POST: 2020-10-22T09:25:56+05:30

திருச்செங்கோடு ரோட்டரி சங்கம்
இழை – மாத இதழ் அக்டோபர் 2020

இழை

வணிகத்தில் ரோட்டரியின் நான்கு மந்திரங்கள்
– உரைவேந்தர்.ஒளவை சு.துரைசாமி
1932 இல் இயற்றப்பட்டு 1943 இல் ரோட்டரியால் ஏற்கப்பட்ட நான்கு வழி சோதனையை 1955 இல் தமிழறிஞர் உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி தமது ஆழ்ந்த புலமைத் தமிழில் செந்தமிழ் இதழில் வாணிக மந்திரம் என்னும் தலைப்பில் வரைந்த கட்டுரை

.. உங்கள் பார்வைக்கு.. யாரேனும் தமது வாணிக நிலையத்துக்கோ, கடைக்கோ ‘வந்து ஏதேனும் ஒரு பொருளைக் கேட்டால் – அப்பொருள் இருக்குமானால், அதை ஆராய்ந்து, இது உண்மையான பொருள்தானா ? என்று முதலில் பார்க்கவேண்டும். இதுதான் முதல் மந்திரம்.

பொருள் போலியானதாகவோ மோசமானதாகவோ இருக்கக் கூடாது. உண்மையானதாக இருந்தால்தான் கொடுக்க வேண்டும். ( Isit Truth ? )
அப்பொருள் அவரது தேவைக்கு ஏற்புடையதா ? பொருத்தமானதா ? என்று ஆய்ந்துணர வேண்டும். இஃது

இரண்டாவது மந்திரம். ( Is it fair to all concerned ? )
நேர்மையில்லாத வழியில் விலை குறிப்பதும் விற்பதும், மக்கள் மனதில் அருவருப்பை உண்டாக்கும். அதனால் வாணிகம் தடைப்பட்டு சீரழியும். நாம் இப்படி செய்வதாலும் சொல்வதாலும் நம்மிடத்தில் பொதுமக்களுக்கு நல்ல நம்பிக்கை உண்டாகுமா ? பொதுமக்களுக்கும் நமக்கும் இடையே உயர்ந்த நட்பு உண்டாகுமா ? என்று ஆராய்ந்தறிய வேண்டுவது மூன்றாவது மந்திரம்.

( Will it build goodwill and better friendships ? )
நம்பிக்கையால் வாணிகம் பெருகும். நட்பினால் அது செழிக்கும். நாட்டில் நமது தொழிலுக்கு மதிப்பும் புகழும் தோன்றி சிறக்கும். நமது இந்த செய்கையால் எல்லாருக்கும் நன்மை விளையுமா ? என்று நோக்குவதே நான்காவது மந்திரம். ( Wil it be beneficial to all concern ? )

பிறருக்கு நன்மை செய்வது குறித்தே வணிகத்தொழில் உண்டாகியிருக்கிறது. அவரவர்க்குத் தேவைப்படும் பொருட்களை அவரவரும் தாமே தேடிக் கொள்வது எளிதில் நடக்கக் கூடியதன்று..

ஒருவர் உண்டுபண்ணிய பொருட்களை, ஒருவர் ஓரிடத்தே கொண்டு சேர்த்து தொகுக்க – ஒருவர் அவற்றை பலருக்கும் வகுக்க – ஒருவர் எடுத்து விற்க, இப்படி பலரும் பல வகையில் உழைக்க வேண்டும்.

நமது செயலால் வாங்குவோரும், விளைவிப்போரும், இடையில் பல நிலைகளில் வேலை செய்வோரும் யாவரும் நன்மை பெற வேண்டும். மேலும் தேவைப்பட்டு வாங்குவோருள்ளும் ஏழை, எளியவர், சிறியவர், முதியவர், தெரிந்தவர், தெரியாதவர் யாவரும் நன்மையடைய வேண்டும். தேவைப்பட்ட பொருள் செம்மையான நிலையில் கிடைக்கப் பெற்றால், அதைப் பெறுகின்ற மக்கள் மனதில் அமைதியும் இன்பமும் உண்டாகும்.

இவ்வாறு மக்கட் சமுதாயம் தேவையானவைகளை சிறந்த நிலையில் பெற்று, அமைதியாகவும், இன்பமாகவும், மனநிறைவோடும் வாழுமாறு செய்வதுதான் உண்மையான வாணிகம். அதனாலேயே பொதுமக்களுக்கு செய்யும் தொண்டுகளில் சிறந்தது வாணிகம் என அறிஞர் கூறுகின்றார்.
இந்த நான்கு மந்திரமும், உரிமை கொண்டு வாழும் உலக நாடுகளில், வணிகர் சமுதாயத்தில் நன்கு பரவியிருப்பதால் அந்த நாடுகள் செல்வமும் புகழும் சிறப்புறப் பெற்று திகழ்கின்றன.

நமது நாட்டு வணிகர்களும், வாணிகம் என்பது பொதுமக்களுக்கு செய்யும் பெரிய தொண்டு என்பதை அறியாத பேதைகளல்லர்.அதனால், அவர்கள் இந்த நால்வகை மந்திரங்களயும் கற்று நடைமுறையில் தவறாமல் கையாளுவர்களேயானால், சிறப்பும் செல்வமும் பெற்று மகிழும் ஏனைய நாடுகளைப் போல, நமது நாடும் பொருளும் புகழும் பூத்து பொன்னாடாய்பொற்புமிகும் என்பதில் ஐயமேது ?

( கட்டுரையாசிரியரின் மகன் பத்மஸ்ரீ முனைவர் அவ்வை நடராசன் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தராவார். அவருடைய மகனான முனைவர் ந. அருள் தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பு துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். திரு.ந.அருள் ஒரு சிறந்த ரொட்டேரியனுமாவார். இவர் ரோட்டரி மாவட்டம் 3232 இன் மெட்ராஸ் சென்னப்பட்னா ரோட்டரி சங்கத்தில் கடந்த 17 ஆண்டுகளாக உறுப்பினராக சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. )

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *