கருணீகர் நல்வாழ்வு –
செப்டம்பர் 2020
வான்புகுந்த தாரகை !
– பதாகன்.
“மாபெரும் மனிதர் ஒவ்வொருவரின் மகத்தான வெற்றிக்குப் பின்னாலும் மாதரசி ஒருத்தியின் மணிக்கரம் மறைந்திருக்கிறது” என்று, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், நம் மதிப்புக்குரிய அறிஞர், முனைவர் ஔவை நடராசன் அவர்கள், மனமார உணர்ந்து, நாவாரக் கூறி மகிழ்வார். அவர்தம் மனத்திலும் வாழ்விலும் ஒளி விட்டுக்கொண்டிருந்த தாரா அம்மையார், வான் புகுந்த விண்மீனாகத் திடுமென 15. 7. 2020 வெள்ளி அன்று இரவு மறைந்துவிட்டார் என்னும் துயரச் செய்தி ஔவை நடராசன் அவர்களின் குடும்பத்தாரை மட்டுமல்லாமல் நம் அனைவரின் மனத்திலும் இடியென விழுந்தது.
‘தாரகை இல்லம்’ ஒளியின்றித் தவிக்கிறது; தாங்கொணாத் துன்பத்தில் துடிக்கிறது. குலத்தின் குடும்ப விளக்காக, புகழ்வாய்ந்த குழந்தை நல மருத்துவராக, குழந்தை உள்ளம் கொண்ட தாரா அம்மா விளங்கினார்.
முகத்தில் மலர்ச்சியும் கனிந்த சொற்களும் கொண்டு பசிப்பிணி தீர்த்து விருந்தோம்பும் அம்மையார், ‘வானத்தவர்க்கு நல்விருந்து’ ஆகிவிட்டார்.
‘ஔவைக்கு அருநெல்லிக்கனி என ஒரேயொரு கனி தந்து அதியமான் வள்ளலான செய்தி’யை, நாம் வரலாற்றில், இலக்கியத்தில் படித்திருப்போம். ஆனால் இங்கோ, ஔவைக்கு மூன்று அருநெல்லிக் கனிகளை ஈன்றெடுத்து ஈந்த ‘பெண் அதிகமானாகத்’ தாரா அம்மையார் திகழ்ந்தார். ஆம், அவர்களின் அருமை மைந்தர்களைத்தான் கூறுகிறேன்.
மூத்த மகன் கண்ணன் (முக்கண்ணன்), அடுத்த மகன் அருள், கடைக்குட்டி பரதன் என்னும் மூவரும் ‘டாக்டர்’ பட்டம் பெற்றவர்கள்.
முதல் மகனும் கடைசி மகனும் அம்மாவைப் போலவே மருத்துவர்கள்; அருள் முனைவர் பட்டம் பெற்றவர். தந்தையைப் போலவே தமிழ்படித்து, மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகச் சிறக்கப் பணியாற்றுகிறார்.
‘கருணீகர் குலத்தின் முதல் பெண் மருத்துவர்’ என்னும் பெருமைக்குரிய தாரா அம்மையாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் உண்டாக்குவது எங்ஙனம் என்று தெரியவில்லை.
“தற்காத்துத், தற்கொண்டாற் பேணித், தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”
– குறள்56.
என்னும் திருவள்ளுவர் சொற்களுக்கு இலக்கணமாய் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த’ அவர், வான் புகுந்த தாரகையாக என்றும் ஒளிர்வார் என்பதுமட்டும் உறுதி.

Add a Comment