மருத்துவ மாமணி தாரா நடராசன் பற்றி பட்டிமன்ற புகழ் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் கல்கி 06.09.2020 இதழில் எழுதிய கடைசிப் பக்கம் (பக்கம் எண்.60)
மரணம் வாழ்வின் பகுதி!
==================
லாக்டவுன் காலங்களில் நம்மைப் பதறச் செய்பவை எதிர்பாராத கொரோனா மரணச் செய்திகள் மட்டுமல்ல, இறந்தவர்களின் மிக நெருங்கிய உறவினர்கள் கூட அவர்களின் முகத்தைப் பார்க்காது, சடங்குகளை நிறைவேற்றாது, மரித்தவர்களை அனுப்பி வைக்கும் மானுட சோகம். இறந்தவர்கள் விடைபெறாமலே விலகிப் போகிறார்களா?
ஒவ்வொரு நாளின் செய்தியிலும் தங்க விலை போல், ஏறும் அல்லது இறங்கும் எண்ணிக்கையாக மரணங்களை எப்போது நாம் பார்க்க ஆரம்பித் தோம்? வெறும் டேட்டா , புள்ளிவிவரம்… அவ்வளவுதானா? பேப்பர்களில் இடம் பெறும் ஆபிச்சுவரி பகுதிகளில் முகம் தெரியாதவர்களின் படங்களைப் பார்த்தால்கூட, என் அத்தை கண் கலங்குவாள். ‘சின்ன வயசு மாதிரி இருக்கே….’ என்பாள். அது ஒரு காலம். யாரின் இழப்பிலும் நமக்கும் சம்பந்தம் உண்டு என நம்பிய ஒரு தலைமுறை வாழ்ந்த காலம். இன்றோ தெரிந்தவர்களின் வீடுகளில் நேரும் இழப்பு களில் கூடக் கலந்துகொள்ள முடியாத கொரோனா கலக்கங்கள்.
காலமானவரின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, நெருங்கியவர்களைப் பறிகொடுத்த உறவினரை நேரில் சந்தித்து, துக்கம் விசாரிப்பது, நமது முக்கியமான சம்பிரதாயம். ஆறுதலாக ஒரு சொல், அன்பான ஒரு ஸ்பரிசம், சிந்தும் சிறுதுளிக்கண்ணீர் இவையெல்லாம் பிரிவென்னும் முடிவுறா ஆழ் பள்ளங்களில் வீழ்ந்திருக்கும் அந்த உள்ளங்களுக்கு ஒரு நிமிர்வைத் தரும் என்பதுதான் இந்தச் சம்பிரதாயங்களின் தாத்பரியம்.
எதற்கும் வழியின்றி இப்படி எத்தனையோ மரணங்களைக் கடந்து விட்டோம். எங்கள் இலக்கியக் குடும்பத்திலேயே, விழுப்புரம் கம்பன் கழகச் செயலர் மு.க.சங்கரன், மதுரைக்கவிஞர் மணிவண்ண ன், ஒய்எம்சிஏ பக்தவச்சலம், ராஜபாளையம் கம்பன் கழக அறங்காவலர் முத்து கிருஷ்ணராஜா, காரைக்கால் சாரங்கபாணி, சமீபத்தில் டாக்டர் தாரா நடராசன். (முன்னாள் துணைவேந்தர் ஔவை நடராசன் அவர்களின் மனைவி)
டாக்டர் தாரா, வண்ணமிகு ஆளுமை கொண் டவர். 1950களில் சிறு பெண்ணாக, அந்தக் காலத்தில் மருத்துவம் படிக்க விசாகப்பட்டினம் போனவர். அங்கேதான் இடம் கிடைத்தது என்ப தால் தைரியமாகக் கிளம்பி, மொழியும் அறியாது, முன் பின் திசை தெரியா ஊரில் தனியாகப் படிக்கப் போனார்! என்ன மன உறுதி! பிறகு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றல் பெற்று வந்தார். தமது முழுப் பணிக்காலத்திலும் அரசு மருத்துவ மனைகளில் மட்டுமே பணி செய்தவர். லிபியாவில் போர் நடந்தபோது அங்கு போய் மருத்துவ சேவை செய்தவர்.
எங்களின் கல்லூரி நாட்களில் ஔவையின் வீடு இளைஞர்களுக்கான ஒரு பெரிய சரணாலயம். ‘சார் உங்க காதல் கதையைச் சொல்லுங்க’ என்று அவரைச் சீண்டுவோம். தாம் அந்தக் காலத்தில் டாக்டரைப் பார்த்துப் பாடிய ‘தாரா தாரா வந்தாரா. ‘ பாடலைக் கரகரக் குரலில் பாடுவார் ஔவை. பாடல் முடியுமுன் டாக்டர் தாரா வந்து, ‘அவ இஞ்ஜினீயரிங் காலேஜ்ல படிக்கிற பொண்ணு. நிறைய வேலை இருக்கும். உருப் படணுமா வேண்டாமா?’ என்று கேட்பார். ‘காலேஜ் போயி எதுக்கு ராஜா நேரத்தை வேஸ்ட் பண்ணணும்?’ என்பது ஔவையின் கட்சி. சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்த காலங்களை நினைக்கிறேன். டாக்டர் தாராவின் மறைவு மருத்துவ உலகத்துக்கு மட்டுமல்ல, இலக்கிய உலகத்துக்கும் பெரும் இழப்பு. அவர் ஒளிமிக்க வாழ்விலிருந்து, ஒளிமிக்க மரணத்திற்குப் போனவர். சப்பானிய எழுத்தாளர் அரூகி முராகமியை உலகெங்கும் படிக்கிறார்கள். லட்சக்கணக்கில் அவரின் புத்தகங்கள் விற்பனையாகின்றன. அவரின் ஆகச்சிறந்த சிறுகதையான ‘தூங்கும் பெண் கதையில் அந்தப் பிரசித்தி பெற்ற வாசகத்தை எழுதுகிறார்…. – ‘மரணம், வாழ்வின் எதிர்நிலை அல்ல; அதன் பகுதியே.’

Add a Comment