POST: 2020-11-13T11:04:40+05:30

அனபுள்ள ஒளவை அப்பா,

வணக்கம்.

தங்களின் தாராம்மா பற்றிய கட்டுரை என் கண்களை நனைத்து விட்டது. மனம் மிகவும் நெகிழ்ந்து விட்டது. தாங்கள் இருவரும் எவ்வளவு மனம் ஒத்த தம்பதியராய் வாழ்ந்தீர்கள் என்பதை இவ்வுலகம் நன்கு அறியும். அவரது பிரிவு தங்களுக்கு எவ்வளவு பெரிய மனத்துயராக இருக்கும் என்பதையும் என்னால் உணர முடிகிறது. காராணம் தாராம்மா ஒரு சாதாரண பெண்மணியல்ல. அவர் சாதிக்கப் பிறந்தவர். ஆளுமை நிறைந்த தங்கள் கண்மணியை இழப்பது வலி நிறைந்த வேதனையே! இதிலிருந்து தாங்களும் குடும்பத்தாரும் விரைவில் மீள எனது பிரார்த்தனைகள்!

இச்சமயத்தில் தாராம்மா என்ற ஆளுமை என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை நினைவு கூற விரும்புகிறேன். எனது பள்ளியிறுதி மற்றும் கல்லூரி கால கட்டத்தில் எத்தனையோ நாட்களை நான் தங்கள் வீட்டில் கழித்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் என்னிடம் பெற்ற தாய் போலவே பரிவு காட்டியவர் தாராம்மா.
அப்போதுதான் வேலையிலுருந்து திரும்பியிருப்பார்…வந்ததுமே அவர் கேட்கும் முதல் கேள்வி “சாப்பிட்டீங்களா?” என்பதுதான்.

பல சமயங்களில் பட்டிமன்றங்கள் 11மணி வரை நடக்கும். நான் தாம்பரம் வரை தனியாக போக வேண்டாமென தங்கள் காரில் தங்கள் வீட்டிற்கே வந்து அப்போதெல்லாம் தங்கியுள்ளேன். எனக்காக தன் பிள்ளைகள் மூவரையும் ஒரே அறையில் அட்ஜஸ்ட் செய்யும்படி அந்த ராத்திரியிலும் எனக்கென தனியறை ஏற்பாடு செய்து கொடுப்பார்கள் தாராம்மா. அப்போது தங்களின் மூத்த மகன் கண்ணன் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். அவர் லேட் நைட்டில் படிப்பதற்காக தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அருளும், பரதனும் கீழ் அறையில் படுப்பார்கள். நானோ அல்லது நானும் சித்ராக்காவுமாகவோ சேரந்து வந்து பல நாட்கள் அந்த சின்ன பசங்களின்(அன்று அவர்கள் பள்ளி மாணவர்கள்) தூக்கத்தையும், கண்ணனின் நிம்மதியையும் கெடுத்திருக்கிறோம். சின்னவர்கள் தூக்கம் கலைந்ததால் எங்களோடு பேசி அரட்டை அடிக்கத் துவங்கி விடுவார்கள். எங்களின் சிரிப்புச்சத்தம் கேட்டு நள்ளிரவில் மேல்மாடி அறையிலிருந்து ‘இன்னும் தூங்கலையா?’ என தாராம்மா கேட்டதும்தான் நாங்கள் குட் நைட் சொல்லி அவரவர் அறைக்கு அவசரமாய் ஓடுவோம். மறு நாள் காலையில் ஏழு மணிக்கெல்லாம் பளிச்சென்ற உடையில் மருத்துவமனைக்கு செல்ல தயாராக இருப்பார் தாராம்மா. அப்போதுதான் எழுந்து பல் துலக்கி வரும் எனக்கு குட் மார்னிங் சொல்லி காபி டிபன் உபசாரம் செய்வார். நான் “வீட்டில் அம்மா செய்திருப்பார்கள்..கிளம்புகிறேன்” என்றாலும் சாப்பிடாமல் அனுப்பவே மாட்டார். அதே போல நான் சாப்பிட்டு கிளம்புகையில் தவறாமல் அவர் கேட்கும் கேள்வி ‘காசு இருக்கிறதா பர்ஸில்’என்பது. வேண்டிய அளவு டோக்கனும், ரயில் பாஸூம் இருக்கிறது என்றாலும் கையில் பத்து ரூபாய் காசாவது எப்போதும் இருக்க வேண்டுமென வலியுறுத்துவார். அவரது சகோதரி மகள் சுதாவின் நினைவில் என்னை பெரும்பாலும் அந்த பெயரிட்டே அழைப்பார். தாங்கள் “இவள் பெயர் சுபா” என திருத்தும் போதெல்லாம் ‘இருக்கட்டுமே..எனக்கு இவ நம்ம சுதா போலத்தான்’ என சொல்லியிருக்கிறார். மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தாலும் என்னைப் போன்ற தங்கள் மாணவிகளைப் பார்த்தால் தன்னிகரற்ற பாசத்துடனும் நேசத்துடனும் அவர் ஆதுரமாய்ப் பழகியது 35 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் என் நினைவுகளில் பசுமையாக! என் திருமணத்திற்கு இரண்டு வேளைகளிலும் தாங்கள் தம்பதி சமேதராய் வந்து வாழ்த்தியதை என்னால் மறக்கவே முடியாது. அதே போல “எனக்கு எந்த கல்லூரியிலாவது பி.காம் ஸீட் வாங்கிக் கொடுங்கப்பா” என நான் தங்கள் அலுவலகத்தில் பழியாய் கிடந்த போதுதான் பாரதி மகளிர் கல்லூரியில் அந்த வருடம் அந்த பட்டப்படிப்பினை துவங்குவதாக ஜி.ஓ ஒன்று தங்கள் மேசைக்கு வந்தது. உடனேயே தங்கள் சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாயினை என் கையில் திணித்து “போம்மா…உடனே போய் அங்க அப்ளிகேஷன் வாங்கு. உன் கிட்ட ஒரு 70 சர்டிஃபிகேட்ஸ் இருக்குன்னு சொல்றேல்ல?..அதையெல்லாம் காப்பி எடுத்து உன் அப்ளிகேஷனோட பின் பண்ணி அனுப்பு. உனக்கு நிச்சயம் ஸீட் கிடைக்கும்” என்றீர்கள். தாங்கள் சொன்னபடியே செய்ததில் எனக்கு பி.காம் அங்கே கிடைத்ததையும் மறக்க இயலாது. தங்களிடம் பெற்ற கொஞ்ச கால பயிற்சியும், எனக்கிருத்த தமிழார்வமும்தான் என்னை பின்னாளில் ஒரு பத்திரிகையாளராக நிலைக்கச் செய்தது. ஆனால் என்னை தாங்கள் பார்க்கும் போதெல்லாம் “ஒரு ஐ.பி.எஸ் அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரியை தமிழகம் மிஸ் செய்து விட்டது. உன்னிடம் அத்தனை ஆற்றல் உண்டு” என்றே சொல்லியிருக்கிறீர்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு என் மகனின் திருமண அழைப்பிதழை தர நாங்கள் தங்களை காண வந்த போது கூட என் கணவரிடமும் தாங்கள் அதையே கூறிய போது தங்களின் நம்பிக்கையினை நான் அன்று சீரியஸாக எடுத்து செயல்பட்டிருக்கலாமோ என நினைத்தேன். தாமதமாக வருந்தினேன். இனி அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் தங்களுக்கே மகளாகப் பிறந்து தங்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.
தாராம்மாவிடம் நான் கண்டு கற்றது, அவர்களின் எளிமை மற்றும் இனிமை. எத்தனை உயரமான பதவியில் இருந்தாலும் என்னைப் போல தங்கள் வீட்டுக்கு வரும் சின்னப் பெண்ணைக் கூட விருந்தோம்பல் செய்த அவரது பண்பு விலை மதிக்க முடியாததொரு மாண்பு. வேலைக்காரர்களிடம் கூட கனிவாக இருப்பார். ஆனால் மகன்களிடம் படிப்பு குறித்து கொஞ்சம் கறாராக இருப்பார். தங்களிடம் சரிக்கு சமமாக நின்று பல விஷயங்களை விவாதிக்கும் அவரது பாங்கு பாரதியின் புதுமைப் பெண்ணிற்கான சரி நிகர் உதாரணம். நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, ஞானமான பேச்சு, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுக்கு அவரே சொந்தக்காரர்.
அன்னாரது மறைவு சாதனைப் பெண்களின் சரித்திரத்திற்கே நிகழ்ந்து விட்ட ஒரு நஷ்டம். வேறென்ன சொல்ல?!
இந்த கொரோனா கஷ்டகாலம் சற்று சீரடைந்த பிறகு நான் நேரில் வந்து பேசுகிறேன் அப்பா.
என்றும் அன்புடன்,
தங்கள் சுபா.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *