மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 60)
“காயாத கதிரும் – தேயாத நிலவும்”
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
காட்சி-147
முதலமைச்சர் புரட்சித் தலைவர். உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். (05-10-1984) குடியரசுத்தலைவர் செயில்சிங் புரட்சித் தலைவர். குணமடைய வாழ்த்துத் தந்தி அனுப்புகிறார்.
காட்சி-148
புரட்சித் தலைவர் கோப்புகளைப் பார்வையிடுகிறார். உடல்நிலை நன்கு தேறி வருகிறது என்று மருத்துவ அறிக்கை வெளியிடுகிறது. தமிழ்நாடு ஆளுநர் குரானா, புரட்சித் தலைவரை நேரில் சந்திக்கிறார். ஆளுநருடனும் மருத்துவருடனும் புரட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கிறார். இரவு வேளையில், அவருக்குப் பக்கவாதம் வந்து உடலின் வலது பக்கம் செயலிழந்து, மூளையில் வீக்கம் ஏற்படுகிறது. (12.10.1984) சிகிச்சையளிக்க அமெரிக்க மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. புரட்சித் தலைவரைச் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்ல ஒரு இராணுவ விமானம் தயார் நிலையில் வைக்கப்படுகிறது.
காட்சி-149
பிரதமர் இந்திரா காந்தி, அப்பல்லோ மருத்துவமனை வந்து புரட்சித்தலைவர் பார்த்து விரைவில் குணம் அடைய வாழ்த்து கூறிச் செல்கிறார். அமெரிக்க டாக்டர்கள் பிரீட்மென், கிறிஸ்டோபர் பிளாக், ஸ்ரீபாதராவ், ஜான் ஸ்டிர்லிங் மேயர் ஆகியோர் சென்னை வந்து புரட்சித் தலைவரைப் பரிசோதனை செய்கிறார்கள். “அவரது மூளையில் உள்ள வீக்கம் குறைந்து இருக்கிறது. எனவே அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார். ஆனால் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மாற்று சிறுநீரகம் பொருத்த அமெரிக்கா கொண்டு செல்ல வேண்டும்” என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஜப்பான் டாக்டர்கள் கானுவும் நக்கமோராவும் சென்னை வந்து 2 மணிநேரம் பரிசோதனை செய்த பின்னர், “மூளையில் ஏற்பட்ட வீக்கத்தை (ரத்தக் கட்டி) அகற்றச் சில நாட்கள் கழித்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்” என்று கூறுகின்றனர்.
காட்சி-150
“புரட்சித் தலைவருக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியினால் ஆபத்து இல்லை. அவரின் உடல் நிலையில் மகிழ்ச்சி தரும் அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று ஜப்பான் டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள் (22.10.1984). புரட்சித் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. ‘டேப்’பில் ஒலிபரப்பப்பட்ட கருநாடக இசையைக் கேட்டு மகிழ்கிறார்.
காட்சி-151
பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்படுகிறார் (31-10-84). புதிய பிரதமராக, இராஜீவ் காந்தி பதவி ஏற்கிறார். அதிர்ச்சியைத் தாங்க மாட்டார் என்பதால், இந்திரா காந்தி மரணச் செய்தியை எவருமே புரட்சித் தலைவரிடம் தெரிவிக்காது மறைத்து விடுகிறார்கள்.
காட்சி-152
புரட்சித் தலைவரை சென்னை டாக்டர்கள் பரிசோதனை செய்கிறார்கள். மூளை வீக்கம் அடியோடு குறைந்தது தெரியவருகிறது. (1-11-84). புரட்சித் தலைவர் படுக்கையில் இருந்து எழுந்து நடக்க முயல்கிறார். ஜப்பான் டாக்டர் கானு மீண்டும் சென்னை வந்து புரட்சித் தலைவரைப் பரிசோதனை செய்கிறார். “மூளையில் இருந்த வீக்கம் முழுவதும் நீங்கி விட்டதால் மூளையில் ஆபரேஷன் தேவை இல்லை” என்றும், “சிறுநீரகச் சிகிச்சைக்காக இனி அமெரிக்கா கொண்டு செல்லலாம்” என்றும் கூறுகிறார்.
காட்சி-153
இரவு 10.45 மணிக்குப் புரட்சித் தலைவர், சிறிய மருத்துவமனைபோல் அமைக்கப் பட்ட தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். (5-11-84) மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹண்டே, தனிச் செயலாளர் பரமசிவம், செவிலியர்கள், மருத்துவர்கள், உதவியாளர்கள் உள்பட 21 பேர் உடன் செல்கிறார்கள். நியூயார்க் நகரம் புரூக்ளினில் உள்ள டவுன் ஸ்டேட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். அமெரிக்காவில் புரட்சித் தலைவர் நன்றாக இருப்பதாக டாக்டர் பிரீட்மென் தெரிவிக்கிறார். புரட்சித் தலைவருக்குச் சிறுநீரக மாற்று ஆபரேஷன் தேவையா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்கிறார்கள்.
காட்சி-154
கோட்டு, சூட்டு அணிந்து சென்ற அமைச்சர் ஹண்டேயைப் பார்த்துப் புரட்சித் தலைவர் சிரிக்கிறார். (14-11-84). புரட்சித் தலைவருக்கு அவர் நடித்த திரைப்படப்படங்களை வீடியோவில் போட்டுக் காட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிடப் புரட்சித் தலைவர் சம்மதம் தெரிவிக்கிறார். புரட்சித் தலைவர் உடல் நிலையில் விரைவான முன்னேற்றம் ஏற்படுகிறது. அவர் தானாகவே எழுந்து நடக்கிறார். சக்கர நாற்காலியில் அமர்ந்து புரூக்ளின் ஆஸ்பத்திரியை 20 நிமிடம் சுற்றிப் பார்க்கிறார்.
காட்சி-155
புரட்சித் தலைவரின் வேட்புமனுவை அமெரிக்காவில் இருந்து அமைச்சர் ஹண்டே சென்னைக்குக் கொண்டு வருகிறார். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடப் புரட்சித் தலைவர் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அமெரிக்க மருத்துவமனையில், புரட்சித் தலைவர் உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டும் புரட்சித் தலைவரின் 3 புகைப்படங்களை அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் சென்னையில் வெளியிடுகிறார். (6-12-84). அமெரிக்க மருத்துவமனையில் புரட்சித் தலைவர் சாப்பிடுவது, கைகுலுக்குவது போன்றவற்றை விளக்கும் காணொலியைச் சென்னையில் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் வெளியிடுகிறார். (09.12.84).
காட்சி- 156
புரட்சித் தலைவருக்கு மாற்றுச் சிறுநீரக அறுவைச்சிகிச்சை 3 மணிநேரம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கோவில், மசூதி, தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன (19.12.84). மாற்று சிறுநீரகம் நன்றாக இயங்குவதாகவும், புரட்சித் தலைவர் உடல்நிலையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள். புரட்சித் தலைவர் தானாக நின்று டாக்டர்களுடன் கைகுலுக்கும் காட்சிகளைக் கொண்ட காணொலியை அமைச்சர் ஆர். எம். வீரப்பன் வெளியிடுகிறார்.
காட்சி-157
தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. (24-12-84). ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 234 இடங்களில் 132 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை அ.தி.மு.க. கைப்பற்றுகிறது. ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் 31,484 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைக் கேட்டுப் புரட்சித் தலைவர் மகிழ்ச்சியடைகிறார். அமெரிக்க ஆஸ்பத்திரியில் நிருபர்களைச் சந்திக்கிறார்.
காட்சி-158
சட்டசபை அ.தி.மு.க. தலைவராக (முதலமைச்சராக) மீண்டும் புரட்சித் தலைவரை அ.தி.மு.கழக எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்து எடுக்கிறார்கள். புரட்சித் தலைவரைச் சந்திக்க அமைச்சர் நெடுஞ்செழியன், தலைமைச் செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறார்கள். (4-1-85) அமெரிக்காவில் நெடுஞ்செழியன் புரட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசுகிறார். விரைவில் தமிழகம் திரும்பி முதலமைச்சராகப் பதவி ஏற்பதாகத் தமிழ்நாடு ஆளுநருக்குப் புரட்சித் தலைவர் எழுதிய கடிதத்துடன் நெடுஞ்செழியன் சென்னை திரும்புகிறார்.
காட்சி-159
தொலைக்காட்சியில் திருமதி இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சியைப் பார்த்துப் புரட்சித் தலைவர் கண்கலங்குகிறார்.
காட்சி-160
இடைக்கால முதல் அமைச்சர் நியமிக்கலாம் என்று யோசனை தெரிவித்து, கவர்னர் குரானா எழுதிய கடிதத்துக்கு (25-1-85), புரட்சித் தலைவர், “நான் விரைவில் தமிழகம் திரும்பிப் பொறுப்பு ஏற்விருப்பதால், தற்காலிக முதல் அமைச்சரை நியமிக்க அவசியமில்லை” என்று பதிலனுப்புகிறார்.
காட்சி-161
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், புரூக்ளின் மருத்துவமனையில் புரட்சித் தலைவருக்கு வரவேற்பு விழா நடத்துகிறார்கள். புரூக்ளின் ஆஸ்பத்திரிக்குப் புரட்சித் தலைவர் ரூ 3 லட்சம் நன்கொடை வழங்குகிறார்.
காட்சி-162
அமெரிக்காவில் இருந்து புரட்சித் தலைவர். உடல் நலத்தோடு தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். (2-2-85). காலை 5-45 மணிக்கு முதல் அமைச்சர் புரட்சித் தலைவர், தன் மனைவி ஜானகி அம்மாளுடன் சென்னை வந்து சேருகிறார். பரங்கிமலை இராணுவ மைதானத்தில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின் முதல்வராகப் பதவியேற்கிறார்.
காட்சி-163
புரட்சித் தலைவர் ரசிகர் மன்றங்கள் மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. (13.7.1986) புரட்சித் தலைவிக்கு, புரட்சித் தலைவர் மீண்டும் முக்கியத்துவம் தருகிறார். கொள்கை பரப்புச் செயலாளராக ஊர்வலத்தைத் தொடங்கி வைக்கிறார். புரட்சித் தலைவர் மனம் திறந்து பாராட்டுறார். இரண்டாவது நாள் ஆறு அடி நீளமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோல் முதல்வர் புரட்சித் தலைவரிடம் புரட்சித் தலைவி வழங்குகிறார்.
காட்சி-164
அமெரிக்கா சென்று, மருத்துவப் பரிசோதனையை முடித்துவிட்டுப் புரட்சித் தலைவர் நாடு திரும்புகிறார். (செப்-1986) புரட்சித் தலைவரே மீண்டும் கழகப் பொதுச் செயலாளராகிறார்.
காட்சி-165
கடற்கரைக் கூட்டத்தில் புரட்சித் தலைவருக்குப் பிரதமர் இராஜீவ் காந்தி புகழ்மாலை சூட்டுகிறார். (சூலை 1987).
காட்சி-166
அமெரிக்கா சென்று, (ஆகத்து 1987) மீண்டும் மருத்துவப் பரிசோதனையை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புகிறார். சென்னையில் நேரு சிலையைப் பிரதமர் இராஜீவ் காந்தி திறந்து வைக்கிறார். அதுவே புரட்சித் தலைவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாக அமைகிறது.
காட்சி-167
புரட்சித் தலைவர் அதிகாலை நேரத்தில் உடலால் மறைந்தாலும் (24.12.87) உணர்வுகளால் மக்களோடு ஒன்றிவிடுகிறார். இராஜாஜி மண்டபத்தில் அவர் நல்லுடல் வைக்கப்படுகிறது. பிரதமர் ராஜீவ் காந்தி, மத்திய, மாநிலங்களின் அமைச்சர்கள் அஞ்சலி, பிரமுகர்கள், மக்கள் அழுகை. அலைகடல்கள் யாவும் ஆர்ப்பரித்துச் சென்னைக்கு வந்தது போல் கூட்டம். மறுநாள் பீரங்கி வண்டியில் புரட்சித் தலைவர் உடல் வைக்கப்படுகிறது. இறுதி ஊர்வலம். மாலை 3 மணியளவில் தான் பின்பற்றிய தலைவர் பேரறிஞர் அண்ணா உறங்கும் நினைவிடம் அருகில் புரட்சித் தலைவர் ஓய்வு கொள்கிறார். துப்பாக்கிக் குண்டுகள் முழக்கத்துடன் இராணுவத்தினர் மரியாதை. மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்குகிறது.
பல ஒளிப்படங்களுடன் ஒலிஒளிக்காட்சி 167 காட்சிகளுடன் நிறைவடைகிறது. இந்த ஒலிஒளிக்காட்சி எழுத்தால் திரு. நாகைத் தருமனால் எழுதி முடிக்கப்பட்டது. புரட்சித் தலைவரின் வாழ்க்கைப் பாடத்தை வளரும் நல்லிளைஞர்கள் ஒலிஒளிக்காட்சிகளைக் கொண்டு படமாகவே எடுக்க முனையலாம். வெற்றி காணலாம்.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment