,காதுகருவி ,காலணி ,சிறுநீர்ப்போக்கு வடிகுழாய் ,நீரிழிவுச் சோதனைக் கருவிக் குச்சிகளையும் மலிவு விலையில் அரசு வழங்குவதும் தேவையாகும் .வீடு தேடி வந்து வழங்குமாறும் செய்யலாம் .
முதியோர்க்கு இல்லத் தாதியராகப் பணியமர்த்துவதில் பாதித்தொகையை அரசே வழங்கவேண்டும் .அனைவருக்கும் ஓய்வூதியம் பெறுபவராக இருக்க முடியாது என்ற கருத்தையும் எதிர்காலத்தில் வெளியிடும் குறிப்பேட்டில் சேர்க்கலாம் என்றும் தோன்றியது . .
டாக்டருடைய தகுதிக்கு இன்னும் எத்தனையோ பாராட்டுக்களை நாடு வழங்க வேண்டும் , அவர் சொல்லும் குறிப்புகள் எல்லாம் ” மகன் தந்தைக்குச் சொல்வது போல ” தன்னுடைய தோழர் – உயிர்த் தோழருக்குச் சொல்வது போல உடனிருப்பவர்கள் – நண்பர்கட்குச் சொல்வது போல எளிமையான தமிழில் இனிமையான நடையில் அருமையாக வரைந்து காட்டும் இந்தக் கையேடு ஒரு பொன்னேடு .
நாம் எப்போதும் இதயத்தில் வைத்துப் போற்றப்படவேண்டிய நல்லேடு ” என்பது திண்ணம் என்பது என் எண்ணம் .
அன்போடு
ஒளவை நடராசன்

Add a Comment