POST: 2020-09-26T11:29:12+05:30

உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள் எழுதி 1956 – ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட

சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கோயில் குடமுழுக்கு மலரில் வந்த கட்டுரை .

மறுபதிப்பாக இன்று 26 9 2020….

காளிங்கராயன் திருப்பணிகள்
பேராசிரியர். ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை

சைவ உலகுக்குத் தனிநாயகம் தில்லைத்திருப்பதி, தில்லையம்பலத்தில் திருக்கூத்து இயற்றும் பெருமாள் சைவ நன்மக்கள் பரவும் முழுமுதற் கடவுள். நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி என்ற ஐம்பெரும் பூதங்களையும் தன் அடியிலும், முடியிலும், கைகளிலும் தாங்கி அவையனைத்தையும் சுழன்றாடுமாறு செய்து ஆடல்புரியும் ஆடல்வல்லான் அவன். காலஞ்சென்ற விஞ்ஞான பெரும் புலவரான “அயின்ஸ்டன்” தன் புறக்கண், அகக்கண் இரண்டாலும் தில்லைப் பெருமான் ஆடலைக் கவின்பெறக் கண்டு காதலித்து வியந்து நின்றரெனின் இந்நாளில் உள்ள அறிஞர் பிறரைக் கூறுவது வேண்டா.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி மிகச் சிறப்புற்று விளங்கிய சோழப் பேரரசர் அனைவருக்கும் தில்லைப் பெருமான் குலமுதலாக விளங்குகின்றான். முதல் இராசராசன் என்ற பெருவேந்தன் தஞ்சைப்பெரிய கோவிலைக் கட்டிய பெருஞ் செய் ஆடவன்; எனினும் அதில் அவன் பொறித்த கல்வெட்டுகளில் அளவைகளும், பிறவும் ஆடவல்லான் என்ற பெயர் தாங்கி அம்பலக்கூத்தன்பால் அவனுக்கிருந்த பேரன்பினைப் புலப்படுத்துகின்றன.

சோழ வேந்தர்கட்கு முன்னர் தமிழகத்தில் இருந்து அரசு புரிந்த பல்லவர்களில் பழையோன் ஒருவன் தில்லை அம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்பது வரலாறு. அவர்கட்குப்பின்னர் சோழவேந்தர்கள் முன்னின்று தில்லைப்பெருங்கோயிலைப் பொன் வேய்ந்தும் பொற்பணியும், பொற்கலமும் பல செய்தளித்தும் பொன்னம்பலப் பொற்கோயிலாக்கினர்.

பொருளிற் சிறந்த பொன் வேய்ந்து எல்லாப் பொருளையும் தோற்றுவித்து இயக்கும் இயவுகளாகிய ஆடலரசை மனமணியாகக் கொண்டு சிவகாமங்கள் இருபத்தெட்டினும் முடிமணியாகத் திகழும் மகுடாகமத்தைச் செயல்வகையாகக் கொண்டு சிறந்து விளங்குவதால் கோயில் என்பது தில்லை பெருங்கோயில்.

இப்பெருங் கோயிலுக்கு அவ்வப்போது திருப்பணி செய்தவருள் பெரும் புகழ் பெற்ற அரசர்களேயன்றிப் பெருஞ்செல்வரும் பலர். தில்லைக் கோயிலில் உள்ள சிவகங்கையின் மேற்கிலுள்ள மண்டபமும், கோயிலைச் சூழ்ந்து நிற்கும் திருமதிலும் அமைத்துத் திருப்பணி செய்த திருவாளன் காளிங்கராயன் என்ற பெருமகன். இவனுக்கு நரலோக வீரன் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அதனால் தில்லைத் திருச்சுற்று நரலோக வீரன் என்ற பெயர் தாங்கி நிற்கிறது. இவனது ஊர் தொண்டைநாட்டிலுள்ள மணவூர்.

” Published with financial assistance from the Central Institute of Indian Languages ( Dept.of Higher Education, Ministry of Human Resource Development, Government of India ) Manasagangotri, Mysore-570 006. vide sanstion letter F.No. 53-10 ( 1 )2019 -20 / TAM / GRNT dated 7th November, 2019 under the Magazine Scheme of Grant-in-Aid ”

இவனது இயற்பெயர் கூத்தன் என்பது. இதனால் இவன் மணவிற் கூத்தன் எனக் குறிக்கப் பெறுவான். இவனுக்கு அரும்பாக்கிழவன், பொன்னம்பலக்கூத்தன், தொண்டமான், அருளாகரன், மானாதாரன், காலிங்கர்கோன், காளிங்கராயன் என்பன முதலிய சிறப்புப் பெயர்களும் உண்டு. இவற்றுள் பெரிதும் பயின்று வழங்கும் பெயர் காளிங்கராயன் என்பது. கி.பி. பதினோராம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி விளங்கிய முதற் குலோத்துங்கன் காலத்திலும், அவன் மகன் விக்கிரமசோழன் ஆட்சியிலும் அரசியற் பணியில் இருந்து புகழ்மிகுந்து விளங்கியவன் இக்காளிங்கராயன்.

காளிங்கராயனுடைய திருப்பணிகள் தொண்டை நாட்டிலும், சோழநாட்டிலும் உள்ள வேறு சில கோயில்களிலும் உண்டு என்றாலும் தில்லைப் பெருங்கோயிலிற் சிறந்துள்ளவை அழகிய இனிய பாட்டு வடிவில் நிற்கும் பண்பு மேம்பட்டவை. இப்பாட்டுக்களிற் பிறக்கும் ஐயங்கள் திருவதிகையிற் காணப்படும் பாட்டுகளால் தெளிவடையுமாறு அமைந்துள்ளன.

தில்லை பெருங்கோயிலுக்கு ஏற்றம் தருவது பொன் வேயந்த திருச்சிற்றம்பலமாகலான். அதற்கு மேன்மேலும் பொன் வேய்ந்து பொலிவு குன்றாவாறு பணி செய்வது பொன் பெற்றோர் செய்யும் முதற் பணி; அதனால் எடுத்த எடுப்பிலேயே காளிங்கராயன் பணிகளுள் தலையாயது இது என்பதற்கு, “எல்லைக்கடலால் இகல் வேந்தளக்க வந்த செல்வமெல்லாம் தில்லைச் சிற்றம்பலத்துத் தொல்லைத்திருக்கொடுங்கை பொன் வேய்ந்தான்” என்றும் அதன் அடுத்துத் திருக்கோயிலைச் சுற்றி நிற்கும் திருமதிலைப் பெரும்பொன் செலவிட்டுப் பொற்பாக அமைத்தான் என்பதற்கு “தில்லையில் பொன்னம்பலத்தைச்செம்பொன்னால் வேய்ந்து, வான் எல்லையைப்பொன்னாக்கினான் என்பரால்” என்றும் இப்பாட்டுக்கள் கூறுகின்றன.

சிற்றம்பலத்தின் எதிரில் நிற்கும் பேரம்பலம் காளிங்கராயன் திருப்பணிக்கு இலக்காகியபோது செம்பினால் அதன் வேய்ந்தான். தில்லைநாயகற்குக் கோயில் பொன்னாக்கியபோது உள்ளீடாகிய பரிகலங்களும் பிறவும்பொன்னால் அமைவதே பொற்பு என்று கருதி, “ஏனை வட அரசர் இட்டிடைந்த செம்பொன்னால்” பரிகலங்கள் செய்து தந்தான். பெருமானுக்குப் பாலமுது பரிமாறவும், ஆயிர நாடி(படி அளவில் நெய்யாடிவரவும் நிவந்தங்கள் பல நம் காளிங்கராயன் அமைத்துள்ளான். *

தில்லைப் பெருமானுக்குத்தில்லையம்பலமேயன்றி அவனைச் செந்தமிழ்ப் பாக்களாற்பாடிப் பரவிய பெருமக்களின் திருமுறையும் பெருங் கோயிலாதலால் அத்திருமுறைப்பற்றிக் காளிங்கராயன் செய்த திருப்பணி இன்று யாவரும் நன்கு போற்ற வேண்டிய தொன்று. சிவகங்கையின் மேற்கில் நிற்கும் பழமையான மண்டபத்தைத் திருமுறை ஓதுவதற்கும், அதனைப் பலரும் இருந்து கேட்டு இறையருள் பெறுவதற்குமாகக் காளிங்கராயன் கட்டினான்.

இதனை “நட்டப் பெருமானார் ஞானம் குழைத்தளித்த சிட்டப் பெருமான் திருப்பதிகம் முட்டாமைக் கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்” என்று கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. மேலும் ஏட்டிலுள்ள திருமுறைகள் நாளடைவில் பழமையுற்றுக் கிழிந்து படுவதுண்டு. அவற்றைச் செம்பேட்டில் எழுதிவைத்த பெருமை நமது . காளிங்கராயனுக்கு உண்டு. இதனை,

முத்திறத்தாரீசன் முதற்றிறத்தைப் பாடியவர்
ஒத்தமைத்த செப்பேட்டின் உள்ளெழுதி- இத்தலத்தின்
எல்லைக் கிரிவாய் இசையெழுதினான்கூத்தன்
தில்லை சிற்றம்பலத்தே சென்று

என்று கல்வெட்டுக் கூறுகிறது. இச்செயல் பற்றி இவனைத் திருமுறை செப்பேடு கண்ட பெருமான் என்றும் அந்நாளைய மக்கள் பாராட்டியிருக்கின்றனர். இத்திருமுறை ஆசிரியர்களுள் முன்னணியில் வைத்துப் பேசப்படுபவர் திருஞானசம்பந்தர், தில்லைப் பெருங்கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஓர் அழகிய கோயில் அமைத்து அதனையும் நம் காளிங்கன் சிறந்த முறையில் பொன் வேய்ந்தான்.

தென்வேந்தர் கூன் நிமிர்த்த,
செந்தமிழர் தென்கோயில்
பொன்வேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான்

என்று சான்றோர் பாராட்டியுள்ளனர்.

பிற்காலத்தே திருக்கோயில் திருப்பணியில் ஈடுபடும் செல்வர்கள் தோன்றினரேயன்றி, நம் காளிங்கராயன் போலத் திருமுறைகளாகிய திருக்கோயிலுக்குரிய பணிசெய்வோர் அரியராயினர். அதனால் திருமுறைகள் செல்வாக்கிழந்தன. இந்நாளில் திருந்திய கல்வியும் பொருந்திய செல்வமுடைய செல்வர் பலர் முன்வந்து திருப்பணி புரியும் விருப்பினராக உள்ளனர். அவர்கள் பலரும் இத்திருப்பணி நலத்தால், தில்லையம்பலப் பெருமான் திருவருளால் காளிங்கராயன் போன்று நரலோக வீரர்களாய் நாடு புகழும் நலம் பெறுவார்களாக.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *